லில்லி - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6799
வேவ எதுவுமே சொல்லாமல் அவர் தன்னுடைய படுக்கையறையை நோக்கி ஏறிப்போனார்.
அவள் தன்னுடைய அறைக்குள் நுழைந்து விளக்கைப் போடாமல் ஸ்டீரியோ சிஸ்டத்திற்கு முன்னால் போய் உட்கார்ந்தாள். அடுத்த நிமிடம் இருட்டைக் கிழித்துக் கொண்டு டெனர்சாக்ஸில் இருந்த இசை கிளம்பி வந்து அறையை நிறைத்தது. புடவையைக் கூட மாற்றாமல் அவள் படுக்கையில் கவிழ்ந்தாள். டேர்ன் டேபில் டிங்க்... திரும்ப, ஸாடாவோ வட்டனாபேயம் கிறிஸ்உட்டும் மாறி மாறி வந்தார்கள். பாதி இரவின் இருட்டினூடே... ஜாஸ் அறை முழுக்க பரவிக்கொண்டிருந்தது.
6
காலையில் சி.கெ.யும் மேஜர் நம்பியாரும் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, லில்லி காலைச் சிற்றுண்டிக்காக ப்ரேக்ஃபாஸ்ட் மேஜைக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். பேசுவதற்கிடையில் சி.கெ. உரத்த குரலில் சிரிக்கவும், அவ்வப்போது ‘‘தாங்க்யூ’’ ‘‘தாங்க்யூ’’ என்று கூறிக் கொண்டிருந்தார்.
ரிஸீவரை கீழே வைத்து விட்டு தன்னுடைய மனைவியின் பக்கம் திரும்பிய அவர் சொன்னார்.
‘‘எல்லாம் நான் நினைச்சதைப் போலவே நடக்கும், மடப்புரமுத்தப்பனோட உதவியுடன்.’’
அடுத்த நிமிடம் லில்லியின் தாய் மகளின் முகத்தைப் பார்த்து இதயபூர்வமாகப் புன்னகைத்தாள்.
‘‘தேர்வு முடிஞ்ச பிறகு கல்யாணத்தை வச்சுக்கலாம்னு அவங்க சொல்றாங்க. டாக்டருக்கு ரெண்டு மாசம் விடுமுறை இருக்கு.’’
சி.கெ. மகளின் முகத்தைப் பார்த்தார். அவளின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளின் வெளிப்பாடும் இல்லை. பால் கலக்காத காபியை கப்பில் ஊற்றி எந்தவித ஓசையும் எழுப்பாமல் அமைதியாக அவள் குடித்துக் கொண்டிருந்தாள்.
‘‘அச்சுதன் நாயர் பத்து மணிக்கு வருவார். அப்போ புறப்படத் தயாரா இருக்கணும். படிப்பு பாதிச்சிடக் கூடாது.’’
‘‘இனி என் மகளுக்கு படிப்பு தலையில ஏறுமா என்ன?’’
தாய் மகளைச் சீண்டினாள். அவள் சிவந்து போயிருந்த மாம்பழத்தை கத்தியால் அறுத்து ஒரு துண்டை எடுத்து வாய்க்குள் திணித்துக் கொண்டிருந்தாள்.
‘‘என் மகள் அந்த அளவுக்கு உணர்ச்சி வசப்படக் கூடிய ரகம் இல்ல. அவளோட முகத்தைப் பாரு... நாம எவ்வளவு பேசிக்கிட்டு இருந்தாலும், மகளோட முகத்துல ஏதாவது வித்தியாசம் தெரியுதா?’’
தந்தை சொன்னதைக் கேட்டு அவள் சிரிக்க முயற்சி செய்தும், அவளுக்குச் சிரிப்பு வரவில்லை. அவள் எல்லாவற்றையும் மனதிற்குள் பூட்டிக்கொண்டு நடமாடிக் கொண்டிருந்தாள். வெளியே வாயைத் திறந்து ஏதாவது சொன்னால் அதை நிச்சயம் தன் தந்தையும், தாயும் புரிந்து கொள்ளப் போவதில்லை என்பதை அவள் நன்றாகவே அறிவாள். இவ்வளவு பெரிய பங்களாவில் தங்கக்கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் கிளியைப் போலஅவள் என்றும் தனித்தே இருந்தாள்.
‘‘மணி ஒன்பது...’’
சி.கெ. வேகமாக நாற்காலியைப் பின்னோக்கி தள்ளியவாறு எழுந்தார். அவர் யாரையோ மீண்டும் தொலைபேசியில் அழைத்து பேசத் தொடங்கினார்.
‘‘நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரணும்.’’
லில்லி எழுந்தாள்.
‘‘நீ இப்போ எங்கே போற?’’ - சி.கெ. தொலைபேசியை கீழே வைத்தார். மற்றொரு எண்ணை விரல்களால் சுழற்றியவாறு அவர் சொன்னார்.
‘‘அச்சுதன் நாயர் இப்போ இங்கே வருவார். உடனே புறப்பட்டால்தான் இருட்டுறதுக்குள்ளே காலேஜில் போய் சேர முடியும்.
‘‘நான் இதோ வந்திர்றேன்.’’
அவள் தலை முடியை வாரி கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே புறப்பட்டாள்.
எங்கே இப்போது அவள் செல்கிறாள் என்பதை அவளின் தந்தையோ, தாயோ கேட்கவில்லை. அவர்களுக்குத் தெரியும்.
அவள் காரை ஸ்டார்ட் செய்து கேட் வழியாக வெளியே ஓட்டினாள். பாதையில் நல்ல வெயில் காய்ந்து கொண்டிருந்தது. மேகங்கள் நகர்ந்து கொண்டிருந்த வானம் அடர்த்தியான நீல நிறத்தில் இருந்தது. ஆற்றின் மேல் இருந்த பாலத்தின் வழியாக அவள் கார் நீந்தியது.
நகரத்தின் ஆரவாரம் நிறைந்த சாலையை விட்டு ஆற்றங்கரையில் இருந்த செம்மண் பாதையின் வழியாக கார் ஓடியது. பாதையின் ஒரு பக்கத்தில் ஒரு சிறு வாய்க்கால் ஓடிக் கொண்டிருந்தது. அங்கு சில பெண்கள் நார் உரித்துக் கொண்டிருந்தார்கள். நார் உரிக்கும் வாசனை அந்தப் பகுதி முழுவதும் பரவியிருந்தது. வாய்க்காலில் ஒரு இடத்தில் சேற்றில் வெள்ளைத் தாமரை மலர்கள் விரிந்து அழகு காட்டிக் கொண்டிருந்தன.
வாய்க்காலின் மேல் தென்மையால் அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் அருகில் அவள் காரை நிறுத்தினாள். அதற்கு மேல் கார் போகாது.
நார் உரித்துக் கொண்டிருந்த பெண்கள் ஆச்சரியம் மேலோங்க அவளையும் காரையும் மாறி மாறிப் பார்த்தார்கள். குடிசைகளில் இருந்த குழந்தைகள் ஓடி வந்து காரைச் சுற்றிலும் நின்றன.
அவள் காரை விட்டு கீழே இறங்கினாள். புடவையைத் தோள் மேல் இழுத்து விட்டவாறு வாய்க்காலை அவள் கடந்தாள். தென்னை மரத்தால் ஆன பாலத்தின் மேல் பேலன்ஸ்செய்து அவள் நடக்கும்போது, அவளையே வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்த நார் உரித்துக் கொண்டிருந்த ஒரு வயதான பாட்டி சொன்னாள்.
‘‘பார்த்து மகளே...’’
அவள் புன்னகைத்தாள்.
வாய்க்காலின் கரையில் பயங்கர சேறு இருந்தது. அதில் நடக்கும்போது அவளின் செருப்பு அதில் ஆழமாகப் பதிந்தது.
வாய்க்காலைக் கடந்து நடந்து சென்றபோது, தென்னை மரங்களுக்கு மத்தியில் இருந்த சத்யனின் வீட்டை அவள் பார்த்தாள். அதைப் பார்த்ததும் மகிழ்ச்சியால் அவள் மனம் துடித்தது. முற்றத்தில் வழக்கம்போல பூச்செடிகள் நிறைய வளர்ந்திருந்தன. நீல சங்கு புஷ்பங்களும், சிவப்பு வண்ண பகோடா மலர்களும் அதிகமாக இருந்தன.
அவள் அங்கு வந்து கிட்டத்தட்டட ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. அவள் நினைத்துப் பார்த்தாள். போனமுறை விடுமுறையில், அவள் வந்தபோது, சத்யன் அங்கு இல்லை. அவன் வெளியூருக்குப் பயணம் போயிருந்தான். இடுக்கி மாவட்டத்தின் காட்டுப் பகுதிகளில் ஆதிவாசிகளடன் தான் செலவழித்த அந்த நாட்களைப் பற்றி அவன் அவளுக்கு கடிதம் எழுதியிருந்தான். ‘‘பறவைகளின் மாமிசத்தைத் தின்பதற்கும் காட்டுத் தேனைக் குடிப்பதற்கும்தான் பொதுவாக நான் இங்கு வந்தேன். ஆனால்... நான் இங்கு பார்த்ததென்னவோ பட்டினியையும், நோயையும் மட்டும்தான். இங்கிருக்கும் பறவைகளுக்கும் கூட பசி...’’
சத்யனின் வீடு ஓடு வேய்ந்த ஒரு சிறு வீடு அவளைப் பார்த்ததும் அவன் தாய் வெளியே வந்தாள்.
‘‘யாரு? லில்லியா?’’ - அவள் ஆச்சரியம் மேலோங்கக் கேட்டாள். ‘‘மகளே, நீ எப்போ வந்தே?’’
‘‘நேற்று...’’
சத்யனின் தாய் ஒரு முண்டைக் கொண்டு வந்து தூசியைத் தட்டி விட்டு ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டாள்.
‘‘மகளே, உட்காரு.’’
‘‘நான் சீக்கிரம் போகணும். அம்மா... சத்யன் வீட்ல இல்லையா?