லில்லி - Page 17
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6799
‘‘போதும்... போதும்.... உண்மையாகவே ஹெர்குலிஸ்தான். ஒத்துக்குறேன்.’’
ஒரு நிமிட மவுனத்திற்குப் பிறகு அவன் சொன்னான்.
‘‘கூலி வேலை செய்றதுக்காக எல்லாரும் என்னை ஒரு மாதிரி பேசுறாங்க. இதுல வெட்கப்படுறதுக்கு என்ன இருக்கு? எனக்கு உண்மையாகவே இதைச் செய்றதுல சந்தோஷம்தான்.’’
அவவ் முகத்தைப் பார்த்து அவன் வெகுளித்தனமாக சிரித்தான்.
‘‘இனி நீ போகலாம். அச்சுதன் நாயர் உனக்காக காத்திருப்பார்ல.’’
க்ளட்சின் மீது அவளின் அழகான பாதமும் கியரின் மேல் அவளின் வெண்மையான நீளமான கை விரல்களும் இருந்தன. கார் முன்னால் போக மனமில்லாது மாதிரி அங்கேயே அசையாமல் நின்றிருந்தது.
காரைக் கிளப்பாமல், அதற்குள் அசையாமல் உட்கார்ந்திருந்த லில்லியை நோ£கி மீண்டும் சத்யன் வந்தான். அவள் தன்னிடம் ஏதோ கூற விரும்புவதைப் போல் அவனுக்குப் பட்டது.
‘‘என்ன லில்லி?’’
அவன் கார் கதவின்மேல் கையை வைத்து நின்றவாறு அவளின் முகத்தைப் பார்த்தான். ஷாம்புவின் வாசனை வந்து கொண்டிருந்த அவளின் தலை முடியில் வெயில்பட்டு பிரகாசித்துக் கொண்டிருந்தது. பாதையைத் தாண்டியிருந்த புதர்களின் மேல் காற்று மோதி வீசிக் கொண்டிருந்தது.
‘‘ஒரு விசேஷம்... சொல்லட்டுமா?’’
‘‘என்ன விசேஷம்?’’
இவ்வளவு நேரம் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது சொல்லாத அப்படிப்பட்ட விசேஷம் என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள அவனும் ஆவலாகவே இருந்தான். அவன் கார் கதவைத் திறந்து அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்தான்.
‘‘சொல்லு லில்லி.’’
‘‘எனக்கு ஒரு ப்ரப்போஸல் வந்திருக்கு.’’
‘‘யார் அந்த அதிர்ஷ்டசாலி?’’
‘‘அமெரிக்காவுல செட்டிலான ஒரு டாக்டர்.’’
‘‘ஆள் பார்க்க எப்படி இருக்காப்ல?’’
‘‘நல்லா அழகாவே இருக்காரு...’’
‘‘வாழ்த்துக்கள், லில்லி...’’ - அவன் மகிழ்ச்சி பொங்க கூறினான். ‘‘ஆமா... நீ ஏன் இதை என்கிட்ட முன்னாடியே சொல்லல?’’
சி.கெ. லில்லியை ஆள் அனுப்பி ஏன் வரவழைத்தான் என்பதற்கான காரணத்தை அவன் புரிந்து கொண்டான்.
‘‘அவரோட பேரை நீ சொல்லலையே?’’
‘‘டாக்டர் கிருஷ்ணசந்திரன்.’’
‘‘பேரு நல்லாவே இருக்கு. சரி... ஆளை நீ பார்த்தியா?’’
‘‘ம்...’’
‘‘கொஞ்சம் விளக்கமா சொல்லு நான் மனசுல கற்பனை பண்ணி பார்க்கிறேன்.’’
‘‘நல்ல வெள்ளை நிறம். நல்ல உயரம் பார்த்தால் வெள்ளைக்காரன் மாதிரி இருப்பார்.’’
‘‘ஆடைகள்?’’
‘‘ஸஃபாரி ஸுட்...’’
‘‘இப்போ டாக்டர் கிருஷ்ணசந்திரனை தெளிவா என்னால மனசுல பார்க்க முடியுது. லில்லி... உண்மையிலேயே நீ அதிர்ஷ்டசாலிதான். இனிமேல் யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு? எவ்வளவு சீக்கிரமா முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்யாணத்தை நடத்த வேண்டியதுதான்.’’
அவள் காரை ஸ்டார்ட் செய்தாள். வெயிலும் நிழலும் விழுந்து கொண்டிருந்த பாதை வழியாக கார் நீந்தியது. எந்தவித இலக்கும் இல்லாமல் அவள் வெறுமனே காரை ஓட்டினாள். வானத்தில் வெண்மையான மேகங்களுக்கு மத்தியில் நீல வண்ணத்தில் நெருப்பு பற்றி எரிந்து கொண்டிருந்தது.
காரை ஓட்டியபடியே அவள் முதல் நாள் நடைபெற்ற சம்பவங்கள் ஒவ்வொன்றையும் அவனிடம் விவரமாகக் கூறினாள். ஹோட்டலில் அமர்ந்து ஸ்காட்ச் அருந்திய விஷயத்தைச் சொன்னபோது, சத்யன் சொன்னான்.
‘‘லில்லி... நீ அப்படி நடந்திருக்கக் கூடாது.’’
‘‘கிருஷ்ணசந்திரன் என்னை ஹிப்னாட்டைஸ் செஞ்சிட்டான். சத்யன், உனக்கு தெரியாதா? மதுன்னாலே எனக்குக் கொஞ்சமும் பிடிக்காதுன்னு...’’
‘‘பிறகு...?’’
அவள் கிருஷ்ணசந்திரனுடன் அமர்ந்து பேசிய விஷயங்களை சிறிதளவு கூட விடாமல் எல்லாவற்றையும் விளக்கமாக அவனிடம் கூறினாள். தலை முழுக்க ஸ்காட்ச்சின் பாதிப்புடன் ஹோட்டல் கேட்டைக் கடந்து வெளியே வந்த கட்டத்தைக் கூறியபோது, சத்யன் சொன்னான்.
‘‘காரை கொஞ்சம் நிறுத்து. நாம எங்கேயாவது போய் உட்கார்ந்து பேசலாம்.’’
இல்லாவிட்டால் அவள் எங்கே காரைக் கொண்டு போய் எதிலாவது மோதி இடித்து விடுவாளோ என்று அவன் பயந்தான். அவனுக்கு கார் ஓட்டத் தெரியாது.
அவள் பாதையோரத்தில் காரை நிறுத்தினாள். இடது பக்கத்தில் ஒரு சிற மைதானம் இருந்தது. அங்கே வளர்ந்திருந்த புற்களை மேய்ந்தவாறு பசுக்கள் நடந்து கொண்டிருந்தன. அவர்கள் இருவரும் காரை விட்டு இறங்கினார்கள். பசுக்களுக்கு மத்தியில் அவர்கள் எதுவுமே பேசாமல் நடந்தார்கள். பசுக்கள் ஈரமான தங்களின் கண்களால் அவர்களை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, மீண்டும் புற்களை மேய்வதில் கவனத்தைச் செலுத்தின.
‘‘பரீட்சை முடிஞ்ச உடனே கல்யாணம் நடக்கணம்னு அப்பா சொல்றாரு.’’
பச்சைச் புல் மேல் நடந்த அவளின் செருப்புகள் இல்லாத பாதங்கள் நனைந்தன.
‘‘என்ன சத்யன்... ஒண்ணுமே பேசல?’’
‘‘நான் உள்ளபடியே சந்தோஷப்படுறேன். நான் பல நேரங்கள்ல உனக்கு வரப்போற கணவன் எப்படி இருப்பான்னு கற்பனை பண்ணி பார்ப்பதுண்டு. நான் எப்படி மனசுல கற்பனை பண்ணி வச்சிருந்தேனோ, கிட்டத்தட்ட அப்படியேதான் கிருஷ்ணசந்திரன் இருக்காப்ல...’’
‘‘ஆனா, எனக்கு அந்த ஆளைப் பிடிக்கல...’’
‘‘.ன் உண்மையாத்தான் சொல்றேன்.’’
அவன் அவளின் கைகளைப் பற்றி புல் மேல் அமர வைத்தான். அவனும் அருகில் அமர்ந்தான். உடம்பில் கருப்பு புள்ளிகள் இருந்த வெள்ளைப் பசு அவர்களுக்குப் பக்கத்தில் படுத்து அசை போட்டுக் கொண்டிருந்தது. அதன் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு சிறு மணி அவ்வப்போது ‘‘க்ணிங் க்ணிங்’’ என்று ஒசை உண்டாக்கிக் கொண்டிருந்தது.
‘‘லில்லி... நீ என்ன சொல்றேன்னு என்னால புரிஞ்சிக்க முடியல. நீங்க ஒண்ணாவே ஒரு சாயங்கால நேரத்துல இருந்திருக்கீங்க. ஒண்ணா படுத்திருக்கீங்க. பிறகு நீ சொல்ற... உனக்கு அந்த ஆளைப் பிடிக்கலைன்னு...’’
‘‘ஐ ஹேட் ஹிம்...’’
அவள் கால் நகங்களால் பசும்புல்லில் வரைந்து கொண்டிருந்தாள்.
‘‘என்னால அந்த ஆளை கணவனா கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியல...’’
அவன் ஒரு பீடியைப் பற்ற வைத்து புகையை ஊதியவாறு தூரத்தில் ஆகாயத்தைப் பார்த்தான். அங்கு ‘பளிச்’சென பிரகாசித்துக் கொண்டிருந்தன. நீலவண்ணம் வெடித்துக் கொண்டிருந்தது. நொறுங்கி விழுந்த நீலவண்ண துண்டுகள் வெயிலில் ஓடிக்கொண்டிருந்தன.
‘‘நான் என்ன செய்யட்டும் சத்யன்? அப்பா சொன்ன வாக்கை மீறி நடக்க தைரியம் இல்ல...’’
‘‘நீ கதைகள்ல வர்ற கதாநாயகியைப் போல பேசுற’’- அவன் சீரியஸான குரலில் சொன்னான். ‘‘கிருஷ்ணசந்திரனைப் பிடிக்கலைன்னா, உன் அப்பாக்கிட்ட நீ மனம் திறந்து சொல்லிடுறதுதான் சரி.’’
‘‘அவ்வளவுதான்... - எங்கப்பா என்னைக் கொன்னுடுவாரு.’’
‘‘உனக்கு சொல்றதுக்கு தைரியம் இல்லைன்னா நான் வேணும்னா சொல்றேன்.’’
‘‘அப்பா உன்னையும் கொன்னுட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்.’’
‘‘அப்படி ஒவ்வொருத்தரையும் கொலை செய்றதா இருந்தா, இந்தத் தலச்சேரியில் உயிரோட யாருமே இருக்க முடியாது.’’