லில்லி - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6798
அவன் கடிகாரத்தை ட்ரஸ்ஸிங் டேபிளின் மேல் வைத்தான். பிறகு ஒரு பக்கம் இருந்த கபோர்டைத் திறந்து அதிலிருந்து ஒரு படடு நைட்டியை வெளியே எடுத்தான். நல்ல வெண்மை நிறத்தில் இருந்தது அது. கைகளிலும் கழுத்துப் பகுதியிலும் லேஸ் வைத்து அது தைக்கப்பட்டிருந்தது.
‘‘இதைப் போட்டிக்கோ...’’
‘‘வேண்டாம்.’’
அவள் தலையை இப்படியும் அப்படியுமாய் ஆட்டினாள்.
‘‘இதை போட்டின்னா, குழந்தைகள் கதைகள்ல வர்ற இளவரசியைப் போல நீ இருப்பே...’’ அவன் அந்த பட்டுத் துணியை அவளுக்கு நேராக நீட்டினான்.
அவள் அதை வாங்கவில்லை.
‘‘நீ இதை போடலைன்னா, நான் போட்டுக்கிறேன்...’’
அவன் அந்த நைட்டியை ஹேங்களில் இருந்து எடுத்து, தன்னுடைய பேன்ட்டுக்கு மேலே அணிந்தான். அவனுடைய முழுங்கால் வரையே அது இருந்தது.
‘‘எப்படி இருக்கு?’’
வெளிச்சத்தில் நகர்ந்து நின்றவாறு அவன் கேட்டான்.
அவளுக்குச் சிரிப்பு வந்தது. அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். கையால் வாயை மூடியபிறகும், அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்துச் சிரித்து கண்ணில் நீரே வந்துவிட்டது.
அவன் விளக்கை அணைத்தான். இப்போது அறையில் மழைக்காலத்தின் நிலவொளியைப் போல, ஒரு மங்கலான வெளிச்சம் மட்டும் இருந்தது.
அவளின் சிரிப்பு முழுமையாக நின்றது.
‘‘என்ன... சிரிப்பை நிறுத்திட்டே?’’
அவன் அவளின் அருகில் வந்தமர்ந்தான்.
‘‘நீ சிரிக்குறப்போ ஒரு ஓவியம் மாதிரியே இருக்கே. இன்னொரு தடவை சிரி... பார்ப்போம்.’’
லேஸ் வைத்து தைக்கப்பட்டிருந்த தூய வெண்மை நிற நைட்டியை அணிந்து தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த டாக்டரின் முகத்தைப் பார்த்தபோது, அவளுக்கு உண்மையாகவே மீண்டும் சிரிப்பு வந்தது.
‘‘அவன் தன்னுடைய முகத்தை முன்னால் கொண்டு வந்து அவளின் கண்களில் முத்தம் தந்தான். அவன் கைகளில் கிடந்தவாறு அவள் மீண்டும் மீண்டும் சிரித்துக் கொண்டே இருந்தாள். கோலோன் தடவப்பட்ட அவனின் முகம் அவளின் தலை முடியில் உரசியது. அவன் மூச்சுக்காற்று அவள் கன்னத்தில் பட்டது.’’
‘‘உன் தலை என்னைப் பார்த்து என்னென்னவோ சொல்லுது.’’
அவளுடைய தன்னுடைய காதை அவளின் தலையோடு சேர்த்து வைத்தான்.
‘‘என் தலை என்ன சொல்லுது?’’
‘‘என்னை ரொம்பவும் பிடிக்குதுன்னு...’’
அவள் மவுனமாக இருந்தாள்.
‘‘என்னைப் பிடிக்கலையா?’’
அவள் மவுனத்தில் கூட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டாள். அவன் அவளின் பதிலுக்காகக் காத்திருக்கவில்லை. அவன் தன்னுடைய மூக்கால் அவளின் மிருதுவான வயிற்றில் உரசி விளையாடினான். தொடர்ந்து அவளின் பாதங்களில் தன்னுடைய உதடுகளால் தடவினான். அவள் கூச்சத்தால் தன்னுடைய கால்களை இழுக்கப் பார்த்தபோது அவன் இரு கால்ல்ளையும் இறுகப் பற்றிக் கொண்டான். பாதங்களில் பட்ட அவனின் சூடான மூச்சுக்காற்று அவளை மேலும் கூச்சமடையச் செய்தது. தன்னையும் மீறி அவள் சிரித்தாள்.
வெளியே மழைத் துளிகள் விழுந்து கொண்டிருந்தன. ஜன்னலில் தொங்கிக் கொண்டிருந்த திரைச் சீலைகளில் மின்னல் தெரிவதும் மறைவதுமாய் இருந்தது.
படுக்கையில் தளர்ந்து படுத்திருந்த அவளின் கன்னத்திலும் தாடையிலும் விரல்களை ஒட்டியவாறு அவன் ஞாபகப்படுத்தினான்.
‘‘நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லலையே!’’
என்ன கேள்வி என்று கேட்பது மாதிரி அவள் செருகிக் கொண்டிருந்த தன்னுடைய கண்களளல் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
‘‘என்னை உனக்குப் பிடிக்குதா?’’
எந்தவித பதிலும் சொல்லாமல் அவள் தன் கண்களை மூடிக்கொண்டாள். அவன் அவளின் மூடியிருந்த கண்களின் வெளிப்பகுதியை சுட்டு விரலால் தடவினான்.
‘‘சொல்றதா இல்லைன்னா வேண்டாம். உன்னை எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு. போதுமா?’’
அவன் எழுந்தான். விளக்கைப் போட்டான். கண்ணாடிக்கு முன்னால் போய் நின்று வியர்¬¬ வழிந்து கொண்டிருந்த தன்னுடைய மார்புப் பகுதியில் கோலோனை ஸ்ப்ரே செய்தான். சட்டையை எடுத்து போட்டுக்கொண்டு, தலையை வாரினான்.
‘‘சரி... எழுந்திரு. போக வேண்டாமா?’’
அவருக்கு எங்கு போகவும் தோன்றவில்லை. வெயில் வந்து கன்னத்தில் படும்வரை போர்வையை மூடி நன்றாகத் தூங்க வேண்டும் போல் இருந்தது. தன் தலையிலும் மனதிலும் ஒன்றுறும இல்லை போல் உணர்ந்தாள் அவள். மூளையும் இதயமும் எங்கோ இருக்கும் இடத்தை விட்டு பறந்து போய்விட்டது போல் அவளுக்குத் தோன்றியது.
அவன் அவளைப் பிடித்து எழ வைத்தான்.
‘‘இங்க பாரு... சீக்கிரம்... இப்பவே நேரமாயிடுச்சு.’’
இப்போது அவனுக்குத்தான் அவசரம். அவன் அவளைக் கண்ணாடியின் முன்பு கொண்டு போய் நிறுத்தினான். ஹேர் ப்ரஷ்ஷை எடுத்து அவள் கையில் தந்தான்.
‘‘தலை முடியை வாரு...’’
அவன் தன் கை விரல்களால் விளையாடி அவளின் தலை முடியை இப்படியும் அப்படியுமாய் கலைத்துவிட்டிருந்தான். அவள் அவனிடமிருந்து ப்ரஷ்ஷை வாங்கி இயந்திரத்தனமா£ முடியை வாரினாள். கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய சொந்த முகத்தைப் பார்க்கவே அவளுக்கு என்னவோ போல் இருந்தது.
‘‘இந்தா கடிகாரம்.’’
அவள் புடவையை அணிந்தபோது தன்னுடைய பாக்கெட்டில் கையை விட்டு அவன் கடிககரத்தை எடுத்து அவள் கையில் கட்டினான்.
காரில் அமர்ந்திருந்தபோதுதான் அவளே கவனித்தாள்.
அது அவள் இதற்கு முன்பு கட்டியிருந்த அவளின் பழைய கைக்கடிகாரம் அல்ல. பொன் நிற வாரைக் கொண்ட ஒரு பெரிய முத்தைப் போன்ற ஒரு புதிய கடிகாரம்.
‘‘பிடிச்சிருக்கா?’’
அவள் எந்தவித பதிலும் சொல்லாமல் இருட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவ்வப்போது வின்ட் ஸ்க்ரீனின் மேல் மழைத் துளிகள் விழுந்து கொண்டிருந்தன. நனைந்து போயிருந்த பாதையில் கார் படுவேகமாக ஓடிக் கொண்டிருந்தது.
வீட்டிற்கு முன்னால் கார் வந்து நிற்கும்போது மணி பன்னிரண்டைத் தாண்டியிருந்தது. பங்களாவில் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியே வெளியே பார்த்தவாறு நின்றிருந்த தன் தந்தையை அவள் தூரத்தில் வரும்போதே பாரத்துவிட்டாள்.
‘‘குட் நைட், டியர்...’’ - டாக்டர் கிருஷ்ணசந்திரன் அவளின் கையை மெதுவாக அழுத்தினான்ன் ‘‘நாளைக்கு ஃபோன் பண்றேன்.’’
அவன் காரை பின்னோக்கி எடுத்து வேகமாக ஓட்டிக்கொண்டு போனான்.
புடவைத் தலைப்பை தோள் மேல் தூக்கி போட்ட லில்லி குனிந்த தலையுடன் கேட்டைக் கடந்தாள். முற்றத்தில் மழை நீர் தேங்கியிருந்தது. மலர்ந்திருந்த காகிதப் பூக்களில் இருந்து கொட்டிக் கொண்டிருந்த மழைத் துளிகள் அவள் மேல் விழுந்தன.
தன் தந்தையின் முன்னால் போய் நின்றபோது, அவள் தலை மேலும் குனிந்தது.
சி.கெ.மகளின் முகத்தையே பார்த்தார். அவரின் தடித்துப் போயிருந்த உதடுகளில் புன்னகை நெளிந்தது.
‘‘குட் நைட் லில்லி.’’