லில்லி - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6799
அவன் இரண்டு டம்ளர்களிலும் மீண்டும் விஸ்கியை ஊற்றினான். இந்த முறை அவளுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. அவன் டம்ளரை காலி செய்வதற்கு முன்பே, அவள் காலி செய்துவிட்டாள். அதைப் பார்த்து அவன் விழுந்து விழுந்து சிரித்தான்.
‘‘யு ர் ரியலி வெரி ஸ்மார்ட்.’’
அவன் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தவாறு ஸஃபாரி ஸுட்டின் மேல் பொத்தான்களைத் திறந்து விட்டான். அவனின் வெண்மையான நெஞ்சுப் பகுதியில் ஸ்பிரிங் சுருளைப் போல ரோமங்கள் கறுப்பாக சுருண்டு கிடந்தன. ‘‘என் நெஞ்சைப் பார்’’ என்று அவன் சொல்லாமல் சொல்வது மாதிரி இருந்தது.
அவன் மீண்டும் தன்னுடைய டம்ளரில் விஸ்கியை ஊற்றுவதற்காக அவள் காத்திருந்தாள். ஆனால், அவன் ஊற்றாமல் நிறுத்திக் கொண்டான். அவள் விஸ்கி பாட்டிலை கையில் எடுத்தபோது, அவன் தடுத்தான்.
‘‘இங்க பார் டியர், இதுக்கு மேல வேணாம். இன்னைக்கு இது போதும். நாம போகலாம்.’’
அவன் அவளின் கையை பாட்டிலை விட்டு அகற்றினான்.
அவன் பில்லுக்குப் பணம் கொடுத்தனுப்பிய பிறகு, அவளின் கையைப் பற்றி எழ வைத்தான். அவளின் கண்களுக்கு முன்னால், சிவந்த, குளிர்ச்சியான பனி படர்ந்து கொண்டிருந்தது.
மங்கலான மின்சார ஒளியினூடே அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்தவாறு அவன் காருக்கு நேராக நடந்தான். அப்போது அவன் அவளின் காதில் சொன்னான்.
‘‘நான் உன்னை ரொம்பவும் காதலிக்கிறேன். ரொம்பவும்...’’
‘‘அதைக் கேட்டு அவளுக்கு கண்களை அடைத்துக் கொண்டு வந்தது. தலை மிகவும் கனத்துப் போயிருந்த மாதிரி இருந்தது. புரள்வதைப் போல் அவள் உணர்ந்தாள்.
அவளுக்குத் தெரியாத பாதைகளில் கார் போய்க் கொண்டிருந்தது. தலச்சேரிக்கப் போகும் வழியல்ல அது. அவளின் மனதைப் புரிந்துக் கொண்ட மாதிரி அவன் சொன்னான்.
‘‘நான் உன்னை ஒரு இடத்துக்கு கூட்டிட்டுப் போறேன். எங்கேன்னு இப்போ சொல்ல மாட்டேன். அது ஒரு சர்ப்ரைஸாக இருக்கட்டுமே!’’
‘‘என்னைக் கடலுக்குப் பக்கத்துல கூட்டிட்டுப் போங்க.’’
‘‘இன்னைக்கு அதுக்கு நேரம் எங்கே இருக்கு?’’
‘‘எனக்கு கடலோரத்துல போய் இருக்கணும் போல இருக்கு.’’
‘‘இங்க பாரு லில்லி... இப்பவே மணி எட்டு தாண்டிடுச்சு...’’
அவன் வண்டியை புதிய ஒரு பாதையை நோக்கி திருப்பி கியரை மாற்றி வேகத்தைக் கூட்டினான். அது கடற்கரைக்குப் போகும் வழியல்ல. அவளுக்கு இதுவரை பழக்கமில்லாத பாதைகள்.
மீணடும் வண்டியின் வேகம் குறைந்தது. சரளைக் கற்கள் ஏராளமாக இருந்த பாதை வழியே வண்டி குலுங்கிக் குலங்கி போய்க் கொண்டிருந்தது. கடைசியில் வயலோரத்தில் இருந்த ஒரு சிறு பங்களாவின் முன்னால் போய் கார் நின்றது.
இருண்டு போய்க் கிடந்த கிராமப் புறம். வயலில் ஆங்காங்கே தேங்கி நின்றிருந்த நீருக்குள் வெடிப்புகள் தெரிந்தன. மேலே எங்கிருந்தோ வந்த மேகங்கள் சூழ்ந்து நின்றிருந்தன.
முன்பு ஸீ வ்யூவின் முன்னால் உட்கார்ந்திருந்தபோது, ஆகாயம் அடர்த்தியான நீல நிறத்தில் இருந்தது.
பாக்கெட்டிற்குள் கையை விட்டு ஒரு சாவியை எடுத்து கிருஷ்ணசந்திரன் கேட்டின் பூட்டைத் திறந்தான். கேட்டின் ஒரு பக்கம் இருந்த பெயர் பலகையில் வெளிச்சம் இருந்தது. அவள் வாசித்தாள்.
‘டாக்டர் கெ.ஸி. மஜீத் பி.எஸ்.ஸி. எம்.பி.பி.எஸ். எம்.எஸ்.’
வராந்தாவிலும் உள்ளேயும் நல்ல வெளிச்சம் இருந்தது. இருப்பினும் கேட்டின் வெளிப்பகுதி பூட்டுப்போட்டு பூட்டப்பட்டிருக்கிறது.
‘‘வா...’’
அவன் அவளின் கையைப் பற்றியவாறு உள்ளே நுழைந்து கேட்டைத் தாழ்போட்டான்.
‘‘டாக்டர் மஜீத்தைத் தெரியுமா? நாங்க ரெண்டு பேரும் ஒரே வகுப்புல படிச்சவங்க.’’
‘‘எனக்குத் தெரியாது.’’
‘‘அவன் இங்கே இல்ல. கொடுங்கல்லூருக்கு மனைவியோட வீட்டுக்குப் போயிருக்கான்.’’
‘‘பிறகு நாம எதுக்கு இங்கே வந்தோம்?’’
‘‘ஓ... லில்லி லில்லி...’’
அவன் வராந்தாவில் எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்தான். முற்றத்தில் இருந்த பூச்செடிகளிலும் பூக்களிலும் இருள் விழுந்தது. மற்றொரு பொத்தானை அழுத்தினான். அவன் கேட்டின் பெயர் பலகையில் இருந்த வெளிச்சத்தையும் இல்லாமல் ஆக்கினான். மொத்தத்தில் இந்த வீடு அவனுக்கு நன்கு அறிமுகமான ஒன்று என்பதை அவள் புரிந்து கொண்டாள்.
‘‘எதுக்கு விளக்குகளை அணைச்சீங்க?’’
‘‘நீ பக்கத்துல இருக்குறப்போ எனக்கு எதற்கு வேற வெளிச்சம்?’’
அவன் குலுங்கிக் குலுங்கி சிரித்தான். கொஞ்சமும் எதிர்பார்க்காமல் வந்த அந்தச் சிரிப்பு அவளை நடுங்கச் செய்தது.
சிரித்துக் கொண்டே ஜன்னலில் தொங்கிக் கொண்டிருந்த இளம் மஞ்சள் நிறத்திரைச் சீலைகளை அவன் இழுத்துவிட்டான்.
‘‘யாரும் நம்மளைத் தொந்தரவு செய்யக்கூடாது - காற்று கூட’’
அவள் தன்னைச் சுற்றிலும் ஒரு முறை நோட்டமிட்டாள். திரைச்சீலைகள் மஸ்லின் துணிகளால் ஆனவை. மேலே தொங்கிக் கொண்டிருந்த சர விளக்குகள் மட்டுமல்ல, வாசல் கதவுகளில் இருந்த கைப்பிடிகள் கூட பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தன. மொத்தத்தில் - எல்லா விஷயங்களிலுமே பயங்கரமான ஆடம்பரத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த வீடாக அது இருந்தது.
‘‘பசிக்கலையா?’’
அவன் அவளை சாப்பிடும் அறைக்கு அழைத்துக் கொண்டு போனான். மேஜையின் மேல் கிண்ணங்களும், கோப்பைகளும், மற்ற பாத்திரங்களும் வைக்கப்பட்டிருந்தன. சில பீங்கான் பாத்திரங்கள் மூடி வைக்கப்பட்டிருந்தன. ஒரு பெரிய பீங்கான் பாத்திரம் நிறைய பழங்கள் இருந்தன.
‘‘உட்காரு...’’ - அவன் சொன்னான். ‘‘நீ இன்னைக்கு என்னோட விருந்தாளி...’’
அவன் அவளின் கையைப் பற்றினான். நாற்காலியில் உட்கார வைத்தான். மூடி வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களில் இருந்து ஆவி கிளம்பி வெளியே வந்து கொண்டிருந்தது. அவன் ஒரு பாத்திரத்தின் மூடியைத் திறந்தபோது, அதற்குள்ளிருந்து ஆவி பறக்கும் கோழிக் கறியின் வாசனை மூக்கைத் துளைத்தது.
‘‘ஆளே இல்லாத வீட்டில இதையெல்லாம் யார் செஞ்சது?’’
‘‘மஜீத் ஒரு அருமையான சமையல்காரனை வச்சிருக்கான்.’’
மற்றவர்களைப் பற்றி அவன் முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பதில் ஆர்வம் அதிகம் கொண்டவன் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
‘‘அவன் இங்கே இல்ல...’’ - என்ற அவன் நாப்கினை எடுத்து விரித்து கால்கள் மேல் இட்டான். ‘‘அவன் பேரு அப்துல்லா. ஆனா, நாங்க அவனை அல்லான்னுதான் கூப்பிடுவோம். அன்னம் தருகின்றவன் அல்லாதானே?’’
டாக்டர் கிருஷ்ணசந்திரன் எல்லாவற்றையும் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கான். மஜீத்தை கொடுங்கல்லூருக்குப் போகச் சொல்லி அவன்தான் அனுப்பியிருக்கிறான். சமையல் வேலைகளை முழுமையாக முடித்து விட்டு சாப்பாட்டு விஷயங்களை மேஜை மேல் வைத்துவிட்டு அப்துல்லாவையும் இடத்தை காலி பண்ண வைத்திருக்கிறான். இப்போது அங்கு இருப்பது அவர்கள் இரண்டு பேர் மட்டுமே.