லில்லி - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6798
மீண்டும் சிரிப்பு சத்தம். மிகையாக ஒலித்த அந்தச் சிரிப்பு சத்தத்தைக் கேட்டு தளர்ந்து போய் நின்றாள் லில்லி.
காரை நெருங்கி நடக்கும்போது கிருஷ்ணசந்திரன் அவளின் தோளைச் சுற்றி கையைப் போட்டு பிடித்தான். அவன் கைகள் மிகவும் மென்மையாக இருந்தன. கைவிரல்கள் குளிர்ந்தன.
‘‘ஹேவ் எ நைஸ் டைம்.’’
மேஜரும், அவரின் மனைவியும் கார் வரை அவர்களுடன் வந்தார்கள்.
அது ஒரு வெள்ளை நிற ப்ரிமியர் பத்மினி கார். லில்லியை அருகில் அமரச் செய்து, கிருஷ்ணசந்திரன் காரை ‘‘ஸ்டார்ட்’’ பண்ணினான்.
‘‘சரியான ஜோடி...’’
கார் கிளம்பியபோது மேஜரும் அவரின் மனைவியும் ஒரே குரலில் சொன்னார்கள்.
கார் வளைவு திரும்பி மாலை நேர வெயிலில் மறைந்தது.
5
தமாஷாக பல விஷயங்களையும் பேசிக்கொண்டே - அதே நேரத்தில் படு வேகமாக கிருஷ்ணசந்திரன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். நகரத்தை நோக்கி கார் போய்க் கொண்டிருந்தது. ‘‘இந்தப் புதிய காரில் ஒரு ஸ்டீரியோ ப்ளேயர் இருந்திருந்தால்’’ மிகவும் நன்றாக இருந்திருக்கும்... லில்லி நினைத்தாள்.
‘‘நாம இப்போ ஸீ வ்யூவிற்கு போறோம். எனக்கு ஏதாவது குடிக்கணும் போல இருக்கு. நீயும் என் கூட சேர்ந்து சாப்பிட்டா நான் ரொம்பவும் சந்தோஷப்படுவேன். இல்லாட்டி உனக்கு நான் கூல்ட்ரிங் வாங்கித் தர்றேன். அதுக்குப் பிறகு நாம ஒரு இடத்துக்குப் போறோம்.’’
அவள் வின்ட் ஸ்க்ரீன் வழியாக வெளியே தெரியும் கறுப்பு வண்ண சாலையைப் பார்த்தாள்.
‘‘எங்கேன்னு நீ கேட்லியே!’’
‘‘எங்கே?’’
‘‘இப்போ நான் சொல்ல மாட்டேன். லெட் பீ ஏ சர்ப்ரைஸ்...’’
அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமொன்றும் அவளுக்கு இல்லை.
எதிர்பார்த்ததற்கும் முன்பே அவர்கள் நகரத்திற்கு வந்து விட்டார்கள். கடற்கரையில் இருந்த அந்த ஹோட்டலின் முன் பக்கத்தில் மாலை நேர வெயில் விழுந்திருந்தது. மடிப்பு நாற்காலிகளில் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்தவாறு உட்கார்ந்தார்கள். அந்தப் பெரிய நாற்காலி அவளுக்கக் கொஞ்சம் கூட இணங்கியதாக இல்லை. தன்னுடைய நாற்காலியில் முழுமையாக அடைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்த கிருஷ்ணசந்திரன் அவளைப் பார்த்து வெறுமனே புன்சிரிப்பை தவழவிட்டான்.
‘‘மாலை நேர சூரியனை உன்னோட கண்கள்ல நான் பார்க்கறேன்’’ என்றவன் இரண்டு ஸ்காட்ச் கொண்டு வரச் சொன்னான். கண்ணாடி டம்ளர்களையும், பனிக்கட்டிகளையும் அங்கு வேலை பார்க்கும் பணியாளர் கொண்டு வருவதற்கு முன்பு, அவன் அமெரிக்காவில் உள்ள தன்னுடைய மருத்துவமமனையைப் பற்றியும், அங்குள்ள தன்னுடைய ஃப்ளாட்டைப் பற்றியும், காரைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தான். அதைக் கேட்டு அவள் வெறுமனே சிரிக்க மட்டம் செய்தாள்.
பணியாளர் கிருஷ்ணசந்திரனின் டம்ளரில் விஸ்கியைப் பரிமாறினான். அதற்குப் பிறகு லில்லியின் டம்ளரில் பாட்டிலை சாய்க்கும்போது அவன் தடுத்தான்.
‘‘என்னோட வருங்கால மனைவிக்கு ஊற்றிக் கொடுக்க வேண்டியது நான்தான்...’’
அவன் டம்ளரில் ஸ்காட்சை ஊற்றி, பனிக்கட்டிகளைப் போட்டு அவள் கையில் தந்தான். அவன் தன்னுடைய டம்ளரை எடுத்து உயர்த்தினான்.
‘‘ஃபார் எ லாங் ஹோப்பி மேரிட் லைஃப் வித் மெனி சில்ரன்...’’
அவன் உரத்த குரலில் சிரித்தான்.
அவள் ஒரு மடக்கு விஸ்கி குடித்தாள்.
அவன் பீங்கான் தட்டில் இருந்த வறுத்த முந்திரிப் பருப்பை எடுத்து கொறித்தான்.
‘‘நீ அதிகமாக பேசற பொண்ணுல்ல... இல்லையா? பரவாயில்ல. நம்ம ரெண்டு பேருக்கும் சேர்த்து நான் ஒருவனே பேசிடுவேன்.
அவன் தன்னுடைய அமெரிக்க வாழ்க்கையைப் பற்றி மீண்டும் விலாவரியாக சொல்லிக் கொண்டிருந்தான். தன்னுடைய நீல நிற டொயோட்டா கார், நான்காவது தெருவில் இருக்கும் மூன்று அறைகளைக் கொண்ட அப்பார்ட்மெண்ட், வளர்ச்சியடையாத நாடுகளில் இருக்கும் மூன்றாவது தலைமுறை, கம்ப்யூட்டர்களை விற்று கோடீஸ்வரர்கள் ஆன உன்னுடைய தந்தை சி.கெ.யைப் போல சார்லஸ் டெரி என்ற நீளமான தலைமுடியைக் கொண்ட தன்னுடைய நண்பன்...
அவன் சொல்லிக் கொண்டிருந்த விஷயங்களில் பாதியைக் கூட அவள் கேட்கவில்லை. அவளின் காதுகளில் சவுக்கு மரங்களில் இருந்து கிளம்பிய காற்றின் இரைச்சல் மட்டுமே இருந்தது. சவுக்கு மரங்களுக்கு அப்பால் கடல் சிவந்து கலங்கிப் போயிருந்தது. கடலுக்கு மேலே சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக அஸ்தமனமாகிக் கொண்டிருந்தது.
அவன் தன்னுடைய டம்ளரில் பாட்டிலைக் கவிழ்த்தான்.
‘‘நான் ஒரு குடிகாரன்னு நீ இப்போ நினைச்சிருக்கலாம். அமெரிக்காவுல இருக்கிற சீதோஷ்ண நிலையில் இருந்தும், டென்ஷன்ல இருந்தும் விடுபடுறதுக்கு கொஞ்சம் ட்ரிங்க்ஸ் சாப்பிடுறதைத் தவிர வேற வழியே இல்ல. அப்படித்தான் எனக்கு இந்தப் பழக்கம் உண்டாச்சு. அமெரிக்காவுக்குப் போறதுக்கு முன்னாடி நான் இதைத் தொட்டது கூட இல்ல. என்னை நம்பு...’’
அவன் கையில் டம்ளரை வைத்தவாறு சற்று முன்னோக்கி சாய்ந்து உட்கார்ந்தான். கடலில் உருகிக் கொண்டிருந்த சிவப்பு சூரியன் அவன் கண்களுக்குள் தெரிந்தது. பனிக்கட்டிகள் விஸ்கியில் சங்கமமாகி கரைந்து கொண்டிருந்தன. தன்னுடைய கண்ணாடி டம்ளரில் இருந்த பொன்னிற திரவத்தில் ஆகாயத்தின் கடுமையான நிறங்கள் தெரிகின்றவா என்று அவள் ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
அவன் வறுத்த முந்திரிப் பருப்பை எடுத்து வாய்க்குள் போட்டவாறு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தான். தான் சொல்லப் போகிற ஏதோ ஒரு தமாஷான விஷயத்தை நினைத்துப் பார்த்து தனக்குத்தானே அவன் சிரித்துக் கொண்டிருந்தான்.
‘‘இப்போ பி.ஜி. தானே படிக்கிறே! அது முடிஞ்சதும் என்ன பண்றதா திட்டம்?’’
‘‘நான் இதுவரை எதுவும் திட்டம் போடல...’’
அவள் டம்ளரையே பார்த்தாள். அதில் இருந்த விஸ்கி முழுவதையும் ஒரே மடக்கில் குடித்து விட வேண்டும்போல இருந்தது அவளுக்கு.
‘‘அமெரிக்காவுக்கு வா. அன்றாட வாழ்க்கையில் டென்ஷனும் பிரச்சனைகளும் இருந்தாலும், அமெரிக்க வாழ்க்கை ரொம்பவும் சுவாரசியமானது. கொஞ்ச காலம் நாம அங்கேயே இருப்போம்.’’
அவள் டம்ளரை உயர்த்தி அதில் இருந்த விஸ்கியை ஒரே மடக்கில் குடித்து தீர்த்தாள்.
‘‘எனக்கு ஏதாவது ஒரு குக்கிராமத்திற்குப் போய் ஆதிவாசிகளுக்கு மத்தியில் இருந்து அவர்களுக்காகச் சேவை செய்யணும் போல இருக்கு...’’
அவன் அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தான். உரத்த குரலில் அவன் குலுங்கி குலுங்கி சிளீத்தான்.
‘‘காட்டுல போய் வாழ்றதுக்காக நாம தலையைப் புண்ணாக்கிட்டுப் படிச்சு பட்டம் வாங்கினோம்? ஆதிவாசிகளுக்கு சிகிச்சை செய்றதுக்கு நாட்டு வைத்தியர்களும் மந்திரவாதிகளும் இருக்காங்க. நம்மோட தேவையே அவங்களுக்கு அவசியமில்ல. நீ கட்டாயம் அமெரிக்காவுக்கு வரணும். நமக்கு ஏற்ற இடம் அதுதான்...’’