லில்லி - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6798
‘‘மாமன்னூர்ல இருந்து...’’
அதற்குப் பிறகு என்ன பேசுவது என்று தெரியாமல் அவர் ஒரு சிலையைப் போல நின்றிருந்தார்.
‘‘அச்சுதன் நாயர்... அச்சுதன் நாயர்...’’
‘‘மகளைக் காணோம்...’’
அச்சுதன் நாயர் அழுதார். அதற்கு மேல் அவரால் ஒன்றுமே பேச முடியவில்லை.
‘‘என்ன?’’
டெலிஃபோனில் சி.கெ. உரத்த குரலில் என்னவோ கேட்டார். அவ்வளவுதான்... அடுத்த நிமிடம் அச்சுதன் நாயரின் கையில் இருந்து ரிஸீவர் கீழே விழுந்தது. தரையில் விழுந்த ரிஸீவரில் தொடர்ந்து ‘‘ஹலோ’’ ‘‘ஹலோ’’ என்று கேட்டுக் கொண்டே இருந்தது.
சுவாமியும் பையனும் என்னவென்று புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
சிறிது நேரம் சென்றதும் தரையில் கிடந்த ஃபோன் நிசப்தமானது. அச்சுதன்நாயர் ரிஸீவரையே பார்த்தவாறு அசையாமல் நின்றிருந்தார். அவர் தன்னுடைய உயிரை எடுத்துக் கொள்ளும்படி பகவதியிடம் அமைதியாக கேட்டுக் கொண்டார். இனி எந்தக் காலத்திலும் இப்படியொரு மனித வாழ்க்கை தனக்குத் தேவையே இல்லை என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டார்.
சி.கெ. சிறிது நேரம் தொலைபேசியில் ‘‘ஹலோ’’ ‘‘ஹலோ’’ என்று அழைத்துக் கொண்டே இருந்தார். கடைசியில் மீண்டும் டயல்டோன் கேட்டுக் கொண்டே இருந்ததால், அவர் ரிஸீவரைக் கீழே வைத்தார்.
லில்லி எங்கே போயிருப்பாள்? அவள் காணாமல் போவதற்கு, அவளொன்றும் சின்னக் குழந்தை இல்லையே! அவரால் நம்ப முடியவில்லை. யாராவது வேண்டுமென்றே தன்னிடம் விளையாடிக் பார்க்கிறார்களோ? இப்படியெல்லாம் நினைத்தார். சி.கெ. லட்சாதிபதியான சி.கெ.விற்கு ஏகப்பட்ட விரோதிகள் இருக்கிறார்கள். செல்வமும் சொத்தும் அதிகரிக்க அதிகரிக்க அவருக்கு எதிரிகளும் பொறாமைக்காரர்களும் கூடிக்கொண்டே இருந்தார்கள். அவர்களில் யாராவது வேண்டுமென்றே திட்டமிட்டு ஏதாவது காரிங்கள் செய்திருப்பார்களோ?
ஆனால், அச்சுதன் நாயரின் குரல்...
முப்பது வருடங்களாக அவர் தினமும் கேட்டுக் கொண்டிருக்கும் குரலாயிற்றே அது! அந்தக் குரலை அவருக்கு அடையாளம் தெரியாதா என்ன? சி.கெ.விற்கு இந்த விஷயத்தில் சந்தேகமே வரவில்லை.
சி.கெ. நெற்றியில் கோடுகள் விழும் அளவிற்கு உட்கார்ந்து சிந்தித்துப் பார்த்தார். நிச்சயம் அது அச்சுதன் நாயரின் குரலேதான் என்பதில் அவருக்கு எந்த சந்தேகமும் வரவில்லை.
‘‘யார் கூப்பிட்டது?’’
‘‘மேஜர் நம்பியார்.’’
அவருக்கு அந்த நேரத்தில் அப்படித்தான் சொல்லத் தோன்றியது. அவர் தன்னுடைய மனைவியின் முகத்தைப் பார்க்கவில்லை. மறையப் போகும் சூரியனைப் போல இருந்தது அந்தப் பெரிய முகம்.
‘‘ரேவதி, காரோட சாவி...’’
அவர் சட்டையை எடுத்துக் கொண்டு தன் மனைவியின் கையில் இருந்து காரின் சாவியை வாங்கியவாறு வேகமாக வெளியே இறங்கினார். அவரின் மனைவி என்னவோ கேட்டவாறு அவரின் பின்னால் வந்தாள். அவர் போய்க் கொண்டிருந்த அவசரத்தில் என்னவோ சொன்னார். அவர் சொன்னது அவள் காதில் சரியாக விழக்கூட இல்லை. கேட்டைக் கடந்து கார் தெருவில் இறங்கியது. இடது பக்கம் திரும்பி படுவேகமாக அது பாய்ந்தோ£யது. கடற்கரையின் அருகில் இருக்கும் க்ளப்பிற்கு முன்னால் சி.கே.வின் கார் இரைந்து நின்றது. க்ளப்பின் வெளிச்சுவருக்கு வெளியே வரிசையாக நிறைய கார்கள் நின்றிருந்தன. அந்தக் கார்களுக்கு மத்தியில் மேஜர் நம்பியாரின் ஃபியட்டும் இருந்தது.
ஒரு கையில் நீளமான பீர் ஊற்றப்பட்ட கண்ணாடி டம்ளரும், இன்னொரு கையில் சீட்டுகளுமாக மேஜர் நம்பியார் சி.கெ.யை வரவேற்றார்.
வட்ட மேஜைகளைச் சுற்றி பலரும் அமர்ந்து ரம்மி விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆஷ்ட்ரேக்களில் பென்சன் அன்ட் ஹெட்ஜஸின் துண்டுகள் நிறைந்து கிடந்தன.
‘‘ஜஸ்ட் எ மொமென்ட் ப்ளீஸ்’’
சி.கெ. மேஜர் நம்பியாரை தன் அருகில் வரும்படி அழைத்தார். சீட்டுகளையும் பீர் க்ளாஸையும் மேஜையின் மேல் வைத்து விட்டு நாற்காலியைப் பின்பக்கமாய் தள்ளி மேஜர் எழுந்தார். கிட்டத்தட்ட ஆறடியைத் தாண்டிய உயரத்தைக் கொண்ட மனிதர். இலேசாக வெட்டப்பட்ட தலைமுடியும் அடர்த்தியான மீசையும் அவருக்கு இருந்தன. அவற்றை டை போட்டு கறுப்பாக்கியிருந்தார்.
‘‘எக்ஸ்க்யூஸ் மி ஜென்டில்மேன்.’’
மேஜர் நம்பியார் சி.கெ.யுடன் வராந்தாவை நோக்கி வந்தார். முதலில் நம்பியாரும் அதை நம்பவில்லை. யாராவது ஒரு விரோதி அச்சுதன் நாயரின் குரலில் பேசியிருக்கலாம் என்ற தன்னு¬யை கருத்தைச் சொன்னார் மேஜர்.
‘‘ஜஸ்ட் ஃபர்கெட் இட்...’’
நம்பியார் சொன்னார்.
பத்து நிமிட விவாதத்திற்குப் பிறகு, அவர்கள் ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள்.
‘‘லெட் அஸ் வெயிட் அன்ட் ஸி...’’ - நம்பியார் சொன்னார்.
‘இனியொரு தடவை ஃபோன் வந்தா, வி வில் கோ தேர்....’’
மேஜர் விளையாட்டை நிறுத்திவிட்டு சி.கெ.யுடன் போனார். புல்வெளியில் உட்கார்ந்து அவர்கள் ஐஸ் கட்டிகள் சேர்த்து ஸ்காட்ச் அருந்தினார்கள். பென்சன் அன்ட் ஹெட்ஜஸ் புகைத்தார்கள். குளிர்ச்சியாக இருந்த வெண்ணெய்க் கட்டிகளைத் தின்றார்கள். மொத்தத்தில் அவர்கள் லில்லியின் கதையை மறந்தே போனார்கள். உரத்த குரலில் பேசினார்கள். சிரித்தார்கள். தலச்சேரிக்கு மேலே நட்சத்திரங்கள் உறக்கத்துடன் நின்று கொண்டிருந்தன. கடல் பாலத்துக்கு மேல் உப்பு கலந்த காற்று வீசியது.
நேரம் கடந்து கொண்டிருக்க, இரவு நீண்டு கொண்டிருக்க தொலைபேசி ஒலித்தது. முள்ளில் எதையோ குத்தித் தின்பதற்காக வாயில் அருகில் கொண்டு சென்ற சி.கெ. அதைத் தட்டிலேயே வைத்துவிட்டு தொலைபேசியின் அருகில் வந்தார். மேஜர் நம்பியார் சி.கெ. என்ன பேசுகிறார் என்பதைக் கேட்பதற்காக காதைத் தீட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.
சி.கெ.கேட்டார்.
‘‘திஸ் ஈஸ் ஆர்.பெரியசுவாமி ஃப்ரம் மாமன்னூர் ஸ்பீக்கிங்...’’
3
லில்லி காட்டில் காணாமல் போனதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு-
எமர்ஜென்ஸி வார்டில் இரவு ட்யூட்டி முடிந்து தூக்கக் கலக்கத்துடன் அவள் ஹாஸ்டலை நோக்கி திரும்பி வந்தபோது, அங்கே எதிரில் வந்து கொண்டிருந்தார் அச்சுதன் நாயர். முதலில் அது யார் என்று அவளுக்கு சரியாக அடையாளம் தெரியவில்லை. அது அச்சுதன் நாயர் என்ற விஷயம் தெரிய வந்தபோது உண்மையிலேயே அவள் பரபரப்படைந்து விட்டாள்.
‘‘அச்சுதன் நாயர்... நீங்க எப்போ வந்தீங்க?’’
‘‘இப்பத்தான்...’’
அவர் தலையையும் காதுகளையும் சேர்த்து கட்டியிருந்த மஃப்ளரை அவிழ்த்தார். அதைச் சுருட்டிகையில் வைத்துக் கொண்டார். பனிப்படலம் மூடியிருந்த வெளிச்சம் குறைவாக இருந்த ஒரு அதிகாலை நேரம் அது. அவர்கள் நின்றிருந்த இடத்தில் பூஞ்செடிகள் பனியில் நனைந்து காணப்பட்டன.
கேட்டிற்கு வெளியே புதிய மாரற்க் ஃபோர் கார் நின்றிருந்தது.
‘‘அச்சுதன் நாயர்... நீங்க மட்டும் தனியா வந்தீங்களா?’’
அவள் காரைப் பார்த்தவாறு கேட்டாள். அச்சுதன் நாயர் ஆமாம் என்று தலையை ஆட்டினார். அவர் சொன்னார்.