லில்லி - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6798
(டாக்டர்களுக்கு தேர்வு என்ற ஒன்று இருக்கிறது என்பதே அச்சுதன் நாயருக்கு இப்போதுதான் தெரியும்.)
‘‘மகளே, மகளே லில்லி...’’
அவர் காரின் இரு பக்கங்களிலும் பார்த்தவாறு சத்தம் போட்டு அழைத்தார். அவரால் நிற்க முடியவில்லை. மீண்டும் சிறிது நேரம் நடந்து பார்த்தார். காருக்குள் போய் உட்கார்ந்தார். அடுத்த நிமிடம் கார் கதவைத் திறந்து வெளியே வந்தார். இரண்டு மூன்று பீடிகளைப் புகைத்துத் தீர்த்தார்.
கடைசியில் அவர் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மரங்களுக்கிடையே போய் பார்த்தார். இடைவிடாது வளர்ந்திருந்த மரங்களையும் கொடிகளையும் தவிர அங்கு வேறு எதுவுமே இல்லை. திரும்பவும் வந்து பாதையைத் தாண்டி மறுபக்கம் போய் பார்த்தார். அங்கும் மரங்களும் செடிகளும் தவிர வேறு எதுவும் இல்லை.
‘‘என் பகவதியே!’’
அவரின் நெற்றியில் இருந்த வியர்வை அருவியென வழிந்து கொண்டிருந்தது. கண்கள் இருட்டிக் கொண்டு வந்ததைப் போல் இருந்தது. திடீரென்று ஒரு குளிர்காற்று வீசி வருவதைப் போல ஒரு பழைய நிகழ்ச்சி அவரின் ஞாபகத்தில் அப்போது வந்தது.
அச்சுதன் நாயர் கான்வென்ட்டின் அருகில் காரை நிறுத்தி விட்டு லில்லிக்காக காத்து நின்றிருந்தார். மணியடித்ததும் குழந்தைகள் கூட்டம் கூட்டமாக வெளியே வந்து கொண்டிருந்தனர். அவர்கள் கார்களிலும் ரிக்ஷாக்களிலும் ஏறி போன வண்ணம் இருந்தனர். லில்லியை மட்டும் காணவில்லை.
பார்த்துப் பார்த்து அச்சுதன் நாயருக்கு கண்களுக்கு வலியே வந்துவிட்டது. கான்வென்ட்டின் கேட்டைத் திறந்து அவள் உள்ளே நடக்கும்போது, சுவரின் அருகில் பெரிய ஒரு மரத்திற்குக் கீழே லில்லி ஒளிந்திருப்பதைப் பார்த்து விட்டார். அவள் ‘‘கலகல’’வென சிளீத்தவாறு புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு அவரை நோக்கி ஓடிவந்தாள்.
‘‘அச்சுதன்நாயர், என்ன பயந்துட்டீங்களா?’’
அவர் அவளைத் தூக்கிப் பூவைப் போல மென்மையாகச் சிளீத்த கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.
காட்டுப் பாதையில் நின்றிருந்த அச்சுதன் நாயர் அந்தப் பழைய சம்பவத்தை நினைத்துப் பார்த்து தன்னை மீறி சிரித்தார்.
நேரம் கடந்து போய்க் கொண்டே இருந்தது. சிறிய ஃப்ராக் அணிந்திருந்த லில்லி இப்போது மருத்துவ கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள். இருந்தாலும் அவள் தன்னுடைய பழைய குறும்புத் தனத்தை இன்னும் மறக்கவில்லைதான்.
அச்சுதன் நாயர் இரு பக்கங்களிலும் இருந்த பெரிய மரங்களைப் பார்த்தார். அந்தப் பெரிய மரங்களில் ஏதாவதொன்றுக்குப் பின்னால் அவள் நிச்சயம் மறைந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் அவர். ‘‘இந்த அச்சுதன் நாயர்கிட்ட விளையாட வேண்டாம். குறும்புக்காரப் பொண்ணு. இங்கே வா. உன்னை நான் அடிச்சாத்தான் நீ சரியா வருவே. இந்த அச்சுதன் நாயர்...’’
அச்சுதன் நாயருக்கு வயதாகிவிட்டது. அவர் தனக்கத் தானே சொல்லிக் கொண்டார். விளையாடுவதற்கும் சிரிப்பதற்கும் உள்ள வயதல்ல இது. போதாதற்கு இரத்த அழுத்தம் வேறு அவ்வப்போது அவரை வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது.
அவர் நடக்க முடியாமல் நடந்து ஒவ்வொரு பெரிய மரத்திற்குப் பின்னாலும் போய் அவள் ஒளிந்திருக்கிறாளா என்று பார்த்தார். ஒவ்வொரு மரத்திற்கு அருகில் போகும்போதும் அவள் குலுங்கிக் குலுங்கி சிளீத்தவாறு அதற்குப் பின்னால் இருந்து ஓடி வருவாள் என்று எதிர்பார்த்தார்.
நடந்து நடந்து அவருக்கு கால்கள் வலித்தன. அச்சுதன் நாயர் மிகவும் களைப்படைந்து போனார்.
‘‘என் பகவதி... சேவலோட இரத்தத்தை உனக்கு நான் தர்றேன். என்னை இப்படி சோதனை பண்ணலாமா?’’
அவர் முடியாமல் காரின் பானட்டின் மேல் சாய்ந்து நின்றார். அப்போதுதான் பின்னிருக்கையில் இருந்த சூட்கேஸும் கேஸ்ட் ப்ளேயரும் அங்கே இல்லை என்பதையே அவர் பார்த்தார். அவ்வளவுதான் அவருக்குத் தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. அப்படியே நிலை சாய்ந்து காரின் மேல் விழுந்து விட்டார்.
சிறிது நேரம் கழித்து கண்களைத் திறந்து பார்த்தார். வாயில் ஒரு துளி நீர் கூட இல்லை. அவர் மெதுவாக எழுந்து கைக்கடிகாரத்தைப் பார்த்தார். லில்லி போய் ஒரு மணி நேரம் கழிந்து விட்டது.
அச்சுதன் நாயர் வண்டியில் ஏறி காரை ஸ்டார்ட் செய்தார். மிகவும் கஷ்டப்பட்டு காரை ரிவர்ஸ் எடுத்து அவர் வந்த பாதையிலேயே காரை ஓட்டினார். உடம்பு பயங்கரமாக நடுங்கியது. கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன.
மாலை வெயில் விழுந்து கொண்டிருந்த காட்டுப் பாதையை விட்டு கார் ஹைவேக்குள் பிரவேசித்தது. அப்போதும் அவரின் உடல் நடுங்கிக் கொண்டுதானிந்தது.
ஐந்தரை மணி ஆனபோது அவர் மாமன்னூரை அடைந்தார். ஏற்கனவே நன்கு பழக்கமான பெட்ரோல் பங்க்கைத் தேடி வந்தார். ஊருக்கு ஒர கால் புக் பண்ணினார். காத்திருந்தார். அவரின் மனம் எதையெதையோ நினைத்தது. ‘‘முதலாளியிடம் என்ன பதில் சொல்வது? என் பகவதிலேய... இதைவிட பேசாம என் உயிரையே நீ எடுத்திருக்கலாமே...!’’
அவர் என்னென்னவோ சொல்லி தனக்குத் தானே முனகிக் கொண்டிருந்தார். அவரின் உதடுகள் வறண்டு போயிருந்தன.
‘‘என்ன பெரியவரே, உடம்புக்குச் சரியில்லையா?’’
அச்சுதன் நாயரின் தர்மசங்கடமான நிலையைப் பார்த்து பெட்ரோல் பங்க் மேனேஜர் சுவாமி கேட்டான்.
‘‘தண்ணீ...’’
மரணமடைவதற்கு முன்பு நீர் கொடுப்பதைப் போல அச்சுதன் நாயர் தன் உதடுகளை விழித்தார். சுவாமி ஒரு பையனை அனுப்பி சூடான தேநீர் வாங்கி வரச் செய்தார். தேநீர் உள்ளே சென்றதும் அச்சுதன் நாயருக்கு கொஞ்சம் தெம்பு வந்தது.
‘‘நீங்க எங்கே இருந்து வர்றீங்க பெரியவரே?’’
‘‘காட்டுல இருந்து...’’
சுவாமியும் பையனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு எதுவுமே புரியவில்லை. அச்சுதன் நாயரை பார்க்கும்போது ஒரு வேட்டைக்குப் போகும் மனிதரை மாதிரி தெரியவில்லையே!
‘‘சரி... இங்கே படுத்துக்கங்க...’’
சுவாமி அங்கே இருந்த ஒரு பெஞ்சை சுட்டிக் காட்டினான்.
அச்சுதன் நாயர் பெஞ்சில் காலை நீட்டி படுத்துக் கொண்டு, துண்டால் தன் மீது விசிறிக் கொண்டார். அடுத்த நிமிடம் என்ன நினைத்தாரோ, மறுபடியும் எழுந்து உட்கார்ந்தார். தொலைபேசியில் மணியடிக்கிறபோது, முதலாளியிடம் என்ன சொல்வது? இதை நினைக்க நினைக்க அவருக்குத் தொண்டையே வற்றிப்போய்விட்டது மாதிரி இருந்தது.
மாலை நேரம் ஆனபோது தொலைபேசி அடித்தது. தூரத்தில் இருந்த சி.கெ.யின் கம்பீரமான ‘‘ஹலோ ஹலோ’’ சத்தம்.
‘‘நான்தான்... அச்சுதன் நாயர் பேசுறேன்...’’
‘‘என்ன நாயர்? கொஞ்சம் சத்தமா பேசுங்க...’’
‘‘டிரைவர் அச்சுதன் நாயர்...’’
‘‘ம்... என்ன அச்சுதன் நாயர்? எங்கேயிருந்து பேசுறீங்க?’’