லில்லி - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6798
யார் முகத்தை ஒரு மாதிரி வைத்திருப்பது? அவளின் தாய்க்கு ஏனோ அப்படித் தோன்றுகிறது. அவள் அமைதியாக கப்பில் தேநீரை ஊற்றினாள். அவளின் மனம் கண்ணாடியைப் போல் அமைதியாக இருந்தது இப்போது.
‘‘புத்தி இருந்தா நீயே இப்போ புரிஞ்சிருப்பே... நான் ஏன் உன்னைக் கூப்பிட்டிருக்கேன்னு.’’
அவள் நீட்டிய தேநீர் கப்பை வாங்கியவாறு சி.கெ. சொன்னார். அவர் மகளின் முகத்தையே பார்த்தார்.
‘‘என்னைப் பார்க்குறதுக்காக யாராவத வர்றாங்களா?’’
‘‘சரியா சொன்னே.’’
சி.கெ. மகிழ்ச்சியான குரலில் சொன்னார்.
‘‘என் மகள் என்னைப் போலவே அறிவாளி...’’
அடுத்த நிமிடம் அவர் தன்னுடைய மகிழ்ச்சியை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியானார்.
‘‘டாக்டர் கிருஷ்ணசந்திரன். ஹீ ஈஸ் ஸெட்டில்ட் இன் தி ஸ்டேட்ஸ்.’’
தான் சொல்ல வந்ததை நிறுத்திய சி.கெ. மகள் என்ன நினைக்கிறாள் என்பதைத் தெரிந்துக் கொள்வதற்காக அவளின் முகத்தையே உற்று நோக்கினார். லில்லியின் கண்களில் கவலையின் ரேகைகள் தெரிந்தன.
‘‘உனக்கு ஆச்சரியமா இருக்கா?’’
‘‘இல்ல அப்பா...’’
‘‘எங்க மேல உனக்கு கோபமா?’’
தாய் மகளைப் பார்த்து புன்னகையைத் தவழ விட்டாள். அவள் பதில் எதுவும் சொல்லாமல் மேலும் கொஞ்சம் தேநீரை ஊற்றினாள். கப்பில் இருந்து நறுமணம் கொண்ட ஆவி மேலெழுந்தது. அவள் தேநீர் குடிக்கவில்லை. அவளின் கண்களில் இனம் புரியாத கோபத்தின் அலைகள் உண்டானதென்னவோ உண்மை.
‘‘என்ன ஒண்ணும் பேசாமலே இருக்கே?’’
‘‘என்கிட்ட கேட்டுட்டா நீங்க எந்த ஒரு விஷயத்தையும் தீர்மானிக்கிறீங்க, அப்பா?’’
‘‘பொண்ணு ஆரம்பிச்சிட்டா...’’ - அவளின் தாய்க்கு கோபம் வந்தது. ‘‘ஏதாவது ஒரு நல்ல விஷயத்தைத் தொடங்குறப்போ சண்டை போட வந்திடுவா...’’
‘‘யாரும் சண்டை போடவும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்’’ - சி.கெ. சொன்னார். ‘‘சாயங்காலம் டாக்டர் கிருஷ்ணசந்திரன் தலச்சேரிக்கு வர்றான். நீ அவனைப் போய் பார்க்கணும். அவன்கிட்ட பேசணும். அதற்குப் பிறகு நீயே தீர்மானம் பண்ணிக்கோ....’’
எல்லாம் அவள் கையிலேயே விடப்பட்டிருக்கிறது என்பது மாதிரி இருந்தது சி.கெ.யின் பேச்சு. ஆனால், அவளின் தந்தை முன்கூட்டியே எல்லா விஷயங்களையும் தீர்மானித்து வைத்திருப்பார் என்பது அவளுக்கு தெரியாதா என்ன?
தன் தந்தையின் நிறுவனங்களில் வேலை காலியாக இருக்கும் சூழ்நிலை வருகிறபோது இளைஞர்களை நேர்முகத் தேர்வுக்கு வரச் செய்வது மாதிரிதான் இது. ஏற்கனவே வேலைக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்கள். இருப்பினும், தேவையில்லாமல் ஆட்களை வரவழைத்து நேர்முகத் தேர்வு நடத்தி அவர்களுக்கு எதிர்பார்ப்பு உண்டாக்கும் ஒரு வேலையை வீணாகச் செய்து கொண்டிருப்பார்.
தன்னுடைய சொந்த மகள் விஷயத்திலும் அவளின் தந்தை அதே வியாபார புத்தியைத்தான் பயன்படுத்துகிறார்.
அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் டாக்டரின் உறவினர்களுடன் ஏற்கனவே எல்லாவற்றையும் பேசி முடித்திருப்பார். கொடுப்பதாக வாக்களித்திருக்கும் புதிய ஃபியட் காரும் ஏற்கனவே வந்து சேர்ந்திருக்கும். சாயங்காலம் அந்த ஆளை தான் சந்திக்கும் நிகழ்ச்சி வெறுமனே ஒரு சடங்கு என்பதை லில்லி நன்றாகவே அறிவாள்.
அதற்கு மேல் அவள் சொல்ல என்ன இருக்கிறது?
அவள் இருந்த இடத்தை விட்டு எழுந்தாள். மெதுவாக மேலே ஏறிச் சென்றாள். அவளின் அறையில் நாற்பது வாட் ஸ்டீரியோ இசை முழங்கிக் கொண்டிருந்தது. அவள் தலை முடியை வாரி கட்டி கண்ணாடியின் முன்னால் போய் நின்று தன்னைப் பார்த்தாள். பின்னர் என்ன நினைத்தாளோ அதை மீண்டும் அவிழ்த்து தோளில் சுதந்திரமாக விரித்துப் போட்டவாறு ஜன்னலின் அருகில் போய் நின்றாள். பிறகு படுக்கையில் வந்து உட்கார்ந்தாள். தலை முடியை மார்பின் மீது இருக்கும்படி செய்து அதைப் பின்னத் தொடங்கினாள். பின்னர் பின்னிய தலை முடியை மீண்டும் அவிழ்த்து விட்டு மின் விசிறியை முழு வேகத்தில் வைத்து அதற்குக் கீழே போய் உட்கார்ந்தாள். அவளின் பட்டு இழை போன்ற முடி மின் விசிறிக் காற்றில் பறந்து அவளின் முகத்தை முழுமையாக மூடியது.
அன்று பகல் முழுவதும் அவளின் அறையில் இருந்து ஸ்டீரியோ இசை முழங்கிக் கொண்டே இருந்தது. பூகிவூகியும், ராக்கும், கும்போவும், டாங்கோவும், சாம்போவும், போஸ்ஸோநோவோவும்- மொத்தத்தில் ஒரு ஸ்டீரியோ இசையின் கோலாகலமே அங்கு இருந்தது.
மாலையில் லில்லி கிருஷ்ணசந்திரனைச் சந்தித்தாள். சி.கெ.தான் அவளைக் காரில் ஏற்றிக் கொண்டு அங்கு அழைத்துச் சென்றார். போகும் வழியெங்குமு அவர் கிருஷ்ணசந்திரனின் குடும்பப் பெருமையைப் புகழ்ந்து கொண்டே வந்தார். தந்தையின் அருகில் அமர்ந்து அவள் எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
‘‘ஐ ஆம் ஷ்யூர் யூ வில் பி ஹாப்பி வித் ஹிம்.’’
அவர் சொன்னார். கார் கேட்டைக் கடந்து மேஜர் நம்பியாரின் பங்களாவுக்குள் நுழைந்தது. இடி முழக்கத்தைப் போல குரைத்தவாறு உயர்ந்த இனத்தைச் சேர்ந்த ஒரு நாய் அவர்களை வரவேற்றது. அவர் காரை விட்டு இறங்கியபோது அது அமைதியாக வாலாட்டியவாறு சி.கெ.யின் காலுக்கருகில் வந்து நின்றது.
‘‘ஹௌ டூ யூ டூ தண்டர்?’’
‘‘நன்றாக இருக்கிறேன்’’ என்பது மாதிரி தண்டர் சி.கெ.யின் காலைத் தொட்டுக் கொண்டு நின்றது.
மேஜர் நம்பியார் வெளியே வந்து அவர்களை வரவேற்றார்.
‘‘வெல்கம் யங் லேடி’’
அவர் லில்லியை தன்னுடன் சேர்த்து அணைத்தார். அவரிடமிருந்து சென்ட், புகையிலை ஆகியவற்றின் நறுமணம் கிளம்பி வந்தது.
‘‘டாக்டர் வந்தாச்சா? நாங்கள் தாமதம் இல்லையே?’’
‘‘ஹீ ஈஸ் இன் அப்ஸ்டேர்ஸ். இப்போத்தான் அவன் வந்தான்.’’
சி.கெ. மேலே மாடிக்குச் சென்று கிருஷ்ணசந்திரனிடம் குசலம் விசாரித்தார். சிறிது நேரத்தில் கீழே இறங்கி வந்தார். அவர் அதிக நேரம் அங்கு இருக்கவில்லை.
‘‘எக்ஸ்க்யூஸ் மீ... எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு.’’
மேஜர் பீர் சாப்பிட அழைத்தார். ஆனால் சி.கெ. நிற்கவில்லை. அவர் காரின் சாவியை சுட்டு விரலில் மாட்டிக் கொண்டு ஆட்டியவாறு காரை நோக்கி நடந்தார்.
‘‘லில்லியை நான் வீட்டுல விட்டுர்றேன்.’’
மேஜர் சொன்னார்.
காரை ‘‘ஸ்டார்ட்’’ செய்கிறபோது சி.கெ. லில்லியைப் பார்த்தார். அந்தப் பார்வையில் எல்லாமே இருந்தது. எல்லாம்... எல்லாம். அந்தப் பார்வையின் பொருளை அவள் புரிந்து கொண்டாள்.
சி.கெ. காரை ஓட்டியவாறு கேட்டைக் கடந்து மறைந்தார்.
‘‘யங் லேடியே வா...’’
மேஜர் லில்லியின் கையைப் பற்றினார். அவள் புடவையை இழுத்து தோளில் இட்டவாறு மேஜருடன் சேர்ந்து வரவேற்பறைக்கு வந்தாள்.