லில்லி - Page 12
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6799
‘‘இந்த பங்களாவுல இருக்குறது நாம ரெண்டு பேர் மட்டும்தான்’’ - அவன் அவளை நோக்கி புன்னகைத்தான். ‘‘நான் ஒரு நல்ல டாக்டர் மட்டுமல்ல. ஒரு நல்ல ஆர்கனை சரும் கூட என்னோட ஏற்பாடுகளைப் பற்றி என்னுடைய வருங்கால மனைவிக்கு ஒரு மதிப்பு வரணும்ல.’’
அவள் புன்னகைக்க முயற்சி செய்தாள். ஆனால், முடியவில்லை.
‘‘உனக்கு என்ன வேணும்... ஆப்பமும் கோழிக்கறியும்? இல்லாட்டி சப்பாத்தி சாப்பிடுறியா?’’
அவன் கோழிக்கறி இருந்த பீங்கான் பாத்திரத்தை அவளுக்கு நேராக நீட்டினான். அதைப் பரிமாற அவன் முயன்றபோது, அவள் தடுத்தாள்.
‘‘நான்தானே பரிமாறணும்?’’
‘‘அது கல்யாணம் முடிஞ்ச பிறகு...’’
‘‘யாரோட கல்யாணம்?’’ - அவள் கேட்டாள். ஆனால், சத்தம்தான் வெளியே சரியாகக் கேட்கவில்லை.
‘‘என்ன.. என்னை உனக்குப் பிடிக்கலையா?’’ - அவன் அவளின் முகத்தைப் பார்த்தான். ‘‘நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன், பார்ப்பதற்கு அழகா இருப்பவன், நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டவன், அமெரிக்காவுல செட்டில் ஆன டாக்டர்... இதுக்கு மேல உனக்கு என்ன வேணும்?’’
அவளின் ஈரம் படிந்திருந்த கறுப்பான விழிகளில் இரவு நேரத்தின் வெண்மையான பனி தெரிந்தது.
‘‘சொல்லு... இதுக்கு மேல உனக்கு என்ன வேணும்?’’
‘‘எனக்கு இது எதுவுமே தேவையில்ல...’’ அவள் மனதிற்குள் கூறினாள். ‘‘நான் விரும்புறது எதுவுமே உங்கக்கிட்ட இல்ல...’’
‘‘லில்லி... என்ன ஒண்ணுமே பேசாம இருக்கே? ஏதாவது பேச வேண்டியதுதானே?’’
‘‘எனக்கு விஸ்கி வேணும்...’’
‘‘அவன் விழுந்து விழுந்து சிரித்தான். அவன் சிரிக்கச் சிரிக்க அவள் மிகவும் களைப்படைந்ததாள்.’’
‘‘கல்யாணப் பரிசா நான் உனக்கு ஒரு கேஸ் நிறைய ஸ்காட்ச் வாங்கித் தர்றேன். போதுமா? இப்போ நீ இதைச் சாப்பிடு.’’
அவன் வாசனை பரப்பிக் கொண்டிருந்த கோழிக்கறியை அவளின் தட்டில் பரிமாறினான்.
‘‘ஹா... என்ன வாசனை!’’
அவன் தன்னுடைய தட்டிலும் கோழிக்கறியைப் பரிமாறினான்.
‘‘சொல்லப் போனால் நான் ஒரு சாப்பாட்டு ராமன். லில்லி... தெரியுதா? அதைப் பற்றி நீ ஒண்ணும் வித்தியாசமா நினைக்காதே. அளவுக்கும் அதிகமான ஆர்வத்துடன் அவன் சாப்பிட ஆரம்பித்தான். அவளைப் பொறுத்தவரை எல்லா விஷயங்களிலுமே அவன் அளவுக்கு அதிகம்தான். அளவுக்கும் அதிகமான ஆரோக்கியமும், அழகும், படிப்பும், பணமும். அளவுக்கும் அதிகமான பசியும், தாகமும்...’’
‘‘நீ ஒண்ணும் சாப்பிடலைன்னா, அல்லாவால அதைத் தாங்கிக்கவே முடியாது.’’
அவன் ஒரு ஆப்பத்தை எடுத்து இரண்டாகப் பிய்த்து ஒரு பகுதியை கோழிக்கறியில் தொட்டு அவளின் வாயில் வைத்தான்.
கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒரு விஷயம் அது. தன்னையே அறியாமல் அவள் தன்னுடைய வாயைத் திறந்தாள்.
‘‘இப்படித்தான் சொன்னபடி நடக்கணும்.’’
அவன் மகிழ்ச்சியுடன் அவள் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.
‘‘நீ சாப்பிடுறதைப் பார்க்குறப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?’’
மீண்டும் வரவேற்பறைக்குச் சென்று அமர்ந்த லில்லி சுவரில் தொங்கிக் கொண்டிருந்த க்வார்ட்ஸ் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்து ஆகியிருந்தது.
இவ்வளவு தாமதம் ஆகியிருக்கக் கூடாது. வீடு இங்கிருந்து கிட்டத்தட்ட இருபது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. தன் தந்தையும், தாயும் தனக்காகக் காத்திருப்பார்கள் என்று நினைத்தாள் அவள்.
‘‘இப்போதே புறப்பட்டால் பதினொரு மணிக்குள் வீட்டை அடைந்து விடலாம். நான் உடனே புறப்படணும்.’’
‘‘அவனிடம் சொல்வதற்காக அவள் மீண்டும் கடிகாரத்தைப் பார்த்தாள். தொடர்ந்து தன்னுடைய கைக்கடிகாரத்தையும்.’’
‘‘உடனே போகணுமா என்ன?’’ - அவன் கேட்டான். ‘‘என்னுடைய இரவு தினமுமம் தாமதமாகத்தான் ஆரம்பிக்கும். ரெண்டு மணிக்கு முன்னாடி படுத்தா எனக்கு தூக்கமே வராது.’’
‘‘எனக்கும் சீக்கிரம் தூக்கம் வராது.’’
‘‘பிறகு வீட்டுக்குப் போய் என்ன செய்யப் போற? இன்னைக்கு இதுவ நம்மோட வீடா இருக்கட்டுமே! இது நம்மோட படுக்கையறை...’’
அவன் முத்துச்சரங்கள் திரைச்சீலையாகத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு அறையைச் சுட்டிக் காட்டினான். அங்கே நீல வெளிச்சம் தெரிந்தது. முத்துக்கள் வழியாக அவள் வெண்மை நிறத்தில் இருந்த படுக்கையைப் பார்த்தாள்.
‘‘கமான் லில்லி... வா... நாம படுக்கையறையைப் பார்க்கலாம்.’’
டாக்டர் மஜீத்தின் படுக்கையறையை நான் ஏன் பார்க்க வேண்டும்? - அவள் மனதிற்குள் கூறினாள்.
அவன் அவளைப் பிடித்து எழுந்திருக்கச் செய்தான். முத்துக்களை நீக்கி படுக்கையறைக்குள் நுழைந்தார்கள். அங்கும் பட்டும், முத்தும், கண்ணாடிகளும்தான்... ஆடம்பரத்தின் வெளிப்பாடு அந்த அறையெங்கும் காணப்பட்டது.
வெள்ளியால் ஆன ஒரு ஃப்ரேமில் வைக்கப்பட்டிருந்த ஒரு புகைப்படம் -
‘‘அறிமுகப்படுத்த வேண்டிய தேவையில்லையே?’’ -அவன் புகைப்படத்தின் முன்னால் போய் நின்றான். புகைப்படத்தில் டாக்டர் மஜீத்தும் அவன் மனைவி ஜமீலா பீவியும் இருந்தார்கள்.
அவள் மிகவும் அழகாக இருந்தாள். மஜீத் நீண்ட மூக்கையும் பிரகாசமான முகத்தையும் கொண்டிருந்தான்.
பொத்தான்களைக் கழற்றி சட்டையை உடம்பிலிருந்து நீக்கியவாறு டாக்டர் கிருஷ்ணசந்திரன் அந்தப் புகைப்படத்தைக் கையிலெடுத்தான்.
‘‘டேய் டாக்டர் மஜீத்... நீயும் உன் மனைவியும் கொஞ்ச நேரம் அந்தப் பக்கம் திரும்பி இருங்க. இந்தப் பக்கம் நடக்குற எதையும் பார்க்கக்கூடாது.’’
அவன் புகைப்படத்தைச் சுவரில் திருப்பி வைத்துவிட்டு, அவளை நோக்கி சிரித்தான்.
‘‘இனி நம்மை யாரும் தொந்தரவு செய்யப் போறதில்ல...’’
யாராவது வந்து உண்மையிலேயே தொந்தரவு செய்தால்... அவள் அப்படித்தான் நடக்க வேண்டும் என்று விரும்பினாள். கதவை யாராவது தட்டமாட்டார்களா என்ற ஆர்வத்துடன் அவள் எதிர்பார்த்தாள்.
‘‘சரி... புடவையை மாற்ற வேண்டாமா -?’’
அவள் கடிகாரத்தைப் பார்த்தாள். அவனுக்குச் சிரிப்பு வந்தது. அவன் மெதுவாக அவளின் அருகில் சென்று அவளின் இடது கையைப் பிடித்துத் தூக்கி, கடிகாரத்தைக் கழற்றினான்.
‘‘இனி எப்படி நமக்கு நேரம் தெரியும்?’’ - அவன் விழுந்து விழுந்து சிரித்தான். ‘உலகத்தின் எல்லா கடிகாரங்களும் நின்னிடுச்சு. இனி யாருக்குமே நேரம்ன்றது தெரியாது.’’
அவன் தன்னுடைய உள்ளங்கையில் இருந்த லில்லியின் கடிகாரத்தைப் பார்த்தான். அது ஒரு சாதாரண கடிகாரம். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்பு அது வாங்கப்பட்டிருக்க வேண்டும். ‘‘உன் அப்பா எவ்வளவு பெரிய பணக்காரர்! இருந்தும், இந்தக் கடிகாரத்தையா உனக்கு வாங்கித் தந்திருக்கிறார்?’’
அவன் அவளின் மென்மையான கையை, தன்னுடைய கையிலெடுத்து அதை மெதுவாகத் தடவினான்.
‘‘உன் கைக்குப் பொருத்தமாக இருக்குற கடிகாரம் என் மனசுல இருக்கு. தங்க வார் உள்ள ஒரு பெரிய முத்து போல இருக்குற ஒரு கடிகாரம்...’’