லில்லி - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6798
‘‘அச்சுதன் நாயர்... எங்கே போறீங்க?’’
‘‘பயப்பட வேண்டாம். நான் இதோ வந்திர்றேன்.’’
அவர் வேட்டியை மடித்துக் கட்டியவாறு பாதையில் வளைவைத் தாண்டிச் சென்று கீழே உட்கார்ந்தார்.
காரில் இருந்தவாறு லில்லி வெளியே பார்த்தாள். வெயிலில் மூழ்கி நின்றிருந்த அந்த அடர்ந்த காட்டையே வெறித்து நோக்கினாள். பச்சைப் பசேல் என இருந்த அந்தக் காட்டைப் பார்த்தபோது அவள் இதயமெங்கும் ஒரு குளிர்ச்சி உண்டானது. காட்டுக்கே உரிய குளிர்ச்சியும், இனிய ஒரு வாசனையும் தன்னை முழுமையாக ஆக்கிரமிப்பதைப் போல் அவள் உணர்ந்தாள்.
காட்டுக்குள்ளிருந்து ஒரு சிறு கிளி பறந்து வந்து காரின் பானட்டில் உட்கார்ந்தது. அதன் சிறகுகளில் மூக்குத்திப் பூக்கள் மலர்ந்திருப்பதைப் போல் மஞ்சள் மஞ்சளாக புள்ளிகள் இருந்தன. வின்ட் ஸ்க்ரீன் வழியாக கிளி அவளைப் பார்த்தது. அலகுகளை விரித்து அவளைப் பார்த்து என்னவோ சொன்னது.
அவள் கதவைத் திறந்து காரை விட்டு கீழே இறங்கினாள். கிளி அதன் சிறகுகளை விரித்து அவளுக்கு வழி காட்டிச் செல்வதைப் போல காட்டுக்குள் மீண்டும் சென்றது. காட்டுப் பூக்களில் இருந்து வந்த நறுமணம் அவளின் உடம்பெங்கும் ஒருவித சிறீர்ப்பை உண்டாக்கியது. ஒரு கதக் நடனம் ஆடும் பெண்ணைப் போல அவள் ஒரு சுற்று சுற்றினாள்.
அச்சுதன் நாயர் இப்போது தூரத்தில் வளைவைத் தாண்டி உட்கார்ந்திருந்தார்.
ஒரு கையில் கேசட் ப்ளேயரையும் இன்னொரு கையில் சிவப்ப வண்ண ப்ரீஃப் கேஸையும் வைத்தவாறு அவள் கிளி போன வழியே நடந்தாள். கிருஷ்ணமணிப் பூக்கள் மலர்ந்து தொங்கிக் கொண்டிருந்த கொடிகளைக் கடந்து அவள் காட்டுக்குள் நுழைந்தாள்.
வேகமாக நடந்தும், ஓடியும் - சொல்லப் போனல்- இன்னொரு காட்டு கிஷீயாக, மற்றொரு காட்டுப் பூவாக அவள் மாறி காட்டிற்குள் மறைந்தாள்.
2
அச்சுதன் நாயர் வேட்டியை சரி பண்ணி கட்டியவாறு வளைவைத் தாண்டி காரை நோக்கி வேகமாக அவர் நடந்து வந்தார். வாயில் பீடி கனன்று கொண்டிருந்தது.
‘‘இன்னும் நூறு... நூற்றைம்பது மைல் நம்ம போக வேண்டியதிருக்கு. இன்னைக்க நாம அங்கே போய் சேர முடியாது மகளே...’’
அவர் யாரிடம் என்றில்லாமல் தனக்குத் தானே சொல்லியவாறு காரின் கதவைத் திறந்தார். கடைசி கடைசியாக பீடியை இரண்டு இழுப்பு இழுத்து விட்டு கீழே பாதையில் தூக்கி எறிந்தார். பொதுவாக காட்டுக்குள் இருக்கும்போது அவர் புகை பிடிப்பதில்லை. சி.கெ.விற்கு அப்படி காட்டுக்குள் புகை பிடிப்பது பிடிக்காது. சி.கெ.யின் விருப்பு வெறுப்பிற்கேற்றபடி தன்னுடைய எல்லாச் செயல்களையும் அமைத்துக் கொண்டார் அச்சுதன் நாயர். கடந்த முப்பது வருட காலமாக சி.கெ. போட்ட உப்பையும், சோற்றையும் சாப்பிட்டுத்தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவர்.
அச்சுதன் நாயர் வண்டிக்குள் ஏறி ஸ்டிரியங்கின் முன்னால் அமர்ந்தார். அப்போதுதான் பின்னிருக்கையில் லில்லி இல்லை என்ற விஷயமே அவருக்குத் தெரிய வந்தது.
ஒரு நிமிடம் அவர் அப்படியே திகைத்து உட்கார்ந்து விட்டார். அவர் இரண்டு பக்கங்களிலும் பார்த்தார். மீண்டும் கார் கதவைத் திறந்து கீழேயிறங்கி நாலா பக்கங்களிலும் கண்களை ஓட்டினார். இது நல்ல கதைதான்! லில்லி எங்கே போயிருப்பாள்?
அடுத்த நிமிடம் அவரிடமிருந்த பதைபதைப்பு குறைந்தது. மாறாக, முகத்தில் புன்சிரிப்பு உண்டானது.
அவர் திரும்பவும் காருக்குள் ஏறி உட்கார்ந்து லில்லிக்காக காத்திருந்தார். காட்டைப் பார்க்காமல் இருக்க அவர் முயற்சித்தார். என்ன இருந்தாலும் கல்யாண வயதில் இருக்கிற பெண்ணாயிற்றே அவள்!
ஒரு செங்கீரி காட்டுப் பாதையில் ஓடி வந்தது. காரைப் பார்த்ததும், அது பாதையின் நடுவில் அப்படியே நின்றது. ஒரு காரை முதல் தடவையாக அது பார்க்கிறது போலிருக்கிறது! காட்டுக்கு வெளியில் புதிய நெடுஞ்சாலை வந்த பிறகு இந்தக் காட்டுப் பாதையில் வாகனங்கள் செல்வது முற்றிலுமாக நின்றுவிட்டது. அப்படி இருக்கும்போது கீரி எப்படி ஒரு காரைப் பார்க்க முடியும்? இன்னும் சொல்லப் போனால் இதைப்போல ஒரு புத்தகம் புதிய காரை? பார்த்துக் கொள்... பார்த்துக் கொள்... உன்னுடைய விருப்பம் போல. அச்சுதன் நாயர் கீரியைப் பார்த்து சிரித்தார்.
லில்லியின் ஞாபகம் வந்ததும் அவர் கீரியிடமிருந்து இருந்து கண்களை நீக்கினார். அவள் போய் எவ்வளவு நேரமாகிவிட்டது? தன்னைப் போலவே அவளும் ஏதாவது காட்டில் வாழும் பிராணியைப் பார்த்து நின்று கொண்டிருக்கிறாளோ?
அவர் மீண்டும் காரை விட்டு வெளியே வந்தார்.
அப்போது பாதையில் நின்றிருந்த கீரி காட்டை நோக்கி திரும்பவும் ஓடியது. தான் காரைப் பார்த்த விஷயத்தை மற்ற கீரிகளிடம் அது கூறினாலும் கூறும்.
அச்சுதன் நாயரற் லில்லியின் பெயரைச் சொல்லி அழைத்தார். பதில் குரல் எதுவும் வரவில்லை. ஒரு நிமிடம் அவர் தலையைச் சொறிந்தவாறு நின்றார். அவர் இடது பக்கம் மரங்களுக்கு இடையே பார்த்தார். அடுத்த நிமிடம் அவர் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். தான் செய்தது எவ்வளவு முட்டாள்தனமான காரியம் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தார். லில்லியை அவர் கையில் தூக்கி நடந்திருக்கிறார். அது அந்தக் காலம். இன்று அவள் திருமண வயதை அடைந்திருக்கும் ஒரு இளம் பெண் ஆயிற்றே!
அச்சுதன் நாயரற் ஒரு பீடியை எடுத்து உதட்டில் வைத்து புகைத்தவாறு காரின் பானட்டின்மேல் கையை ஊன்றியவாறு நின்றார். அவர் மனதில் கவலை தோன்ற ஆரம்பித்தது. பத்து நிமிடங்கள் ஒடியிருக்கும். அவள் போய், திரும்பி வர இவ்வளவு நேரமா ஆகும்?
அவர் மீண்டும் உரத்த குரலில் அவளின் பெயரைச் சொல்லி கூப்பிட்டார். மரங்களுக்கு மத்தியில் ஒரு அசைவு தெரிந்தது. அவரின் சத்தத்தைக் கேட்டு அங்கிருக்கம் பிராணிகள் காட்டுக்குள் பாய்ந்தோடின.
அச்சுதன் நாயர் காட்டுப் பாதையில் சிறிது தூரம் அங்குமிங்குமாய் நடந்தார்.
பெரிய கவலைகளைத் தாங்கக் கூடிய அளவிற்கு அச்சுதன் நாயருக்கு இப்போது சக்தி இல்லை. அவருக்கு இப்போது நடப்பது அறுபத்தைந்து வயது. இரத்த அழுத்தம் இருக்கவே இருக்கிறது. கொஞ்ச நாட்களாகவே தூர இடங்களுக்கு அவர் வண்டியை எடுத்துக் கொண்டு போவதேயில்லை. இப்போது அவர் வண்டியை ஓட்டியதற்குக் காரணமே மிகவும் முக்கியமான விஷயம் என்பதற்காகத்தான். இரவு பத்து மணிக்கு முன்பு லில்லியை ஹாஸ்டலில் கொண்டு போய் விட வேண்டும். தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.