லில்லி - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6798
கதவு கண்ணாடியை இலேசாக இறக்கி விட்டவுடன், உள்ளே நுழைந்து வந்த வெப்பக் காற்றில் காட்டின் அழகு தூரக் காட்சியாக அவளுக்குத் தெரிந்தது.
‘‘காட்டு வழியே போறதுல மகளே, உனக்கு என்ன கிடைக்கப் போகுது?’’
இதுவரை பேசாமல் இருந்த அச்சுதன் நாயர் வாயைத் திறந்து பேசினார்.
‘‘நான் இதுவரை காட்டைப் பார்த்ததே இல்ல...’’
‘‘காட்டுல என்ன இருக்கு மகளே, பார்க்குறதுக்கு?’’
காட்டில் மரங்கள் இருக்கின்றன. செடிகள் இருக்கின்றன. அதற்கு மத்தியில் பாய்ந்து கொண்டிருக்கும் அருவிகள், மொத்தத்தில் இதுதானே காடு!
கட்டாயம் பார்க்க வேண்டும் என்பது லில்லியின் மருத்துவக் கல்லூரி இருக்கும் நகரத்தைத்தான். என்ன அழகான சாலைகள்! எவ்வளவு பெரிது பெரிதான கட்டிடங்கள்! ஆட்கள் என்ன நவநாகரிக உடைகளணிந்து காணப்படுகிறார்கள்! அச்சுதன் நாயருக்கு அந்த நகரத்திலேயே பிடித்தது அகலமான அந்த சாலைகள்தான். அந்தச் சாலையில் வண்டியை ஓட்டுகிறபோது ஒரு விமானத்தை ஓட்டுகிற சுகம் கிடைப்பதென்னவோ உண்மை. ஒரு விமானத்தை ஓட்டுகிற சுகம் கிடைப்பதென்னவோ உண்மை. அங்கு வண்டி ஓட்டும் டிரைவர்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்தாம். அச்சுதன் நாயருக்கு அவர்கள் மீது பொறாமை கூட தோன்றியது. தலச்சேரியில் கைவண்டிகளுக்கு மத்தியிலும், மாட்டு வண்டிகளுக்கு மத்தியிலும் தெருக்களில் காரோட்டிக் கொண்டிருக்கும் தன்னுடைய மோசமான நிலையை அவர்கள் அறிவார்களா என்ன?
‘‘என் கடவுளே...’’
கார் மீண்டும் ஒரு கல்லில் தட்டிக் குலுங்கியது. இன்று தனக்கு நெஞ்சு வலி மீண்டும் வரப்போவது உறுதி என்ற முடிவுக்கே வந்துவிட்டார் அச்சுதன் நாயர். அதனால்தான் இந்த காட்டு வழியில் வண்டியை ஓட்ட வேண்டிய நிலை தனக்கு வந்ருக்கிறது என்று அவர் மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.
கார் ஒரு வளைவு திரும்பி சின்னச் சின்ன உருண்டையான கற்களுக்கு மேல் ஏறி போய்க் கொண்டிருந்தது.
பாதையின் இரண்டு பக்கங்களிலும் இடைவிடாது வளர்ந்திருந்த பச்சைப் பசேலென மரங்கள். காற்று வீசும்போது பச்சை இலைகள் உதிர்ந்து ‘‘பொல பொல’’வென கீழே விழுந்து கொண்டிருந்தன. பாதையில் காட்டு மரங்களின் நிழல்கள் நன்றாக விழுந்திருந்தன. வின்ட் ஸ்க்ரீன் வழியாக பார்க்கும்போது முன்னால் வழியே இல்லை என்பது மாதிரி தோன்றும். சுற்றிலும் கண்ணில் தெரிந்து கொண்டிருப்பது பச்சை நிறம் மட்டுமே.
லில்லி அவளின் சூட்கேஸைத் திறந்து ஒரு கேசட்டை வெளியே எடுத்தாள். காட்டில் வைத்து கேட்பதற்காக அவள் சில பிரத்யேக கேசட்டுகளை எடுத்து வைத்திருந்தாள். அவற்றில் ஒரு சீக்கோ ஃப்ரீமேன் சீனிபரின் ஒரு லைவ் ஷோ ஒலிப்பதிவு. இந்தக் காட்டுப் பாதையில் பயணம் செய்கிறபோது ஜாஸ் இசையைக் கேட்கவே அவள் பிரியப்பட்டாள்.
அமைதியான கடலினருகில் தனியாகப் போய் அமர்ந்திருக்கும் நிமிடத்தில் ரவெலின் பொல்லேரோவைத்தான் அவள் விரும்பிக் கேட்பாள்.
அவளின் கையில் ஒரு போர்ட்டபிள் கேசட் ப்ளேயரர் எப்போதும் இருக்கும். பயணம் செய்யும்போது மட்டுமல்ல உண்ணும்போதும் உறங்குகிறபோதும் கூட அவள் அதைக் கையில் வைத்துக் கொண்டே திரிவாள். பெல்ட்டில் ஆம்ளிஃபயர் இருக்கின்றது அதனால் ஏ.ஸி.யில் நாற்பது வால்ட் ஸ்டீரியோ இசை தர முடியும்.
‘‘நாற்பது வால்ட் ஸ்டீரியோ இசை தெரியுதா அச்சுதன் நாயர்? நான் வச்சிருக்கிற கேசட் ப்ளேயர் ஜப்பான்ல செஞ்சது.’’
அவள் எல்லோரிடமும் கூறுவாள்.
சீக்கோ ஃப்ரீமேன் சீஹீபர் தன்னுடைய சாக்ஸை உதட்டில் வைத்தபோது, காட்டுக்குள் ஒரு பச்சைத் தீயே படர்ந்ததைப் போல் அவள் உணர்ந்தாள். அருமையான ஜாஸ் இசை ஸ்டீரியோ மூலம் மழை எனப் பொழிந்தது.
ஃப்ரீமேன் சீனியருக்குப் பின்னால் அதன் தொடர்ச்சி என்பது மாதிரி லூயிஸ் ஆம்ஸ்ட்ராகின் ஜாஸ்.
‘‘காது வலிக்கு மகளே...’’
அச்சுதன் நாயர் சொன்னார்.
அவள் பதிலெதுவும் கூறாமல் பெரிய காட்டுக் கொடிகளின் பிரிண்ட் போட்ட பச்சை நிறத்தைக் கொண்ட ஷிஃபான் புடவையை இழுத்து தோளில் போட்டுக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள். அவளின் வெளுத்து உருண்ட கைகள் இரண்டிலும் பச்சை வண்ணத்தில் கண்ணாடி வளையங்கள் இருந்தன.
ஸ்டீரியோ மழை தொடர்ந்து கொண்டிருந்தது. கார் குலுங்குவதும் திணறுவதுமாய் வளைந்து திரும்பி முன்னோக்கி ஓடி அடர்ந்த காட்டின் நடுப்பகுதியை அடைந்தது. பாதை உண்மையிலேயே மிகவும் கரடு முரடானதுதான். அச்சுதன்நாயருக்கு வியர்த்துக் கொட்டியது. ஒரு இடத்தில் காரை விட்டிறங்கி பாதையில் விழுந்து கிடந்த ஒரு பெரிய மரக் கிளையைக் கையால் எடுத்து ஒரு ஒரத்தில் தூக்கிப் போட்டார். இதற்கு மேல் வழி இருக்கிறதா என்று அவருக்கே சந்தேகம் வந்தது.
ஆட்டோ ஸ்டாப்பில் ஸ்டீரியோ இசை நின்றது.
‘‘மகளே!’’
அச்சுதன் நாயர் வியர்வையில் குளித்துக் கொண்டிருந்தார்.
‘‘நாம திரும்பிப் போகலாம்.’’
‘‘எதற்கு?’’
‘‘இல்லைன்னா நாம இந்தக் காட்டுல மாட்டிக்குவோம். இந்த அடர்ந்த காட்டுல என்னவெல்லாம் மிருகங்கள் இருக்கும்னு கடவுளுக்குத்தான் தெரியும்.’’
‘‘எனக்கு காட்டு மிருகங்களைப் பற்றி பயமே கிடையாது. காடுன்னா எனக்கு ரொம்பவும் பிடிக்கம்....’’
‘‘நரியோ, புலியோ வரணும். அப்ப சொல்வ...’’
‘‘என்னை கொன்னு தின்னட்டும். எனக்கு பயமே இல்ல.’’
தைரியசாலி பெண்தான்! அவர் மனதிற்குள் கூறிக்கொண்டார். கோடீஸ்வரனின் ஒரே மகள். அதனால் இப்படியொரு குணம் இவளுக்கு வாய்திருக்கிறதோ?
காட்டில் நரியும், புலியும் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். அதற்கான மற்ற மிருகங்கள் இல்லாமல் போய் விடுமா என்ன? தூரத்தில் மறைந்து நின்று கொண்டு அம்பை எய்து விடும் முள்ளம் பன்றிகள், குள்ள நரிகள்...
காட்டு மிருகங்களை விட பயங்கரமானவர்கள் சில மனிதர்கள். வயதுக்கு வந்த ஒரு இளம் பெண்ணை அருகில் வைத்துக் கொண்டு இந்த அடர்ந்த காட்டுக்குள் காரில் வருவது என்றால்... அசம்பாவிதமாக ஏதாவது நடந்து விட்டால்...?
அச்சுதன் நாயர் மீண்டும் வியர்வையில் குளித்தார். மாமன்னூரிலிருக்கும் மாரியம்மனுக்கு நேர்ந்தார். திரும்பிப் போகும்போது உண்டியலில் ஒரு ரூபாய் போடுவதாகச் சொன்னார். ஊரில் இருக்கும் பகவதிக்கும் நேர்ந்தார்.
எந்தவித ஆபத்தும் இல்லாமல் லில்லியை ஹாஸ்டலில் கொண்டு போய்ச் சேர்த்தால் பேபதும்.
அப்போது அச்சுதன் நாயருக்கு சிறுநீர் கழிக்க வேண்டும்போல் இருந்தது.
‘‘என்ன அச்சுதன் நாயரே?’’
கார் நிற்பதைப் பார்த்து அவள் கேட்டாள்.
‘‘ஓண்ணுமில்ல. நான் இதோ வந்திர்றேன்.’’
அவர் கார் கதவைத் திறந்து கீழே இறங்கி இரண்டு பக்கங்களிலும் பார்வையை ஓட்டினார். எங்கு பார்த்தாலும் மரங்களைத் தவிர, வேறு எதுவுமே இல்லை.