லில்லி - Page 21
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6799
கார் கதவை வேகமாக இழுத்து சி.கெ. அவரைத் தூக்கினார்.
‘‘லில்லி எங்கே? என் மகளுக்கு ஏதாவது நடந்திருந்தா, உன்னை நான் உயிரோட விடமாட்டேன்.’’
அவர் அச்சுதன்நாயரை காரை விட்டு வெளியே இழுத்தார். அந்த வயதான பெரியவர் பேந்தப் பேந்த விழித்தவாறு நின்றிருந்தார். அவருக்கு மலை உச்சியில் இருந்த பனிப்படலம் மட்டுமே தெரிந்தது.
‘‘ஏய் கிழவா... நீ தண்ணி போட்டிருக்கியா?’’
சி.கெ. கோபத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசினார். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒரு நாயைப் போல விசுவாசமாக வேலை செய்த ஒரு மனிதர் அச்சுதன் நாயர் என்ற விஷயத்தை அந்த பணக்காரர் மறந்தே போனார்.
வெளியே நடக்கும் ஆர்ப்பாட்டத்தைக் கேட்டு பங்க்கிற்குள் தூங்கிக் கொண்டிருந்த சுவாமி வெளியே வந்தான்.
‘‘நான் மிஸ்டர் ஆர்.பெரியசுவாமி. இந்த பெட்ரோல் பங்க் மேனேஜர்.’’
‘‘போடா அந்தப் பக்கம்...’’
சி.கெ. அவனைப் பார்த்து கத்தினார். அவ்வளவுதான் சுவாமிக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. மேஜர் நம்பியார் சி.கெ.யின் கோபத்தை மாற்ற முயற்சித்தார். இதற்கு முன்பு இப்படி சுய கட்டுப்பாடு இல்லாமல் சி.கெ. நடந்து, அவர் பார்த்ததே இல்லை என்பதே உண்மை.
மேஜர் நம்பியார் சுவாமியை தனியே அழைத்து ஏதோ பேசினார். இந்த இரவு நேரத்தில் காட்டுக்குப் போவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது அவர்களுக்கு நன்றாகவே புரிந்தது.
‘‘சி.கெ. பொழுது விடிஞ்ச பிறகுதான் நம்மால ஏதாவது செய்ய முடியும்.’’
‘‘அதுவரை என் மகள் காட்டுக்குள்ளேயே இருக்கவா?’’
அவருக்கு அதை நினைத்துப் பார்க்கும்போதே உடல் நடுங்கியது. இருட்டில் தனியாக வீட்டு முற்றத்தில் படுப்பதற்கே தைரியம் கொஞ்சமும் இல்லாதவள் லில்லி. காட்டு மிருகங்களும், விஷப் பாம்புகளும் நிறைந்த காட்டில் தான் மட்டும் தனியாக இந்த இரவு நேரத்தில் எப்படி அவளால் இருக்க முடியும் என்று ஒரு நிமிடம் அவர் நினைத்துப் பார்த்தார்.
‘‘மேஜர்... நாம உடனே கிளம்புறதுதான் சரி’’- அவர் சொன்னார். ‘‘டேய், பீட்டர்... வண்டியைத் திருப்பு.’’
‘‘சி.கெ., ப்ளீஸ்...’’
மேஜர் தன்னுடைய பருமனான கையை சி.கெ.யின் தோள் மேல் போட்டார். உணர்ச்சி வசப்படாமல் இருக்கும்படி தன்னுடைய நண்பனைக் கேட்டுக் கொண்டார். சுவாமி அவர்கள் அமர்வதற்கு நாற்காலிகளைக் கொண்டு வந்து போட்டான். சி.கெ. ஒரு கோடீஸ்வரர் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். மேஜருடைய கம்பீரமான தோற்றத்தைப் பார்த்தே அவர் ஒரு பெரிய பட்டாள அதிகாரியாக இருக்க வேண்டும் என்று மனதிற்குள் சுவாமி கற்பனை பண்ணிக் கொண்டான். அது மட்டுமல்ல- அவர்கள் வந்த காரின் பின்னிருக்கையில் கிடந்த துப்பாக்கியையும் அவன் பார்த்தான்.
மேஜர் லேசாக கண் ஜாடை காண்பிக்க, பீட்டர் ஓடிச் சென்று காரில் இருந்த ஒரு பெரிய ஃப்ளாஸ்க்கையும் ஒரு பாட்டிலையும் இரண்டு கண்ணாடி டம்ளர்களையும் எடுத்து கொண்டு வந்தான். சுவாமியின் மேஜை மேல் டம்ளர்களை வைத்து, நம்பியார் அதில் மதுவை ஊற்றினார். ஒரு டம்ளரை எடுத்து அசையாமல் உட்கார்ந்திருந்த சி.கெ.யின் கையில் தந்தார்.
‘‘ஜென்டில்மேன், உட் யூ லைக் டு ஹேவ் எ ட்ரிங்க்?’’
மேஜர் சுவாமிக்கு நேராகத் திரும்பினார். அதைக் கேட்டு சுவாமி வெட்கத்துடன் சிரித்தான். மேஜர் தந்த டம்ளரை வாங்கியபோது துணி எதுவும் இல்லாமல் நிர்வாணமாக ஒரு பெண்ணை தனக்கு முன்னால் பார்ப்பதைப் போல அவன் வெட்கப்பட்டான்.
மேஜர், ஃப்ளாஸ்க்கின் மூடியின் தனக்கு ட்ரிங்க்ஸ் ஊற்றிக் கொண்டார்.
அவர்கள் கையில் விஸ்கி டம்ளர்களை வைத்துக் கொண்டு சூரிய உதயத்திற்காக காத்திருந்தார்கள். மேஜரின் பைப் தொடர்ந்து அணையாமல் ஹெட்ஜஸ்ஸின் சிவப்பு வண்ண பாக்கெட் முழுமையாக தீர்ந்தது. மாமமன்னூருக்கு மேலே குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது.
காலை நேர சேவல்கள் கூவின. கிழக்குப் பக்கம் ஆகாயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளுக்க ஆரம்பித்தது. மாமன்னூருக்கு மேலே காலை நேரம் தன் கண்களைத் திறந்தது. எருமைகளை ஒட்டிக் கொண்டு பால்காரர்கள் தெருவில் போய்க் கொண்டிருந்தார்கள். தெருவின் திருப்பத்தில் இருக்கும் தேநீர் கடையில் புகை கிளம்பி மேலே காற்றில் கலந்து கொண்டிருந்தது.
பறந்து கொண்டிருந்த கொசுக்களில் இருந்து முகத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தொப்பியை முகத்தோடு சேர்த்து வைத்து தூங்கிக் கொண்டிருந்த நம்பியார் கண்களைத் திறந்தார். அவர் தன்னுடைய முரட்டு மீசையைத் தடவியவாறு கொட்டாவி விட்டார். மது மயக்கம் தலைக்குள் ஏறியதில் சுவாமி குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தான். சி.கெ. சிகரெட்டைப் பிடித்தவாறு பெட்ரோல் பங்க்கின் முன்னால் இங்குமங்குமாய் உலாத்திக் கொண்டிருந்தார்.
தெருவின் திருப்பத்தில் இருந்த தேநீர் கடையிலிருந்து பீட்டர் லேசாக உடைந்திருந்த கண்ணாடி டம்ளர்களில் தேநீர் வாங்கிக் கொண்டு வந்தான்.
‘‘லில்லியைப் பார்த்த பிறகுதான் நான் தொண்டையை நனைப்பேன்’’- பீட்டர் வற்புறுத்தியபோது சி.கெ. சொன்னார். மனப் போராட்டமும், இரவில் சரியான தூக்கமில்லாமையும் சேர்ந்து சாதாரணமாகவே தடித்து காணப்படும் அவரின் முகத்தை மேலும் வீக்கமாகக் காட்டின. அச்சுதன் நாயர் நடுங்கிக் கொண்டிருந்த கைகில் கண்ணாடி டம்ளரை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.
‘‘குடிங்க பெரியவரே- நாம போகணும்ல?’’
பீட்டர் அவசரப்படுத்தினான்.
அச்சுதன்நாயர் சி.கெ.யைப் பார்த்தார். அவரும் அச்சுதன் நாயரையே வெறித்துப் பார்த்தார். அடுத்த நிமிடம் அச்சுதன் நாயர் டம்ளரைக் கீழே வைத்தார். லில்லியைப் பார்க்காமல் தானும் ஒரு துளி நீர் கூட அருந்துவதாக இல்லை என்று மனதிற்குள் ஒரு முடிவை எடுத்தார் அவர்.
மாமன்னூர் முழுமையாக தூக்கம் கலைந்து எழுந்தது. தெருக்களில் காகங்கள் கரைந்தன. அவை வானத்தில் பறக்க ஆரம்பித்தன. குழாய்களைச் சுற்றிலம் பல வண்ணங்களைக் கொண்ட புடவைகளை அணிந்த தமிழ்ப் பெண்கள் ‘‘சலசல’’வென பேசியவாறு நின்றிருந்தனர். அந்தப் பகுதியையே அதிர வைத்துக் கொண்டு வந்த ஒரு லாரி டீசலை ஊற்றிக்கொண்டு வேகமாக பாய்ந்தோடியது.
சி.கெ.யும். அவருடன் இருந்தவர்களும் காட்டை நோக்கிப் புறப்பட்டார்கள்.
ஒரு காரில் சி.கெ.யும் மேஜர் நம்பியாரும் உட்கார்ந்திருக்க, இன்னொரு காரில் அச்சுதன் நாயரும் பீட்டரும் வந்தார்கள். அந்தக் காரை பீட்டர்தான் ஒட்டினான். மாமன்னூரின் மேடும் பள்ளமுமான பாதையை விட்டு இரு கார்களும் படு வேகமாக மலை அடிவாரத்தின் வழியாக முன்னோக்கி சென்றன. மெயின் ரோட்டை விட்டு கார்கள் காட்டுப் பாதையில் திரும்பியது.