லில்லி - Page 19
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6799
அவளுக்கு சி.கெ. ஒரு தந்தை மட்டுமல்ல. அவளின் ஒவ்வொரு செயலையும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு சக்தி அவர். தன்னுடைய ஒவ்வொரு காலடி வைப்பையும் கட்டுப் படுத்திக் கொண்டிருப்பதும், தன்னுடைய வாழ்க்கையின் மேல் எங்கோ தூரத்தில் இருக்கும் கிரகங்களைப் போல ஆட்சி செய்து கொண்டிரப்பதும் தன்னுடைய தந்தைதான் என்பதை அவள் அறியாமல் இல்லை.
அவளின் வெளுத்த உடம்பில் வியர்வை அரும்பி வழிந்து கொண்டிருந்தது. கன்னத்தில் தலை முடி விளையாடிக் கொண்டிருந்தது.
பலமான கடற்காற்று காருக்குள் புகுந்து வந்தபோது, அவள் கண்களைத் திறந்தாள். ஒரு பக்கம் நீலக்கடல் வெயிலில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. கடல் நீருக்கு மேலே மென்மையான நீல மேகங்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன. காற்றில் பறந்து முகத்தில் வந்து விழுந்து கண் பார்வையை மறைக்க முடிகளை கையால் நீக்கி ஒதுக்கி விட்ட லில்லி கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். நெற்றியில் வியர்வை அரும்பியபோது, அவளின் தலை யெங்கும் ஒருவித குளிர்ச்சி உண்டானதை அவள் உணர்ந்தாள். மனதில் அமைதி வந்து ஒட்டிக்கொண்டதைப் போல் இருந்தது அவளுக்கு.
கார் ஸ்டேடியத்தைக் கடந்து, ஒவ்வொரு தெருவையும் தாண்டி, எங்கோ தூரத்தில் மலையின் மேல் இருக்கும் மருத்துவக் கல்லூரியை இலக்காக வைத்து ஓடியது.
7
ஒரு கையில் சூட்கேஸையும் இன்னொரு கையில் கேசட் ப்ளேயரையும் வைத்துக் கொண்டு காட்டுக்குள் நடப்பது என்பது அவளுக்கு மிகவும் கஷ்டமான ஒரு விஷயமாகவே இருந்தது. இருந்தாலும் எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு விரைவாக அவள் காட்டுக்குள் நுழைந்து யாருக்கும் தெரியாமல் மறைந்து விட வேண்டும் என்று நினைத்தாள். மரங்கள் வழியாக பார்த்தபோது பாதையோரத்தில் உட்கார்ந்து சிறுநீர் கழித்துக் கொண்டிரந்த அச்சுதன் நாயர் நன்றாகவே அவள் கண்களுக்குத் தெரிந்தார்.
தரையில் முழங்கால் அளவிற்கு காட்டு புற்களும் கள்ளிச்செடிகளும் வளர்ந்திருந்தன. புற்களுக்கு மத்தியில் என்னவோ பாய்ந்து போய்க் கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். அசையும் புற்கள்தான் தெரிந்ததே தவிர, வேறு எந்த உயிரும் அவள் கண்களுக்குத் தெரியவில்லை. வேறொரு சூழ்நிலையாக இருந்தால், பயத்தால் அந்த இடத்தை விட்டு அவள் சிறிது கூட நகர்ந்திருக்க மாட்டாள். ஆனால், அச்சுதன் நாயரிடமிருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டுமே அவளின் மனதில் அப்போது இருந்ததால், வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் அவள் நினைத்துப் பார்க்கவே இல்லை. கடந்து போனது என்ன என்பதை கிட்டத்தட்ட அவள் மறந்தே போனாள்.
நடக்கும்போது அவள் சூட்கேஸை அந்தக் கைக்கு மாற்றி, கேசட் ப்ளேயரை இந்தக் கைக்கு மாற்றினாள். கேசட் ப்ளேயர்தான் மிகவும் கனமாக இருந்தது. சூட்கேஸில் அவசியம் வேண்டுமென்ற புடவைகளும், படிப்பதற்காக எடுத்து வைத்த சில பாடப் புத்தகங்களும் மட்டுமே இருந்தன. அந்தப் பெட்டியும் ப்ளேயரும் மட்டும் தற்போது அவளின் கைகளில் இல்லாமல் இருந்திருந்தால், இதற்குள் அவள் ஓடி காட்டுக்குள் எங்கோ மறைந்து போய் விட்டிருப்பாள்.
அடர்ந்து வளர்ந்திருந்த மரங்களுக்கு மத்தியில் சில இடங்களில் நீர் காணப்பட்டது. இரண்டு முறை அவள் கால்கள் தடுமாறின. கள்ள முற்கள் பட்டு புடவை கிழிந்து, கணுக்காலில் இரத்தம் வழிந்தது.
சிறிது தூரத்தில் அவள் ஒரு பெரிய பாறையைப் பார்த்தாள். காட்டில் யாரோ ஒரு அரக்கன் கொண்டு வைத்ததைப் போல இருந்த அந்தப் பெரிய பாறை ஒரு மாட்டு வண்டி அளவிற்குப் பெரிதாக இருந்தது. அதன் அடிபாகம் முழுக்க பாசி படர்ந்திருந்தது.
அவள் கையில் இருந்த பொருட்களைக் கீழே வைத்து விட்டு பாறையின் பின்னால் மறைந்து நின்றாள். அச்சுதன் நாயர் அவளைத் தேடிக் கொண்டு எந்த நிமிடமும் அங்கு வந்தாலும் வரலாம். அவர் வருவதற்கு முன்பு தான் காட்டுக்குள் எங்காவது தூரத்தில் போய் மறைந்து கொள்ள வேண்டும். அவர் மட்டுமல்ல, தன்னை யாருமே கண்டுபிடித்து விட முடியாத அளவிற்கு அடர்ந்த காட்டிற்குள் போய் ஒளிந்து கொள்ள வேண்டும் என்று அவள் நினைத்தாள்.
பெட்டியைக் கனமாக இருக்கச் செய்வது மருத்துவம் சம்பந்தமான புத்தகங்கள்தாம். அவள் சூட்கேஸைத் திறந்து அந்த கனமான புத்தகங்களை எடுத்து பாறையில் மேல் வைத்தாள். இனி இந்தப் புத்தகங்கள் அவளுக்கு எப்போதுமே தேவையில்லை. தேர்வு தொடங்குவதற்கு முன்பே, அதன் தேவை முடிந்துவிட்டது.
அவள் கனம் குறைந்து போன சூட்கேஸையும் கேசட் ப்ளேயரையும் கையில் எடுத்துக் கொண்டு தன் நடையைத் தொடர்ந்தாள். அரை மணி நேரம் நடந்த பிறகு, ஒரு ஒற்றையடிப் பாதை அவள் கண்களில் தெரிந்தது. உயர வளர்ந்திருந்த காட்டுச் செடிகளுக்கும் பெரிய பெரிய கற்களுக்கும் மத்தியில் அந்த காட்டுப் பாதை நீளமாக ஓடிக்கொண்டிருந்தது. ‘‘இந்தப் பாதை எங்கு நோக்கிப் போகிறது? எங்குப் போனால் என்ன... மனிதன் ஒருத்தனைக் கூட வழியில் பார்க்காமல் இருந்தால் சரி என்று நினைத்தாள். எல்லா மனிதர்கள் மேலும் அவளுக்கு பயங்கர வெறுப்பு உண்டானது.
அச்சுதன் நாயரால் இனிமேல் தன்னைக் கண்டு பிடிக்க முடியாது என்ற முடிவுக்கு அவள் வந்துவிட்டாள். தலையை விட்டு ஒரு பெரிய பாரம் இறங்கியதைப் போல் இருந்தது அவளுக்கு.
ஒரு காட்டு மரத்தின் கிளையில் இருந்த சில குருவிகள் அவளைப் பார்த்து ஓசைகள் எழுப்பின. கிளிகள் அவளை வரவேற்பதுபோல் இருந்தது. அந்தப் பகுதி முழுவதும் மரத்திலிருந்து கீழே விழுந்த பழங்கள் சிதறிக் கிடந்தன. மரங்களின் கிளைகளுக்கு மத்தியில் நீல வண்ணத்தில் ஆகாயம் தெரிந்தது.
அவளின் கால்களுக்கு வேகம் கூடியது. காட்டுப் பாதை வழியாக பல வண்ணங்களைக் கொண்ட பட்டாம்பூச்சியைப் போல அவள் சிறகு விரித்து நடந்து சென்றாள்.
ஒற்றையடிப் பாதை வழியே நடந்து நடந்து அவள் ஒரு மேட்டை அடைந்தாள். அங்கே முருங்கை இலைகளைப் போல சிறிய இலைகளைக் கொண்ட மரங்கள் நிறைய பக்கங்களிலும் பார்த்தாள். சற்று தூரத்தில் ஒரு பெரிய பாறைக் கூட்டத்தைப் பார்த்ததும் அவளின் மனதில் ஆனந்தம் அலை மோதியது. பாறைகளுக்கு மத்தியில் அமர்ந்து சீக்கோ ஃப்ரீமேன் சீனியரின் ஜாஸ் இசையைக் கேட்க அவள் ஆசைப்பட்டாள்.
ஒரு முறை கடற்கரையில் பாறைகளுக்கு மத்தியில் அமர்ந்து ஜாஸ் இசையைக் கேட்பதற்காக அவள் கேசட் ப்ளேயரைக் கையில் எடுத்துக் கொண்டு அங்கே சென்றாள்.