லில்லி - Page 22
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6799
காரின் முன் பக்க கண்ணாடியில் காடு தெரிந்தவுடன், அச்சுதன் நாயர் தளர்ந்து போய் இருக்கையில் சாய்ந்தார். அவரின் கண்களுக்கு எதுவுமே சரியாகத் தெரியாமல் மங்கலாகத் தெரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வெளுத்துக் கொண்டிருந்த காட்டில் குருவிகள் அப்போது தான் உறக்கம் கலைந்து எழுந்து இங்குமங்குமாய் பறந்து கொண்டிருந்தன. அவர்கள் காட்டிற்குள் நுழைந்தார்கள்.
பதினாறாவது மைலில் முதல் நாள் சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்திய இடத்தை அடைந்தபோது, அச்சுதன் நாயர் காரை ஓட்டிக்கொண்டிருந்த பீட்டரின் கையைப் பிடித்தார்.
‘‘என்ன பெரியவரே?’’
‘‘வண்டியை நிறுத்து!’’
ப்ரேக் சத்தத்துடன் மணல் நிறைந்திருந்த பாதையில் கார் நின்றது. அந்தக் காருக்குப் பின்னால் சி.கெ.யின் கார் நின்றது.
‘‘இங்கேயா?’’
காரை விட்டிறங்கிய சி.கெ. கேட்டார். அச்சுதன் நாயர் ஆமாம் என்பது மாதிரி தலையை ஆட்டினார். மேஜரும் பீட்டரும் கூட காரை விட்டு இறங்கினார்கள். இரு பக்கங்களிலும் பெரிய பெரிய மரங்களும் புதர்களும் காணப்பட்டன. பாதையில் மரங்களின் நீண்ட நிழல்கள் முழுமையாக ஆக்கிரமித்திருந்தன.
‘‘நீங்க என்ன காட்டைச் சுற்றிப் பார்க்கவா வந்தீங்க?’’- சி.கெ. கோபமான குரலில் சொன்னார்! ‘‘வெளியே இறங்க வேண்டியதுதானே!’’
அச்சுதன் நாயர் கார் கதவைத் திறந்து பாதையில் இறங்கி நின்றார்.
‘‘லில்லி எந்தப் பக்கம் போனாள்? அப்போ நீங்க என்ன செஞ்சிக்கிட்டு இருந்தீங்க?’’
‘‘ஒண்ணுக்கு இருக்கப் போயிட்டேன்.’’
‘‘ஓண்ணுக்கு இருக்கப் போயாச்சாம் ஒண்ணுக்கு! சரி... எங்கே போயி ஒண்ணுக்கு இருந்தீங்க?’’
‘‘அங்கே...’’
அவர் முதல் நாள் கீழே அமர்ந்து சிறுநீர் கழித்த இடத்தைச் சுட்டி காட்டினார்.
‘‘லில்லி எந்தப் பக்கம் போயிருப்பான்னு நீங்க நினைக்கிறீங்க?’’
நம்பியார் ஒரு துப்பறியும் அதிகாரியைப் போல கேள்வி கேட்டார். அதற்கு அச்சுதன் நாயர் எந்த பதிலும் கூறவில்லை. அவர் பாதையின் இடதுபக்கத்தில்தான் சிறுநீர் கழித்தார். அதனால் லில்லி கட்டாயம் வலது பக்கம்தான் போயிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு நம்பியார் வந்தார். தான் நினைத்ததை அவர் சி.கெ.விடம் கூறினார்.
‘‘முதல்ல வலது பக்கம்...’’
நம்பியார் காரின் பின்னிருக்கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து தோள் மேல் வைத்தார். கம்பூட்ஸ்களை பேன்ட்டுக்கு மேலே இழுத்து விட்ட அவர் தலையில் இருந்து தொப்பியைச் சரி செய்தார். வேட்டைக்குப் போவது போல் இருந்தது அவரின் செயல்.
காட்டிற்குள் நுழைந்த நம்பியாரை மற்றவர்கள் பின் தொடர்ந்தார்கள். அச்சுதன் நாயர் உள்ளே செல்லவில்லை. வளர்ந்து படர்ந்து கிடந்த காட்டுக் கொடிகளை கைகளால் அகற்றியவாறு அவர்கள் புற்களைக் கடந்து முன்னோக்கிப் போனார்கள். மரங்களின் உச்சிகளில் இளம் வெயில் விழுந்திருந்தாலும், காடு அப்போதும் இருண்டு போயே காணப்பட்டது. காட்டுக்குருவிகள் ‘சலசல’வென சத்தம் உண்டாக்கியவாறு கிருஷ்ணமணிப் பூக்கள் நிறைந்த கொடிகளில் பறந்து சென்று அமர்ந்தன. மேஜரின் கம்பூட்ஸ் அணிந்த முரட்டுத்தனமான கால்கள் புற்களுக்குக் கீழே இருந்த நீரில் பட்டு ‘ப்ளும் ப்ளும்’ என்று ஓசை உண்டாக்கின. ராணுவத்தில் பல வருடங்கள் பணியாற்றிய மேஜருக்கு காட்டுக்குள் நடப்பதென்பது ஒரு கஷ்டமான காரியமாக இல்லை.
சி.கெ. தன்னுடைய பருமனான உடம்புடன் புற்களையும் நீரையும் கடந்து கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டார். காட்டுச் செடிகள் கால்களைச் சுற்றியபோது அவருக்குக் கோபம்தான் வந்தது. இரண்டு ஃபர்லாங் நடந்ததும், அவரின் உடம்பும் மனமும் மிகவும் தளர்ந்து போய் விட்டன. சி.கெ.யைப் பொறுத்தவரை அவருக்கு அதிகக் நடந்து பழக்கமில்லை. நூறு அடி தூரம் போக வேண்டுமென்றால் கூட, காரை எடுத்து ஓட்டி பழக்கப்பட்டவர் அவர். போதாதென்று, காட்டுப் பாதை வேறு...
‘‘என்ன சி.கெ.?’’
மிகவும் பின்னல் வந்து கொண்டிருந்த சி.கெ.யைப் பார்த்து நம்பியார் கேட்டார்.
‘‘ஓண்ணுமில்ல. நடங்க...’’
சி.கெ. சொன்னார்.
தோளில் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு அடிக்கொரு தரம் தலையில் இருந்த தொப்பியைச் சரி செய்தவாறு வீசிலடித்துக் கொண்டே மேஜர் நம்பியார் காட்டுப் பாதையில் வேகமாக நடந்தார். தொடை வரை வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பீட்டரும் அவரைத் தொடர்ந்து நடந்தான். இப்போது சி.கெ.வும் மிகவும் பின்னால் வந்து கொண்டிருந்தார். அவர் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வந்து கொண்டிருந்தார். ஊரில் மகாராஜா மாதிரி வாழும் சி.கெ. காட்டில் இப்படி...
சி.கெ.யால் இப்படி ஜீரணிக்கவே முடியவில்லை. எல்லாவற்றுக்கும் காரணம் அந்தப் பாழாய் போன கிழவன்தான். எதற்காக அந்த ஆள் இந்தக் காட்டுப் பாதையில் வர வேண்டும்? சி.கெ.யின் கோபம் அதற்குப் பிறகு லில்லி மேல் திரும்பியது. அவளுக்கு கொழுப்பு அதிகமாகி விட்டது. அவளை ஒரு அரசகுமாரியைப் போல அவர் வளர்த்திருந்தார். அதற்கு அவள் இப்படி நன்றியைக் காட்டுகிறாள். காட்டுக்குள் இப்படியொரு தேவையில்லாத தேடல்...
‘‘சி.கெ., என்ன களைப்பா இருக்கா?’’
நம்பியாரின் கேள்விக்கு பதில் எதுவும் கூறாமல் அவர் வெறுமனே நின்று மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டுக் கொண்டிருந்தார்.
‘‘முதலாளி கொஞ்ச நேரம் எங்கேயாவது உட்காரட்டும்’’ பீட்டர் சொன்னான். ஆனால், அங்கு உட்காருகிற மாதிரி ஒரு இடம் இல்லை.
சி.கெ. அருகில் வந்ததும், ஒற்றையடிப் பாதை வழியாக அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள். சிறிது தூரத்தில் ஒரு மேடு தெரிந்தது. அங்கே போனதும், கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாம் என்று மேஜர் மனதிற்குள் நினைத்தார்.
மேட்டில் இருந்த ஒரு பாறை மேல் அமர்ந்து சி.கெ. தன் களைப்பைப் போக்கினார். மேஜர் நம்பியார் பேன்ட் பாக்கெட்டிற்குள் கையை விட்டு பைப்பையும் புகையிலையையும் வெளியே எடுத்து உதட்டில் வைத்து புதைக்க ஆரம்பித்தார். சி.கெ.விற்கு இந்தப் பயணம் பிரயோஜனமில்லாத ஒன்று என்று தோன்றத் தொடங்கியது. இவ்வளவு பெரிய காட்டில் எவ்வளவு தூரம் நடப்பது? எங்கே போய் தேடுவது?’’
பைப் அணைந்ததும், நம்பியார் எழுந்தார். அவருடன் சேர்ந்து சி.கெ.யும் எழுந்தா£. அவர்கள் மேட்டை விட்டு இறங்கி நடையைத் தொடர்ந்தார்கள். அப்போது காட்டிற்குள் இருந்த பெரிய பாறைக் கூட்டம் நம்பியாரின் கண்களில் பட்டது.
‘‘ஹௌ ப்யூட்டி ஃபுல்!’’
மேஜர் தன்னுடைய காகிள்ஸை எடுத்து அணிந்தார். காட்டில் இப்போது நல்ல வெளிச்சம் இருந்தது. மரக்கிளைகளுக்கு மத்தியில் சூரிய வெளிச்சம் நன்கு தெரிந்தது. அவர்கள் பாறைகளை ஒட்டி நடந்தார்கள். இந்தக் காட்டில் இந்த இடத்தில் மட்டும் எப்படி இவ்வளவு பெரிய பாறைகள் வந்து சேர்ந்தன என்று மேஜர் மிகவும் ஆச்சரியப்பட்டார்.