லில்லி - Page 24
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6799
பீட்டர் சொன்ன விஷயம்தான் சரியான ஒன்றாக அவருக்குப் பட்டது. எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மாமன்னூருக்குப் போய் காட்டைப் பற்றி நன்கு தெரிந்திருக்கும் ஆட்களை ஒன்று சேர்க்க வேண்டும். தேவைப்பட்டால் இரவில் கூட தேடுதலைத் தொடரலாம். ஸர்ச் விளக்கோ பெட்ரோமாக்ஸோ எதை வேண்டுமானாலும் ஏற்பாடு செய்யலாம்.
இடுப்பு வரை வளர்ந்து கிடந்த காட்டுப் புற்களைக் கடந்து நடந்து அவர்கள் பாதைக்கு வந்தார்கள். காட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அச்சுதன் நாயர் லில்லியைக் காணாமல் பேதலித்துப் போயிருந்தார். சி.கெ.யின் முகத்தைப் பார்த்தபோது, அவரால் எந்தக் கேள்வியும் கேட்க முடியவில்லை.
காட்டுப் பாதை வழியாக இரண்டு கார்களும் மாமன்னூரை நோக்கி விரைந்தன. ஒரு காட்டுக் கிளி கத்தியவாறு சிறிது தூரம் அந்தக் கார்களை பின் தொடர்ந்தது. அதற்குத் தெரியும் லில்லி எங்கே இருக்கிறாள் என்றும் சி.கெ.விற்கு கிளியின் மொழி தெரியாதே!
8
கரியன் மகன் காளு காட்டிலேயே பிறந்து வளர்ந்தவன். காட்டின் வறுமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல்தான் அவன் குடும்பத்தோடு மாமன்னூரில் வந்து வசிக்க ஆரம்பித்தான். இபபாது அவனுக்கு முப்பது வயது கூட ஆகவில்லை - அதற்குள் அவனுக்கு மொத்தம் ஆறு குழந்தைகள் இருந்தார்கள். என்ன வேலை வேண்டுமானாலும் அவன் செய்வான். சுவாமியின் பெட்ரோல் பங்க்கைப் பெருக்கிச் சுத்தம் செய்வது அவன்தான். அவ்வப்போது காட்டிற்குள் சென்று கீறியைக் கண்ணி வைத்து பிடிப்பான். அதன் மாமிசத்தைச் சாப்பிட்டவாறு கள்ளு குடிப்பான்.
‘‘எவ்வளவு பணம் வேணும்னாலும் தர்றேன். உன்னையும் உன் குடும்பத்தையும் இனி இருக்குற காலம் முழுவதும் நான் பார்த்துக்குறேன். காட்டுக்குப் போய் என் மகளைத் தேடிக் கண்டு பிடிச்சு வா...’’
காட்டை தன்னுடைய சொந்த உள்ளங்கையைப் போல தெரிந்து வைத்திருக்கும் காளு, சி.கெ.யைத் தலைகுனிந்து வணங்கினான்.
‘‘உடனே புறப்படு.’’
‘‘சார்... கவலையே பட வேண்டாம். உங்க பொண்ணு காட்ல இருந்தாங்கன்னா, காட்டாயம் காளு கண்டு பிடிச்சு கொண்டு வந்திடுவான்.’’ சுவாமி சொன்னான்.
காளுவின் பெயரைச் சொன்னவன் சுவாமிதான். அவனுக்கு காட்டை நன்றாகத் தெரியும் என்பது மட்டுமல்ல - ஒரு வேலையைக் கொடுத்தால் அதை முழுமையாகச் செய்து முடித்த பிறகே காளு திரும்பி வருவான். சுவாமிக்காக மட்டுமல்ல, மாமன்னூரில் உள்ளவர்களுக்காக அவன் எவ்வளவோ உதவிகளைச் செய்திருக்கிறான்!
‘‘பீட்டர்... நீயும் அந்த ஆளு கூட போ...’’
சி.கெ. ஒரே பரபரப்புடன் இருந்தார். சீக்கிரம் வெயில் போய் விடும். மாலை நேரம் வந்து விடும். இன்னொரு இரவு நேரத்தில் எப்படி லில்லி காட்டுக்குள்ளேயே இருப்பாள்? இந்த நிமிடம் வரை அவளுக்கு என்ன நடந்திருக்கும் என்று யாருக்குத் தெரியும்? அதை நினைத்துப் பார்த்தபோது சி.கெ.யின் நெஞ்சு வலித்தது. தன்னுடைய சொத்தும், பணமும், அந்தஸ்தும் எல்லாமே பிரயோஜனமற்றவை என்று அவருக்குத் தோன்றியது. தலச்சேரியிலேயே மிகப் பெரிய பங்களா அவருடையதுதான். ஆனால், அது வாயால் ஊதினால் சரிந்து விழக்கூடிய சாதாரண ஒரு சீட்டால் ஆன அரண்மனைதான் என்பதை இப்போது சி.கெ. புரிந்து கொண்டார்.
பீட்டர் கார் சாவியை சுண்டு விரலில் மாட்டி ஆட்டியவாறு காரை நோக்கி நடந்தான். திரும்பத் திரும்ப சி.கெ.யை வணங்கிய காளு அவனின் பின்னால் நடந்தான். அடர்த்தியான சிவப்பு நிறத்தில் ஒரு ட்ரவுசர் மட்டுமே அவன் அணிந்திருந்தான். கையில் இருந்த ஒரு கம்பைக் காருக்குள் நீளமாக வைத்தவாறு அவன் பீட்டரின் அருகில் அமர்ந்தான். காளு எங்கே போனாலும், அந்தக் கம்பை கையில் வைத்திருப்பான் காட்டில் பழகிய பழக்கம் அது.
கார் பதினாறாம் மைலை இலக்காக வைத்து ஓடியது.
சி.கெ. மனதில் எல்லா கடவுள்களின் பெயர்களையும் சொல்லி வணங்கினார். அவர் பொதுவாக கடவுள்களை மறந்து போயிருந்தார். நீண்ட காலமாக அவர் கடவுள்களை வணங்குவதேயில்லை.
லில்லியின் தாய் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பாள். சுவாமியிடம் சொல்லி அவர் வீட்டிற்கு ஒரு ட்ரங்கால் புக் செய்தார். லைன் கிடைக்க எப்படியும் மூன்று அல்லது நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டும். சில நேரங்களில் ஒரு முழு நாள் கூட ஆகும்.
சி.கெ. மேஜர் நம்பியார் இருவருக்கும் காளு திரும்ப வரும்வரை தங்குவதற்கு ஒரு இடம் இல்லை. அங்கே நல்ல ஹோட்டல்கள் எதுவும் கிடையாது. காரில் எவ்வளவு நேரம்தான் உட்கார்ந்திருப்பது! அவர்களுக்கு அது பயங்கர வெறுப்பைத் தந்தது.
கடைசியில் சுவாமி அவர்கள் தங்க ஒரு இடத்தை ஏற்பாடு பண்ணித் தந்தான். மாமன்னூரில் இருப்பவர்களிலேயே பெரிய பணக்காரரான முத்துவண்ணனின் பங்களாதான் அது.
‘‘முத்து வண்ணனோட பங்களாவுல போய்குளிச்சு சாப்பிட்டுட்டு ஓய்வெடுங்க. எதைப் பற்றியும் கவலைப்படாதீங்க. காளு இருட்டுறதுக்கு முன்னாடி திரும்பி வந்திடுவான்.’’
சுவாமி சொன்னான்.
முத்துவண்ணன் நேரிலேயே வந்து அவர்களை பங்களாவிற்கு அழைத்துச் சென்றார்.
‘‘ஃப்ரண்ட்ஸ்... யு ஆர் வெல்கம் டு மை ஹம்பிள் பங்களா.’’
முத்துவண்ணனின் கறுமை நிற உதடுகளுக்கு மத்தியில் தங்கப் பற்கள் பிரகாசித்தன.
குளித்து சாப்பிட்டு முடித்து பைப்பை உதட்டில் வைத்து புகைத்தவாறு மேஜர் நம்பியார் முத்துவண்ணனுடன் பல்வேறு விஷயங்களைப் பற்றியும் ஸோஃபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். சி.கெ.விற்கு பசி எடுக்கவில்லை. அவர் உணவு எதுவும் உட்கொள்ளாமல் வீட்டிற்குப் போட்ட ட்ரங்காலுக்காகக் காத்திருந்தார். அவ்வப்போது தெருவிற்கு அப்பால் தெரிந்த மாரியம்மன் கோவில் பக்கம் திரும்பி வேண்டிக் கொண்டிருந்தார். ஒரே நாளில் அவர் ஒரு தீவிர கடவுள் நம்பிக்கை கொண்ட மனிதராக மாறியிருந்தார்.
அதே நேரத்தில் காளு காட்டுக்குள் நுழைந்து போய்க் கொண்டிருந்தான். ஒரு காட்டு வாழ் உயிரினத்தைப் போல அவன் சர்வ சாதாரணமாக ஓடியும் குதித்தும் காட்டிற்குள்ளே முன்னேறிக் கொண்டிருந்தான். அடர்த்தியான சிவப்பு ட்ரவுசர் அணிந்திருந்த அந்த மனிதன் காட்டு மரங்களுக்கு மத்தியில் மறைந்து மறைந்து முன்னோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.
‘‘டேய் காளு, நீ எப்படியாவது அந்தப் பொண்ணைக் கண்டு பிடிச்சிடணும். உனக்கு சி.கெ. ஆயிரம் ரூபா தருவாரு. அப்புறம்... ஓட்டுக் கம்பெனியில வேலையும் போட்டுக் கொடுப்பாரு.’’
சுவாமி சொன்ன வார்த்தைகள் அவனின் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தன.
சி.கெ. ஒரு கோடீஸ்வரர் என்பதை சுவாமியின் வார்த்தைகள் மூலம் காளு அறிந்திருந்தான். அவருக்கு சூப்பர் மார்க்கெட், ஓட்டு கம்பெனி எல்லாமே இருக்கின்றன என்பதையும் தெரிந்து கொண்டான்.