லில்லி - Page 28
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6798
இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவள் தைரியம் தன்னிடம் இருப்பது மாதிரி காட்டிக் கொண்டாள்.
‘‘இங்க பாருங்க... இதை எடுத்துக்கோங்க. என்னை என் வழியில் விட்டுடுங்க...’’
‘‘இங்க பாரும்மா... உன்னோட பணமொண்ணும் எனக்கு வேண்டாம்.’’
அவள் தன்னுடைய சிவப்பு வண்ண சூட்கேஸை எடுத்து அவன் காலுக்குக் கீழே எறிந்தாள்.
‘‘போதுமா? இனியாவது இந்த இடத்தை விட்டு போங்க...’’
கா£ தன்னுடைய காலடியில் கிடக்கும் சூட்கேஸையே பார்த்தான். அதில் என்னவெல்லாம் இருக்கிறது என்பது அவனுக்குத் தெரியாது. ஆனால், ஒரு கோடீஸ்வரரின் மகளின் சூட்கேஸ் ஆயிற்றே! அதில் ஆயிரங்களின் மதிப்புள்ள பொருட்கள் நிச்சயம் இருக்கும் என்பது மட்டும் அவனுக்குத் தெரியும்.
சூட்கேஸ், கேசட் ப்ளேயர் - இவை இல்லாமல் அவளின் கழுத்தில் தங்கத்தால் ஆன சங்கிலியும், கையில் கைக்கடிகாரமும் இருக்கின்றன. வேண்டுமென்றால் அவை எல்லாவற்றையுமே காளுவால் எடுத்துக் கொள்ள முடியும். இந்த அடர்ந்த காட்டில் அவளைக் காப்பாற்றுவதற்கு யார் வரப் போகிறார்கள்?
மாமன்னூரில் இருக்கும் மாரியம்மன்... மாரியம்மன் வருவாளே!
காளுவிற்கு அவமானமாக இருந்தது. தேவையற்ற இப்படிப்பட்ட சிந்தனைகள் தன்னுடைய மனதை வந்து எப்படி ஆக்கிரமிக்கின்றன? இந்த நிமிடம் வரை காளு உண்மையானவனாகவும் நேர்மையானவளாகவும் வாழ்ந்திருக்கிறான. வறுமையும், நோயும் அண்டியபோதுகூட, யார் பணத்தையும் அபகரிக்க அவன் நினைத்ததில்லை. பிறகு இப்படிப்பட்ட கேவலமான சிந்தனைகள் ஏன் தன்னுடைய மனதில் உண்டாகின்றன என்று அவன் ஆச்சரியப்பட்டடன். ஒரு வேளை மாரியம்மன் தன்னைச் சோதனை செய்து பார்க்கிறாளோ என்று அவன் நினைத்தான்.
காளு தன் காலடியில் கிடந்த சூட்கேஸை தொடக் கூட இல்லை. லில்லிக்கு பயம் வந்தது. இந்த மனிதனுக்கு என்ன வேண்டும்? அவன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்?
‘‘முதலாளி சொல்லித்தான் நான் வந்தேன்.’’
‘‘எந்த முதலாளி?’’
‘‘உங்க அப்பா...’’
அதைக் கேட்டதும், இளம்பிள்ளைவாதம் வந்ததைப் போல லில்லியின் கால்கள் தளர்ந்தன.
‘‘இங்க பாரும்மா... பிடிவாதம் பிடிக்காம என் கூட நீ வந்திடு’’
‘‘அப்பா எங்கே இருக்காரு?’’
‘‘மாமன்னூர்ல... உன்னைப் பார்க்காம ரொம்பவும் கவலையில இருக்காரு அவரு...’’
அச்சுதன் நாயர் எல்லாவற்றையும் சொல்லித் தந்திருப்பார். இடத்தைக் காட்டி இருப்பார். ஒரு காட்டுக் கரடியை தன் தந்தை இங்கு அனுப்பியிருக்கிறாரே என்று அப்போது லில்லி நினைத்தாள்.
பலத்தைப் பயன்படுத்தி அவனிடமிருந்து தன்னால் தப்பிக்க முடியாது என்பதை அவள் நன்றாகவே அறிந்திருந்தாள்.
‘‘காளு...’’ - அவள் கெஞ்சினாள். ‘‘என் கழுத்துல கிடக்குற சங்கிலி, கைக்கடிகாரம், சூட்கேஸ் எல்லாத்தையும் எடுத்துக்குங்க... என்னை என் வழியில விட்டுடணும்...’’
காளு அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. மாரியம்மன் மேலும் தன்னைச் சோதித்துப் பார்க்கிறாள் என்று அவன் நினைத்தான். அவளுடைய கருணை இருக்கும்வரை தனக்கு எந்தவித கவலையுமில்லை என்று அவன் நினைத்தான்.
காளு பக்கத்தில் இருந்த கேசட் ப்ளேயரை எடுத்து சூட்கேஸில் வைத்து பூட்டினான். கம்பை எடுத்து கையிடுக்கில் வைத்தான். சூட்கேஸைக் கையில் எடுத்துக் கொண்டு அவளின் கையை பலமாகப் பற்றிய அவன் வேகமாக நடக்கத் தொடங்கினான். அவளை கார் வரை கொண்டு போய் சேர்ந்தால் போதும். அதோடு அவனின் பொறுப்பு முடிந்தது. அதற்குப் பிறகு அவனின் வாழ்க்கையின் நிலையே மாறி விடும்.
அவனின் பிடி மேலும் இறுகியது. அவளின் கையை அவன் இறுக நெறிப்பதைப் போல் இருந்தது.
‘‘கையை விடுங்க... நான் வர்றேன்...’’
அவன் கொஞ்சமும் சந்தேகப்படாமல் தன் கையை விட்டான். அவள் திரும்பி ஓடவில்லை. திடீரென்று அவள் குனிந்து அவனின் சேறு புரண்ட கருப்பான கால்களை இறுகப் பற்றினாள்.
காளு அதிர்ச்சியடைந்து நின்று விட்டான். கோடீஸ்வரரான சி.கெ.யின் மகள் கரியன் மகன் காளுவின் கால்களை பிடிப்பதா? மாரியம்மனின் சோதனைக்கு அளவே இல்லையா? தன்னுடைய சேறு அப்பியிருக்கும் கால்களைப் பற்றிக் கொண்டு கெஞ்சிக் கொண்டிருக்கும் இளம் பெண்ணைப் பார்த்தபோது காளுவிற்கு முதல் முறையாக மாரியம்மனிடம் வெறுப்பு தோன்றியது. இவ்வளவு பெரிய தண்டனையை மாரியம்மன் தனக்குத் தந்திருக்கக் கூடாது என்று அவன் நினைத்தான்ன்
காளுவிற்கு அவள் சொன்னது எதுவுமே புரியவில்லை. அவளின் உலகம் பணக்காரர்களின் உலகம். இந்தக் காட்டில் சுற்றிக் கொண்டிருக்கும் காளுவிற்கு அந்த உலகத்தைப் பற்றி என்ன தெரியும்? இருந்தாலும், ஒரு விஷயம் அவனுக்குப் புரிந்தது. இந்தப் பெண்ணை ஏதோ சில பிரச்சினைகள் வாட்டிக் கொண்டிருக்கின்றன என்பதுதான் அது.
அவன் சூட்கேஸையும் கம்பையும் தரையில் வைத்துவிட்டு, குனிந்து தன்னுடைய கால்களைப் பிடித்திருக்கும அவளின் கைகளை நீக்கினான். அப்போது அவனின் கண்கள் லேசாக பனித்தன.
‘‘என்னைப் பார்த்ததை யார்கிட்டயும் சொல்லக்கூடாது.’’
காளு சரியென்று தலையை ஆட்டினான். அவள் என்ன சொன்னாலும் அவன் கேட்பான். மாரியம்மன் இன்னொரு முறை அவனுக்கு வழிகாட்டி இருக்கிறாள்.
மனதில் சமநிலைக்கு வந்த காளு வெள்ளைக் கல்லுக்கு அருகில் அமர்ந்து லில்லிக்கு காட்டைப் பற்றிய விவரத்தை தெளிவாக விளக்கினான். விஷமுள்ள பாம்பையும் விஷமில்லாத பாம்பையும் எப்படி கண்டு கொள்ளலாம் என்பதையும், தின்னக் கூடாத காட்டு பழங்கள் என்னென்ன என்பதையும் அவன் அவளுக்கு சொல்லித் தந்தான். அவன் அவளுக்கு காட்டைப் பற்றிய விஷயங்களைக் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே, காட்டின் பச்சை நிழல்கள் கறுத்துக் கொண்டே வந்தது. காட்டுக் குருவிகள் கூடுகளைத் தேடி போய்க் கொண்டிருந்தன.
‘‘காளு... இனி நீங்க போகலாம்.’’
அவள் சொன்னாள். அவளின் மனதில் இருந்த சந்தேகங்கள் முழுமையாகத் தீர்ந்திருந்தன.
காளு வெள்ளைக்கல்லை விட்டு எழுந்து தன்னுடைய கம்பைக் கையில் எடுத்தான். காட்டு வழியே நடக்கும் போதே அவன் பல முறை திரும்பித் திரும்பி பார்த்தான். லில்லியுடன் அவனுக்குத் திடீரென்று ஒரு நெருங்கிய நட்பு தோன்றியது மாதிரி இருந்தது.
மாலை நேரத்தில் அருவியில் நிறைந்திருந்த சிவப்பு வண்ணம் மாறி, அருவிக் கரையில் இருள் ஆக்கிரமிக்கத் தொடங்கியது. காடு நிசப்தத்தில் மூழ்கியது. மேலே நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன.
அவள் சிவப்பு வண்ண சூட்கேஸைத் திறந்து கேசட் ப்ளேயரை வெளியே எடுத்தாள்.
9
ஆகாயம் முழுமையாக மூடியிருந்தது. காட்டு மரங்களுக்கு மேலே மழை நன்றாக இறங்கி பெய்து கொண்டிருந்தது. அவ்வப்போது மின்னல்களும் தோன்றிக் கொண்டிருந்தன. தூரத்தில் எங்கோ இடி முழக்கங்களும் கேட்டுக் கொண்டிருந்தன. நேரம் மதியமாகி இருந்தாலும், சூரியனைப் பார்க்கவே முடியவில்லை.