லில்லி - Page 18
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6799
‘‘என்ன செய்யணும்னே எனக்கு தெரியல...’’
அவள் ஒரு குருவியைப் போல இலக்கு இல்லாமல் அலை பாய்ந்த மனதுடன் அமர்ந்திருந்தாள்.
‘‘நீ பரீட்சையில தோல்வி அடைஞ்சிடுவியோன்னு நான் பயப்படுறேன். உங்க அப்பா ஏன் இந்த நேரத்துல இப்படியொரு விஷயத்துல இறங்கினாரு?’’
‘‘தப்பு என் பக்கம்தான். நான் கிருஷ்ணசந்திரன் கூட போயிருக்கக்கூடாது.’’
‘‘ஃபர்கெட் இட்...’’ - அவன் சொன்னான். ‘‘எது எப்படியிருந்தாலும், லில்லி... உடனே நகரத்துக்குப் போக வேண்டாம். நாம் கொஞ்சம் யோசித்துப் பார்க்குறேன். சாயங்காலம் நீ ஸ்டேடியதுக்கு வர்றியா? நான் அங்கே இருப்பேன்...’’
தன் காலை நக்கிக் கொண்டிருந்த பசுவின் கன்றை தலையில் மெதுவாக தடவியவாறு சத்யன் எழுந்தான். அவனுடன் லில்லியும் எழுந்தாள்.
அவளின் தோளில் கையைப் போட்டவாறு அவளுடன் சேர்ந்து நடந்த சத்யன் சொன்னான்.
‘‘லில்லி... உலகத்துல இருக்குறதுலயே நீதான் என்னோட நெருங்கிய ஃப்ரண்ட் இந்த மாதிரியான நேரத்துல உனக்கு உதவலைன்னா, என்னோட நட்புக்கு என்னதான் அர்த்தம்? நான் உன் விஷயத்துல நிச்சயம் ஒரு நல்ல முடிவைச் சொல்றேன்.’’
அவர்கள் நடந்து காட்டுக்குப் பக்கத்தில் வந்தார்கள். அவள் தன் மனதில் தன்னுடைய தந்தையை நினைத்துப் பார்த்தாள். கோபக்காரரான, கறாரான குணத்தைக் கொண்ட தந்தை... அவள் கடவுளை விட அதிகமாக சி.கெ.யைப் பார்த்து பயப்படுகிறாள்.
‘‘தைரியமா இரு... லில்லி!’’
அவன் அவள் தோளில் இருந்த கையை எடுத்து அவளின் தாடையில் லேசாகத் தட்டினான். அவள் தன்னை மீறி அப்போது புன்னகைத்தாள்.
கார் மீண்டும் ஓடத் தொடங்கியது. பின்னோக்கி வண்டியை எடுத்த அவள் வந்த வழியே ஓட்டினாள். சத்யன் வேலை செய்யும் இடத்தை அடைந்ததும், காரை நிறுத்தினாள்.
‘சாயங்காலம் அஞ்சு மணிக்கு நான் ஸ்டேடியத்துல உனக்காக காத்திருக்கேன்.’’
அவன் காரை விட்டு இறங்கியதும், வண்டி மீண்டும் ஓடத் தொடங்கியது. மேடுகளும், பள்ளங்களுமாய் சரளைக் கற்கள் நிறைந்த அந்தப் பாதையில் காரோட்டிச் செல்லும்போது, அவள் மனதில் பலவித எண்ணங்களும் அலை புரண்டு போய்க் கொண்டிருந்தன. கஞ்சா குடித்துக் குடித்து மனதும் உடம்பும் தளர்ந்து போன விபினன் என்ற இளைஞன்... ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் அவன் திரும்பி வருவானா? கூலி வேலை செய்து கொண்டிருக்கும் எம்.எஸ்ஸி படித்து ரேங்க் வாங்கியிருக்கும் சத்யன். முதல் சந்திப்பிலேயே தன்னுடைய வருங்கால மனைவிக்கு படுக்கையறையைத் தயார் பண்ணி வைத்திருந்த டாக்டர் கிருஷ்ணசந்திரன். இந்த உலகமே ஒரு விதத்தில் பார்த்தால் விசித்தரமான ஒன்றாகத் தோன்றியது அவளுக்கு.
கார் வீட்டிற்கு முன்னால் வந்து விட்டதை அவள் உணரவேயில்லை.
வாசலில் பெரிய மடக்கு நாற்காலியைப் போட்டுக் கொண்டு வெளியே பார்த்தவாறு அமர்ந்திருந்த தன்னுடைய தந்தையை தூரத்தில் வரும்போதே பார்த்துவிட்டாள் அவள். தோய்த்து இஸ்திரி போட்ட சட்டையும் வேட்டியும் அணிந்து புறப்படுவதற்குத் தயாராக நின்றிருந்தார் அச்சுதன் நாயர். தோளில் மடித்து போடப்பட்டிருந்த மஃப்ளர் வேறு. நகரத்தை நோக்கி போகிறபோது அந்த மஃப்ளரை எடுத்துக் கொள்ள எப்போதும் மறக்க மாட்டார் அவர்.
‘‘அச்சுதன் நாயரற்... பெட்டியை எடுத்து கார்ல வைங்க...’’
சி.கெ. சொன்னார். அச்சுதன் நாயர் வராந்தாவில் இருந்த லில்லியின் சிவப்பு வண்ண சூட்கேஸையும் கேசட் ப்ளேயரையும் எடுத்துக் கொண்டு காரை நோக்கி நடந்தார்.
‘‘நான் இன்னைக்கு போகல...’’
வராந்தாவில் ஏறிய லில்லி சொன்னாள். அதைக்கேட்டு அச்சுதன் நாயர் கையில் பெட்டியுடனும், கேசட் ப்ளேயருடனும் என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே நின்றுவிட்டார்.
‘‘பரீட்சை நடக்குதுன்றதை ஞாபகத்துல வச்சுக்கோ.’’
‘‘நாளை பொழுது விடியிறதுக்கு முன்னாடி போனாப் போதும்.’’
‘‘உன் மனசு மாறினதுக்குக் காரணம்? அவன் மாற்றி விட்டுட்டானா?’’
அதைக் கேட்டு லில்லி அதிர்ந்து விட்டாள். அவள் மனது பனியைப் போல உருகத் தொடங்கிவிட்டது. அவள் தன்னுடைய கீழுதட்டைக் கடித்து மனதில் தைரியத்தைக் கொண்டு வர முயற்சித்தாள்.
‘‘எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு நீ நெனைச்சிக்கிட்டு இருக்கியா? இந்தத் தலச்சேரியில் எது நடந்தாஓலும், அது கட்டாயம் எனக்குத் தெரியாமல் போகாது.’’
‘‘அப்பா... நீங்க என்ன சொல்றீங்க?’’
‘‘அந்தப் பிச்சைக்காரப் பய சத்யனோட உனக்கு இருக்குற நட்பைப் பற்றிச் சொல்றேன்.’’
‘‘அப்பா, நீங்க தப்பா நினைக்கிறீங்க. நாங்க வெறும் நண்பர்கள். அவ்வளவுதான்...’’
சி.கெ. நாற்காலியை விட்டு எழுந்து ஒரு பென்ஸன் அண்ட் ஹெட்ஜஸை எடுத்து நெருப்பைப் பற்ற வைத்து ஊதியவாறு வாசலில் இங்குமங்குமாய் நடந்தார். புடவைத் தலைப்பை தோள் மீது இழுத்து விட்டுக் கொண்ட லில்லி தன் தந்தையையே பார்த்தவாறு நின்றிருந்தாள். காருக்குப் பக்கத்தில் என்ன செய்வது என்ற தடுமாற்றத்துடன் அச்சுதன் நாயர் நின்றிருந்தார்.
வாயில் இருந்த சிகரெட்டை பாதி எரிந்த நிலையில் சாம்பல் தட்டில் போட்ட சி.கெ. மகளுக்கு முன்னால் வந்து நின்றார்.
‘‘லில்லி...’’
அவரின் குரலில் சற்று கனம் கூடியிருந்தது.
‘‘மற்ற எதை வேணும்னாலும் என்னால பொறுத்துக்க முடியும். விளையாட்டுத்தனம் பண்றது மட்டும் எனக்கு பிடிக்கவே பிடிக்காது...’’
அவள் கண்களில் கோபத்தின் ரேகைகள் தெரிந்தன. என்னவோ சொல்வதற்காக வாயைத் திறக்க முற்பட்டாள். அதற்குள் அவள் தந்தை சொன்னார்.
‘‘இங்கே பார்... நீ சொல்றது எதையும் நான் கேட்க விரும்பல. இப்பவே நேரம் அதிகம் ஆயிடுச்சு. உடனே புறப்படு...’’
அச்சுதன் நாயர் காரின் கதவைத் திறந்து சூட்கேஸையும் கேசட் ப்ளேயரையும் பின்னிருக்கையில் வைத்தார். சூட்கேஸில் அவளுக்குத் தேவையான எல்லாவற்றையும் அவள் தாய் ஏற்கனவே எடுத்து வைத்திருந்தாள்.
அவள் முன்னால் வைத்த தன்னுடைய கால்களை பின்னோக்கி வைத்தாள். ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் குடிக்க வேண்டும் என்று நினைத்தாள். பிறகு என்ன நினைத்தாளோ வேண்டாம் என்று அதை ஒதுக்கி வைத்து விட்டாள்.
அடுத்த நிமிடம் அவளை ஏற்றிக் கொண்டு புதிதாக வாங்கிய மார்க் ஃபோர் கேட்டைக் கடந்து தெருவில் இறங்கியது. அவள் இருக்கையில் கண்களை மூடியவாறு சாய்ந்தாள்.
தன் தந்தையை எதிர்த்து நிற்க தன்னால் எந்தக் காலத்திலும் முடியாது என்பதை அவள் நன்றாக அறிந்து வைத்திருந்தாள். தன் தந்தையின் வாக்கு அவளைப் பொறுத்தவரை கடவுளின் வாக்கைப் போல. அவளின் தந்தை ஒரு தீர்மானம் எடுத்தாரென்றால், அதுதான் கடைசி தீர்மானம். சி.கெ.யைப் பற்றி நினைத்துப் பார்த்தபோது, பயத்தால் அவள் மனதில் நடுக்கம் உண்டானது.