குணவதி - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7239
அந்தச் சிந்தனையுடன் வினயனின் அரவணைப்பில் அவள் தன்னையே மறந்து போய் நின்றிருந்தாள். நிமிடங்கள் வேகமாக ஓடிக் கொண்டிருந்தன.
‘‘முந்தா நாள் ராத்திரி...’’- அவள் கேட்டாள்.
‘‘ஆமா... நான்தான்...’’
‘‘சரியான ஆள்தான்...’’
‘‘என்னடா சொன்னே கண்ணு?’’
‘‘உலகத்துக்கே பெரிய களங்கமாக இருக்குற, கேவலமான, ஒழிக்கப்பட வேண்டிய தேவடியா மேல யாருக்காவது காதல்னு ஒண்ணு வருமா?’’
‘‘நான் உன்னைக் காதலிக்கல.’’
‘‘அப்படியா? இருந்தாலும் நான் உங்களை விடுறதா இல்ல...’’
குணவதி அவனை மேலும் இறுகக் கட்டியணைத்தாள்.
‘‘என்னை யாரும்... நான் உங்களை நம்புறேன். நான் உங்களை விட மாட்டேன். என்னை நீங்க உங்க கையால கொல்லணும்.’’
வினயன் அதற்குப் பதில் எதுவும் கூறவில்லை. மனதிற்குள் என்னென்னவோ எண்ணங்கள் அலை மோதி திக்கு முக்காடிக் கொண்டிருந்தன. அவனால் எதுவுமே பேச முடியவில்லை. என்ன சொல்வது என்றும் தெரியவில்லை.
‘‘நான் எவ்வளவோ பேர்கிட்ட கெஞ்சிக் கூத்தாடிக் கேட்டிருக்கேன்.’’
‘‘என்ன கேட்டே?’’
‘‘என் மேல் அன்பு செலுத்துங்க, கருணை காட்டுங்கன்னு...’’
‘‘என்கிட்ட இருந்து நீ என்ன எதிர்பார்க்குற?’’
‘‘என் இதயம் வெந்து சாகுது. அதுக்கு நீங்க மருந்தா இருந்தா போதும். என்னைத் தேடி வந்த ஆயிரம் பேர்ல ஒரு ஆளுதானே நீங்க...?’’
‘‘குணவதி... நீ சந்தோஷமா ஒரு நிமஷம் சிரி... நான் கொஞ்சம் பாக்குறேன்.’’
அவளின் தாடையைப் பிடித்து வினயன் அவளுடைய தலையை உயர்த்தினான்.
‘‘என்ன நினைச்சு நீங்க இங்கே வந்தீங்க?’’
‘‘வாய்க்கு வந்தபடி ஏதாவது கேள்விகள் கேட்டுக்கிட்டு இருக்காம, என் இதயத்துக்குள்ளே என்ன இருக்குன்னு பார்க்குறதுக்கு வழியைப் பாரு.’’
‘‘அது படு வேகமாக துடிச்சிக்கிட்டு இருக்கு!
குணவதி சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு தொடர்ந்தாள்.
‘‘ நீங்களும் மனிதர்தானே’’.
‘‘ஆமா...’’
‘‘என்னை நினைச்சு நீங்க ஏன் அழணும்?’’
‘‘ரதீசனைப் பார்த்து உனக்கு பயம் கிடையாதா? எனக்கு அவனைப் பார்த்து பயம்.. தெரியுமா?’’
‘‘நீங்க அழுதது பொய்யானது... நான் சொல்றேன்.’’
‘‘நான் ஒரு காமவெறி பிடிச்ச ஆள் இல்ல...’’
‘‘என்னை நீங்க காதலிக்க?’’
‘‘எனக்குத் தெரியாது.’’
‘‘என்கிட்ட உங்களுக்குத் திருப்பித் தர ஒண்ணுமே கிடையாது.’’
‘‘நான் உனக்கு எது எது வேணுமோ எல்லாத்தையும் தர்றேன்.’’
‘‘ஒரு பெண்ணுக்கு அவளோட சந்தோஷம் எவ்வளவு முக்கியம் தெரியுமா?’’
‘‘நான் உன்னோட...’’
‘‘நான் என்னையே முழுசா உங்கக்கிட்ட கொடுத்துட்டேன். மத்தவங்கக்கிட்ட இருந்து...’’
‘‘நீ சந்தோஷமா சிரிக்கிறதை நான் பார்க்கணும்...’’
மேஜை மேலிருந்த தட்டில் இருந்த ஒரு பூ மாலையை குணவதி எடுத்தாள். வினயன் தலையைக் குனிந்து அவள் முன் நின்றிருந்தான். அவள் கையிலிருந்த அந்த மாலையை அவனுடைய கழுத்தில் அணிவித்தாள்.
‘‘இப்போ சொல்லுங்க... நான் உங்களுக்கு யார்?’’
‘‘நீயா? நீயா?’’
வினயன் என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றான். அவள் தனக்கு யார்? அவனுக்கும் அவளுக்குமிடையே இருக்கும் உறவுக்குப் பெயர் என்ன?
‘‘நீ எனக்கு மேலானவள்...’’
‘‘இல்ல... நான் உங்களோட மனைவி.’’
அதைக் கேட்டு வினயன் நடுங்கினான்.
‘‘ஆமா... ஏன் நீங்க நடுங்குறீங்க?’’
வினயன் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை.
‘‘நான் உங்க கழுத்துல மாலை போட்டேன். நீங்க நல்லா இருக்கணும்னு மனப்பூர்வமா நினைக்கக் கூடியவ நான். உங்களோட சந்தோஷத்துல எனக்கும் பங்கு இருக்கு. நான் உங்களோட சந்தோஷத்துல எனக்கு பங்கு இருக்கு. நான் இப்போ ரொம்பவும் பாதுகாப்பா இருக்குறதா உணர்கிறேன். இப்போ எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு... நான் இப்போ ஆடலாம், பாடலாம்...’’
தான் ஆசைப்பட்ட விளையாட்டுச் சாமான்கள் கிடைத்தால் ஒரு குழந்தை எந்த அளவிற்கு சந்தோஷப்படுமோ, அந்த மாதிரி மகிழ்ச்சிப் பெருக்கெடுத்து துள்ளிக் குதித்தாள் குணவதி. அதைப் பார்த்து ஆனந்தவயப்பட்டு நின்றான் வினயன். அவள் பாட்டுப் பாடினாள். இதைப் போன்ற இனிமையான குரலில் சுருதி சுத்தமான ஒரு பாட்டை இதற்கு முன்பு அவன் கேட்டதே இல்லை என்பதை உண்மை. வினயன் பாட்டைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு நின்றான். அவளின் சிரிப்பு அவன் இதயத்தில் குளிர்ச்சியை உண்டாக்கியது.
‘‘மார்வாடிகளோட நடனத்தைப் பார்க்கணுமா?’’
வினயன் தலையை ஆட்டினான்.
அவள் ஆடினாள். கலைத் தன்மை பரிமளிக்க அவள் ஆடிய நடனத்தைப் பார்த்து அவன் மெய்மறந்து நின்றான். பஞ்சாபி, பெங்காளி என எல்லா வகை நடனங்களையும் அவள் ஆடினாள். எல்லாவற்றிலும் அவள் பிரமாதமான திறமையைக் கொண்டிருந்தாள். அவள் நடனங்களை ஆடும்போது அவளின் கைதேர்ந்த அனுபவத்தையும், முழுமையான ஈடுபாட்டையும் அவனால் உணர முடிந்தது. வினயன் தன்னையே முழுமையாக மறந்து போய், பரமானந்த நிலையில் நின்றிருந்தான்.
இளங்கொடியைப் போன்ற அவள் ஆடி ஆடி களைத்துப் போய், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினாள். அவளால் ஓழுங்காக மூச்சு விட முடியவில்லை. அதனால் சில இடங்களில் அவள் பாட்டுப் பாடும் போது இடறியது. அவளின் கன்னத்தில் வியர்வை அரும்பி வழிந்து கொண்டிருந்தது. சிவந்த தன் உதடுகளை நாக்கால் ஈரமாக்கிக் கொண்ட அவள் தான் சகஜ நிலையில் இருப்பது மாதிரி காட்டிக் கொள்ள முயன்றாள்.
‘‘என்னால் இனிமேல் முடியாது. கால் ஒரேடியா வலிக்குது’’ - அவள் கட்டிலில் போய் படுத்தாள்.
‘‘இப்படி ஆடணும், உடற்பயிற்சி செய்யணும்னு யாராவது உன்கிட்ட சொன்னாங்களா என்ன?’’
‘‘நீங்க அகலமா கண்களைத் திறந்து வச்சு ரசிச்சீங்க. அதற்கு நான் நன்றியோட இருக்க வேண்டாமா? இங்கிலீஷ் நடனம் ஏதாவது பார்க்கணுமா?’’
‘‘நான் ஒண்ணையும் பார்க்க வேண்டாம்’’ - வினயன் மெத்தையில் போய் படுத்தான்.
‘‘இங்க பாரு... எப்படி வேர்க்குதுன்னு.’’
‘‘உஷ்ணம் அதிகமா இருக்கு. கொஞ்சம் விசிறி விட்டால்தான் சரியா வரும்.’’
குணவதி எழுந்து தன்னுடைய நெஞ்சோடு ஒட்டிக் கிடந்த ரவிக்கையை நீக்கினாள். வினயன் அவளுக்கு விசிறி விட்டான்.
சுகமாக வீசிய காற்றின் சுகத்தை அனுபவித்த அவள் அப்படியே தன்னை மறந்து உறங்கிப் போனாள். வினயன் அதற்குப் பிறகும் கூட அவளுக்கு விசிறி கொண்டுதானிருந்தான்.
தன்னை இதுநாள் வரை அலைக்கழித்துக் கொண்டிருந்த கவலைகளையெல்லாம் ஒரு மூலையில் தூக்கியெறிந்து விட்டு, அவள் எதிர்காலத்தைப் பற்றிய இனிய கனவுகளுடன் ஒரு குழந்தையைப் போல் தூங்கிக் கொண்டிருந்தாள்.
மரணம் என்ற மறுகரையை அடைவதற்கு முன்னால் அவள் எத்தனை நெருப்பு எல்லைகளைத் தாண்டிச் செல்ல வேண்டியிருக்கிறது என்று நினைத்துப் பார்த்தான் வினயன்.