குணவதி - Page 25
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7238
‘‘குணவதி! எனக்கு இதயம்ன்ற ஒண்ணு இல்லவே இல்ல. ஒத்துக்குறேன். அந்தக் கொலை செய்யப்பட்ட ரதீசன்.... நான்... எங்க ரெண்டு பேர்ல யாருக்கும் இதயம் இல்ல?’’
‘‘நீங்களா ரதீசனைக் கொன்ன ஆளு?’’
‘‘அது உண்மையா இருந்தா, என்னை நீ வெறுத்து ஒதுக்கிடுவியா?’’
‘‘அய்யோ...’’
‘‘நீ ஏன் அழறே! வெறுத்து ஒதுக்கிடுவே! அப்படித்தானே!’’
‘‘நீங்க சொல்றதெல்லாம் உண்மையா?’’
‘‘என் இதய வேதனைக்கு மருந்து வேணும்.’’
‘‘மனசுல மறைச்சு வச்சிருக்குற உண்மையைச் சொல்லுங்க.’’
‘‘கொலைகாரனை நீ வெறுக்கத்தானே செய்வே?’’
‘‘மனசுல மறைச்சு வச்சிருக்குற உண்மையை...’’
‘‘நான்தான் அந்தக் கொலைக்காரன்...’’
‘‘அய்யோ...!’’
அடுத்த நிமிடம் மயக்கமடைந்து கீழே விழுந்தான் வினயன்.
16
செய்த குற்றத்தைக் கட்டாயம் ஒப்புக் கொள்ள வேண்டுமென்று குணவதி சொன்னாள்.
‘‘நான் உங்களுக்காக காத்திருப்பேன்’’ அவள் அவனுக்கு வாக்குறுதி அளித்தாள்.
வினயன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். ஆனால், குணவதி அனுபவிக்கும் கஷ்டங்களைப் பார்த்துத்தான் தான் கொலை செய்யும் முடிவையே எடுத்தது என்ற விஷயத்தை அவன் அங்கு வெளியிடவில்லை.
ஆயுள் தண்டனை!
சிறையின் இரும்புக் கம்பிகள் வழியாக அவன் வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். வெளியே இருக்கும் அழகான உலகத்தில் ஒரு கிளியைப் போல எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் படு சுதந்திரமாக அவனுக்குப் பறந்து திரிய வேண்டும்போல் இருந்தது. குணவதியை வினயன் நினைத்துப் பார்த்தான். அவளை நினைக்க நினைக்க அவனுடைய இதயத்தில் இன்ப ஊற்று பெருக்கெடுத்து ஓடியது. அவள் இப்போது எப்படி இருப்பாள்? அவள் இப்போதும் விலைமாதுவாகத்தான் இருப்பாளா?’’
வினயன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான். அவனுடைய கண்களில் இருந்து கண்ணீர் அரும்பி ஆறென வழிந்தது. அந்த வெரும் தரையில் சோர்வடைந்து அவன் படுத்துக் கிடந்தான். அவனுடைய தண்டனைக் காலம் முடிய இன்னும் எத்தனை வருடங்கள் இருக்கின்றன.
தன் மீது ஏகப்பட்ட பாசத்தைக் கொட்டி வளர்த்த தன்னுடைய தாயை நினைத்துப் பார்த்தான். இதயத்தில் நெருப்பைக் கொட்டியதைப் போல் அப்போது அவன் உணர்ந்தான். இப்போது அவன் தாய் உயிரோடு இருப்பாளா? வயதான காலத்தில் அருகிலிருந்து கவனிப்பதற்கு யார் இருக்கிறார்கள்? குணவதி அங்கே போயிருப்பாளா?’’
வினயனை வேலை செய்வதற்காக வெளியே கொண்டு சென்றார்கள். அவன் விசாரித்துப் பார்த்தான். ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
குணவதி அந்த குணப்படுத்த முடியாத நோயால் பீடிக்கப்பட்டு விட்டவள் என்பதை வினயன் நினைத்துப் பார்த்தான். அவள் எவ்வளவு அழகானவளாக இருந்தாள்! உலகத்தையே தன்னுடைய காலடிக்குக் கீழே கொண்டு வரக்கூடிய அளவிற்கு அழகானவள் அவள்! ஆனால், அந்த நோய் இப்போது மேலும் முற்றிப் போயிருக்கும். அவள் தன் அழகையெல்லாம் இழந்து பார்க்கவே சகிக்க முடியாதவளாக இப்போது இருக்கலாம். அவள் நடனம் ஆடுவதை விட்டிருப்பாள். யாராவதொரு ஆண் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பானா? எது உண்மையோ? யாருக்குத் தெரியும்? காம வெறி பிடித்து அலையும் ஆண்கள் உலகத்தின் மனநிலையை யாரால் சரியாகக் கணித்துக் கூற முடியும்? அவள் விருப்பப்பட்டதைப் போல ஓய்வு அவளுக்கு இப்போது கிடைத்திருக்கலாம். முன்பு பார்த்த குணவதியைப் பற்றி இப்போது பேச்சுக்கு மத்தியில் பலரும் சொல்லிக் கொண்டிருக்கலாம். அவளைப் பற்றி அவர்கள் ‘‘ஆஹா ஓஹோ’’ என்று புகழ்ந்து கொண்டிருக்கலாம்.
தண்டனை முடிந்தது. வினயன் விடுதலை ஆனான். குணவதியின் வீடு வெறுமனே ஆள் இல்லாமல் கிடந்தது. மறக்க முடியாத அந்த ஜன்னல் இப்போதும் திறந்து கிடந்தது.
வினயன் தன்னுடைய வீட்டிற்குச் சென்றான். அவனுக்குச் சொந்தமான சொத்தெல்லாம் காணாமல் போயிருந்தது. அவனுடைய தாய் ஏற்கனவே இறந்து போயிருந்தாள். அவளின் கடைசி காலத்தில் ஒரு இளம்பெண் அவள் அருகிலேயே இருந்து அங்கேயே தங்கி அவளை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொண்டாள் என்று யாரோ சொல்லி வினயன் கேட்க நேர்ந்தது.
வினயன் தன்னுடைய ஊரை விட்டு நிரந்தரமாகப் பிரிந்தான். ஊர் ஊராக அலைந்தான். சென்ற இடங்களிலெல்லாம் குணவதியைப் பற்றி விசாரித்தான். முடியவற்ற அவன் விசாரணை, நிராசையிலேயே முடிந்தது.