குணவதி - Page 23
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7239
அன்று கையில் கீறல் பட்டவன் மருத்துவமனையில் இருப்பதாக வினயனுக்கு தெரிய வந்தது.
கொலை செய்தவன் குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டான்!
வினயன் காவல் நிலையத்தைத் தேடிச் சென்றான். இரும்புக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்தவாறு ஒருவன் வெளியே பார்த்துக் கொண்டிருப்பதை வினயன் கண்டான்.
அவன்தான் கொலை செய்தவன்!
வினயன் இன்ஸ்பெக்டரின் அறைக்குள் சென்று சொன்னான்.
‘‘அந்த ஆள் நிரபராதி. எல்லாம் முடிஞ்ச பிறகு இரத்தத்துல கால் தடுமாறி கீழே விழுந்தவன். பாவம் அவன்...’’
‘‘அவன் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறானே!’’ - இன்ஸ்பெக்டர் சொன்னார்.
‘‘அட கஷ்டமே!’’
வினயன் வெளியே வந்தான். எந்தவித இலக்குமில்லாமல் மனம் போனபடியெல்லாம் நடந்து திரிந்தான். மீண்டும் காவல் நிலைத்திற்கே வந்து சேர்ந்தான். இன்ஸ்பெக்டர் அவனை உள்ளே அழைத்துக் கேட்டார்.
‘‘இவன் நிரபராதின்னு உனக்கு எப்படி தெரியும்?’’
‘‘நிரபராதியாக இருக்குற ஒருவன் தூக்கு மரத்தில் தொங்குவதை விட, ஆயிரம் குற்றவாளிகள் தப்பிப்பது எவ்வளவோ மேல்...’’
‘‘நீ சொல்ற தத்துவம் நல்லாத்தான் இருக்கு. ஆனால், இந்த ஆளு நிரபராதின்னு எப்படி தெரிஞ்சிக்கிறது?’’
‘‘பணமோ அந்தஸ்தோ இல்லாத ஏழை இந்த ஆளு. இவன் குடும்பத்தோட கஷ்டத்தை நினைச்சு இவனை விடுதலை பண்ணுங்க.’’
‘‘அப்ப யார் கொலை செய்தது?’’
வினயன் அந்தக் கேள்வியைக் கேட்டு நடுங்கினான். இன்ஸ்பெக்டர் அதை கவனிக்காமல் இல்லை.
வினயனுக்கு மிகவும் களைப்பாக இருந்தது. அவன் ஒரு நாற்காலியில் தளர்ந்து போய் உட்கார்ந்தான்.
‘‘பாவம் இந்த ஆளை விட்டுடுங்க.’’
‘‘கொலை செய்த ஆளை உனக்குத் தெரியுமா?’’
‘‘இதுதான் கஷடம்ன்றது. சில நேரங்கள்ல இப்படித்தான் நல்லது சொல்லலாம்னு நினைச்சா இப்படியெல்லாம் பிரச்சினை வருது. இந்த ஆளுக்கு இந்தக் கொலையைப் பற்றி எதுவுமே தெரியாதுன்னு நான் சத்தியம் பண்ணிச் சொல்றேன். நீங்க இந்த ஆளை அனாவசியமா உள்ளே போட்டு வச்சிருக்கீங்க. நீங்க சொன்னதை அவன் திருப்பிச் சொல்றான். அவ்வளவுதான்.’’
வினயன் மீண்டும் அமர்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்தான். காவல் நிலையத்தை விட்டு அவனுக்கு வெளியே போக வேண்டும் என்று தோன்றவில்லை. அவன் மீண்டும் இன்ஸ்பெக்டரைப் பார்த்துச் சொன்னான்.
‘‘அவன் நிரபராதி.’’
‘‘உனக்கு எப்படித் தெரியும்?’’
‘‘அந்தக் கத்தி கிடைச்சதா?’’
அவன் எங்கேயோ அதை ஔச்சு வச்சிருக்கிறதா சொன்னான்.’’
‘‘அட கஷ்டமே!’’
வினயன் தான் செய்த செயலை மீண்டும் ஞாபகத்திற்குக் கொண்டு வந்தான். அங்கே எதற்காக தான் வர வேண்டும் என்று தன்னைத்தானே கேள்வியும் கேட்டுக் கொண்டான். தான் இன்ஸ்பெக்டரிடம் பேசிய விஷயங்களை மீண்டும் ஞாபகப்படுத்திப் பார்த்தான். இன்ஸ்பெக்டரிடம் முகத்தையே வினயன் உற்றுப் பார்த்தான். அவர் தன்னை சந்தேகப்படுகிறாரோ என்று அவனுக்குத் தோன்றியது. அவன் தன் காதுகளைத் துடைத்துக் கொண்டான்.
‘‘யார் கொலை செய்தது? உனக்கு ஏதோ தெரியும்ன்ற மாதிரி தோணுதே!’’
இன்ஸ்பெக்டரின் இந்தக் கேள்விக்கு எந்த பதிலும் கூறாமல் மவுனமாக இருந்தான் வினயன்.
அந்தக் கத்தியை எங்கேயோ ஒளித்து வைத்திருப்பதாக அந்த ஆள் கூறினானாம். வினயன் இந்த விஷயத்தை மீண்டும் ஞாபகப்படுத்திப் பார்த்தான். அந்தக் கொலையைச் செய்தது தான்தானா என்று அவனுக்கு சந்தேகம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. அந்தச் சம்பவம் ஒருவேளை ஒரு கனவாக இருக்குமோ என்று அவன் நினைத்தான். உயிரற்ற சவத்தைப் போல நள்ளிரவு நேரத்தில் காவல் நிலைய வளாகத்தில் அவன் இங்குமங்குமாய் அலைந்து கொண்டிருந்தான். அந்தக் கொலை நடந்த இடத்தில் அந்த இரவு நேரத்தில் - வெள்ளை உடை அணிந்த ஒரு உருவத்தைச் சிலர் பார்த்திருக்கிறார்கள்.
வினயனை எதிர்பார்த்து மனதில் பதைபதைப்புடன் அவன் தாய் காத்திருந்தாள்.
‘‘அம்மா... துயரக் கடலோட ஆழத்தை நீங்க இதுவரை பார்த்தது இல்லை. ஆனால், நீங்க ஒருநாள் அதைப் பார்க்கத்தான் போறீங்க...’’
வினயன் தன் தாயைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தான். அவன் தொடர்ந்தான்.
‘‘அம்மா... என்னை ஏன் நீங்க பெத்தீங்க? எனக்காக நீங்க ஏன் கஷ்டங்களை அனுபவிச்சீங்க? எனக்காக நீங்க ஏன் அழணும்? என் இதயத்தை நான் உங்களுக்குத் திறந்து காட்டவா? அம்மா... உங்களோட கடைசி காலத்துல... நான் உங்களுக்கு உதவியா இருக்குறதுக்கு ஒரு பெண்ணை ஏற்பாடு பண்ணுறேன். அவ ஒரு மகள் மாதிரி உங்களைப் பார்த்துக்குவா. அவள் உங்களுக்கு கேக்குறப்போ தண்ணி தருவா. அவள் உங்களை சுடுகாட்டுக்கு சுமந்துட்டு போவா... நான்... நான்...’’
‘‘மகனே!’’
‘‘எமன் என்னை வட்டம் போடுறான்மா. நான் உங்களோட ஒரே மகன். இருந்தாலும் நீங்க எனக்காக அழ வேண்டாம். உலகத்துல இருக்குற கஷ்டங்களைப் பார்த்து என் இதயம் வெந்து உருகிக்கிட்டிருந்து. இருந்தாலும், அம்மா... உங்க அன்பாலும் அரவணைப்பாலும் நான் எல்லாத்தையும் எப்படியோ தாங்கிக்கிட்டேன். அம்மா... அந்தப் பெண்ணோட அன்பு உண்மையானது. நான¢அவளை அழைச்சிட்டு வரட்டுமா?’’
‘‘அய்யோ... வினயா!’’
வினயன் திரும்பி நின்றான்.
‘‘அம்மா.’’
‘‘நீ எங்கே போற?’’
‘‘நானா? அம்மா அழாதீங்க... இனிமேல் உங்களோட அன்பை அந்தப் பெண் மேல காட்டுங்க. என்னை நீங்க மறந்திடுங்கம்மா. இந்த மகன் இனிமேல்... அம்மா உங்களைப் பத்திரமா பாதுகாக்குற நிலையில இப்போ நான் இல்ல. அவுங்க என்னை சீக்கிரம் பிடிச்சிட்டுப் போய்... அதுக்கு முன்னாடி நான் அந்தப் பெண்ணை இங்கே அழைச்சிட்டு வந்திர்றேன். அந்தப் பெண்ணோட இங்கே அழைச்சிட்டு வந்திர்றேன். அந்தப் பெண்ணோட அன்பில்... அம்மா... அழாதீங்க... என்னை வாழ்த்தி அனுப்பு வையுங்க... தேவையில்லாமல் ஒரு நிரபராதியான அந்த ஆளு ஏன் தூக்கு மரத்துல தொங்கணும்?’’
‘‘மகனே... நானும் உன் கூட...’’
‘‘அம்மா... சாதாரண இதயத்தைக் கொண்ட இப்படியொரு மகனை ஏன் பெத்தீங்க? எனக்காக ஏன் எவ்வளவோ கஷ்டங்களைச் சகிக்கச்சீங்க? கடந்த போன அந்த இளமைக்காலம்... வாழ்க்கை இன்னும் முடியல... என் மனதில் இருக்கும் ஆசைகள்... கண்முன்னாடி கம்பீரமா நிற்கிற விதி... அன்பே வடிவமான தாயின் அரவணைப்பு... அம்மா...’’
வினயன் தன் தாயைக் கட்டிப் பிடித்தான்.
‘‘அம்மா... நீங்கதான் என் உயிர்... நீங்கதான் என் உயிர்.’’
வினயன் வேகமாக தன் தாயிடமிருந்து எழுந்து வெளியே நடந்து கண் இமைக்கும் நேநத்தில் இருளோடு இருளாய் கலந்து காணாமல் போனான்.
அவன் தாயும் அவனுக்குப் பின்னால் போனாள். ஆனால், வினயன் சென்ற வழியை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.