குணவதி - Page 17
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7239
இன்னொரு பக்கம், இதயத்திலிருந்து கிளம்பி வரும் அன்பு வஞ்சகத்திற்கும் வினயனுக்கும் தூரம் அதிகம் என்று குணவதியின் உள்மனம் கூறியது. மனதிற்குள் கபடம் இருக்கும்பட்சம், கொஞ்சமாவது அது வெளியே தெரியாதா என்ன? ஆனால், அவனின் கண்களில் கள்ளம் கபடமற்ற தன்மையைத்தான் அவள் இதுவரை பார்த்திருக்கிறாள். அவள் தன்னைத் தேடி வந்திருக்கும் மனிதர்களை ஒவ்வொருவராக நினைத்துப் பார்த்தாள். ஒருவன் பேசினால் உடம்பை துளைத்து உள்ளே நுழையக் கூடிய சக்தி உடையதாகவும், விஷத்தைத் தடவிக் கொண்டிருப்பதாகவும் அது இருக்கும். ஒருவனுடைய பார்வையே அர்த்தம் நிரம்பியதாக இருக்கும். ஒருவன் ஒருமுறை அவளைப் பார்த்துக் கேட்டான். ‘‘நீ இதுவரை எத்தனை பேர்கூட படுத்திருப்பே?-’’ இன்னொருவன் அவளைப் பார்த்துக் கேட்டான். ‘‘நீ இதுவரை எவ்வளவு சம்பாதிச்சிருப்பே?’’ ஒருவன் அவளை எல்லோருக்கும் தெரியும்படி கிண்டல் பண்ணினான். இப்படிப்பட்ட தான் சந்தித்த எத்தனையோ அனுபவங்களை குணவதி மனதில் நினைத்துப் பார்த்தாள். எப்படிப் பார்த்தாலும் வினயனிடம் விரும்பத்தகாத குணம் எதுவும் இருப்பதாக அவளுக்குத் தெரியவில்லை. ஆனால், அவன் ஏன் தன்னைத் தேடி வரவில்லை? குணவதி எப்போதும் நிற்கும் ஜன்னலின் அருகில் நின்றவாறு அவனுக்காகக் காத்திருந்தாள். ரதீசனின் குறட்டைச் சத்தத்தைக் கேட்டு ஒரு வகையில் அவள் மனதிற்குள் சந்தோஷப்பட்டாள். இப்போது சுவரைத் தாண்டி வினயன் வரக்கூடாதா என்று அவளுடைய மனம் ஏங்கியது. தன்னை வந்து அவன் பார்ப்பதற்கான சரியான சூழ்நிலை இருப்பதாகவே அவள் நினைத்தாள். இந்த வழியில் அவன் இப்போது வரக்கூடாதா என்று ஆசைப்பட்டாள். தன்னுடைய பார்வையில் படும்படி எங்காவது ஒரு இடத்தில் ஒரு கடிதத்தை எழுதி அவன் வைத்து விட்டுப் போகக் கூடாதா என்று மனப்பூர்வமாக ஏங்கினாள். இங்கு வரக்கூடிய யாராவது ஒரு ஆளிடம் ஏதாவதொரு செய்தியை அவன் சொல்லிவிடக் கூடாதா என்று மனதிற்குள் ஏங்கினாள்.
அவள் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். அவளிடமிருந்த ஆர்வம் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் போய் ஒளிந்து கொண்டது. அவனும் மற்றவர்களில் ஒருவனாக ஆகிவிட்டானா என்ன? ஒவ்வொரு நாளும் அவள் மாலைகளைக் கட்டி அவனுக்காக எடுத்து வைப்பாள். ஆனால், அந்த மாலை அதே இடத்திலேயே தினமும் கிடக்கும். வினயனோடு பழகிய நிமிடங்களை அவள் மறக்க முயற்சித்தாள். ஆனால், முடியவில்லை. அவனுடன் அவள் கழித்த ஒவ்வொரு நிமிடமும் பிரகாசமாக முகம் காட்டிக் கொண்டிருந்தன.
குணவதியைத் தனியாக வெளியே செல்ல ரதீசன் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. அவள் கூண்டுக்குள் சிக்கிய கிஷீயைப் போல அடைபட்டுக் கிடந்தாள்.
ஒருவன் கோபத்துடன் அவளைப் பார்த்துக் கேட்டான்.
‘‘நீ என்னைப் பற்றி மற்றவங்கக்கிட்ட ஏதாவது சொல்லி இருக்கியா?’’
அவள் அவன் என்ன சொல்கிறான் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் சொன்னார்.
‘‘சரியாக ஞாபகத்துல இல்ல...’’
‘‘நீ என்னோட மானத்தையே காத்துல பறக்க விட்டுட்டே. நான் இங்கே வர்ற விஷயம் ஊர் முழுக்க தெரிஞ்சி போச்சு.’’
தான் தப்பு செய்து விட்டதாக எண்ணிய குணவதி எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள். அவன் மேலும் தொடர்ந்தான்.
‘‘நீ என்கிட்ட மற்ற ஆளுங்களைப் பற்றி ஏராளமா சொல்லியிருக்கே இல்லே... அந்த மாதிரி என்னைப் பற்றியும் சொல்லி இருப்பே...’’
‘‘அப்படி ஏதாவது நான் சொல்லியிருந்தா, தயவு செஞ்சு என்னை மன்னிச்சிக்கங்க.’’
‘‘அப்படி நீ சொன்னதுனால எனக்கு எவ்வளவு பெரிய பிரச்சினைகளெல்லாம் வந்திருச்சு தெரியுமா? சமுதாயத்துல என்னோட கவுரவம், அந்தஸ்து எல்லாமே போச்சு. இது இல்லாம இன்னும் எவ்வளவோ...’’
‘‘அப்படி உங்களைப் பற்றி மோசமா நான் எதுவம் சொன்னதா எனக்கு ஞாபக்த்துல இல்ல.’’
‘‘மோசமா ஏதாவது சொல்லணும்னு அவசியமில்ல. நான் இங்கே வர்றேன்ற ஒரு விஷயத்தைச் சொன்னா போதாதா? இங்க பாரு... எனக்கும் என் மனைவிக்கும் தகராறு உண்டாகி விவகாரத்து வரை போயிடுச்சு. என் சொந்தக்காரங்கல்லாம் என்னை விட்டுட்டுப் போயிட்டாங்க. இது எனக்கு எவ்வளவு பெரிய பாதிப்பு தெரியுமா?’’
‘‘அய்யோ... இது எதுவுமே எனக்குத் தெரியாது.’’
‘‘இங்க பாரு... நீ ரொம்பவும் கவனமா இருக்கணும். இங்க வர்ற எல்லாரோட ரகசியங்களும் உனக்கு நல்லாவே தெரியும்.’’
‘‘ஆமா...’’
ஒரு விலைமாதுவை ஏன் பலரும் வெறுக்கிறார்கள் என்பதற்கான காரணம் அவளுக்குப் புரிந்தது. ஒரு விலைமாதுவிற்கு தான் சந்திக்கு எல்லோரைப் பற்றியும் உள்ள ரகசியங்கள் நன்றாகத் தெரியும். ஒரு மனிதன் அவன் மனைவியைப் பற்றி ஏராளமான குற்றச்சாட்டுகளை அவளிடம் கூறியிருக்கிறான். இன்னொருவன் உடலுறவு சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருக்கிறான். பலருடைய கேலிக்கூத்தான நடவடிக்கைகளை அவளால் நேரில் பார்க்க முடிந்திருக்கிறது.
ஒருமுறை தன்னைத் தேடி வந்த ஒருவனை அவள், பயமுறச் செய்த சம்பவத்தை மனதிற்குள் நினைத்துப் பார்த்தாள். அவன் விலைமாதுவைத் தேடி வந்திருக்கும் விஷயத்தை எல்லோருக்கும் தெரியும்படி வெளியே கூறப்போவதாக அவள் சொன்னாள். அவ்வளவுதான் - அவன் பயந்து நடுங்க ஆரம்பித்துவிட்டான். அவள் கேட்டது எல்லாவற்றையும் அவன் கொடுத்தான்.
ஆனால், பிறகு ஒரு நாள் அவன் அவளிடம் எல்லோருக்கும் தெரியும்படி கன்னாபின்னாவென்று பேசி தகராறு செய்தான்.
மற்றொரு சம்பவமும் அவள் ஞாபகத்தில் வந்தது. ஒருவருக்கொருவர் எதிரிகளான இரண்டு ஆண்களை அவள் அச்சமுறச் செய்திருக்கிறாள். தந்தையும் மகனும் கூட அவளிடம் வந்து போயிருக்கிறார்கள். ஒரு பெரிய மனிதரின் எல்லா ரகசியங்களும் அவளுக்குத் தெரியும். இப்படி எல்லோருமே அவளைப் பார்த்து பயப்பட்டார்கள். ஒரு முறை அவளுடன் படுக்கையில் படுத்த எவனும் அடுத்த முறை அவள் முன்னால் தலை குனிந்துதான் நிற்க வேண்டும். அவர்களின் நற்பெயர், வாழ்க்கையில் பெற்ற வெற்றி, லாபம், வாழ்க்கை சுகம் - எல்லாவற்றையும் அவளிடம் அவர்கள் பணயம் வைத்திருக்கிறார்கள். அவளின் விருப்பத்திற்கேற்றபடியெல்லாம் அவர்களின் ஒவ்வொரு செயலும் இருக்கும் என்பதே உண்மை.
விலை மாதுவை உலகம் வெறுப்பதற்கான இன்னொரு காரணம் இதுதான். அவளை பயங்கர கோபத்துடன் உலகம் பயமுறுத்துகிறது. அவளிடம் கொஞ்சம் கூட மனிதாபிமானத்துடன் உலகம் நடந்து கொள்ளத் தயாராக இல்லை.
ஒரு விலை மாதுவிடம் இந்த உலகம் தன்னுடைய அசிங்கத்தைப் பார்க்கிறது. அவள் எங்கே தங்களைப் பற்றிய செய்திகளை வெளியே சொல்லியிருப்பாளோ என்று அவளைத் தேடி வரும் ஒவ்வொரு மனிதனும் சந்தேகப்படுகிறான். தங்களை துச்சமாக நினைக்க அவளால் முடியும் என்று ஒவ்வொருத்தனும் எண்ணுகிறான். இந்த நிலையில் அவள் அழிந்து தொலையட்டும் என்றுதானே ஒவ்வொருவனும் ஆசைப்படுவான்?