குணவதி - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7239
வினயன் முன்னோக்கி நடந்து அந்த மெத்தை மேல் அமர்ந்தான். குப்புறப்படுத்துக் கிடந்த அவள் தோளின் மேல் தன்னுடைய தலையை வைத்தவாறு மெதுவான குரலில் அவன் சொன்னான்.
‘‘குணவதி... உன்னை நான் காதலிக்கிறேன்...’’
‘‘நிச்சயமாக இல்லை...’’
‘‘உண்மையாகத்தான் சொல்றேன்!’’
வினயன் அவளை அள்ளி எடுத்து தன்னுடைய மடிமேல் இட்டான். சிவந்து போயிருந்த அவளின் அழகான உதடுகளில்அவன் அன்பு மேலோங்க முத்தமிட்டான்.
‘‘குணவதி உன்னை நான் கடைசிவரை காதலிப்பேன்!’’
‘‘உங்களால் அது முடியுமா?’’
‘‘நிச்சயமாக முடியும்!’’
‘‘நான் உங்களோட மனைவியா?’’
‘‘இல்ல... நீ ஒரு தேவடியாளாச்சே!’’
‘‘அப்படியே வச்சுக்கங்க!’’
‘‘சரி... நீ அழக்கூடாது!’’ - வினயன் அவளுடைய முகத்தைத் துடைத்தான். ஆனால், அவனுடைய கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் அரும்பி அவள் முகத்தில் விழுந்து கொண்டிருந்தன.
‘‘உங்க இதயத்தை முழுசா கொஞ்சம் திறந்து காட்ட முடியுமா?’’ அவள் கேட்டாள்.
‘‘அது ஏற்கனவே திறந்துதான் இருக்கு!’’
‘‘என்னால புரிஞ்சுக்கவே முடியலையே!’’
‘‘என்னைப் பற்றி என்னாலயும் தெரிஞ்சிக்கமுடியல...’’
‘‘நீங்க ஏன் அழறீங்க?’’
‘‘அது... அதுவா... நீ அழறதைப் பார்த்து. நீ கவலைப்படுறதைப் பார்த்து. அயோக்கியப் பயல் ரசீதனைப் பார்க்குறப்போ உனக்கு பயம் வரலியா?’’
‘‘அப்போ... என்னோட கவலைகளைப் பார்த்துத்தான் நீங்க அழறீங்க... இது நீலிக் கண்ணீர்தானே?’’
‘‘அப்படிப் பொய்யா அழ எனக்குத் தெரியாதே -?’’
‘‘அப்போ நீங்க என்னை...’’
‘‘நிரந்தரமா நாம ஒண்ணு சேர்ந்து வாழலாம்!’’
‘‘நான் உங்க மனைவியில்லையா?’’
‘‘இல்ல...!’’
‘‘உங்களால என்னை எப்படிக் காதலிக்க முடியும்?’’
வினயன் அதைக்கேட்டு குழப்பமானான். அதற்கு அவன் என்ன பதில் கூறுவான்?
‘‘நான் நேற்று உங்க கழுத்துல மாலை போட்டிடேனில்ல?’’ அவள் தொடர்ந்தாள்.
‘‘ஆமா...’’
‘‘அப்போ...’’
‘‘ஆனா...’’
‘‘நம்ம ரெண்டுபேருக்குமி¬யே உள்ள உறவுக்கு என்ன பேரு?’’
வினயன் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் தவித்து நின்றான்.
‘‘மனைவியா இல்லாத, இரத்த உறவு இல்லாத, ஒரு பெண்ணை ஒரு ஆண் எப்படிக் காதலிக்க முடியும்?’’ அவள் கேட்டாள்.
வாழ்க்கையில் அவள் சந்தித்த அனுபவங்கள அவளிடம் அப்படிப்பட்ட ஒரு தப்பான எண்ணத்தை உண்டாக்கி விட்டிருக்கின்றன. ஒரு ஆண் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான் என்றால் ஒன்று அவள் அவனுடைய மனைவியாக இருக்க வேண்டும் - இல்லாவிட்டால் அவளுடன் இரத்த உறவு கொண்டவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் கொண்டிருந்தாள் அவள்.
வினயனால் தெளிவான ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. அன்று முழுவதும் மனதைப் போட்டு குழப்பிக் கொண்டதில் மூன்று விஷயங்கள் தெளிவாகத் தெரிந்தன. அவன் அவளை விரும்புவது உண்மை. அதையும் தாண்டி அவளுடன் அவன் இரண்டறக்கலந்து ஒன்றென ஆகி விட்டான். அவர்கள் இருவரும் தனித்தனி இல்லை. ரதீசனின் கொடூர மனம் அப்போது என்ன காரணத்தாலோ வினயனின் ஞாபகத்தில் வந்தது. இது இரண்டாவது விஷயம். மூன்றாவது விஷயம் - அவள் தன்னை மனைவி ஸ்தானத்திற்கு உயர்த்திச் சொல்கிறாள். ஒருவிலைமாதுவான அவள் எப்படி தன்னுடைய மனைவியாக இருக்க முடியும்?
‘‘அவன் இரக்க குணம், அமைதியை நோக்கி அலைபாயும் மனம் எல்லாமே சேர்ந்து குணவதியின்மேல் அவனுக்கு ஒரு தீவிர ஈடுபாட்டை உண்டாக்கிவிட்டன. அவள் மீது அவன் கொண்ட அன்பு கண்ணை மூடிக்கொண்டு இருந்தது. அது வெறெதைப் பற்றியும் எண்ணிப் பார்க்கவேயில்லை. அறிவுகொண்டு தான் கொண்டிருந்த அன்பையும், ஈடுபாட்டையும் அவன் ஆராய்ச்சி செய்து பார்க்க முடியவில்லை. தீவிரமாக அவள் மீது கொண்ட ஈடுபாடுதான் குணவதியை ஒரு மனைவியாக எண்ணிப் பார்க்க அவனுக்குத் தடையாக இருந்தது. தான் அவள் மீது கொண்ட ஈர்ப்புக்குப் பின்னால் மறைந்திருந்த இன்னெனரு பக்கத்தை அவன் மறக்காமல் இல்லை. ‘‘ஒரு விலைமாதுவை எப்படி மனைவியாக நினைக்க முடியும்’’ என்ற கருத்தும் அவன் மனதின் ஒரு மூலையில் ஒலிக்கவே செய்தது. அவன் அவள் மீது கொண்ட அன்பின் அடிநாதமாக அந்த கருத்தும் லேசாக ஓடிக்கொண்டுதானிருந்தது. குணவதியுடன் உடல் ரீதியாக உறவு கொள்வது என்ற விஷயத்தை நினைத்துப் பார்க்கக்கூட வினயனுக்கு கஷ்டமாகவே இருந்தது.
‘‘என் உடல்... என் கற்பு... அய்யோ... நான் அதை எப்படி காப்பாற்றுவேன்?’’ அவள் கேவிக் கேவி அழுதாள்.
‘‘நமக்கு வர்ற ஆபத்துல இருந்து நாம தப்பிக்கலாமே!’’ வினயன் சொன்னான்.
தன்னுடைய கைகளைத் தூக்கி வினயனின் கழுத்தைச் சுற்றி, அவனை இறுக அவள் கட்டிப் பிடித்தாள்.
‘‘நான் என்னைக்கு இருந்தாலும் நான் உங்களோட மனைவிதான். நான் எந்தக் காலத்திலும் இன்னொரு ஆம்பிளையை விரும்ப மாட்டேன். நீங்கதான் என் புருஷன்’’.
காதல் என்ற உணர்வு மனதிற்குள் வந்தவுடன் அந்த உணர்வுக்கு அடிமையான ஒரு பெண்ணின் முகத்தில் இதற்கு முன்பு இல்லாத ஒரு பிரகாசம் வந்து சேரும் என்பதை குணவதியின் முகமே தெளிவாகக் காட்டியது.
‘‘நான் உங்க காலடியில என்னை முழுசா ஒப்படைச்சிட்டேன்...’’
வினயன் அழகாக ஒளிவீசிக் கொண்டிருந்த அவளுடைய முகத்தையே உற்றுப் பார்த்தான். இவ்வளவு அழகான, கவர்ச்சியான, ஒளிபொருந்திய, காந்தமென ஈர்க்கக்கூடிய கண்களை இதற்கு முன்பு வாழ்க்கையில் வேறு எங்குமே பார்த்ததில்லை. அவளின் சிவந்து போயிருந்த மென்மையான அதரங்களை எச்சிலால் அவள் நனைத்தாள். அவனைப் பார்த்தபோது அவள் நெற்றியில் லேசான சுருக்கம் உண்டானது. அவள் கன்னங்கள் சிவந்து போய் சதைப் பிடிப்புடன் இருந்தன. உண்மையிலேயே குணவதி ஒரு பேரழகிதான்.
குணவதியின் கைகள் பரபரத்தன. அவன் தனக்கு ஒரு முத்தம் தர மாட்டானா என்று அவள் ஏங்கினாள். ஆனால், வினயன் முகம் குனியாமல் அமர்ந்திருந்தான்.
அவன் தனக்குள் நடுங்கவும் செய்தான். உலகத்தையே தன்னுடைய காலடிக்குக் கீழே கொண்டு வரக்கூடிய அளவிற்குப் பேரழகு வாய்ந்த பெண் குணவதி. காதல் வயப்பட்டு அந்த அழகு தேவதை நின்றிருக்கிறாள். அவன் இளமை தாண்டவமாடும் ஒரு இளைஞன். அவள் மீது அவன் ஈடுபாடு கொண்டதற்கு முதல் காரணம் அதுதான். அவன் மனதின் அடித்தளத்தில் நிரந்தரமாகக் குடிகொண்டிருக்கும் அழகுணர்வு என்ற ஒன்றுதான் அவன் இந்தச் செயலுக்கு அடிப்படையான மூல காரணம் என்று கூட கூறலாம். இதை அவன் சரிவர அறிந்திருக்கவில்லை என்பதும் உண்மை. அவள் மீது அவன் கொண்ட ஆசை, இரக்கமாக உருமாறி விட்டது. அவ்வளவுதான் விஷயம். அந்த இரக்கம் இப்போது பல மடங்கு பெருகி வழிந்து கொண்டிருக்கிறது.