குணவதி - Page 16
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7239
‘‘எனக்கு முத்தம் கொடுக்கணும்னு தோணலியா?’’
‘‘உனக்கா?’’
‘‘சரி... வேண்டாம். நான் என் மனசுல இருக்குற எல்லாவித ஆசைகளையும் அடக்கிக்கிறேன். உங்களைத் தேவையில்லாத தொந்தரவுக்கு ஆளாக்க நான் விரும்பல...’’
‘‘நீ மனசுல வேதனைப்படுறதை நான் எப்பவும் விரும்ப மாட்டேன்.’’
‘‘நீங்க எனக்கு எந்தக் காலத்திலும் தராத ஒரு இடத்தை - நானே எடுக்குக்குறேன்.’’
‘‘என் மேல நீ வைத்திருக்கிற உறவுக்குப் பேர் என்ன?’’
‘‘பக்தி... இல்லை... இல்லை... காதல்.’’
‘‘காதலா? அதுவும் ஒரு தேவடியாத்தனம் நடக்குற வீட்டுலயா?’’
‘‘தேவடியாளும் ஒரு பெண்தான்.’’
‘‘சரிதான்...’’
‘‘வினயனுக்கு என்ன சொல்லிப் புரியவைப்பது என்று தெரியாமல் தவித்தாள் குணவதி. தன்னுடைய கேவலமான நிலையைப் பற்றி அவளுக்குக் கொஞ்சம் கூட வருத்தமே உண்டாகவில்லை. அவள் சொன்னதற்கு மேலும் விளக்கம் தேவைப்படுவதைப் போல அவளுடைய முகத்தையே பார்த்தான் வினயன்.’’
‘‘பக்தின்னு கூட சொல்லலாம்’’ - அவள் தொடர்ந்தாள்.
‘‘வெறும் பக்தி மட்டும்தானா?’’
‘‘அப்படிச் சொல்ல முடியாது. அதுல எல்லாமே கலந்திருக்கு.’’
‘‘என்ன கலந்திருக்கு?’’
‘‘என்னென்னவோ. அதுல ஆசை கூட கலந்திருக்கு. ஆமா...என்னை நீங்க முத்தமிடணும்’’
வினயன் தன்னையும் மீறி தலையைக் குனிந்தான். அவளின் நெற்றியில் அவன் அழுத்தமாக ஒரு முத்தத்தைப் பதித்தான். அடுத்த நிமிடம் தன்னுடைய உடம்பெங்கும் மின்சாரம் பாய்ந்ததைப் போல் அவன் உணர்ந்தான்.
அந்த முத்தத்திற்கு தனிச் சிறப்பு ஏதோ இருந்திருக்கிறது. இதற்கு முன்பு கொடுத்த முத்தங்களில் இப்படிப்பட்ட உணர்வு ஏனோ தோன்றவேயில்லை. முத்தம் தந்த நேரங்களின் இறுக்கமான சூழ்நிலையும் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு உணர்வுக்கு ஆட்பட்டு மனதை வெளிப்படுத்தும் எண்ணத்துடன் ஒருவரையொருவர் ஒருவகை நிராசை உணர்வு மேலோங்க தங்களையே மறந்து கொடுத்துக் கொண்ட முத்தங்கள் அவை. ஆனால், இந்த முத்தம் தந்த நிமிடம் அளித்த சுகமான அனுபவத்தை இதற்கு முன்பு வினயன் உணர்ந்ததே இல்லை. குணவதியைப் பொறுத்தவரை அவளின் மனதின் அடித்த்ட்டில் ஆழமாக உறங்கிக் கொண்டிருந்த உணர்வுகள் மூலம் அவள் தன்னுடைய காதலனுடன் ரகசிய மொழி வழியாகப் பேசிக் கொண்ட சந்தர்ப்பம் அது என்றுதான் சொல்ல வேண்டும்.
வினயன் மெல்ல கண்களை மூடியவாறு சாய்ந்தான். அவன் மனதில் காதல் உணர்வு சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது. அந்த விலைமாதுவின் இதயத்தோடு அவன் இரண்டறக் கலந்தான்.
‘‘குணவதி... நீ எனக்குச் சொந்தமானவ.’’
‘‘நான் உங்களோட தாசி... அப்படித்தானே?’’
‘‘குணவதி... நாம எப்பவும் இப்படியே ஒண்ணா இருப்போம்.’’
‘‘நான் ஒரு சிறைக் கைதி.’’
‘‘உன்னை நான் தப்பிக்க வைக்கிறேன். நாம இங்கேயிருந்து ஓடிடுவோம்.’’
‘‘ரதீசன்...?’’
9
‘‘குணவதி... நீ போறியா என்ன?’’ ரதீசன் கேட்டான்.
‘‘நான் எங்கே போறது?’’
‘‘ம்...’’ ரதீசன் முணுமுணுத்த குரலில் சொன்னான். சிறிது நேரம் கழித்து அவன் தொடர்ந்தான்.
‘‘இப்போ கொஞ்சம் தகராறு பண்ண நீ ஆரம்பிச்சிருக்கே!’’
‘‘அய்யோ... ரதீசன்... நான் நடனமாடி மட்டும் உங்களுக்கு எவ்வளவு பணம் சம்பாதிச்சி தந்துக்கிட்டு இருக்கேன்!’’
‘‘நீ என்னைப் பார்த்து கணக்கு கேக்குறியா?’’
‘‘நான் ஒரு பெண். ஒரு பெண்ணுக்கு மதிப்புள்ளது எது?’’
‘‘இங்க பாரு... நான் யார்னு உனக்குத் தெரியுமா?’’
‘‘நான் என்னைக்கும் உங்களோட வப்பாட்டியா இருப்பேன்.’’
‘‘பெண்ணே, நான் முட்டாள் இல்ல. புரிஞ்சுக்கோ. காமவெறி பிடிச்சு அலையிற ஆள்னு என்னை நீ நினைச்சிட்டியா என்ன?’’
‘‘இப்படியெல்லாம் பேசுறதை விட என்னைக் கொன்னு போட்டிருக்கலாம்.’’
‘‘இவ்வளவு நாள் இல்லாத மானம் இப்போ எங்கே இருந்து வந்துச்சு? ம்... நான் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுத்தான் வர்றேன். அவன்தான் எல்லா விஷயங்களுக்கும் காரணம்...’’
‘‘அய்யோ...’’
‘‘ம்... அதைப் பின்னாடி பார்ப்போம். நான் இப்போ எதுக்கு வந்திருக்கேன் தெரியுமா? உன் நகைகள் எல்லாத்தையும் இங்கே எடு.’’
‘‘என் நகைகளையா?’’
‘‘ஆமா...’’
‘‘அதை நான் தரமாட்டேன். உங்களுக்கு அது எதுக்கு?’’
‘‘நீ என்னைப் பார்த்து கேள்வி கேக்குறியா?’’
‘‘நான் சம்பாதிச்ச சொத்து அது.’’
‘‘அது எப்படி வேணும்னாலும் இருக்கட்டும். முதல்ல அதை இங்கே எடு.’’
‘‘உங்களுக்கு அதைக் கேக்குறதுக்கு உரிமையே இல்ல. பலரும் பரிசா எனக்குத் தந்த நகைகள் அதெல்லாம்...’’
‘‘ச்சீ சவமே... எடுக்குறியா இல்லியா?’’
ரதீசனின் நடவடிக்கை மாறியது.
‘‘அப்படியா? இந்த நகைகள் அது இதுன்னு எதுவுமே இல்லாம இருக்குறதே நல்லது. இந்த நாசமாப் போன பொருள்களை நீயே வச்சுக்கோ. இந்தா...’’
அவள் தன்னுடைய நகைகளைக் கழற்றி அவன் முன்னால் வீசினாள்.
‘‘இவ்வளவுதான் இருக்கா?’’
‘‘இல்ல... மீதி பெட்டியில இருக்கு...’’
‘‘அதையும் எடு.’’
குணவதி தன்னுடைய நகைப் பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.
எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ரதீசன் வெளியே கிளம்பினான்.
வினயனைக் காணவே காணோம். அவள் மனதில் பலவிதப்பட்ட சிந்தனைகளிலும் மூழ்கி தன்னைத் தானே குழப்பிக் கொண்டிருந்தாள். ரதீசன் அனுமதிக்காவிட்டால் கூட பரவாயில்லை. அவளைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் வினையனால் நிச்சயம் பார்க்க முடியும் என்று நினைத்தால் குணவதி. அவன் மற்றவர்களைப் போல இல்லை. முற்றிலும் மாறுபட்ட ஒருவன் என்பதை அவள் அறியாமல் இல்லை. உண்மையிலேயே அவள் வாழக்கையில் இப்படிப்பட்ட ஒரு காதலனைப் பார்த்ததே இல்லை. தன்னுடைய கடந்த கால அனுபவங்களை அசை போட்டுப் பார்த்தபோது அவனுடன் படுத்திருந்த அந்த நிவீடங்களைத் தனியாக மனதில் ஒட்டிப் பார்த்தாள். அவளிடம் இதற்கு முன்பு உல்லாசமாக இருக்க வந்த மனிதர்கள் ஒவ்வொருவரையும் நினைத்துப் பார்த்தாள். அவர்களுடன் அவள் கொண்ட உறவு ஒரே மாதிரியானது அல்ல. ஆனால், கூர்மையாக கவனித்துப் பார்த்தால், அவர்ளின் செயலல் அடி நாதமாக ஒரு ஒற்றுமை இழையோடிக் கொண்டிருப்பதை அவள் உணரவே செய்தாள். மனரீதியாக ஒப்பிட்டுப் பார்த்தால் அவர்களின் வெவ்வேறு சேட்டைகளும், நடவடிக்கைகளும், பேசும் வார்த்தைகளும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருந்தன. பயங்கர போலித்தனம்! மனதிற்குள் திருட்டுத்தனம்! ஆனால், வினயனிடம் மட்டும்... அவனிடம் ஒரு வித்தியாசம் இருப்பதை அவளால் உணர முடிந்தது.
வினயனுக்கும் தனக்கும் உள்ள உறவைப் பற்றி அவள் எண்ணிப் பார்த்தாள். அதைப் பல்வேறு கோணங்களில் அசை போட்டுப் பார்த்தாள். அப்படியொன்றும் குறை சொல்லும் அளவிற்கு அவனிடம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு பக்கம், நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பயங்கரமான வஞ்சகமும், போலித்தனமும்.