குணவதி - Page 12
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7239
அவள் எந்தவித கவலையும் இல்லாமல் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறாள். குணவதியின் மார்புப் பகுதி அவள் ஒவ்வொரு முறை மூச்சு விடுகிறபோதும் மேலும் கீழுமாய் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது. அவளின் உதடுகள் அழகாகவும் கவர்ச்சியாகவும் பார்ப்போர் மனதைக் கொள்ளை கொள்ளக் கூடிய விதத்திலும் இருந்தன. கணவனுக்கு அருகில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் அன்பு மனைவி அவள். அவள் ஓரு விலைமாது அல்ல.
குணவதியின் முகத்தையே வினயன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கை ஒரு இயந்திரத்தைப் போல இப்போதும் விசிறியை வீசிக் கொண்டிருந்தது. எவ்வளவு கஷ்டங்களை இதுவரை அவள் அனுபவித்திருக்கிறாள். அவ்வளவு கஷ்டங்களையும் தாங்கிக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு எந்த அளவிற்கு பொறுமை வேண்டும்? எவ்வளவு பேர்களுடன் இதுவரை அவள் நல்ல முறையில் பேசியிருப்பாள். எத்தனைப் பேர்களுடன் அவள் சண்டை போட்டிருப்பாள். கண்களில் கண்ணீர் மல்க எத்தனைப் பேரின் ஆசைக்கு அவள் அடி பணிந்து போயிருப்பாள். அவள் மனதிற்குள் எத்தனை வினோதமான சம்பவங்களைப் பற்றிய நினைவுகள் இப்போது உறங்கிக் கொண்டிருக்கும். இந்த இளம் வயதிலேயே உலகத்திலுள்ள எல்லாவித கஷ்டங்களையும் அவள் அனுபவித்து விட்டாள். ஆனால், அந்த கஷ்டங்களின் அறிகுறி கொஞ்சங்கூட இல்லாமல் இப்போது அவள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறாள். தூக்கம் என்றால் என்ன? வினயன் சிந்தித்துப் பார்த்தான். சொல்லப்போனால் அது மரணத்தின் இன்னொரு பெயர்தானே? சுகத்தைத் தேடுபவர்கள் அதைச் சாபமிடுகிறார்கள். கவலையில் மூழ்கிக் கிடப்பவர்கள் அதை வாழ்த்துகிறார்கள்.
அவள் அதரங்கள் மிகவும் அழகாக இருந்தன. ‘‘நான் உங்க மனைவி’’ என்று அவள் சொல்லாமல் சொல்லுவதைப் போல் இருந்தது. கற்பு என்பது பெண்களின் புனிதத்தைக் காப்பாற்றக்கூடிய ஒரு மந்திரச் சொல்லா? பெண்களுக்காக உண்டாக்கப்பட்ட ஒரு நரகம்தான் அந்த வார்த்தை என்று சில பெண்கள் கூறுவதை வினயன் நினைத்துப் பார்த்தான். அவள் மனைவி. யாருக்கு மனைவி?
குணவதி நீண்ட ஒரு பெருமூச்சு விட்டவாறு உடம்பை லேசாக முறுக்கியவாறு சாய்ந்து படுத்தாள். அவள் தூக்கம் கலைந்து எங்கே அவளின் நிம்மதி பறிபோய் விடப் போகிறதோ என்று பயந்த வினயன் தன் கையில் இருந்த விசிறியால் மேலும் வேகமாக வீசினான். அவள் தன் கையை எடுத்து வினயனின் மடியில் போட்டாள்.
குணவதி தூக்கம் கலைந்து மெல்ல கண்களைத் திறந்து வினயனைப் பார்த்தாள். அவள் விழிகளில் பயம் நிழலாடியது மாதிரி இருந்தது.
‘‘யாரு?’’ - அவள் கேட்டாள்.
‘‘நான் தான் குணவதி...’’
‘‘நீங்க தூங்கலியா?’’
‘‘இல்ல...’’
‘‘இவ்வளவு நேரமும் எனக்கு விசிறியால் வீசிக்கிட்டா இருந்தீங்க?’’
‘‘ஆமா...’’
‘‘கை வலிக்கலியா?’’
‘‘இல்ல...’’
குணவதி கைகளை உயர்த்தி வினயனின் முகத்தைப் பற்றி தன்னுடைய முகத்தோடு சேர்த்து இறுக அணைத்தாள். அவள் அவன் உதடுகளில் ஆழமாக முத்தம் தந்தாள்.
7
வினயனுக்கு அருகில் தளர்ந்து போய் உறங்கிக் கொண்டிருந்தாள் குணவதி. அவள் கையில் அவன் தன் தலையை வைத்து படுத்திருந்தான். வினயனுக்கு உறக்கமே வரவில்லை. தாயை ஒட்டிப் படுத்திருக்கும் குழந்தையைப் போல அவளுடன் மிகவும் நெருக்கமாக படுத்திருந்த அவன் அவள் முகத்தையே பார்த்தவாறு படுத்திருந்த இடத்தை விட்டு எழுந்தான். அவள் இன்னும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். உலகையே மறந்து எந்தவித கவலையும் இல்லாமல் அவள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.
‘‘என் அருமை மனைவியே?’’
வினயன் இப்படி அழைத்தபோது உண்மையிலேயே நடுங்கினான். அவள் ஒரு விலை மாது. அவனைப் பொறுத்தவரை அவனுக்கு அவள் யார்?
மனைவி
நிச்சயமாக இல்லை. அப்படி ஒரு கோணத்தில் அவளை நினைத்துப் பார்க்க அவன் தயாராக இல்லை. அவளின் விரிந்து கிடந்த கூந்தல் மெத்தை மேல் பரந்து கிடந்தது. அவளின் மார்புப் பகுதி எந்தவித ஆடையும் இல்லாமல் நிர்வாணமாக இருந்தது. வினயன் அவளின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். அவனின் மனம் பலவித சிந்தனைகளிலும் மூழ்கி சிக்கிக் அல்லல்பட்டுக் கொண்டிருந்தது. அவள் தன்மீது கொண்டிருக்கும் அளவற்ற நம்பிக்கையை அவனால் உணர முடிந்தது. அதை நினைத்துப் பார்த்தபோது, அவனையும் மீறி அவன் கண்களில் நீர் துளிர்த்தது.
அருமை மனைவி
அவள் நிச்சயமாக அவன் மனைவி அல்ல. இருந்தாலும் அவன் தன்னை முழுமையாக அவளிடம் ஒப்படைத்திருக்கிறானே. அவள் இனிமேல் எப்படிப்பட்ட நிலையைத்தான் கை கொள்வது?
எப்படிப் பார்த்தாலும் அவள் தன்னுடைய மனைவி அல்ல என்ற முடிவுக்கே வந்தான் வினயன். தன்னைப் பார்த்ததும், அவளுக்கு நிம்மதியும் ஆறுதலும் கிடைத்தது என்பதென்னவோ உண்மை. தன்னுடைய கைகளுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு அவள் எந்தவித கவலையும் இல்லாமல் இருக்கிறாள் என்பதையும் அவன் புரிந்து கொண்டான். தானே அவளை வீணாக வீசி எறிந்தால் நன்றாக இருக்குமா? அப்படிச் செய்தால் அது ஒரு நல்ல செயலாக இருக்குமா? அவளிடம் இனிமேல் இப்படிப்பட்ட வேதனைச் சம்பவங்களைத் தாங்கிக் கொள்ளக் கூடிய அளவிற்கு சக்கி இருக்கிறதா? எது எப்படியோ- அவளுக்கு உதவி செய்ய முன் வந்திருக்கிறேன் என்பது மட்டும் உண்மைதானே. அதுகூட உண்மை இல்லை என்று கூறுவதே சரியானது. இந்த நரகக் குழியிலிருந்து அவளைக் காப்பாற்றுவதற்குத் தாய் செய்ததுதான் என்ன? அவளைக் கைகளால் தாங்கி ஆறுதலாவது தர முயற்சித்திருக்கலாமே. அப்படி எதுவுமே செய்யவில்லையே. பிறகு என்னதான் நடக்கிறது? கணக்கில்லாத அளவிற்கு கவலைகள் நிறைந்த அனுபவங்களைக் கொண்டு, கிட்டத்தட்ட பைத்தியம் பிடிக்கிற நிலைக்குத் தன்னைக் கொண்டுபோய், எந்நேரமும் கண்ணீர் விட்டுக்கொண்டு, பார்க்கும்போதே நம் மனம் சங்கடப்படும் அளவிற்கு அவள் வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டு அதில் ஆறுதல் தேடும் செயல் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வானத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் நிலவைப் பார்க்கும்போது, அவள் மனதில் மண்டிக்கிடக்கும் கவலைகள் சற்று நேரத்திற்கு இல்லாமற்போகின்றன. அப்போது தன்னையும் மீறி அவளிடம் ஒரு உற்சாகம் வந்து ஒட்டிக் கொள்கிறது. அந்த மாதிரியான நேரங்களில் அவள் ஆனந்த வயப்பட்டு நின்று விடுகிறாள். தன் கவலையைப் போக்க அந்த சந்திரன் இருக்கிறான் என்று அவள் மனம் எண்ணி ஆறுதல் அடைந்து கொள்கிறது. ஆனால், சில நேரங்களில் இனம் புரியாத பயம் வந்து மனதை ஆட்சி செய்கிறபோது, சூனியமான நிலை வந்து அங்கு ஒட்டிக் கொள்கிறபோதுதான் அவளுக்கே தெரிய வருகிறது - அந்த சந்திரன் இருப்பது வெகுதூரத்தில் என்ற உண்மையே.