Lekha Books

A+ A A-

குணவதி - Page 10

kunavathi

ஒரு விலைமாது நடத்தும் நாடகங்கள்தான் எத்தனை எத்தனை, ஒரு விலைமாதுவிடம் சரணாகதி ஆகிப்போன அந்த மனிதனுக்கு மரணத்தின் நுழைவாயிலில் நின்று கொண்டிருக்கும் தன்னுடைய மகளைப் பற்றிய ஞாபகம் கூடவா இல்லாமற் போய்விட்டது. அந்த அளவிற்கு அந்த விலைமாது அவன் ஞாபகச் சக்தியைக் கொஞ்சம் கூட இல்லாமல் செய்து விட்டாளா என்ன? விலைமாது! அவளை எதற்காக கடவுள் படைத்திருக்க வேண்டும்? உலகத்தை நாசம் செய்து கொண்டிருக்கும் அப்படிப்பட்ட ஒரு பெண் இங்கு அவசியம்தானா?

அப்போதுதான் குணவதிக்கு தானும் ஒரு விலைமாது தானே என்ற ஞாபகமே வந்தது. அருமையான, உன்னதமான உறவுகள் சீர்குலைந்து போவதற்குத் தானும் கூட பல நேரங்களில் காரணமாக இருந்திருப்பதாக அவள் அப்போது நினைத்துப் பார்த்தாள். கழுத்தில் இப்போது அணிந்திருக்கும் சங்கிலியை யாரோ ஒரு மனிதன் அணிவித்திருக்கிறான், அந்தச் சங்கிலி அவன் தன்னுடைய மகளுக்காக வாங்கியது என்பதை அவள் மனம் எண்ணிப் பார்த்தது.

அந்த அளவிற்கு காமவெறி பிடித்துப் போயிருந்த மனிதன் யார்? குணவதி மனதில் ஞாபகப்படுத்திப் பார்த்தாள். ஆனால், அந்த மனிதனை அவளால் ஞாபகத்திற்குக் கொண்டு வரவே முடியவில்லை. ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சி கெட்டுப் போன நிலைக்குத் தான் காரணமாக இருந்ததற்காக அவள் உள் மனம் அழுதது.

உண்மையிலேயே பார்க்கப் போனால் ஒரு விலைமாது என்பவள் சமுதாய துரோகிதான். அவளால் எவ்வளவு பெரிய இழப்புகள் உண்டாகின்றன. ஆண்கள் உலகத்தையே ஒரு விலைமாது கடின மனம் கொண்ட மனிதர்களாக மாற்றி விடுகிறாள். ஒரு ஆண்கூட எந்த விலைமாது மீதும் உண்மையான அன்பு கொள்வதில்லை. எல்லா ஆண்களிடமுமே இந்நிலைதான் நீடிக்கிறது. இதன் விளைவாக திருமணமான பிறகும் கூட ஒரு ஆண் தன்னுடைய மனைவி மேல் சரியான அன்பு கொள்ளாமல் இருக்கிறான். ஒரு விலைமாதுவைத் தேடி வரும் ஒரு காமவெறி பிடித்த மனிதன் எப்போதாவது அந்த விலைமாதுவின் சுகத்தைப் பற்றி மனதில் நினைத்துப் பார்த்திருக்கிறானா? தன்னுடைய காமவெறியை எப்படியாவது தணித்துக் கொள்ள வேண்டும் என்று அவன் எண்ணுகிறானே தவிர, அந்த விலைமாதுவின் மன திருப்தியைப் பற்றி என்றைக்காவது அவன் சிந்தித்துப் பார்த்திருக்கிறானா? ஒரு விலைமாதுவிடம் அப்படி நடந்து கொள்ளக்கூடிய ஒரு மனிதன் மனைவியிடம் கூட அப்படித்தான் நடந்து கொள்வான். விளைவு - அவன் இல்லற வாழ்க்கை துன்ப மயமான ஒன்றாக மாறி விடுகிறது. ஒரு விலைமாது மீது அவன் கொள்ளும் வெறுப்பு, அவள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவன் காட்டும் சிரத்தையின்மை எல்லாமே மரணம் வரை அவன் மனதில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தன்னைப் பற்றி, தன்னுடைய நலனைப் பற்றி, இதுவரை தன்னைத் தேடிவந்த ஒரு ஆணாவது நினைத்துப் பார்த்திருப்பானா? பெண்களின் மனதைப் பற்றி அவன் தன்னுடைய மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருப்பான். தன்னுடைய மனைவியைக் கூட அவன் சந்தேக மனப்பான்மையுடன்தானே பார்க்கிறான்.

எப்படிப் பார்த்தாலும் தான் ஒரு சமுதாய துரோகிதான் என்ற முடிவுக்கு அவள் வந்து விட்டாள். தன்னை நாடி வரும் ஒவ்வொரு ஆணையும் தான் ஒரு மந்திர சக்தியைப் போல அவர்களைப் பிடித்துக் கட்டிப் போட்டு விடுவதாக அவள் உணர்ந்தாள். அன்பு மனம் கொண்ட தந்தையை, பாசம் கொண்ட கணவனை - உலகத்திற்கும் அவர்களுக்கும் எந்தவித பிரயோஜனமும் இல்லாத மனிதனாக அவள் மாற்றி விடுகிறாள். மொத்தத்தில் - ஒரு குடும்ப வாழ்க்கையின் புனிதம் அவளால் கெட்டுப் போய் விடுகிறது.

இதைப் போல எத்தனைக் குழந்தைகள் தந்தை பாசத்திற்காக ஏங்கிக் கொண்டிருப்பார்கள். எத்தனை மனைவிமார்கள் கணவனால் ஒழுங்காக கவனிக்கப்படாமல் இருப்பார்கள். இதற்கெல்லாம் காரண கர்த்தாவாக இருக்கும் ஒரு விலைமாதுவிற்காவது அந்த ஆண்களின் அன்பும், பாசமும் கிடைக்கிறதா? அதுவும் இல்லை.

சங்கிலியைப் பரிசாகத் தந்த அந்த மனிதன் திடீரென்று குணவதியின் ஞாபகத்தில் வந்தான். மனைவி இல்லாமல் தான் தொடும் முதல் பெண்ணே அவள்தான் என்று அன்று வந்தபோது தன்னிடம் அவன் சொன்னதை குணவதி நினைத்துப் பார்த்தாள்.

அந்தக் கணவனை இப்போது காணவில்லை என்று வந்து நின்று கொண்டிருக்கிறாள் அவன் மனைவி. ஆனால், அவன் தன்மீது அன்பு வைக்கவில்லை என்பதை குணவதி நன்றாக அறிவாள். ஒவ்வொரு முறை வரும்போதும், நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டுதான் அவன் வருவான். ஒருமுறை பயங்கர கோபம் உண்டாகி, அவன் அவள் முகத்தில் காறித் துப்பினான். அந்த அளவிற்கு அவள் மேல் அவனுக்கு வெறுப்பு. பல நேரங்களில் அவளைப் பற்றி மற்றவர்களிடம் எந்த அளவிற்கு கிண்டலும் கேலியுமாகப் பேச முடியுமோ, அவ்வளவும் பேசியிருக்கிறான் அவன். அங்கு அவன் வந்து எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டன. வேறு ஏதாவது ஒரு விலைமாது இருக்கும் இடத்தைத் தேடி அவன் இப்போது போயிருக்கலாம். ஆனால், இந்த விஷயத்தில் ஒரு ஈடுபாட்டையும், ஈர்ப்பையும் உண்டாக்கியது தான்தான் என்பதையும் அவள் நினைத்துப் பார்த்தாள். மனைவியையும், பிள்ளைகளையும் ஒரேடியாக மறந்து வாழ்க்கையையே அலட்சியமாக எண்ணி ஒரு மனிதன் வாழ முயல்வதற்கு மூல காரணமாக இருந்து இந்த உலகத்தையே நாசம் செய்து கொண்டிருக்கும் விலைமாது என்பவள் ஒரு அசிங்கமான படைப்புதான் என்ற எண்ணத்திற்கே குணவதியால் வர முடிந்தது.

6

ன்றாக உடைகள் அணிந்து அறைக்குள் அவள் வினயனுக்காக காத்திருந்தாள்.

வேறெங்கும் போக வேண்டும் என்ற எண்ணம் இல்லாத அவள் மீது கருணையும் பரிவும் கொண்ட வினயன் அறைக்குள் வந்தான். தன்னுடைய இரண்டு கைகளையும் முன்னால் நீட்டியவாறு ஒரு தாயைத் தேடி ஆசை மேலோங்க ஓடிச் செல்லும் குழந்தையைப் போல அவள் ஓடி அவன் மேல் சாய்ந்தாள். வினயன் அவள் தலையை மார்போடு இறுக அணைத்துக் கொண்டான்.

‘‘என் ஆசைக் கண்ணே1’’

வினயன் அவளின் நெற்றியில் முத்தமிட்டான். அவன் சட்டையை அவள் கண்களிலிருந்து வழிந்த நீர் ஈரமாக்கியது.

நிமிடங்கள் ஒன்று, இரண்டு, மூன்று என்று வேகமாக ஓடிக் கொண்டிருந்தன. குணவதி தன்னுடைய துயரங்கள் நிறைந்த வாழ்க்கையை முழுமையாக அந்தக் கணத்தில் மறந்தாள். தான் ஒரு சுத்தமான கன்னிப்பெண் என்பதாக அவள் உணர்ந்தாள். அந்த எண்ணம் அவளுக்கு ஒரு புதுவித உற்சாகத்தையும், தன்னம்பிக்கையும் அளித்தது.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

மகாலட்சுமி

March 22, 2013,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel