குணவதி - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7238
சாகும் நிலையில் இருக்கும் மகள், காணாமல் போன கணவன், கவலையில் சிக்கிக் கிடக்குமச் தாய் - இவர்களுக்குள் இருக்கும் உறவுகளை குணவதியால் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை. வெளியில் சொல்ல முடியாத ஏதோ சில ரகசியங்கள் இதற்குப் பின்னால் மறைந்திருக்கின்றன என்பது மட்டும் உண்மை.
ஆனால், குணவதி ஆத்மார்த்தமாகவே அந்தப் பெண்ணுக்காக பரிதாபப்பட்டாள். அவள் சிந்திய கண்ணீர் கூட உண்மையானது தான்.
‘‘அய்யோ... என் கணவர் எங்கே? என் மகள் இப்போ இறந்தாலும் இறந்திருக்கலாம்.
‘‘இங்க பாருங்கம்மா...’’- குணவதி தயங்கியவாறு அழைத்தாள். அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் அவள் விழித்தவாறு நின்றிருந்தாள். அந்தப் பெண்ணின் கவலை போகும்படி சில ஆறுதல் வார்த்தைகளை அவள் சொல்ல நினைத்தாள்.
அந்தப் பெண் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தாள்.
‘‘கடவுள் சத்தியமா சொல்றேன்...’’- அந்தப் பெண் நெஞ்சே வெடித்துப் போகிற மாதிரி அழுது கொண்டு சொன்னாள்.
‘‘அய்யோ... என் மகளே. நீ உன் அப்பாவைப் பார்க்காமலே சாகப் போறியா? அப்பா அப்பான்னு எத்தனை தடவை தான் நீ அழைக்கிறது. உனக்க அப்பான்னு ஒரு ஆளு இல்லவே இல்ல... துரோகி. இதை எப்படி நான் தாங்குவேன்?’’
‘‘உங்க மகளோட அப்பா எங்கே போயிருக்காரு?’’ குணவதி கேட்டாள்.
‘‘எங்கே போயிருக்காரா? தேவடியா... உன் அறைக்குள்ள அந்த ஆளை ஒளிச்சு வச்சுக்கிட்டு என்கிட்டயே ஒண்ணுமே தெரியாதது மாதிரி கதை விடுறியா? நீ அந்த ஆளை உன் உடம்பைக் காட்டி மயக்கிட்டே எங்க குடும்பத்தை படுகுழியில் தள்ளிட்டே சாகப்பிழைக்கக் கிடைக்குற என்னோட மகள்... அப்பா அப்பான்னு கூப்பிட்டுக்கிட்டு இருக்கா. அப்பவாவது...’’
அந்தப் பெண பற்களை ‘‘நற நற’’வென கடித்தாள். தன்னுடைய தலையில் கையை வைத்து குணவதியைப் பார்த்து சாபமிட்டாள். ‘‘நீ நாசமாப் போக...’’
அவளின் சாப வார்த்தைகளை கேட்டு குணவதி நடுங்க ஆரம்பித்தாள். சற்று பின்னால் நகர்ந்து நின்றாள். அந்தப் பெண் இடும் சாபம் ஒருவேளை பலித்தாலும் பலிக்கலாம். தான் இதுவரை செய்த புண்ணியங்கள் எல்லாவற்றுக்கும் மதிப்பே இல்லாமல் போய் விடுமோ என்று அவள் பயந்தாள். அந்தப் பெண்ணின் கால்களில் விழுநன்து இதுவரை நான் ஏதாவது தப்புகள் செய்திருந்தால், அவற்றையெல்லாம் மன்னித்து விடும்படி வேண்டுகோள் விடுத்து அவளின் கருணையை யாசித்துப் பெற்றால் என்ன என்று அவள் நினைத்தாள். அந்தப் பெண் இட்ட சாபம் குணவதியின் மனதை மிகவும் வேதனைப்படுத்தியது. தன் மீதே அவளுக்கு ஒரு குற்ற உணர்வு உண்டானது. அவள் பாதிக்கப்படும்படி நான் நடந்திருக்கலாம். அவளின் இந்தக் கவலைக்கெல்லாம் காரணம் தானாக இருந்திருக்கலாம். ஆனால், அப்படித் தான் செய்த தவறு என்ன என்பதுதான் அவளுக்குப் புரியவில்லை. ஆனால், தன் மீது தப்பு இருக்கிறது என்பது மட்டும் அவளுக்குத் தெரிந்தது.
‘‘உனக்கு இதயம்னு ஒண்ணு இருக்கா? நீயும் ஓரு பெண்தானே?’’ அந்தப் பெண் அவளைப் பார்த்து கேட்டாள்.
‘‘நான் ஒரு பெண். என்னை நீங்க பொறுத்துக்கணும்.’’
‘‘நீ ஒரு பெண் கிடையாது. நீ ஒரு ராட்சஸி. இந்த மாதிரி எத்தனை குடும்பங்களை நீ அழிச்சிருப்பே.’’
‘‘நான் எவ்வளவோ பாவங்களைச் செய்தவள். நான் ஒரு தேவடியா...’’
‘‘என் மகள் சாகுறதுக்கு முன்னாடி அவளோட அப்பாவை ஒரு தடவையாவது பார்க்கணும்...’’
‘‘நீங்க யாரைச் சொல்றீங்க?’’
‘‘அய்யோ... நீ எதற்காக இந்த நிமிடத்திலும் என்னை இந்த அளவுக்கு காலால மிதிச்சு சந்தோஷப்படுறே. நான் என் மகள் இருக்குற இடத்துக்கு உடனே போயாகணும். நான் பெத்த மகள் அவ...’’
‘‘இங்க பாருங்க... நான்...’’
‘‘உன்னோட அறையைக் கொஞ்சம் திறக்குறியா? அங்கேதான் நீ என் கணவரை மறைச்சு வச்சிருக்கே.
‘‘உங்க கணவர்...’’
‘‘ராமசரன்...’’
குணவதி ஞாபகப்படுத்திப் பார்த்தாள். அப்படிப்பட்ட பெயரைக் கொண்ட ஒரு மனிதனை அவள் சந்தித்ததாக அவளுடைய ஞாபகத்தில் இல்லை.
‘‘அந்த பெயரைக் கொண்ட ஒரு ஆள் இங்கே இல்ல...’’
‘‘உன் கழுத்துல ஒரு சங்கிலி இருக்குதே. அது என் மகளுக்காக என் கணவர் செய்தது...’’
குணவதியால் எவ்வளவு தான் முயன்றாலும் அந்த ஆள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அவளின் கழுத்திலும் உடலிலும் இந்த மாதிரி எவ்வளவு நகைகளை ஒவ்வொருவரும் அணிவித்திருக்கிறார்கள்.
அவள் சொன்னாள். ‘‘எனக்குச் சரியாக ஞாபகத்தில் இல்லை.’’
‘‘சாவு கிராக்கியே! நீ ஒரு பெண்ணா? அப்ப அந்த ஆளையும் நீ ஏமாத்துறே இல்ல...’’
‘‘இப்படியெல்லாம் பேசாதீங்க. நான் ஏற்கனவே நரகத்துல கிடந்து தவிச்சிக்கிட்டு இருக்கேன்.’’
‘‘உன் கிட்ட பேசி பிரயோஜனம் இல்ல. நான் புறப்படுறேன். இதற்கான பலனை நீ அனுபவிப்பே...’’
அந்தப் பெண் அந்த இடத்தை விட்டு நீங்கினாள்.
நடைபெற்ற சம்பவங்கள் முழுவதையும் குணவதி நினைத்துப் பார்த்தாள். அந்தக் குடும்பம் இப்படி சின்ன பின்னமாகிப் போய் அழிவுப் பாதையில் நின்று கொண்டிருப்பதற்கு காரணம் தான்தான் என்பதைப் புரிந்து கொள்ள அவளுக்கு அதிக நேரம் ஆகவில்லை. கடைசி மூச்சை விட்டுக் கொண்டிருக்கும் அந்த அன்பு மகளின் வேதனை நிறைந்த விஸீகளை அவள் மனதில் நினைத்துப் பார்த்தாள். ‘‘அப்பா.. என்னைப் பாருங்க... அப்பா... என் அப்பா... என்னைக் கொஞ்சம் நீங்க பார்க்கக் கூடாதா? என் தந்தையே... தண்ணி... அப்பா... என் நெஞ்சு...’’- இப்படி இதயத்தைப் பிழியக் கூடிய குரல் ஒலிப்பதை அவளால் கேட்க முடிந்தது. கண்ணீர் வழிய ‘‘என் அன்பு மகளே’’ என்று அழைத்தவாறு, என்ன செய்வதென்று தெரியாத ஒரு நிலையில் அவளின் தாய் அந்த மகளுக்கு அருகில் அமர்ந்திருந்தாள். ‘‘என் அப்பா...’’ என்ற குரல் மீண்டும் ஒலிக்கிறது. ‘‘மகளே என்னம்மா...? - தாயின் குரல். ‘‘அப்பாவை உடனடியா நான் பார்க்கணும்’’ - மகளின் கண்கள் மூடுகின்றன. பரிதவித்து நிற்கும் தாய், மகளின் தந்தையைத் தேடி ஒடுகிறாள். விலை மாதுவைத் தேடி வந்த அந்த தந்தை குணவதியை பார்க்கிறான். அவன் அவள் கழுத்தில் ஒர சங்கிலியை அணிவிக்கிறான்.
ஒரு குடும்பமே அழிவுப் பாதையில் நிற்கிற அளவுக்குக் காரணமாக இருக்கும் அந்த விலை மாதுவை கொலை செய்தால் என்ன என்று நினைத்தாள் குணவதி. உண்மையிலேயே ஒரு விலைமாது இந்த உலகத்தைக் கெடுக்கத்தான் செய்கிறாள்.