குணவதி - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7238
‘‘நீ தேவடியா இல்ல...’’ என்று சொன்ன அந்த இரக்க குணம் கொண்ட நல்ல மனிதன் கண்ணீர் விட்டு அழுதான். தன் மீது அன்பு செலுத்தக்கூடிய, தன் மீது அக்கறை கொண்ட ஒரு உயிரும் இந்த உலகத்தில் இருக்கிறதா என்ன என்று அவள் சந்தேகப்பட்டாள். தன்னுடைய பேசும் சக்தி எங்கே போய் ஒளிந்து கொண்டது என்று மனதிற்குள் நினைத்த குணவதி வெளியே பார்த்தாள். வெளியே ஒருவரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு முணுமுணுப்பு சத்தம் கேட்டது. அதற்குப் பிறகுதான் அவளுக்கே தெரிந்தது. அது தன்னுடைய இதயம் உண்டாக்கிய சத்தம் தானென்று. குணவதி துக்கம் கலந்த உணர்ச்சிப் பெரு வெள்ளத்தில் முழுக்க முழுக்க சிக்கிக் கிடந்தாள். தான் யார்? தனக்காக கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் இதயத்துக்குச் சொந்தக்காரன் யார்? - என்று பலவிதப்பட்ட விஷயங்களையும் அவள் மனம் நினைத்துப் பார்த்தது. தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை அவள் மனதில் அசைபோட்டுப் பார்த்தான். ரதீசனின் வீங்கித் தெரியும் பாக்கெட்டையும், தன்னுடைய வாழ்வைச் சூழ்ந்திருக்கும், தானே விரும்பாத கெட்ட நாற்றத்தையும் அவள் ஒரு நிமிடம் மனதின் அடித்தளத்தில் நினைத்துப் பார்த்தாள். அதை நினைக்க நினைக்க குணவதிக்கு எரிச்சல்தான் உண்டானது.
அந்த ஜன்னலை விட்டு அவள் கொஞ்சம் கூட விலகவே இல்லை. நேரம் படு வேகமாகக் கடந்து கொண்டிருந்தது.
அந்தக் கனவு நிலையில் கூட அவள் கண்கள் நன்கு திறந்தே இருந்தன. ஆகாயத்தின் ஏதோ ஒரு மூலையில் தனக்கு ஆதரவாக இருக்கக்கூடிய ஏதோ ஒரு உயிர் மறைந்திருப்பதாக நிச்சயமாக அவள் நினைத்தாள். முடிவே இல்லாத அந்த இருட்டோடு இருட்டாக இரண்டறக் கலந்து விட்டால் கூட நல்லது என்று அப்போது அவள் மனம் நினைத்தது. ஆனால், ஆண் இல்லாத ஒரு உலகத்தை அவளால் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.
அவள் தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள். கிழக்குப் பக்கம் வெளுத்தது. அடுத்த அறையில் இருந்து ஒலித்த ஒரு சத்தத்தைக் கேட்டு அவள் தலையை நிமிர்த்திப் பார்த்தாள். ரதீசன் படுக்கையை விட்டு எழுந்து கொண்டிருந்தான்.
3
அறையை விட்டு வெளியே செல்லாமல் அன்று மாலை வரை அவள் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள். தன்னுடைய வாழக்கையில் இதுவரை நடைபெற்ற பல்வேறு சம்பவங்களையும் அவள் மனத்திரையில் ஓட்டிப் பார்த்தாள். முதல் நாள் இரவு நடைபெற்ற சம்பவம் அவளுக்கு அசாதாரணமான ஒன்றாகத் தோன்றியது. அதை நினைத்து நினைத்து குணவதி அழுது கொண்டிருந்தாள்.
மாலை நேரம் வந்ததும் அவள் தான் அணிந்திருந்த முண்டை மாற்றிக்கொண்டு வெளியேறினாள். அவளுடைய முகம் மிகவும் வாடிப் போயிருந்தது.
ஒரு இளைஞன் தூரத்தில் நின்றவாறு அவளையே வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தான். வழியில் போய்க் கொண்டிருந்தவர்களெல்லாம் அவளையே வெறித்துப் பார்த்தார்கள். சிலர் அவர்களுக்குள் என்னவோ ரகசியம் பேசியதைப் போல பேசிக் கொண்டனர். அவர்கள் ஏதோ அர்த்தம் வைத்து பேசுவது போல் இருந்தது. அதைப் பார்த்த குணவதியின் முகம் மேலும் வாடியது.
சொல்லப் போனால் அவள் ஒரு விலை மாது என்ற விஷயம் எல்லோருக்குமே தெரியும்.
சாலையின் ஓரத்திலிருந்த வீடுகளில் இருக்கும் குடும்பப் பெண்கள் ஜன்னல் வழியே பாதையில் நடந்து போய்க் கொண்டிருக்கும் அவளையே பார்த்தார்கள். அவர்கள் மனதில் அவளைப் பற்றி ஏதாவது நினைப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
குணவதியின் இதயம் கவலையின் ஆக்கிரமிப்பால் வலித்தது. தன்னுடைய அவலம் நிறைந்த வாழ்க்கையை நினைத்துப் பார்த்த அவளுக்கு என்னவோ போல் இருந்தது. இதுதான் அவளின் தலையெழுத்து. பாவம்... அவள் என்ன செய்வாள்?- சாக்கடை ஓடிக் கொண்டிருக்கும் அவளின் வாழ்க்கையில் துர்நாற்றம் வீசிக்கொண்டு இருக்கிறது என்பதை எப்படி மறுக்க முடியும்?
ஒரு பிச்சைக்காரி எங்கிருந்தோ ஓடிவந்து அவள் முன்னால் நின்றாள். அந்தப் பிச்சைக்காரச் சிறுமியின் முகத்தைப் பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருந்தது.
‘‘அம்மா... நாலு காசு தாங்க’’
அதைக் கேட்டு குணவதியின் இதயத்தில் வலி உண்டானது.
அந்தப் பிச்சைக்காரச் சிறுமியின் செம்பட்டை வண்ணத்தில் இருந்த சடை முடி மட்டும் ஒழுங்காகப் பராமரிக்கப்பட்டிருந்தால், யாருடைய மனதையும் அது நிச்சயம் கவரும் என்று நினைத்தாள் குணவதி. அந்தச் சிறுமியின் கண்களுக்குப் பார்ப்போரை ஈர்க்கக்கூடிய காந்த சக்தி இருப்பதாக அவள் உணர்ந்தாள்.
அந்தச் சிறுமி கையை நீட்டினாள். ‘‘அம்மா... நாலு காசு’’. திரும்பத் திரும்ப அவளிக் கெஞ்சல் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.
அந்தச் சிறுமியின் குரல் குணவதியின் மனதை என்னவோ செய்தது. சிறுமியின் கையில் நான்கு காசைக் கொடுத்து விட்டால், அடுத்த நிவீடமே அவள் அந்த இடத்தைவிட்டு ஓடி விடுவாள் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். இரண்டு இளைஞர்கள் அவர்களையே பார்த்தவாறு தூரத்தில் நின்றிருந்தார்கள். குணவதி சிறுமியைப் பார்த்துக் கேட்டாள். நின்றிருந்தார்கள். குணவதி சிறுமியைப் பார்த்துக் கேட்டாள்.
‘‘ஏண்டா கண்ணு... உனக்கு யாருமே இல்லியா?’’
‘‘இல்ல...’’
குணவதி தன் கழுத்தில் அணிந்திருந்த ஒரு சங்கிலியைக் கழற்றினாள். அந்தச் சங்கிலியை அந்தப் பிச்சைக்காரச் சிறுமியின் கையில் தந்தால், அவள் என்ன செய்வாள் -? இரண்டு வடைகளை அவள் கையில் தந்து யாராவது அதை ஏமாற்றி தட்டிப் பறிப்பார்கள். குணவதி சிறுமியைப் பார்த்துக் கேட்டாள்.
‘‘என் கூட நீ வர்றியா?’’
‘‘வர்றேன்’’
சிறிது நேரம் கழித்து குணவதி சொன்னாள்.
‘‘வேண்டாம்... நீ அழகான பொண்ணா வருவே. உன்னோட... உன்னோட... பெரிய சொத்தே நாசமாய் போயிடும்’’
அந்தச் சிறுமிக்கு குணவதி பேசியது எதுவுமே புரியவில்லை. குணவதி அவளைப் பார்த்துக் கேட்டாள்.
‘‘உனக்கு என்னம்மா வேணும்?’’
‘‘நாலு காசு’’
குணவதி அந்தச் சிறுமியின் கையில் நான்கு காசுகளைத் தந்தாள். சிறுமி அடுத்தநிமிடம் அந்த இடத்தை விட்டு நீங்கினாள்.
குணவதி தன்னுடைய வாழ்க்கையையும் அந்தப் பிச்சைக்காரச் சிறுமியின் வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தாள். அவள் பலவித நடனங்களையும் ஆடி, அதைப் பார்த்துக் கொண்டிருப்போர்களை மயக்கி அவர்களிடமிருந்து ஏமாற்றி பணத்தைப் பறித்துக் கொண்டிருக்கிறாள். அதே நேரத்தில் அந்தப் பிச்சைக்காரச் சிறுமி நேரடியாகக் கேட்டு அந்த நான்கு காசுகளை வாங்குகிறாள். அவளின் மதிப்பும், மரியாதையும் எங்கிருந்து வந்தன- -? இந்த அணிந்திருக்கும் நகைகளில் இருந்து - உடுத்தியிருக்கும் உடைகளில் இருந்து - இவை எல்லாம் எங்கிருந்து வந்தன?