குணவதி
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7237
சொர்க்கத்திலிருந்து கேட்பதைப் போன்று இனிமையான குரலால் அமைந்த பாட்டு. காண்போரைக் கவரக் கூடிய அருமையான நடனம். பெண்மை என்றால் என்ன என்பதை அவளிடம் இறைவன் முழுமையாகச் செதுக்கி வடித்திருந்தான் என்பதே உண்மை.
மனம் திறந்து கூறுவதாக இருந்தால் அவள் ஒரு பேரழகி. அவளைப் பார்க்கும்போது கணவன்மார்கள் தங்களின் மனைவிகளை முழுமையாக மறந்தார்கள். திருமணமாகாத இளைஞர்கள் தத்தம் ரசனைக்கேற்றபடி தங்கள் மனதில் கற்பனை பண்ணி வைத்திருந்த காதலிகளை அவளிடம் தரிசித்தார்கள்.
அவள் விழிகளில் கவர்ச்சி கொப்பளித்து வழிந்தது.
வினயன் அமர்ந்திருந்த நாற்காலிக்குப் பக்கத்து நாற்காலியில் அந்த நடனக் குழுவின் மேனேஜர் ரதீசன் உட்கார்ந்திருந்தான். அவன் முகத்தில் சந்தோஷம் அளவுக்கு மீறி தாண்டவமாடிக் கொண்டிருந்ததை வினயன் உணரவே செய்தான்.
நடனமாடிக் கொண்டிருந்த அந்தப் பெண் ஒரு விலை மாது என்பதை ஏற்கனவே வினயன் அறிந்து வைத்திருந்தான். அவளின் மனதிற்கு விலை பேசுபவன் இந்த ரதீசன்தான் என்பதை அவன் பலரும் கூறத் தெரிந்து வைத்திருந்தான்.
வினயனின் மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அதற்கு மேல் அந்தப் பெண்ணின் நடனத்தை அவனால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவன் மனதில் பல்வேறு வகைப்பட்ட உணர்ச்சிப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதைக் கட்டுப்படுத்த முடியாமல் அவன் தவியாய் தவித்துக் கொண்டிருந்தான். குணவதியின் நடனமும் பாட்டும் அரங்கில் கூடியிருந்தவர்களை மிகவும் மகிழ்ச்சியில் மிதக்க வைத்தது. அதைப் பார்த்து ரசீதனின் முகம் இனம் புரியாத சந்தோஷத்தில் மூழ்கி திளைத்தது. வினயனின் இதயம் பயங்கரமாக கனத்தது. குணவதியின் நடனம் உண்டாக்கிய பாதிப்பை அவன் ரதீசனின் முகத்தில் தெரிந்த பல்வேறு உணர்ச்சி மாற்றங்கள் மூலம் தெரிந்து கொண்டான். சொல்லப் போனால் ரதீசனைப் பார்த்தபோது வினயன் மனதில் ஒருவித பயமும் உண்டானது.
மணி க்ணிங் க்ணிங் என்று முழங்கியது. திரைச்சீலை கீழே விழ, நடனம் முடிந்தது. எழுந்திருக்க மனமே இல்லாமல் எல்லோரும் எழுந்து நடையைக் கட்டினார்கள்.
வினயன் தான் அமர்ந்திருந்த நாற்காலியிலேயே கொஞ்சமும் அசையாமல் அமர்ந்திருந்தாள். நேரம் ஓடிக் கொண்டிருந்தது. திரைச்சீலை லேசாக அசைந்தது. உள்ளே யாரோ நடக்கிறார்கள். யாராக இருக்கும்? குணவதியாக இருக்குமோ?
உள்ளே யாரோ தேம்பித் தேம்பி அழும் குரல் கேட்பதைப் போல் வினயன் உணர்ந்தான். அவன் தன் காதுகளைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு கேட்டான். துன்பப்பட்ட ஒரு இதயம் உள்ளே நொந்து அழுது கொண்டிருந்தது. அது யாருடைய இதயம்? வினயன் தன் மனக் கண்ணால் ரதீசனின் முகத்தை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தான். அந்த முகத்தில் இனம் புரியாத ஒரு கடினத் தன்மை இருப்பதை அவனால் தெரிந்துகொள்ள முடிந்தது.
உள்ளே யாரோ பயங்கர கோபத்துடன் கத்துவது கேட்டது. வினயன் எழுந்து நின்றான். யார் உள்ளே வாய்விட்டு அழுவது? வினயன் ஓரடி முன்னால் வைத்தான். திரைச்சீலையை லேசாக நகர்த்தி குணவதி உள்ளே இருந்தவாறு வெளியே பார்த்தாள். அதைப் பார்த்த வினயன் அதிர்ச்சியடைந்து போய்விட்டான். அவர்கள் இருவரின் கண்களும் சந்தித்தன. அடுத்த நிமிடம் குணவதி தன் தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள்.
குணவதியின் முகம் மென்மையான ஒரு மலரைப் போல் காணப்பட்டது. உள்ளே போய் அவளின் கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் தன் விரல்களால் துடைக்க வேண்டும் என்று நினைத்தான் வினயன். அதைக் கெட்ட குணம் ரதீசன் எதற்காக அவள் மனம் வேதனைப்படும்படி நடந்து கொள்கிறான்? அவளுக்கு ஆறுதல் கூற இந்த உலகத்தில் யாருமே இல்லை என்று அவன் நினைக்கிறானா என்ன?
அதற்குமேல் வினயனால் அங்கு நின்று கொண்டிருக்க முடியவில்லை. குணவதி தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள். வினயன் மேலும் ஓரடி மன்னால் வைத்தான். உள்ளே போய் அவளின் கண்களில் இருந்து வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரைத் துடைக்க அவன் மனம் தவியாய் தவித்தது. ஆனால், அதை அவனால் என்ன காரணத்தாலோ செயல் வடிவத்திற்குக் கொண்டுவர முடியவில்லை. அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றான். அவன் மனம் உள்ளே அழுதது.
ஒரே நிசப்தம் நிலவிக் கொண்டிருந்தது. வினயனின் விழிகளில் ஒருவகை ஆர்வம் உண்டானது. லேசாக வீசிய காற்றில் திரைச்சீலை இப்படியும் அப்படியுமாய் அசைய, தீபங்களின் நிறம் மாறி விட்டிருப்பதை வினயன் கவனிக்கவே செய்தான். இப்போது அவள் அழுகை சத்தம் கேட்கவில்லை. குணவதி தன்னுடைய அழுகையை அதற்குள் எப்படி நிறுத்தினாள்? அவளின் மென்மையான இதயம் துக்கத்தைப் பொறுக்க முடியாமல் எங்கே வெடித்துப் போய் விடுமோ என்று அவன் பயந்தான். குணவதியின் உருவம் வினயனின் மனதின் அடித்தளத்தில் வலம் வந்தது. அவள் அழுத காட்சியை அவன் மனதிற்குள் ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தான்.
அவள் அரங்கத்தில் அமர்ந்திருப்பவர்கள் முன்னால் புன்னகை புரியும் முகத்துடன் வந்து நின்றிருக்கலாம். ஆனால், அந்தப் புன்னகைக்குப் பின்னால் தக தக வென எரிந்து கொண்டிருக்கும் இதயத்தை வினயனால் காண முடிந்தது. சிரிக்கும்போது உண்மையில் அவள் மனதிற்குள் அழுது கொண்டுதான் இருந்தாள். ஆனால், அவளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவர்கள் அதைப் புன்னகை என்று எடுத்துக் கொண்டார்கள். அவளின் குரலில் ஒருவகை கெஞ்சல்தான் தொனித்தது. அவளின் அழைப்பு ஒரு விலை மாதுவின் அழைப்பு அல்ல. கவலைகள் மண்டிய ஒரு இதயத்தை அவள் திறந்து காட்ட முயற்சித்தாள் என்று கூறுவதே பொருத்தமானது. காலம் காலமாக துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் அவள் ஆத்மா மற்றவர்களின் கருணைக்கு வேண்டி நித்தமும் அழுதது. அவள் நடன மாடியதில், அவளின் சின்னச் சின்ன அசைவுகளில், அவளின் விழிகளில் அசைவில் அவை தெளிவாகத் தெரிந்தன. ஆனால், அரங்கத்தில் கூடியிருந்த யாருமே அதைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அந்த ஆண்களின் உலகம் ஏன்தான் இப்படி ஈவு இரக்கம் என்பதே இல்லாமல் கல்லென இருக்கிறதோ தெரியவில்லை. என்ன இருந்தாலும் அவள் பெண்ணாயிற்றே! அவள் அரை நிர்வாண கோலத்தில்... உண்மையிலேயே கஷ்டமான விஷயம்தான்! அரங்கத்தில் கூடியிருந்தவர்கள் காம வேட்கையில் சிக்கிக் கிடந்தார்கள். அவளை யாருமே புரிந்து கொள்ளவில்லை.
எல்லாவற்றையும் மனதில் அசை போட்டுப் பார்த்த வினயனின் மனம் சற்று லேசானது மாதிரி இருந்தது. அவன் மனதிற்குள் தொடர்ந்து ஒருவகைப் போராட்டமே நடைபெற்றுக் கொண்டிருந்தது. விலை மாது! தேவடியாள்! காப்பாற்றுவதா? யாரைக் காப்பாற்றுவது? யார் காப்பாற்றுவது?