குணவதி - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7238
‘‘ரதீசனோட சத்தம் கேட்டப்போ நீ ஏன் என்னைக் கட்டிப் பிடிச்சே?’’
‘‘நீங்க யாரு?’’
‘‘நானா? நீ...’’
‘‘நான் ஒரு தேவடியா...’’
‘‘நீ முன்னாடி சொன்னது...’’
‘‘நான் நல்லவளாகவும், சுத்தமானவளாகவும் இருக்கணும்னு பிரியப்படுறேன்...’’
‘‘அப்படி நீ இருக்குறதுக்கு இடைஞ்சலா நான் வந்திருக்கேனா என்ன?’’
‘‘நிச்சயமா இல்ல. எனக்கு பன்னிரெண்டு வயது நடக்குறப்பவே நான் கெட்டுப் போனேன்.’’
‘‘பிறகு?’’
‘‘எல்லாமே போயிடுச்சு. ஒவ்வொரு ஆண் முன்னாடி நிக்குறப்பவும் நான் ஒரு நல்லவ, சுத்தமானவ, கன்னிப் பொண்ணுன்னு என் மனசுக்குள்ளே நினைச்சுக்குவேன்.’’
வினயனின் கண்கள் நனைந்தன.
‘‘நீங்க ஏன் அழறீங்க?’’ - அவள் கேட்டாள்.
‘‘உனக்காக’’
‘‘எனக்காகவா?’’
வினயனைச் சுற்றியிருந்த அவளின் கைகள் மேலும் இறுகின.
‘‘நான் ஓரு தேவடியா. இனிமையான பேச்சை வச்சு...’’
‘‘நான் ஒரு காமவெறி பிடிச்ச மனிதன் இல்ல.’’
‘‘உனக்கு இதைக் கேட்க புதுமையா இருக்கா?’’
‘‘அப்படி ஒரு ஆண் இருக்கானா என்ன?’’
‘‘ஏன்? நான் இருக்கேனே...’’
‘‘அப்ப நீங்க யாரு?’’
வினயனுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை. தான் ஒரு காமவெறி பிடித்த மனிதன் இல்லையென்றால்தான் யார்? இரவு நேரத்தில் விலைமாது இருக்கும் வீட்டைத் தேடி வந்திருக்கும் தான் எந்த உணர்ச்சியால் உந்தப்பட்டு இங்கு வந்திருக்க வேண்டும் என்று அவன் மனம் நினைத்துப் பார்த்தது.
‘‘நான் காமவெறி கொண்ட மனிதன் இல்லை. உன்னோட உடல் அழகால் தூண்டப்பட்டு நான் இங்கே வரல. அதன் மேல் எனக்கு விருப்பமும் இல்ல...’’
தன் மனதில் இருந்த எண்ணத்தை வினயன் சொன்னான். ‘‘அப்ப நீங்க, நீங்க பணம் கொடுத்தீங்களே? - அவள் கேட்டாள். வினயன் கதவைத் திறக்க முயன்று கொண்டிருந்தான்.
‘‘அய்யோ... கடவுள் மேல் ஆணையா...’’ அவள் அவனைத் தடுத்தாள். ‘‘நான் உங்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டாமா?’’ - தொடர்ந்து அவள் அவனை இறுகக் கட்டிப் பிடித்தாள்.
‘‘வேண்டாம். வேண்டாம். எனக்கு மூச்சை அடைக்குது. வினயன் அவளிடம் கெஞ்சினான். அவன் கண்களில் கனிவு தெரிந்தது.
நான் காமவெறி பிடித்த மனிதனில்லை...’’
அவளின் அணைப்பிலிருந்து தன்னை அவன் விடுவித்துக் கொண்டான்.
‘‘என்னை அவன் கொன்னுடுவான்?’’
‘‘யாரு?’’
‘‘எதற்கு?’’
‘‘உங்களை வேணும்னே கோபப்படுத்தி அனுப்பிட்டேன்னு அவன் நினைப்பான்.’’
‘‘அவன் பாக்கெட்ல பணம் போய்ச் சேர்ந்தா போதும்ல?’’ ‘‘போதாது, வர்ற எல்லாரையும் சந்தோஷப்படுத்தி, அவர்களைப் பெருமைப்படுத்தி அனுப்பி வைக்கணும். நம்மளோட திறமை என்னன்னு எல்லார்கிட்டயும் காட்டணும். அப்படின்னாத்தான் அவங்க திரும்பத் திரும்ப வருவாங்க...’’
இதைச் சொன்னபோது குணவதியின் சதைப் பிடிப்பான கன்னங்களில் கண்ணீர் ஆறென வழிந்து கொண்டிருந்தது. செக்கச் செவேலேன சிவந்திருந்த தன்னுடைய உதடுகளை அவள் மெல்ல கடித்தவாறு பொங்கி வந்த அழுகையைத் தடுத்து நிறுத்த அவள் முயற்சித்தாள்.
‘‘குணவதி...’’
‘‘ம்...’’
வினயன் அவள் விழிகளிலிருந்த வழிந்த கண்ணீரைத் அடைத்தான். அவள் வினயனின் தோள்மீது தன்னுடைய தலையை வைத்து ஒருவகை நிம்மதி உணர்வுடன் சாய்ந்து நின்றாள். அவள் தாழ்ந்த குரலில் அவனைப் பார்த்து கேட்டாள்.
‘‘இப்படி நடக்கலாமா?’’
வினயனுக்கு உண்மையிலேயே அவளின் கேள்விக்கு அர்த்தம் தெரியவில்லை.
‘‘ஆமா... நீ ஏன் அழறே?’’
பல ஆண்களும் என்னோட கண்ணீரைத் துடைச்சு விட்டிருக்காங்க’’.
‘‘நான் உன் மனசு சங்கடப்படுற மாதிரி நடக்க மாட்டேன். உன்னைத் தாங்கக் கூடிய மனிதனா என்றைக்கும் நான் இருப்பேன்.’’
வினயன் அவளை அள்ளித் தூக்கினான். அவளை அப்படியே மெத்தையில் படுக்க வைத்தான். அவன் செயல்களின் வெளிப்பாடு அவளின் முகத்தில் தெரிந்தது.
‘‘அனாதைப் பெண்ணே!’’
‘‘ஈரமான இதயத்தைக் கொண்டு என்னைக் காப்பாற்ற வந்த மனிதரே!’’
வினயன் வாசலை நோக்கி நடந்தான்.
‘‘கதவை திறங்க’’ - அவன் உரத்த குரலில் சொன்னான். ரதீசன் கதவைத் திறந்தான்.
வினயன் திரும்பிப் பார்த்தான். ‘‘நீங்க சொன்னது எல்லாம் உண்மைதானா?’’ - குணவதியின் விழிகள் கேட்டன. ‘‘என் கைகள் உன்னை எந்நாளும் தாங்கும்’’- வினயனின் பார்வை சொன்னது. அடுத்த நிவீடம் அவன் வேகமாக மறைந்தான்.
குணவதி எழுந்து ஜன்னலருகில் போய் நின்றாள். அந்த இருட்டில் ஒரு நட்சத்திரத்தைக் கூட அவளால் பார்க்க முடியவில்லை.
5
ரதீசன் அங்கு இல்லை. குணவதி மட்டுமே இருந்தாள்.
ஒருபெண் அப்போது உள்ளே வந்தாள். அந்தப் பெண்ணைப் பார்த்ததும் மனதிற்கள் பதைபதைத்த குணவதி இருந்த இடத்தை விட்டு எழுந்து நின்றாள்.
வந்த பெண் நல்ல அழகியாக இருந்தாள். அவள் அழுது கொண்டிருந்தாள். என்றாலும் அப்போதும் அவள் முகம் மிகவும் அழகானதாகவே இருந்தது. அவள் குணவதியைப் பார்த்துக் கேட்டாள்.
‘‘இங்கே வந்த என்னோட கணவர் எங்கே?’’
அவள் கேட்ட கேள்வியில் அர்த்தம் புரியாமல் விழித்தாள் குணவதி. அவள் எதுவுமே பேசாமல் பொம்மையைப் போல கொஞ்சமும் அசையாமல் நின்றிருந்தாள். அந்தப் பெண் தான் கேட்ட கேள்வியையே மீண்டுமொருமுறை கேட்டாள். அப்போதும் குணவதி எந்த பதிலும் கூறவில்லை. அவ்வளவு தான் - அந்தப் பெண் வாய் விட்டு அழ ஆரம்பித்து விட்டாள்.
‘‘அய்யோ... என் குழந்தை... அவர் எங்கே? என் மகள்...’’
குணவதியும் அவளுடன் சேர்ந்து அழுதாள். வந்த பெண் தன்னுடைய மார்பு மீது இரண்டு மூன்று முறை அடித்துக் கொண்டாள்.
‘‘என் கணவர் எங்கே? துரோகி... எங்கே அந்த ஆளை நீ ஒளித்து வச்சிருக்கே? என் மகள் சாகுறு நிலையில் இருக்குறா. அய்யோ....’’
‘‘என்ன சொல்றீங்க?’’
‘‘நீ எல்லாத்தையும் நாசம் பண்ணிட்டே. ஒரு குடும்பத்தையே அழிச்சு குட்டிச் சுவராகிட்டே எவ்வளவு பெரிய பாவத்தை நீ பண்ணியிருக்கே தெரியுமா? அவர் குடும்பத்தை எவ்வளவு நல்லா - கவனமெடுத்து பார்க்கக் கூடிய மனிதரா இருந்தாரு. நீ அவரோட மனசைக் கெடுத்துட்டே! சரி... அது இருக்கட்டும். எங்கே அந்த ஆளு. நான் வேணும்னா அவரை உனக்கே விட்டுத் தந்துர்றேன். என் மகள் சாக பிழைக்கக் கிடக்குறா. அவ கடைசி முறையா தன்னோட அப்பா முகத்தை ஒரு தடவை பார்க்கப் பிளீயப்படுறா. நான் உனக்காக எது வேணும்னாலும் செய்றேன்.’’
அவளின் கஷ்ட நிலையைப் பார்த்து குணவதியின் இதயத்தில் பயங்கர வேதனை உண்டானது. ஆனால், அந்தப் பெண் என்ன சொல்கிறாள் என்பதைத்தான் குணவதியால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.