Lekha Books

A+ A A-

குணவதி - Page 2

kunavathi

வினயனின் இதயத்தில் பயங்கரமான வேதனை உண்டாகத் தொடங்கியது. தனக்குச் சற்று தூரத்தில் வினயன் குணவதியைப் பார்த்தான். தீபத்தின் ஓளி சற்று குறைந்தது போல் அவனுக்குத் தோன்றியது. ஒரு இருட்டு உலகம் சுற்றிலும் ஆட்சி செய்வதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

அவள் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். வினயன் அவளையே பார்த்தான். அலையில் சிக்கிய ஓடத்தைப் போல உலகம் தலைகீழாக கவிழ்வதைப் போல் வினயன் உணர்ந்தான்.

‘‘ஏங்க...’’

வினயன் எழுந்தான். அவள் புன்னகையோடு அவனுக்கு முன்னால் நின்றிருந்தாள். அவள் கண்கள் ஒரு விலை மாதுவின் கண்கள் எப்படி இருக்குமோ அப்படி இருந்தன. அவள் தன் கரங்களை நீட்டி தன்னை இழுத்துப் பிடித்து அடுத்த நிவீடம் இறுகக் கட்டியணைக்கப் போகிறாள் என்று அவன் மனதிற்குள் நினைத்தான். ‘‘‘‘ச்சீ... தேவிடியா....’’’’ வினயன் திரும்பி ஓடினான்.

2

சாலையை அடைந்த வினயன் திரும்பி நின்றான். அந்த நடன அரங்கின் ஜன்னல் வழியாக வெளிச்சம் வந்து வெளியே பரவிக் கொண்டிருந்தது. வினயனின் இதயம் முழுமையான அமைதியில் மூழ்கியிருந்தது.

அவனுக்கு மிகவும் களைப்பாக இருந்தது. இனம் தெரியாத வாட்டம் வந்து அவனை ஆட்கொண்டது. அவன் கால்கள் உடம்பைத் தாங்க முடியாமல் தவித்தன. மூச்சு விடவே மிகவும் சிரமமாக இருப்பதைப் போல் உணர்ந்தான். காற்று நாசிக்குள் நுழையவே மிகவும் சிரமப்பட்டது. தொண்டைவற்றிப் போய் விட்டதைப் போல் அவன் உணர்ந்தான். நடன அரங்கத்தில் ரதீசன் உரத்த குரலில் சத்தம் போடுவது அங்கிருந்து இவனுக்கு நன்றாகவே கேட்டது.

ஆள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்த சாலையின் ஓரத்தில் வினயன் அமர்ந்தான். அவன் மனதின் அடித்தளத்தில் முழுமையாக மூடியிருந்த பனிப் போர்வை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கியது. எல்லாம் தெளிவாகி சீரான நிலைக்கு வந்து விட்டதைப் போல் உணர்ந்தான்.

‘‘தேவடியா’’ என்றொரு குரல் எங்கோ தூரத்தில் காற்றைக் கிழித்துக் கொண்டு ஒலிப்பது அவனுக்குக் கேட்டது. மீண்டும் நடன அரங்கை நோக்கிப் போனால் என்ன என்று அவன் நினைத்தான்.

‘‘தேவடியா!’’

 அவன் தனக்குள் முணுமணுத்தான்.

அந்த இரவு மிகவும் குளிர்ச்சி நிரம்பியதாக இருந்தது. காற்று லேசாக வீசிக் கொண்டிருந்தது. வினயனின் உடலில் இருந்த களைப்பு கொஞ்சம் கொஞ்சமாக நீங்கத் தொடங்கியது. அவனுக்குத் தூக்கம் வருவது போலவும் இருந்தது. கண்களை லேசாக மூடினாள்.

சிறிது நேரம் சென்றதும் அவன் கண்களைத் திறந்தான். நிர்மலமான வானத்தில் லட்சக்கணக்கில் நட்சத்திரங்கள் கண்களைச் சிமிட்டிக் கொண்டிருந்தன. குணவதி கட்டியிருந்த புடவையை மனதில் நினைத்துப் பார்த்தான் வினயன். ஏராளமான வெள்ளைப் புள்ளிகளைக் கொண்ட நீல வண்ணப் புடவையை அவள் அணிந்திருந்தாள்.

‘‘தேவடியா...’’ வினயன் மீண்டும் மெதுவான குரலில் சொல்லிப் பார்த்தான். அவன் அடுத்த நிமிடம் எழுந்து நடந்தான். எங்கே போவது? வீட்டிற்குப் போகலாமா? அதற்கு மனம் வரவில்லை. மீண்டும் குணவதியைத் தேடி... வேண்டாம் என்று தீர்மானித்தான். பின்னர் என்ன நினைத்தானோ, தன்னுடைய வீட்டை நோக்கி நடையைக் கட்டினான். யாரையும் தட்டி எழுப்பாமல் அவன் தன்னுடைய அறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். விளக்கைக் கூட எரிய வைக்கவில்லை. பாயை விரித்துப் படுத்தான். ஆனால், தூக்கம் வருவதாகத் தெரியவில்லை. கண்களில் இருந்து மின்மினிப் பூச்சிகள் கிளம்பி அறை முழுக்கப் பறந்து திரிவதாக அவனுக்குத் தோன்றியது.

‘‘தேவடியா...’’

வினயன் அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் மனதில் நினைத்துப் பார்த்தான். அவள் இப்போது அனேகமாக அழுது கொண்டிருக்கலாம். அவளின் அந்த விழிகளில் இருந்த மென்மைத் தனம் இப்போதும் இருக்குமா? கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் தான் ‘‘தேவடியா’’ என்று கூறியதை குணவதி கேட்டிருப்பாளா? தன்னுடைய வாயில் அப்படிப்பட்ட ஒரு வார்த்தை எப்படி இயற்கையாக வந்து ஒலித்தது? தன்னுடைய மனதின் அடித்தளத்தில் இருந்த வார்த்தையின் வெளிப்பாடுதானே அது? இப்படி பல்வேறு வகைப்பட்ட சிந்தனைகளில் அவன் மனம் அலைபாய ஆரம்பித்தது. அவள்... ஒரு அமைதியான இளம்பெண்! கொஞ்சம்கூட இரக்கம் என்றால் என்னவென்றே தெரியாத ரதீசன் என்ற அந்த மனிதனுக்காக அவள் தன்னுடைய கற்பை விற்றுக் கொண்டிருக்கிறாள். குணவதி தன்னுடைய வாழ்க்கையில் அனுபவித்ததுதான் என்ன? இந்த இளம் பிராயத்தில் அவள் எத்தனை எத்தனை துயரச் சம்பவங்களை அனுபவத்திருக்கிறாள். அவள் வாழ்க்கையில் இதுவரை அன்பு, பாசம், கருணை போன்ற விஷயங்களை அனுபவத்திருக்க வாய்ப்பே இல்லை. துயரத்தையும், வெறுமையையும், இரக்கமற்ற தன்மைகளையும் பார்த்துப் பார்த்து அவளின் இதயம் முழுமையாக மரத்துப் போயிருக்கலாம். அதனால் தானவோ என்னவோ அவளின் விழிகள் நீலம் படர்ந்து காணப்படுகிறது. காமவெறி பிடித்த மனிதர்களின் கூர்மையான நகங்கள் பட்டு அவள் இதயம் கிழிந்து அலங்கோலமாகிவிட்டது. அவள் ஒரு ஒதுக்கப்பட்ட பெண். அவளைப் பற்றி யாருக்குமே அக்கறை இல்லை. அவள் மீது அன்பு செலுத்தக்கூடிய உயிர் இந்த உலகத்தில் ஒன்றுகூட இல்லை. யாரும் அவள் மீது பரிவு காட்டத் தயாராக இல்லை. சிறு வயதில் கூட அவள் தாலாட்டுப் பாடல் என்ற ஒன்றைக் கேட்டிருப்பாளா என்பது கூட சந்தேகமே. ஆனால், அவள் இன்னும் உலகத்தை முழுமையாக விரும்பத்தான் செய்கிறாள். கண்ணால் பார்க்கக் கூடியவற்றிடம், காதால் கேட்கக் கூடியவையிடம், தொடக் கூடியவர்களிடம் - எல்லாவற்றிடமும் அவள் அன்பிற்காகவும், கருணைக்காகவும் கெஞ்சி நிற்கிறாள் என்பது மட்டும் உண்மை.

அவள் தன் மீது யாராவது கலங்கமற்ற பரிவுடன் அக்கறை காட்ட மாட்டார்களா என்று நித்தமும் ஏங்கி நிற்கிறாள். அவளின் அந்த கெஞ்சலும், அபயக் குரலும் யாருடைய இதயத்திலும் விழவில்லையா? ஆனால், ஒருவர்கூட குணவதியைத் திரும்பிப் பார்ப்பதாகத் தெரியவில்லையே! அவள் தேம்பித் தேம்பி அழுகிறாள். அந்த அழுகை அன்பிற்காக ஏங்கும் அழுகை அல்லவா? அவள் இரு கரங்களையும் நீட்டியவாறு என்னை நோக்கி வந்தாள். ஆனால், நான் அவளை விட்டு ஒடினேன். அவள் என் மனதில் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டாளா? ரதீசனைப் பார்த்து நான் பயந்தது, அவனை வாய்க்கு வந்தபடி திட்டியது - இதெல்லாம் எதற்காக? அவன் எனக்கு எந்தவித தீங்கான காரியமும் இதுவரை செய்ததில்லை. பார்வையாளர்களில் ஒருவனாக அமர்ந்திருக்கும் என்மீது நிச்சயம் அவனுக்கு அக்கறை இருக்கவே செய்யும்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel