குணவதி - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7238
அதற்கு அந்த சந்திரன் என்ன செய்வான்? அவன் மேல் தவறா என்ன? இது அவளே தனக்கு உண்டாக்கிக் கொண்ட நிலைதானே. உண்மை நிலையையும், மனிதல் தோன்றும் கற்பனை நிலையையும் அவளால் பிரித்துப் பார்க்க முடியவில்லையே. அதற்காக என்ன செய்வது?- நினைக்க நினைக்க வினயனின் இதயமே மரத்துவிடும்போல் இருந்தது. அவள் கஷ்டப்படட்டும் வேறென்ன செய்ய முடியும்?
அப்படியென்றால் அவனுக்கு அவள் மீது எந்தவித ஈடுபாடோ ஈர்ப்போ இல்லையா என்ன? அந்தச் சிந்தனை வினயனின் இதயத்தின் அடித் தளத்தில் எழும்பி கொழுந்து விட்டு எரிந்தது.
எந்தவித கவலையும் இல்லாமல் அவள் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருக்கிறாள். அவள் கட்டியிருந்த புடவை உடம்பைவிட்டு நீங்கி தாறுமாறாக கலைந்து போய்க் காணப்பட்டது. அவளின் மென்மையான ஒரு கை அவள் மார்பின் மீதும், இன்னொரு கை மெத்தையிலும் இருந்தன. அடடா... உறங்கும்போது அவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள்.
இந்த நிலையைப் பற்றி என்ன சொல்வது? எதுவுமே தெரியாமல் அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாளே, கைகளால் தட்டிக் கொடுக்கப்பட்டு தாலாட்டுப் பாடல் கேட்டு அவள் உறங்கிக் கொண்டிருக்கிறாள். அந்தத் தாலாட்டுப் பாடலுக்கு இடையே அவளைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கும் கையே நரகத்தை நோக்கி நீள்கிறது என்றால்... குணவதி தன்னுடைய நிலையைப் பற்றி எதுவுமே தெரியாமல் இருக்கிறாளே.
எது நடக்கிறதோ அதை அவள் நன்கு அனுபவிக்கட்டும் என்று தான் கூறியது சரிதானா? அவள் யார்? வினயன் தனக்குத் தானே கேட்டுக் கொண்டான். அவளுக்கு எதையெதையெல்லாம் தர வேண்டுமோ, அவற்றை அவன் தந்திருக்கிறான். அவளுக்குத் தர வேண்டிய பாக்கி என்று எதுவும் இல்லை. அந்த அழகுப் பெட்டகத்தை விட்டு தன் வேலையைப் பார்க்கத்தான் போனால் இதயத்தில் ஈரமே இல்லாத கயவர்களின் கையில் சிக்கி அவள் சின்னாபின்னமாகப் போவது உறுதி என்பதை அவன் நன்கு அறிந்தே இருந்தான். அவள் கஷ்டத்தைப் பார்த்து அவன் ஏன் அழ வேண்டும்? அப்படி அழுதது கூட ஒருவகையில் பார்த்தால் ஏமாற்றுத்தனம் தானா? ஆயிரம் பேர்களில் தானும் ஒருவன் - அவ்வளவுதானா என்று அவன் சந்தேகப்பட்டான். ஆனால், அவனுக்கு நன்றாகவே தெரியும் தான் ஒரு காமவெறி பிடித்த மனிதன் இல்லை என்ற உண்மை. ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வுதான் தன்னை அவளை நோக்கிச் செலுத்தி கொண்டு வந்திருக்கிறது என்பதையும் அவன் நன்கு தெரிந்தே வைத்திருந்தான்.
‘‘டேய் கண்ணு! உன்னை நான் எந்தக் காலத்திலும் விடமாட்டேன்டா...’’
வினயன் தலையைக் குனிந்து அவளின் நெற்றியில் முத்தமிட்டான். அவன் மூடிய விழிகளில் இருந்து வழிந்த கண்ணீர் அவள் முகத்தில் விழுந்தது. குணவதியின் கைகள் வினயனின் கழுத்தை இறுகப் பற்றி வளைத்தன.
‘‘நீ எப்பவும் எந்தவித கவலையம் இல்லாமல் நிம்மதியா உறங்கணும்...’’
அவள் மீண்டும் உறங்க ஆரம்பித்தாள். வினயன் எந்தவித ஓசையும் எழுப்பாமல் புறப்படத் தயாரானான். சுவரில் தொங்கிக் கொண்டிருந்த ஓவியங்கள் அவனை ‘‘வா... வா’’ என்று அழைப்பதைப் போல் இருந்தது.
அவன் வாசலில் சிறிது நேரம் நின்றவாறு அவளைப் பார்த்தான். பிறகு கதவைத் திறந்தான். அடுத்த நிமிடம் அவன் அங்கிருந்து மறைந்தான்.
பொழுது புலர்ந்த நேரத்தில் குணவதி தூக்கம் கலைந்து எழுந்தாள். ஒருவித உற்சாகத்துடன் அவள் தன் கண்களைத் திறந்தாள். ஜன்னல் வழியாகப் பார்த்தபோது தூரத்தில் வானம் பூமியைத் தொட்டுக் கொண்டிருந்த இடத்தில் சூரியன் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தான். அதைப் பார்த்ததும் ஆடைகளைச் சரி செய்தபடி அவள் எழுந்து நின்றாள்.
அடர்ந்த காட்டுப் பகுதியில் கணவனால் அனாதையாக கை விடப்பட்ட ஒரு மனைவியைப் போல தன்னை அவள் உணர்ந்தாள். ஆதவன் உதித்துக் கொண்டிருந்த அந்தக் காலை நேரத்தில் அந்தப் பெண்ணின் மனதில் மட்டும் ஒரு பெரிய போராட்டமே நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து மார்பின் மேல் விழுந்தது. மார்பின் மீது விழுந்து கிடந்த தலைமுடியைக் கையால் ஒதுக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் கூட அவளுக்கு உண்டாகவில்லை. அந்த அதிகாலை வேளையில் வீசிக் கொண்டிருந்த குளிர்காற்று ஜன்னல் வழியே அறைக்குள் நுழைந்து அவளைத் தாலாட்டிக் கொண்டிருந்தது.
ஆரம்ப நிமிடங்களில் அவளைப் பொறுத்தவரையில் கவலை என்றால் என்னவென்று தெரியாமல்தான் இருந்தாள். தூக்கத்தில் கனவு கண்டு எழுந்து ‘‘மிட்டாய்...’’ என்று கேட்டு அழுது கொண்டிருக்கும் ஒரு குழந்தையைப் போல்தான் தன்னை அவள் இப்போது உணர்கிறாள். கடந்த இரவில் நடைபெற்ற சம்பவங்கள் ஒவ்வொன்றும் பனிப்படலத்தால் மூடப்பட்டதைப் போல் அவள் ஞாபகத்தில் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன. வாழக்கையிலேயே முதல் முறையாக அவள் கஷ்டங்க¬¬ப் பார்த்து ஒரு மனிதன் பரிதாபப்படுகிறான். அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை எவ்வளவுதான் முயன்றாலும் அவளால் நம்பவே முடியவில்லை. இருப்பினும் அவள் ஏன் தன்னை மறந்து அழ வேண்டும்? தன்னுடைய வாழ்க்கை வழக்கம் போல ஏதாவதொரு சம்பவத்துடனும், தன்னைத் தேடி வரும் யாராவதொரு ஆணின் திருப்தி - இப்படி மட்டுமே நீங்கிக் கொண்டிருக்கும் பட்சம், உற்சாகமும் பிரகாசமும் புதுமையும் கொண்ட இந்தக் காலை வேளையில் அவள் எதற்காகத் தன்னையும் மீறி அழ வேண்டும்? காலமெல்லலம் கவலைகளைத் தவிர வேறெதையுமே தெரிந்திராத யார் தூங்காமல் விசிறியால் வீசிக் கொண்டிருந்தது என்பதை ஒரு நிமிடம் மனதில் நினைத்துப் பார்த்தாள். அந்த மனிதன் இப்போது தன்னுடன் இல்லாமற் போனதற்குக் கூட அவள் வருத்தப்படவில்¬¬. மனைவி என்ற நிலையை விட்டு தன்னுடைய நிலை விலைமாது என்ற அளவிற்குத் தரம் தாழ்ந்து விட்டதே என்பதை நினைத்துத்தான் அவள் தேம்பித் தேம்பி அழுதாள்.
அன்று அவள் அந்த அறையைவிட்டு அவள் வெளியேறவே இல்லை. அறைக்குள் அமர்ந்த அழுது கொண்டே இருந்தாள். அவள் இதயத்தில் ஒரு தெளிவு பிறந்தது. தன்னை மறந்து அவள் மனதிற்குள் சொர்க்கத்தைக் கனவு கண்டு கொண்டிருந்தாள். அவனும் ஆயிரத்தில் ஒருவன். அவ்வளவு தான். முதல் நாள் இரவில் தான் நடனம் ஆடியதை அவள் நினைத்துப் பார்த்தாள். அப்படித்தான் ஆடியதற்காக அவள் வெட்கப்பட்டாள். பைத்தியம் பிடித்த ஒரு பெண் மாதிரி தான் பாட்டுப் பாடியதையும், நடனமாடியதையும் அந்த மனிதன் ரசித்ததை அவள் நினைத்துப் பார்த்தபோது, அவளுக்கு ஒருவிதத்தில் மகிழ்ச்சியாகவே இருந்தது.