குணவதி - Page 20
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7239
அடுத்த நிவீடம் அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். ‘‘நான் செய்யிறது சரிதானா? நான் வளை ஏமாற்றுகிறேனா என்ன?’’
வினயன் வாசலை நோக்கி நடந்தான். தலையைச் சுற்றுவது போல் இருந்தது. வாசலிலேயே சிறிது நேரம் அசையாமல் நின்றான். விளக்கு பளிச்சென்று எரிந்து கொண்டிருந்தது.
அவன் திரும்பவும் அறைக்குள் வந்தான். கட்டிலில் போய் படுத்தான். கண்களை மூடினான். அப்படியே கண்களை மூடியவாறு படுத்துக் கிடந்தான்.
நிமிடங்கள் கடந்தன. மீண்டும் படுக்கையை விட்டு எழுந்தான். வேஷ்டிக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தான். விளக்கினடியில் கொண்டு போய் அதன் முனைப் பகுதிக்கு கூர்மை சரியாக இருக்கிறதா என்று விரலால் தடவி பரிசோதித்துப் பார்த்தான். மேஜையைத் திறந்து நீளமான ஒரே நேரத்தில் அகலம் குறைந்த ஒரு சிறு பெட்டியை எடுத்துத் திறந்தான். அதில் கத்தியைத் தீட்ட பயன்படும் கல் இருந்தது. அடுத்த நிமிடம் கல்லின் மேல் கத்தியை வைத்து கூர்மை ஏற்றத் தொடங்கினான்.
பரணில் எலி எதையோ உருட்டிக் கொண்டிருந்தது. வினயன் அதிர்ச்சியடைந்தவாறு காதுகளைத் தீட்டிக் கொண்டு சிறிது நேரம் நின்றான். வேறு எந்தச் சத்தமும் கேட்கவில்லை. பரிபூர்ண நிசப்தம் நிலவிக் கொண்டிருந்தது. மீண்டும் கத்தியைத் தீட்ட ஆரம்பித்தான். இரும்பும் கல்லும் உராய்கிறபோது உண்டாகிற சத்தத்தில் அவன் இன்னொரு முறை நடுங்கினான்.
அவன் எழுந்து அறைக்குள் இங்குமங்குமாய் வேகமாக நடந்தான். கத்தியைக் கையில் வைத்து அதன் எடை என்னவாக இருக்கும் என்று கணக்குப் போட்டான். அடுத்த நிமிடம் அதை மேஜை மேல் வைத்தான். தாழ்ப்பாள் போட்டு அடைக்கப்பட்டிருந்த ஜன்னலில் ஒரு சிறு ஓட்டை இருக்கும். வேகமாக ஒடிச்சென்ற வினயன் அந்த ஓட்டையின் வழியாக வெளியே பார்த்தான். வெளியே இருள் பயங்கரமாகக் கவிந்திருந்தது. அவன் விரலால் அந்த ஓட்டையை அடைத்தவாறு நின்றிருந்தான்.
சில நிமிடங்கள் அப்படியே சிலையென அசையாமல் நின்£றன். அப்போது அவன் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. மேஜையைத் திறந்து ஒரு தாளை எடுத்து சுருட்டி அதை வைத்து ஜன்னலில் இருந்த ஓட்டையை அடைத்தான். வேறு எந்த பிரச்சினையும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. சுவரில் தொங்கிக் கெண்டிருந்த ஒரு படம் அவனை, அவனின் செயல்களை உற்று பார்த்துக் கொண்டிருந்தது. வினயன் அந்தப் படத்தை எடுத்து அதையே உற்று பார்த்தான். என்ன பார்வை! அவன் அந்த படத்தைத் தரையில் எறிய, அது பல துண்டுகளாக உடைந்தது. அறையெங்கும் கண்ணாடித் துண்டுகள் சிதறிக் கிடந்தன.
விளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. அநிதப் பிரகாசம் அறை முழுவதும் பரவியிருந்தது. வினயன் ஒரு நிமிடம் கண்களை மூடினான். மீண்டும் கண்களைத் திறந்தான். விளக்கின் திரியை இறக்கிவிட்டான். அறை முழுக்க இருள் சூழ்ந்து மீண்டும் திரியை ஏற்றிவிட்டான். அப்போது அறை திரும்பவும் வெளிச்சத்தில் மூழ்கியது.
வினயன் என்ன காரணத்தாலோ லேசாக நடுங்கினான். மின்னி ஒளிர்ந்து கொண்டிருந்த கத்தியை கையில் எடுத்தான். அடுத்த நிமிடம் நடக்க ஆரம்பித்தான். கத்தியை ஓங்கினான். அவனுடைய கண்கள் ஒரு கொலைகாரனின் கண்களைப் போல குரூரம் நிறைந்ததாகவும், பயங்கரமானதாகவும் இருந்தன. ஒரே வெட்டு! காற்றில் கத்தியை வீசினான்.
கத்தியையே பார்த்தவாறு அவன் நின்றான். மீண்டும் அதை வேட்டிக்குள் செருகினான். கத்தி எங்கே கீழே விழுந்து விடப் போகிறதோ என்று வேட்டிக்கு மேல் பெல்ட்டால் கட்டினான்.
வினயன் கையை மடக்கி மூச்சை அடக்கிக் கொண்டு பார்த்தான். கையில் சதை திரண்டு உருண்டு தெரிந்தது. அவன் தன்னுடைய உடம்பை முழுவதும் கண்களால் மேய்ந்தான். கத்தியின் கைப்பிடி வேஷ்டிக்கு மேலே வயிறோடு சேர்ந்து இருந்தது.
மணி எட்டு அடித்தது. சாலையில் மக்கள் நடமாட்டம் நிறையவே இருந்தது. மக்களின் பேச்சு சத்தமும் சிரிப்புமாய் சாலை நிறைந்திருந்தது.
அவன் சட்டையை எடுத்து பரிசோதித்தான். அது ஒரு இளம் பச்சை நிற சட்டை வினயன் சிறிது நேரம் என்னவோ சிந்தனையில் ஆழ்ந்தவாறு மேஜையைத் திறந்தான். சிவப்பு மை இருந்த பாட்டிலை எடுத்து சாய்த்து கொஞ்சம் மையை அந்தச் சட்டையில் கொட்டினான்.
அந்தச் சிவப்பு நிறம் தெளிவாகத் தெரிந்தது. வினயன் ஆடையைக் கழற்றினான். பெட்டியைத் திறந்து அதற்குள் இருந்த வேட்டிகள் அனைத்தையும் வெளியே எடுத்துப் போட்டான். இளம் சிவப்பு நிறத்தைக் கொண்ட ஒரு சட்டையை எடுத்து அதில் சிவப்பு மையை ஊற்றி பார்த்தபோதும், ஒரு நிற வித்தியாசம் மை விழுந்த இடத்தில் நன்றாகவே தெரிந்ததை உணர்ந்தான். சிறிது நேரம் என்னவோ சிந்தித்தவாறு நின்றான். கத்தியை எடுத்து கையை லேசாக கீறி அந்த ஆடையில் இரத்தத்தைப் புரட்டிப் பார்த்தான். அவ்வளவு தெளிவாக அது தெரியவில்லை.
வேட்டியை மடித்துக் கட்டியவாறு வெளியே சட்டையை அணிந்து கொண்டு அவன் வெளியே புறப்பட்டான். மணி பத்து அடித்தது. சாலை ஆள் நடமாட்டமே இல்லாமல் அமைதியாக இருந்தது.
சாராயக் கடை இன்னும் அடைக்கப்படவில்லை. கடைக்குள் உரத்த குரலில் சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள். திறந்து கிடந்த ஜன்னல் வழியாக உள்ளேயிருந்த ரதீசனை வினயன் பார்த்தான். அவன் நன்றாகக் குடித்து போதையில் இன்னொரு ஆளுடன் தகராறு பண்ணிக் கொண்டிருந்தான்.
சாராயக் கடைக்கு சற்று தூரத்தில் ஒரு வீட்டில் திண்ணைக்குப் பின்னால் வினயன் ஒளிந்திருந்தான்.
இடுப்பில் வைத்திருந்த கத்தி தரையில் ‘‘சில்’’ என்று ஓசை உண்டாக்கியவாறு கீழே விழுந்தது. உள்ளே ஒரு நாய் குரைத்தது. வினயன் பயந்து எழுந்து நடந்தான்.
மணி பதினொன்று. பன்னிரண்டு. வினயன் சாலையோரத்தில் இருந்த ஒரு பள்ளத்தில் மறைந்து உட்கார்ந்தான். சொல்லப்போனால் மூச்சு விடக் கூட அவன் பயந்தான்.
சற்று தூரத்தில் உரக்க யாரோ பேசும் சத்தத்தைக் கேட்டு வினயன் கத்தியைக் கையிலெடுத்தான். அவன் மெதுவாக மூச்சை இழுத்து விட்டான். இதயம் துடிக்கும் சத்தத்தைக் கேட்டு அவன் பயந்தான். காற்றில் ஆடும் தாளைப் போல அவன் நடுங்கினான். கண்களைச் சுருக்கி வைத்துக்கொண்டு தூரத்தில் பார்த்தான்.
அந்தப் பேச்சு சத்தம் இப்போது கேட்கவில்லை. வினயன் மேலும் சிறிது தலையை வெளிப்பக்கமாய் நீட்டிப் பார்த்தான். அந்த இருட்டில் அவனால் எதையும் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. மேலும் உடம்பு மார்பு வரை வெளியே நீட்டிப் பார்த்தான். அப்போதும் யாரும் கண்களில் படவில்லை.