
‘‘அந்த சட்டை முழுதும் எரிஞ்சிருச்சா -?’’
‘‘கொஞ்சம் சாம்பலை நான் வெளியே எடுத்துப் போட்டேன்.’’
‘‘அதுல இரத்... ஆமா... அந்த சாம்பல் கருப்பாத்தானே இருந்துச்சு?’’
‘‘பிறகு... சாம்பல் எப்படி இருக்கும்?’’
சிறிது நேரம் என்னவோ சிந்தித்தவாறு அமர்ந்திருந்தான் வினயன்.
‘‘தெரியுமா? - அவன் கேட்டான்.’’
‘‘என்ன?’’
‘‘அந்தச் சாம்பல்ல இரத்... ஒரு நிற வித்தியாசம் தெரியலியா?’’
‘‘என்ன வித்தியாசம்?’’
‘‘நனைஞ்சிருந்த அந்தசட்டை முழுசும் எரிஞ்சதா?’’
‘‘ஆமா... நீ ஏன் அதை எரிச்சே? அதைக் கேட்டு வினயன் அதிர்ச்சியடைந்தான். தன் தாயை சந்தேகத்துடன் அவன் பார்த்தான்.’’
‘‘அம்மா... உங்களுக்குத் தெரிஞ்சு போச்சா?’’
‘‘என்ன சொல்ற?’’
வினயன் உரத்த குரலில் சிரித்தான்.
‘‘இல்ல... இல்ல... அம்மா, நான் சும்மா சொன்னேன். உங்களுக்குத் தெரிஞ்சிருந்தா...’’
‘‘உனக்குப் பைத்தியம்தான் பிடிச்சிருக்கு!’’
‘‘பைத்தியமா? நான் என்ன சொன்னேன்?’’
‘‘இரத்தம்... ரதீசன்... அப்படின்னு என்னமோ சொல்லிக்கிட்டு இருந்ததே...’’
ஒரு மிருகத்தின் கண்களைப் போல வினயனின் கண்கள் அதைக் கேட்டு பெரிதாயின. பார்க்கவே அவை மிகவும் பயங்கரமாக இருந்தன. ஒரு வகை கொடூரத், தன்மை அவனுடைய முகத்தில்வந்து ஒட்டிக் கொண்டு, பார்க்கவே சகிக்காத அளவிற்கு ஒரு அரக்கத்தனத்தை அங்கு உண்டாக்கியது. அதைப் பார்த்து உண்மையிலேயே அவனுடைய தாய் பயந்து போனாள்.
‘‘என்னை... எல்லாம் தெரிஞ்சு... ரதீ... எதுக்கு?’’ - வினயன் உரத்த குரலில் கத்தினான்.
‘‘கடவுளே... என் மகனே... உனக்கென்ன ஆச்சு?’’
வினயன் தன்னையும் மீறி கட்டிலில் போய் விழுந்தான். அவன் நிலையைப் பார்த்த அவனுடைய தாய் வாய் விட்டு அழ ஆரம்பித்தாள்.
‘‘குணவதி’’ - அவன் மெதுவான குரலில் உச்சரித்தான்.
‘‘என்னைக் கண்டுபிடிச்சிட்டாங்க... தூக்குமரம்...’’
வினயன் மீண்டும் கண்களைத் திறந்தான்.
‘‘மகனே... உனக்கு என்ன ஆச்சு? சொல்லுடா... அம்மாவை தேவையில்லாம கஷ்டப்படுத்தாதே...’’
மிகவும் களைத்துப் போயிருந்த வினயன் நாக்கு வறண்டு போய், அசையாமல் சில நிமிடங்கள் படுத்துக்கிடந்தான். அவன் தொண்டையில் கொஞ்சம் கூட ஈரம் இல்லை.
‘‘த...ண்...ணி...’’
அவன் தாய் உள்ளே போய் கஞ்சி கொண்டு வந்தாள்.
ஆர்வத்துடன் வினயன் கஞ்சியை வாங்கிக் குடித்தான். உடம்பில் இருந்த தளர்ச்சி போய், கொஞ்சம் புத்துணர்ச்சி பிறந்தது போல் இருந்தது. அவன் உள் மனதில் அந்த பயங்கர சம்பவம் ஒரு மின்னலைப் போல ஒரு நிமிடம் தோன்றி மறைந்தது. மகனின் நடவடிக்கைகளைத் தெரியாமல் கவலையுடனும் வாட்டத்துடனும் பக்கத்தில் அமர்ந்திருந்த தன்னுடைய தாயையே பயத்துடன் பார்த்தான் வினயன். மகனும் தாயும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். தாயின் கண்ணில் நீர் அரும்பியது.
‘‘என் தங்கமே!’’
வினயன் முகத்தை திருப்பிக் கொண்டான். சுவரைப் பார்த்தவாறு சாய்ந்து படுத்தான். அந்த வெண்மை வண்ணம் பூசிய சுவரில் இருந்த ஒரு கறையை அவன் கண்கள் பார்த்தன. அந்தக் கறை பெரிதாகி, இரத்தச் சிவப்பு வண்ணத்தில்... ஒரு மனித உருவமாகி... கண்ணும் மூக்கும் காலும் தலையும்... வினயன் நடுங்க ஆரம்பித்தான். அவனுடைய கண்களைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது.
‘‘மகனே!’’
ஒரு அசரீரியைக் கேட்பது போல் அது அவனுக்கு இருந்தது.
‘‘உனக்கென்னடா ஆச்சு?’’ - அவனின் தாய் தோளில் தன் தலையை வைத்தவாறு கேட்டாள்.
‘‘ஒண்ணுமில்ல...’’
‘‘நீ நடுங்குறதுக்கு... இரத்தம்... அவளோட தலை... அது இதுன்னு பேசுறதுக்கு...’’
‘‘எப்ப சொன்னேன்? ஒண்ணுமில்ல...’’
‘‘நேற்று ராத்திரி முழுசும் சொல்லிக்கிட்டே இருந்தியே!’’
‘‘நேற்று ராத்திரி நான் அந்த சம்பவத்தைப் பற்றியோ சொன்னேன்?’’
‘‘எந்த சம்பவம்?’’
‘‘அந்த... அந்த சம்பவம்... அம்மா, உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சி போச்சா?’’
‘‘எனக்கெப்படி தெரியும்?’’
‘‘தூக்கு... இல்ல... அம்மா, என்னைப் பற்றி உங்களுக்கு பயமொண்ணும் இல்லியே?’’
‘‘அப்படியெல்லாம் அம்மாகிட்டே பேசாதடா. நான் அப்படி நினைச்சுக்கூட... அட கடவுளே!’’
‘‘அப்ப... அம்மா, உங்களுக்கு எல்லாம் தெரியவேண்டாமா? நான் சொல்றேன்.’’
‘‘சரிடா மகனே... சொல்லு... உன் கஷ்டத்துக்குக் காரணம் என்ன?’’
‘‘ஆனா...?’’
‘‘என்ன?’’
‘‘அம்மா... மனிதனுக்கு உலகத்தோட உள்ள ஒரே உறவு அவனோட தாய்தானே?’’
‘‘நீ என்ன நினைச்சு பேசறேன்னே என்னால புரிஞ்சிக்க முடியல...’’
‘‘எனக்காக அம்மா... நீங்க உங்க உயிரைக் கூட தரத் தயாரா இருங்கீங்கள்ல?’’
‘‘மகனே... உனக்கு என்னடா வேணும்? நான் எது வேணும்னாலும் உனக்காகச் செய்வேன்.’’
‘‘அம்மா, உங்களை நீங்க விரும்புறதைவிட என்னை அதிகம் விரும்புறீங்கள்ல?’’
‘‘அது கடவுளுக்குத் தெரியும்.’’
‘‘சரி... அப்படின்னா நான் சொல்றேன்.’’
அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதைக் கேட்கும் ஆர்வத்துடன் அவனையே பார்த்தாள் அவன் தாய்.
‘‘அம்மா... நீங்க மனிதப் பிறவிதானே?’’
‘‘நான் உன்னோட அம்மா...’’
‘‘இருந்தாலும் சட்டத்தை மதிக்கணும்னும், சட்டத்தை மீறி நடக்குறவங்க மேல கோபமும் உங்களுக்கு இருக்கும்ல?’’
‘‘அதைப் பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது.’’
சிறிது நேரம் அவள் அமைதியாக இருந்தாள்.
‘‘மகனே... சொல்லுடா.’’
‘‘என்னம்மா?’’
‘‘சொல்றேன்னு சொன்னதை...’’
‘‘நான் என்ன சொல்றேன்னு சொன்னேன்?’’
‘‘நீ ஏன் இப்படி இருக்கே?’’
‘‘ஒரு காரணமும் இல்ல...’’
‘‘ஏதோ சொல்றேன்னு சொன்னது...’’
‘‘என்னைத் தேவையில்லாம கஷ்டப்படுத்தாதீங்க...’’
நேரம் ஓடிக்கொண்டிருந்தது. வினயனின் மனதில் உள்ள விஷயத்தை அறிய அவன் தாய் பிரியப்ப்டட்டாள்.
‘‘மகனே... அம்மாகிட்ட சொல்லுடா.’’
‘‘என்ன சொல்லணும்?’’
‘‘நீ பயப்படுறியா?’’
‘‘நான் குளிக்கணும்.’’
‘‘உடம்பு நெருப்பு மாதிரி சுடுது. வேண்டாம்...’’
‘‘என் உடம்புல...’’
‘‘உன் உடம்புல... என்ன?’’
‘‘ஓண்ணுமில்ல...’’
‘‘ஒண்ணுமே இல்லியா?’’
‘‘அம்மா, கொஞ்சம் போங்க. நான் தூங்கப் போறேன்.’’
வினயனுக்கு அந்தக் கொலையைப் பற்றி எந்த ஞாபகமும் இல்லை. ‘‘இரத்தம்’’, ‘‘அவனோட தலை’’, ‘‘தூக்குமரம்’’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
வினயன் கட்டிலை விட்டு எழுந்து மேஜையைத் திறந்து கண்ணாடியைக் கையிலெடுத்தான். காது மடிப்பிற்குப் பின்னால் ஒரு துளி இரத்தம் கட்டியிருந்தது. நெற்றியில் விழுந்து கிடந்த தலைமுடியில் இரத்தம் பட்டு காய்ந்து போயிருந்தது.
தன் தாய்க்குத் தெரியாமல், போய் குளித்தான்.
அந்தக் கொலை செய்தவனைப் பிடித்துவிட்டார்கள். காவல் நிலையத்தில் அவன் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டும் விட்டான்.
இப்படிப் பல கதைகளையும் வினயன் கேட்டான். எங்கு பார்த்தாலும் இதைப் பற்றித்தான் பேச்சாக இருந்தது.
வினயன் மந்திரசக்திக்கு ஆட்கொண்டவனைப்போல இங்குமங்குமாய் தன்னையே மறந்து அலைந்து திரிந்தான்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook