குணவதி - Page 21
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7239
வினயன் இப்போது நன்றாக மூச்சை இழுத்து விட்டான். பின்னர் என்ன நினைத்தானோ மூச்சை அடக்கியவாறு, உடம்பை உட்பக்கமாய் இழுத்துக் கொண்டான். கத்தி பிடித்திருந்த கையை முழங்காலில் சுற்றியவாறு அதன் மேல் முகத்தை வைத்துக் கொண்டு சிறிது நேரம் அசையாமல் உட்கார்ந்திருந்தான்.
வினயனின் கண்கள் அவனையும் மீறி மூடின. இருந்தாலும் அவன் தூங்கவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் அவன் உட்கார்ந்திருந்தான்.
குணவதியின் உருவம் லேசாக அவனின் மனதின் அடித்தளத்தில் தோன்றியது. அப்போதும் அவள் அழுது கொண்டுதானிருந்தாள். அவள் ஒரு போதும் சிரிக்க மாட்டாளா? அவளுடைய கூந்தல் அவிழ்ந்து கிடந்தது. கவலையால் ஆக்கிரமிக்கப்பட்ட அவள் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்ட வினயன் தன்னுடைய கைகளை நீட்டினான். காற்றைத் தன் கைகளால் அவன் தழுவிக் கொண்டிருந்தான்.
காற்று பலமாக வீசியது. தூரத்தில் ஒரு அழுகைச் சத்தம் கேட்டது. வினயன் அதைக்கேட்டு அழத் தொடங்கினான். எங்கோ தூரத்தில் ஆந்தையொன்று அலறியது.
தீராத நோயால் பீடிக்கப்பட்ட ஒரு மனிதன்! வினயன் கண்களை அகல விரித்தவாறு தூரத்தில் பார்த்தான். சகிக்க முடியாத ஒரு துர்நாற்றம் அவன் நாசித் துவாரத்திற்குள் நுழைந்து அவனைப் பாடாய் படுத்தியது. குணவதி செல்லமாக சிணுங்கிக் கொண்டிருந்தாள். அவள் அவனுடைய உடல் மேல் ஒட்டி படுத்தவாறு - அவன் கழுத்தைத் தன்னுடைய கைகளால் சுற்றியவாறு தோள் மீது தன்னுடைய முகத்தை வைத்திருந்தான்.
‘‘கண்ணே...’’
வினயன் அழைத்தான். அவன் குரலே அவளை சுயஉணர்வுக்குக் கொண்டு வந்தது.
வினயனின் உணர்வற்ற மனதில் கிடந்து போராடிக் கொண்டிருந்த உணர்ச்சிகள் மெல்ல எழுப்பி மேலே வந்தன. சூழ்ந்திருந்த காரிருளத் தாண்டி அவனுடைய கண்களில் மரங்கள் தெரிந்தன. அருவி தொடர்ந்து விழுந்து கொண்டிருக்கும் ஓசையும் காதில் விழுந்தது. ரதீசனின் கழுத்தை அறுத்து அந்த மரத்திற்குக் கீழே எல்லோரும் பார்க்கும்படி வைப்பதுதான் தன்னுடைய வாழ்க்கையின் லட்சியம் என்று நினைத்தான் வினயன். அடுத்த நிமிடம் கத்தியைக் கையிலெடுத்து சுழற்றினான். தான் செய்யப்போகும் காரியத்தை ஒரு நிமிடம் மனதில் அவன் ஓட்டிப் பார்த்தான். ‘‘அந்தத் தலை... அந்தத் தலை...’’ - அவள் முணுமுணுத்தாள். ‘‘நான் இனி மேல் ஒருமுறை கூட உங்களைத் தொட மாட்டேன்’’ - அவளின் கண்ணீர் வழிந்த முகம் அவனுடைய மனத்திரையில் தோன்றியது.
‘‘நான் உங்க மனைவி’’ - அந்தச் சிரிப்பு! அந்த நடனம்! அந்த அசாதாரணமான முத்தத்தின் மூலம் அவள் தன்னை முழுமையாக நம்பியதற்குக் காரணம்? அழகான பெண்கொடி அவள்! வினயன் மீண்டும் தன்னை மறந்தான். அவன் மனம் வெறுமையானது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல காட்சிகள் சற்று முன்பு தோன்றியதைப் போல தோன்றியது. வினயன் பள்ளத்தை விட்டு வெளியே வந்தான்.
போதை கலந்த ஒரு பேச்சு சத்தம் அவன் காதில் விழுந்தது. வினயன் மீண்டும் பள்ளத்திற்குள் போய் ஒளிந்து கொண்டான். அந்தப் பேச்சுச் சத்தம் அவனை நெருங்கிக் கொண்டிருந்தது. வினயன் ஒளிந்திருந்த இடத்திலிருந்து பார்த்தான்.
ரதீசனும் அவனுடைய நண்பனும் வந்து கொண்டிருந்தார்கள்.
ஒரே வெட்டு... இரத்தம் தெறித்தது. கழுத்து அறுபட்டு தலையும் உடம்பும் தனித்தனியாக... ரதீசன் நிலத்தில் விழுந்தான். துடித்துக் கொண்டிருந்த தலையை வினயன் கையில் எடுத்தான். கத்தி முனையால் அதை மூன்று நான்கு முறை குத்தி சிதைத்தான்.
அடுத்த நிமிடம் - ரதீசனின் நண்பன் வினயனை உடும்பென பிடித்துக் கொண்டான். அந்தப் பிடியிலிரந விடுபட எண்ணி உண்டான போராட்டத்தில் இரத்தம் விழுந்து கிடந்த மண்ணில் இருவரும் மாறி மறி விழுந்து கொண்டிருந்தார்கள். கத்தி இருந்த வலது கையை அவன் பிடியிலிருந்து வினயன் விடுவிக்க முயன்றான். மது அருந்தியிருந்த அவன் பிடி மேலும் இறுகியது. வினயன் கையிலிருந்த கத்தியால் அவனின் மணிக்கட்டை அறுத்தான். ‘‘அய்யோ...’’ என்று உரத்த குரலில் அலறியவாறு அவன் வினயனை விடுவித்ததும் கையிலிருந்த கத்தியை தூரத்தில் எறிந்துவிட்டு வினயன் ஓடியதும் ஒரே நேரத்தில் நடந்தன.
காற்றைவிட வேகமாக ஓடிய வினயன் அந்தக் காரிருளில் எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு ஆள் மீது மோத, அந்த ஆள் நிலை தடுமாறி கீழே சாய்ந்தான்.
13
அழுது அழுது கண்களும் முகமும் வீங்கிப் போய் ஒரு வாய் உணவு கூட உட்கொள்ளாமல் அருகிலேயே அமர்ந்து வினயனை கவனித்துக் கொண்டிருந்தாள் அவனுடைய தாய். அவன் கண்களைத் திறந்தான். வாயைத் திறந்தான். ஒரு நீண்ட பெருமூச்சை விட்டான். கண்களைத் திறந்து ஒரு வகை பயத்துடன் நாலா பக்கங்களிலும் பார்வையை ஓட்டினான். அவன் கண்கள் கிட்டத்தட்ட ஒரு எலுமிச்சம் பழம் அளவிற்கு இருந்தன. படுத்திருந்த இடத்தை விட்டு எழ முயற்சித்தான். ஆனால், உடல் ஒத்துழைக்க மறுத்தது.
‘‘மகனே...’’
வினயன் தன் தாயையே உற்று பார்த்தான். இரண்டாவது முறையாக மிகவும் கஷ்டப்பட்டு முயற்சி செய்து தலையணையில் கைகளை ஊன்றியவாறு தலையைத் தூக்கினான். தன்னை மூடியிருந்த போர்வையையும் தான் அணிந்திருந்த வேட்டியையும் உற்று பார்த்தான். தன்னுடைய கையைப் பார்த்தான். உள்ளங்கையில் இருந்த பல கோடுகளுக்கு மத்தியில் காய்ந்து போன இரத்தம் தெரிந்தது. கோடுகளுக்கு மத்தியில் காய்ந்து போன இரத்தம் தெரிந்தது.
அடுத்த நிமிடம் வினயன் படுக்கையை விட்டு எழுந்தான்.
‘‘அம்மா... தண்ணி...’’
அவன் தாய் நீர் எடுக்கப் போனாள்.
வினயன் தாண் அணிந்திருந்த வேட்டி, படுத்திருந்த பாய் எல்லாவற்றையும் கண்களால் மேய்ந்தான். கட்டிலில் அமர்ந்தவாறு மேஜையைத் திறந்து கண்ணாடியைக் கையில் எடுத்தபோது, அவன் தாய் அறைக்குள் வந்தாள். தன்னுடைய முகத்தைப் பார்ப்பதற்கு அதற்கு மேல் அவனுக்கு நேரமில்லை. ஆர்வத்துடன் நீரை வாங்கிய வினயன் கையையும் முகத்தையும் கழுவினான்.
‘‘மகனே... கொஞ்சம் கஞ்சி கொண்டு வரட்டா?’’
‘‘என் வேட்டியும் சட்டையும் எங்கே?’’
‘‘நேற்று ராத்திரி நான் கட்டியிருந்த அந்த சிவந்த...’’
‘‘நேற்று நீ வாய்க்கு வந்தபடி என்னென்னமோ உளறிக்கிட்டு இருந்தே. இன்னைக்குக் காலையில இந்தக் கதவை வம்படியா உடைச்சுல்ல நான் உள்ளே வந்தேன்...’’
‘‘அந்தச் சிவந்த சட்டை...’’
‘‘பெட்டியில பாரு.’’
‘‘இல்ல... அது... ’’
‘‘நீ கொஞ்சம் துணியை தீ வச்சு எரிச்சிட்டே.’’
அதைக் கேட்டு வினயன் அதிர்ந்தான்.