மனைவியின் மகன் - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7238
தாய் செய்த தவறுகள்... தவறுகள் செய்த தாய்மார்களும் அவர்களுக்கு பிள்ளைகளும் இருக்கத்தானே செய்கிறார்கள்?
அவன் கேட்டான்: ‘‘நான் என் அப்பாவை வெறுக்கணுமா?’’
‘‘கூடாது... கூடாது... என் மகன் தன் அப்பாவுக்கு எதிரா எதுவும் சிந்திக்கக் கூடாது. அவர் நமக்கு தெய்வம். அவர் இல்லைன்னா நம்ம நிலைமை என்ன? அப்படியொரு காரியத்தை செய்யவே கூடாது...’’
‘‘நீங்க எப்படியெல்லாம் எங்களைக் கஷ்டப்படுத்துறீங்க? இது ஒரு நரக வேதனையா இருக்கு.’’
அது ஒரு நரக வேதனைதான் என்பதை ஜானகி அம்மாவும் ஒத்துக் கொண்டாள். என்ன செய்வது? மகனின் நரக வேதனையைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர அந்த அப்பாவிப் பெண்ணால் என்ன செய்ய முடியும்? அவள் இதயம் வலித்தது.
‘‘மகனே, எல்லையைத் தாண்டினால் கிடைக்கக்கூடிய தண்டனை அதுதான்...’’
தாயும் மகனும் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. உள்ளே லலிதா உரத்த குரலில் ஜபித்துக் கொண்டிருந்தாள். மனதில் உண்டான பயம் போவதற்காக அவள் அப்படி செய்து கொண்டிருந்தாள். சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்த யாரோ சிரிக்கும் சத்தம் கேட்டது. ஒரு நீண்ட பெருமூச்சைப் போல காற்று வீசியது. ஒரு வண்டு ஓசை எழுப்பியவாறு விளக்கில் மோதிவிட்டு பறந்து கொண்டிருந்தது.
‘‘என் மகன் பிரபா மேல் இரக்கமிருந்தா...’’
ஜானகி அம்மாவின் அந்த வார்த்தைகளை முழுமையாக முடிக்க விடவில்லை கோபன். அவன் இடையில் புகுந்து சொன்னான்:
‘‘இரக்கப்படுவதா? அந்த மனிதன் ஒரு கெட்ட கனவாச்சே! எல்லார் வாழ்க்கையிலும் ஒரு கரு நிழல்!’’
‘‘ஆனா, அவனைப் பெற்றது நான்தான்டா மகனே!’’
கோபன் மீண்டும் தன் தாயின் முகத்தை ஏறிட்டு நோக்கினான். அவள்- அவனைப் பெற்றெடுத்த தாய். அதைப் போலவேதான் பிரபாவையும் அவள் பெற்றெடுத்திருக்கிறாள். ஒரு பெண் தனக்குப் பிறந்த பிள்ளைகள்மீது பாசம் வைப்பாள். அது ஒரு எழுதப்படாத சட்டம்.
‘‘அதுனாலதான் இன்னைக்குப் பாதையில வந்துக்கிட்டு இருக்கிறப்போ என்னைக் கூப்பிட்டவுடன் நான் நின்னேன்.’’
‘‘அவன் எதுக்கு உன்னை அழைச்சான்?’’
‘‘அப்பாவுக்கு எதிரா சில விஷயங்களைச் சொல்வதற்காக.’’
குற்றவாளியின் மனதைப் பிடித்து நிறுத்துவதைப் போல தன் தாயின் முகத்தை உற்று நோக்கியவாறு கோபன் கேட்டான்:
‘‘அந்த நாடோடி யார்? அவன் எதுக்காக இந்த ஊர்ல சுத்திக்கிட்டு இருக்கான்?’’
அதைக் கேட்டு ஜானகி அம்மா வெலவெலத்துப் போனாள். அடுத்த நிமிடமே எங்கே தான் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லிவிடுவோமோ என்று அவள் பயந்தாள். வெளியே ‘யார் அது?’ என்று வேலைக்காரன் யாரையோ பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்தான். ஜானகி அம்மா பதறுகிற குரலில் சொன்னாள்:
‘‘பிரபாவுக்கு இங்கே என்ன வேலை? நான் அவனை எப்படியோ பெத்துட்டேன். நாங்க வேணும்னா இந்த ஊரை விட்டு போயிடுறோம். அப்படின்னா எல்லாருக்கும் திருப்திதானே? அவனைப் பெத்ததுக்கு அப்படியாவது பரிகாரம் கிடைக்கட்டும்.’’
‘‘என்னையும் லலிதாவையும் பெத்ததுக்குப் பரிகாரம் என்ன?’’
‘‘நான்தான் அதையும் செய்யணும். நான் இங்கே இருக்குறதே பாரம்.’’
கோபன் நிலைகுலைந்த மனதுடன் வராந்தாவில் இப்படியும் அப்படியுமாக நடந்து கொண்டிருந்தான். அந்த வீட்டில் நிலவிக் கொண்டிருந்த சூழ்நிலை அவனை மூச்சடைக்கச் செய்தது. அங்குள்ள உறவுகள் ஏன் இப்படி சிக்கல்கள் கொண்டதாக இருக்கின்றன என்பதை அவன் எண்ணிப் பார்த்தான் யாரிடமும் அவனுக்கு ஒரு மதிப்போ, பாசமோ தோன்றவில்லை. அவன் தன் தந்தையிடமும் பிறகு லலிதாவிடமும் அவன் ஏதாவது கூறத்தான் போகிறான். அவர்கள் அதற்குத் திரும்ப ஏதாவது கூறுவார்கள். எதை நம்புவது? யாரை மதிப்பது? ஏதாவதொன்றை உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொள்ள அவனுடைய மனம் துடியாய்த் துடித்தது. ஒரு நிரந்தர நம்பிக்கை கிடைக்காதா என்று அவன் ஏங்கினான்.
அவன் கண்ணீருடன் சொன்னான்: ‘‘அப்பா அம்மாவை நம்பினாங்க. அம்மா அப்பாவை நம்பினாங்க. ஒருவர்மேல ஒருத்தர் அன்பு செலுத்தினாங்க. பிள்ளைகள் அப்பா- அம்மா ரெண்டுபேர் மேலேயும் அன்பு செலுத்தினாங்க. அப்படியொரு வீடு... அம்மாவோட மடியில உட்கார்ந்து பால் குடிக்கிறப்போ அந்தக் குழந்தைக்கு அப்பாக்கிட்ட இருந்து ஒரு முத்தம் கிடைக்கும்... அது எவ்வளவு பெரிய ஆனந்தம்!’’
அவன் என்ன சொல்கிறான் என்பதை ஜானகி அம்மாவால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆமாம்- அப்படிப்பட்ட ஒரு வீடு அமையவில்லை. அப்படிப்பட்ட எதுவும் நடக்கவில்லை. தந்தையும் தாயும் பிள்ளைகளும் சேர்ந்து விளையாடி ரசிக்கும் சத்தம் நிறைந்திருக்கும் ஒரு வீடு அங்கு இல்லை என்பது உண்மை தான். தந்தை குழந்தைக்கு முத்தம் தந்ததை தாய் ரசிக்கவில்லை. தாய் குழந்தையைக் குளிப்பாட்டுவதைப் பார்த்து தந்தை மனதில் மகிழ்ச்சி அடையவில்லை. ஒரே வயிற்றில் பிறந்த அண்ணனும் தம்பியும் ஒருவரையொருவர் அறியாமல் இருந்தார்கள். அங்கு பிள்ளைகள் ஒருவரோடொருவர் சண்டை போட்டுக்கொள்ளவில்லை. தாய் இடையில் புகுந்து அந்தச் சண்டையை விலக்கவில்லை. தந்தை அங்கு நீதிபதியாக வரவில்லை.
கோபன் சொன்னான்: ‘‘என் அம்மா, இனிமேலாவது நீங்க சேர்ந்து ஒண்ணா இருக்கக்கூடாதா? அந்த சொர்க்கம் மட்டும் கையில கிடைக்கிறதா இருந்தா, அந்த மனிதனை ‘அண்ணே’ன்னு நான் கூப்பிடுறேன்.’’
வாழ்க்கையில் கோபன் சொல்ல நினைத்தது அது ஒன்றுதான். அது ஒன்றுதான் அவன் அதுவரை தெரியாமல் இருந்தது. அவனுடைய வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்கள் அவன் நினைத்தபடி நடந்தபோது, அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், அந்த ஒரு விஷயம் மட்டும் நடக்கவில்லை. அவனுக்குத் தாயும் தந்தையும் வேண்டும். அண்ணன் வேண்டும். அந்தக் குடும்ப உறவுகளின் இனிமையை அனுபவிக்கவேண்டும். கோபனின் கண்களிலிருந்து நீர் அருவியென வழிந்தது. ஜானகி அம்மாவும் அழுதாள். அவள் தன்னையும் அறியாமல் கைகளை நீட்டினாள். அந்தக் கைகளுக்கு இடையில் கோபன் தன் தாயின் மார்புமீது சாய்ந்தான்.
இயற்கை வாழ்த்தியது. எரிந்துகொண்டிருந்த தீபம் அப்படியே நின்றது. மனதிற்கு நிம்மதி தரும் ஒரு இனிய இசை தூரத்தில் எங்கோ முழுங்குவதுபோல் இருந்தது. கோபனின் கண்கள் மூடின. தாய் அவனுடைய நெற்றியில் முத்தமிட்டாள்.
‘‘கோபா!’’
பத்மநாபப் பிள்ளை பின்னாலிருந்து அழைத்தார். கோபனும் அவனுடைய தாயும் அதிர்ச்சியடைந்து பிரிந்தார்கள்.
‘‘அண்ணன்னு அழைக்கலாம்... அப்படித்தானே கோபா?’’ பத்மநாபப் பிள்ளை கேட்டார்.
அதற்கு யாரும் எந்த பதிலும் கூறவில்லை.
‘‘இல்ல... இல்ல...’’ அவர் சொன்னார்: ‘‘அடியே, நீ அவனை மயக்கி...’’
‘‘இது என் உரிமை.’’
கோபன் எதுவும் பேசாமல், ஒரு குற்றவாளியைப் போல உள்ளே நடந்தான்.