மனைவியின் மகன் - Page 12
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7238
‘‘உன் உரிமை!’’- பத்மநாபப் பிள்ளை பற்களைக் கடித்தார்.
‘‘ஆமா... நான் அவனோட அம்மா.’’
‘‘அது உண்மைதான்.’’
ஜானகி அம்மா பத்மநாபப் பிள்ளையை உற்றுப் பார்த்துவிட்டு உள்ளே நடந்தாள்.
6
அந்த வீட்டின் மூலையிலிருந்த ஒரு அறைக்கு ஜானகி அம்மா மாற்றப்பட்டாள்.
அந்த அறையின் கதவுகளும் ஜன்னல்களும் அன்று திறக்கப்பட்டன. அதற்குள் பிரகாசமான ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அப்பாவிப்பெண்! ஒதுக்குப்புறமாக இருந்த அந்த மூலையிலேயே முடங்கிக்கொண்டு இருந்துவிடலாம் என்று அவள் தீர்மானித்து விட்டாள்!
அன்று நடந்த சம்பவங்களை ஜானகி அம்மா நினைத்துப் பார்த்தாள். அவளுக்கு வாழ்வதற்கு இடமில்லை. வழியில்லை. அது இன்றைய பிரச்சினை மட்டுமில்லை. எப்போதும் அவளுடைய நிலை இதுதான். எனினும், அவள் வாழ்ந்தாள். வாழவேண்டிய சூழ்நிலை என்ற முறையில், வாழ்வதற்காக அவள் மனைவியாக ஆனாள். மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். இருந்தாலும் யாரும் தன்மீது அன்பு செலுத்தியதாக அவள் நினைக்கவில்லை.
அன்று தன் கணவரிடம் சொன்ன விஷயங்கள் எதுவும் ஜானகி அம்மாவிற்குச் சரியாக ஞாபகத்தில் இல்லை. இருந்தாலும், அவ்வளவும் சொன்னதன் மூலம் அவளுக்கு இதயத்தின் கனம் குறைந்து விட்டதைப் போல் இருந்தது. அவள் பலவற்றிற்கும் ஆசைப்படுகிறாள். ஆனால், அவற்றைக் கேட்க அவளுக்கு எந்த அதிகாரம் இருக்கிறது?
எல்லா விஷயங்களையும் ஜானகி அம்மாவால் பொறுத்துக் கொள்ள முடியும். அவளுடைய மகனை வைத்தே பல விஷயங்களையும் சொல்ல வைத்தது அவளால் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்று. கோபன் கேட்டதெல்லாம் சரிதான். அவள் கேட்ட ஒவ்வொன்றுக்கும் அவள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். அவனை உலகத்திற்குக் கொண்டு வராமலே இருந்திருக்கலாம். அதே மாதிரி பிரபாவிற்கும் பதில் சொல்லவேண்டிய சூழ்நிலை அவளுக்கு உண்டாகியிருக்கிறது. யாருக்கும் யாரையும் மன்னிக்க விருப்பமில்லை. அங்கு எல்லாரும் தங்கள் நிலையை நியாயப்படுத்தவே செய்கின்றனர். அவள் மட்டுமே அங்கு குற்றவாளி!
எனினும், அன்று அந்த அளவிற்குத் தான் நடந்திருக்கவேண்டியதில்லை என்றே அவள் நினைத்தாள். பிரபாவிற்கு அங்கு வாழ்வதற்கான உரிமை இல்லை என்பது உண்மைதானே? அது யாருடைய வீடு அவனுடைய வீடுமல்ல, தன்னுடைய வீடும் அல்ல. அதை தான் ஒத்துக் கொண்டிருக்கலாம்.... அப்படியானால் பிரபா எங்கு போவான்? எங்கும் போக முடியாது... அவன் இங்கேயே வாழ்ந்தால்தான் என்ன? அவனால் இங்கு யாருக்கு என்ன தொந்தரவு இருக்கிறது? அவன் ஒரு பெண்ணைக் காதலிக் கிறானென்றால் அதனால் கோபனுக்கும் அவனுடைய தந்தைக்கும் என்ன இழப்பு இருக்கிறது? ஆனால், அவனுக்கு ஒரு பெண்ணைக் காதலிப்பதற்கான தகுதி இருக்கிறதா?
இரவு நன்கு இருட்டிவிட்டிருந்தது. நள்ளிரவுக் கோழி கூவியது. ஜன்னல் வழியாக ஜானகி அம்மா வெளியே பார்த்தாள். வானத்தில் பலகோடி நட்சத்திரங்கள் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. சுற்றிலும் ஒரே அமைதி! இப்போது வெளியே என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது!
‘‘அம்மா, நீங்க இங்கேயா இருக்கீங்க?’’
ஜானகி அம்மா திரும்பிப் பார்த்தாள். அங்கு பிரபா நின்றிருந்தான். பிரபா ஜானகி அம்மாவை நெருங்கிவந்தான். அவன் அவளுடைய முகத்தைக் கையால் உயர்த்தியவாறு கேட்டான்: ‘‘அம்மா, நீங்க அழுறீங்களா? ஏம்மா நீங்க அழணும்?’’
‘‘என் வாழ்க்கையில ஒரு முக்கியமான கட்டம் இப்போ ஆரம்பச்சிருக்கு மகனே!’’
‘‘முக்கியமான கட்டமா? அது முடிஞ்சிடுச்சில்லம்மா?’’
‘‘எனக்கும் கோபனோட அப்பாவுக்கும் சண்டை.’’
அது பிரபாவைப் பொறுத்தவரை ஒரு செய்தி. அவ்வளவுதான்.
‘‘சண்டை எப்படிம்மா வந்துச்சு? நீங்க புத்திசாலியாச்சே! இல்லன்னா... நீங்க என்கிட்ட அதைப்பற்றி சொல்லவே வேண்டாம்.’’
‘‘நான் புத்திசாலின்னு உனக்குத் தோணுதா?’’
அதைப்பற்றி எண்ணிப் பார்க்க வேண்டிய அவசியமே பிரபாவிற்கு இல்லை. அந்தக் கேள்விக்குரிய பதிலை அவன் ஏற்கெனவே சிந்தித்து வைத்திருந்தவைதான்.
‘‘எந்தவொரு பொண்ணுக்கும் நடக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினைகள் வாழ்க்கையில் நடந்தும், நீங்க அதுல வெற்றி பெற்றீங்கம்மா.’’
அர்த்தம் நிறைந்த அமைதி அங்கு நிலவிக் கொண்டிருந்தது. இருவருக்கும் சொல்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருந்தன. அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு ஜானகி அம்மா கேட்டாள்: ‘‘பிரபா உனக்கு உன்னைப் பற்றித் தெரியுமா?’’
அதற்கு பிரபா சிரித்தான். பிறகு ‘‘தெரியும்’’ என்று அவன் சொன்னான்.
‘‘எதுக்கு ஒரு பெண்ணை வாழ்க்கைக்குள்ளே இழுத்தே?’’
‘‘எந்தப் பொண்ணை?’’
‘‘அந்த அப்பாவிப்பொண்ணை!’’
தான் நினைத்திருந்ததைவிட வேறு ஏதோவொன்றை ஜானகி அம்மா கூறப்போகிறாள் என்பதை பிரபா புரிந்து கொண்டான். அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். ஜானகி அம்மா சொன்னாள்:
‘‘நீ அழியப்போற. அதை அமைதியா பார்த்துக்கிட்டு இருக்கிறதை தவிர எனக்கு வேற வழி இல்ல. அழிவதற்காகப் பிறந்த நீ அழிஞ்சே ஆகணும். நீ எதுக்கு காதலிச்சே? உனக்கு காதலிக்கிறதுக்குத் தகுதியே இல்ல.’’
அமைதியாக தாய் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான் பிரபா.
‘‘இது ஒரு சவால்மா!’’
‘‘சவாலா?’’
ஜானகி அம்மாவுக்குப் புரியவில்லை. அவள் தொடர்ந்து கேட்டாள்:
‘‘சவாலா? யார்கிட்ட சவால்? நீ அந்தப் பொண்ணை ஏமாத்திட்டியா?’’
‘‘இல்ல... காதலிக்க முடியும்னு- காதலிக்கப்பட தகுதி இருக்குன்னு நிரூபிச்சிட்டேன். அந்த விதத்துல எனக்கு சந்தோஷம்தான்மா.’’
‘‘நீ அவளை ஏமாத்திட்டே உன் சவாலுக்கு அவளை நீ ஒரு கருவியா பயன்படுத்திட்டே...’’
அவளை ஏமாற்றி விட்டான்! அவளை ஒரு கருவியாகப் பயன்படுத்தி விட்டான்! இரண்டிற்கும் அர்த்தம் இருப்பதாக பிரபா நினைத்தான். இரண்டும் உண்மைகளே ஏமாற்றுவது, கருவியாகப் பயன்படுத்துவது. அதுவரை அவற்றைப் பற்றி பிரபா சிந்தித்துப் பார்த்ததில்லை. ஏமாற்றியதற்கும், கருவியாகப் பயன்படுத்தியதற்கும் கிடைக்கும் பரிசு என்னவாக இருக்கும்? ஏமாற்றுவது என்பதைப் பற்றி பிரபா ஆராயத் தொடங்கினான்.
‘‘நீ அவளைக் காதலிக்கிறதா இருந்தா, உன்னோட பாழாய்ப் போன வாழ்க்கையில அவளைப் பங்காளியா கொண்டு வந்திருப்பியா?’’
‘‘இல்ல... இல்ல...’’ பிரபா சொன்னான். ‘‘இல்ல... நான் இப்படியே எங்க வேணும்னாலும் இஷ்டப்படி சுற்றுவேன். அவளை வாழ்க்கையில பங்குகாரியா ஆக்குறதுன்றது...’’
‘‘ஒரு பொறுப்புணர்வு...’’
‘‘அந்தத் தகுதி எனக்கில்ல... அம்மா அந்த நாடோடிக் கூட்டத்துல இருக்குற பெண்கள்ல ஒருத்திக்கிட்ட நான் பிறந்திருக்கணும்.’’
பிரபா ஜானகி அம்மாவின் முகத்தை உற்றுப் பார்த்தான். அவளிடம் எந்தவித உணர்ச்சி வேறுபாட்டையும் அவன் பார்க்கவில்லை. அவள் மிகவும் அமைதியான குரலில் சொன்னாள்: ‘‘நான் அப்படிப்பட்ட ஒருத்தி இல்ல...’’
‘‘அப்படி உங்களுக்குத் தோணுதாம்மா!’’
‘‘அது உன்னோட துரதிர்ஷ்டம் மகனே!’’
‘‘துரதிர்ஷ்டம்’’ என்று இரண்டு மூன்று முறை பிரபா திருப்பித் திருப்பிக் கூறினான். அவன் எவ்வளவோ கேள்விகளைத் தன் தாயைப் பார்த்துக் கேட்க வேண்டுமென்று நினைத்தான்.