மனைவியின் மகன் - Page 16
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7238
இந்த இருபத்தொரு வருட காலமாக தான் ஏமாற்றப்பட்டு வந்திருப்பதாக அவர் நினைத்தார். இல்லை... அவளால் அப்படி நடக்க முடியாது. இன்னொரு மனிதனுடன் உறவு கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையவில்லை. இருந்தாலும், யாரோ ஒரு மனிதன் ஒரு நிழலைப் போல தன்னுடைய வாழ்க்கையைப் பிரகாசம் குறையச் செய்து கொண்டிருந்தான் என்பது மட்டும் பத்மநாபப் பிள்ளைக்கு தோன்றது. உறங்கிக் கொண்டிருக்கும்பொழுது கூட அவர் காதுகள் மிகவும் கவனமாக இருந்தன. வீட்டில் மரங்களுக்கு மத்தியில் யாரோ நடந்து மறைவதைப் போல அவருக்குப் பலமுறை தோன்றியிருக்கிறது. இல்லை... நிச்சயம் அவள் அப்படிச் செய்திருக்க மாட்டாள். நடக்க முடியாது. எனினும், கடந்த இருபத்தொரு வருடங்களும் சந்தேகம் கலந்த பயப்படக் கூடியவையாகவே இருந்து வந்திருக்கின்றன. சொல்லப் போனால் இத்தனை வருடங்களில் அவர் சரியாக உறங்கக் கூட இல்லை.
பிள்ளைகள் தனக்குப் பிரயோஜனமாக இருக்க மாட்டார்கள் என்று அவள் சொன்னாள். அவள் ஏன் அப்படிச் சொன்னாள்? பிள்ளைகள் தந்தைக்குப் பிரயோஜனமாக இருக்க மாட்டார்களா?
ஜானகி அம்மா சிந்தித்துப் பார்ப்பதற்கும் ஏராளமான விஷயங்கள் இருந்தன. அவள் வாழ்க்கையும் ஓரு தோல்விக் கதையாகவே அமைந்து விட்டது. அது எந்த இடத்தில் ஆரம்பித்தது என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். அந்தக் குழந்தை பிறந்திருக்கக் கூடாது! பிறகு ஒரு கணவன் அமைந்திருக்கக் கூடாது. வாழ்வதற்கு அந்த அளவிற்கு விருப்பப்பட்டிருக்கக் கூடாது. அவள் கணவன் உண்மையாகவே அவளைக் காப்பாற்றியவர்தான். தெய்வம்தான். ஆனால், கடந்துபோன இருபத்தொரு வருடங்களும் அவளுக்கு ஒரு நரகமாகவே இருந்து விட்டது. அவள் தன் கணவனை வணங்கினாள். அவருக்குக் கீழ்ப் படிந்து நடந்தாள். எவ்வளவோ விஷயங்களைச் சகித்துக் கொண்டு வாழ்ந்தாள். எனினும், ஒரு மனைவிக்கு கிடைக்க வேண்டிய பலவும் அவளுக்குக் கிடைக்கவில்லை. அது வேறு யாரின் குற்றமுமல்ல என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ள ஜானகி அம்மா முயற்சி செய்தாள். இப்படி ஒரு பெண்ணுக்கு ஒரு கணவனிடமிருந்து கிடைக்க வேண்டிய பல விஷயங்கள் கிடைக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் ஒரு கணவனுக்கு எந்த அளவிற்கு மனைவிமீது நம்பிக்கை இருக்கும்? அவளுக்குத் தன்னுடைய உரிமைகளைக் கேட்டு பெறுவதற்கான தைரியம் எந்த அளவிற்கு வரும்? ஆனால், அந்த அளவிற்கு சகிப்புத் தன்மையுடன் அவள் வாழ்ந்தும், அதைப் பார்த்துப் புரிந்து கொள்வதற்கு அந்தக் கணவனால் முடியவில்லை. அது மனிதத் தன்மையா?
ஜானகி அம்மாவின் வாழ்க்கையை விழுங்கிய அந்தக் கரும் நிழலிலிருந்து வெளிய«றி வெளிச்சத்தில் கால் வைக்க இன்றுவரை அவளால் முடியவில்லை. இவ்வளவு பெரிய மாளிகைக்கு வந்த பிறகும், மற்றொரு மனிதரின் மனைவியாக ஆன பிறகும், இரண்டு பிள்ளைகள் பிறந்த பிறகும், அதைவிட்டு வெளியே குதிக்க அவளால் முடியவில்லை. பகல் நேரத்தில்கூட தனியாக இருக்க அவளுக்குப் பயமாக இருக்கிறது. மாலை நேரம் வந்துவிட்டால் அவள் வெளியிலேயே வருவதில்லை. இரவில் ஜன்னல்களையும், கதவையும் இறுக மூடிவிட்டே அவள் தூங்குவாள். அப்படியிருந்தும் ஆழ்ந்து அவளால் தூங்க முடிவதில்லை. அது என்ன சாபமோ தெரியவில்லை. கணவர் தன்னைச் சந்தேகிக்கிறார் என்பதை வைத்து அவரைக் குற்றவாளி என்று கூறிவிட முடியுமா?
அப்படி ஒரு குழந்தை பிறந்திருக்கக் கூடாது. ஆனால், வரலாறு திரும்புகிறதே! இப்போது அதேமாதிரி ஒரு குழந்தை பிறக்கப் போகிறது. பிரபா இரவு நேரங்களில் ஒரு பேயைப் போல அலைந்து திரியப் போகிறான். அவனுடைய காலடிச் சத்தம் கேட்டு ஒரு உறக்கம் கிடைக்கப் போவதில்லை. அந்தக் குழந்தை பிறக்கக் கூடாது.
ஜானகி அம்மாவைப் பார்ப்பதற்காக அங்கு ஒரு வைத்தியன் இரண்டு மூன்று நாட்கள் வந்தான். அவனிடம் அவள் நீண்ட நேரம் ரகசியமாக பல விஷயங்களைச் சொன்னாள்.
அடுத்த நாள் காலையில் பிரபாவும் அவனுடைய தாயும் சேர்ந்து பேசினார்கள். அந்தக் குழந்தை பிறக்கவே கூடாது என்று இருவரும் முடிவு பண்ணினார்கள். ஒரு இரவு வேளையில் பெட்டியிலிருந்த தன்னுடைய நகைகளையும் ஒரு புட்டியையும் எடுத்துக்கொண்ட ஜானகி அம்மா தலையில் ஒரு கறுப்பு போர்வையைப் போட்டு மூடிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள். அவள் பிரபாவின் காதலி விஜயம்மாவின் வீட்டிற்குச் சென்றாள்.
‘‘என் பிரபா விஷயத்துல நான் ஒரு பெரிய தப்பைச் செஞ்சிட்டேன். அவன் முகத்தைப் பார்க்கக்கூட என்னால முடியல. என் மற்ற பிள்ளைங்க என் மேல பாசம் வைக்கிறதுக்கே தடைகள் இருக்கு. இதுதான் மகளே என் உண்மையான நிலை.’’
ஜானகி அம்மாவின் வார்த்தைகளை விஜயம்மா இதயத்தில் எடுத்துக் கொள்ளவேயில்லை என்று தோன்றியது. அவளின் முகத்தில் எந்தவித உணர்ச்சி வேறுபாடும் தெரியவில்லை. ஜானகி அம்மா இவ்வளவு நேரம் பேசிய பிறகும், அதனால் எந்தவொரு பிரயோஜனமும் உண்டாகவில்லை.
‘‘குழந்தே... ஒருமுறை தப்பு பண்ணிட்டா ஒரு பெண் எப்பவும் தப்பு பண்ணினவதான்.’’
அதற்கு விஜயம்மா அடுத்த நிமிடமே சொன்னாள். ‘‘அது தப்பாக இருந்தாத்தானே?’’
வெளியே மணல் நிறைந்திருக்கும் முற்றத்தில் கனமான பாதங்களின் ஓசை கேட்டது.
‘‘யார் அது?’’ - விஜயம்மா பயத்துடன் கேட்டாள். அமைதியான குரலில் ஜானகி அம்மா சொன்னாள்.
‘‘யாருமில்ல குழந்தை...’’
‘‘இல்ல... காலடிச் சத்தம் கேட்டது.’’
‘‘அது ஒரு தப்புதான் மகளே... அது ஒரு பாவம். எதிர்காலத்துல நீ எவ்வளவோ விஷயங்களைப் பற்றி குறை சொல்வே...’’
உறுதியான குரலில் விஜயம்மா சொன்னாள்:
‘‘இல்ல... எனக்கு அப்படி எந்தக் குறையும் இல்ல. எனக்கு அப்படி உண்டாகவும் செய்யாது.’’
‘‘அது விஷயம் தெரியாததுனால... வாழ்க்கையைப் பற்றி அறிவு இல்லாததுனால... உனக்கு வாழ்றதுக்கு ஆசையில்லையா மகளே?’’
‘‘எனக்கு வாழ்றதுக்கு எந்தவிதத் தடையும் இல்லையே!’’
ஒரு புன்சிரிப்புடன் ஜானகி அம்மா சொன்னாள்: ‘‘அந்தத் தடைகள்லாம் வரும். நீ பிரபாவை வெறுக்காமல் இருக்கணும்னா, அவனோட உள்ள உறவு நிலையா இருக்கணும்னா...’’
ஜானகி அம்மா தான் சொல்லிக் கொண்டிருந்ததை பாதியில் நிறுத்தினாள். முழுவதும் சொல்வதற்கு அவளுடைய நாக்கு தயாராக இல்லை. அவள் இதயம் தடுமாறியது. ஒருவித பதைபதைப்பு அவளிடம் குடிகொண்டது.
விஜயம்மா கேட்டாள்: ‘‘அப்படின்னா?’’
தொண்டை அடைக்க ஜானகி அம்மா சொன்னாள்: ‘‘அது... அது... இருக்கக்கூடாது.’’
‘‘எது?’’
இடியைப் போல அந்தக் குரல் ஜானகி அம்மாவின் செவிகளில் வந்து மோதியது.
‘‘அது இருக்கக் கூடாது. நான் அதுக்குக் கொண்டு வந்திருக்கேன்.’’