மனைவியின் மகன் - Page 18
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7238
வெறுப்போட அது என்னையே வெறிச்சுப் பார்க்கும். என்கிட்ட பேசும், அழும், பற்களைக் கடிக்கும். அளவுக்கதிகமா அன்பு செலுத்தும். ரொம்பவும் நெருக்கமா வந்து பிடிக்கும்... அந்த நாள் தெளிவா ஞாபகத்துல வரும். இரவு நேரங்களில் இப்போ கேட்ட மாதிரி முனகல்களையும் காலடிச் சத்தத்தையும் கேட்டு நான் நடுங்கிப் போய் எழுந்திருப்பேன். இதுதான் என்னோட அன்றாட வாழ்க்கை. என் கணவர் சில நேரங்கள்ல அதிர்ந்து போய் தூக்கத்துல இருந்து எழுந்திருக்கிறது உண்டு. அவர் இடி இடிக்கிற குரல்ல கேட்பாரு- ‘யார் அது’ன்னு. அதற்குப் பிறகு எந்தச் சத்தமும் இருக்காது.’’
விஜயம்மாவிற்கு அந்த விஷயம் தெளிவாகப் புரிந்தது. அதுதான் தன்னுடைய காதலன் என்பதை அவள் புரிந்து கொண்டாள். அதுதான் அந்த மனிதன் பிறந்த இரவு. அதுதான் அந்தக் கணவனின் வாழ்க்கை! ஆனால், அந்த முனகல்களும் காலடிச் சத்தமும் என்ன? எனினும் முன்னால் நின்றிருக்கும் பெண் இவை எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டியவள்தான். அவள் அந்த அளவிற்குப் பயங்கரமானவளாயிற்றே! அந்த வார்த்தைகள் அவளையும் மீறி அவளுடைய வாயிலிருந்து வெளிவந்தன.
‘‘நீங்க இதை எல்லாம் அனுபவிக்கணும்.’’
‘‘ஆமா மகளே! கன்னிப்பெண் ஒருத்தி கர்ப்பம் தரிச்சு பிள்ளை பெற்றால் அவ நிலைமை இதுதான். இப்போ உனக்குப் புரியுதா?’’
விஜயம்மா வசமாக மாட்டிக்கொண்டாள் என்று ஜானகி அம்மா நினைத்தாள். ஆனால், அவள் சொன்னாள்: ‘‘உங்க விஷயத்துல அது சரியா இருக்கலாம். அந்தக் கருவைக் கலைக்கிறதுன்றது உங்க விஷயத்துல நியாயமாக் கூட இருந்திருக்கலாம். ஆனா, எனக்கு இது வாழ்க்கை முழுவதும் ஆனந்தம் தரக்கூடிய ஒரு விஷயம்...’’
ஜானகி அம்மாவிற்கு சொல்வதற்கு எதுவுமில்லை என்றாகிவிட்டது. அவள் இதயத்தை அவளுக்கே தெரியாத ஒரு இழை தொட்டதைப் போல் இருந்தது. அது அன்றுவரை அவள் அனுபவித்திராத ஒரு சத்தத்தை எழச் செய்தது. அவள் சொன்னாள்:
‘‘ஆமா... அந்த முதல் அனுபவம் வாழ்நாள் முழுவதும் பசுமையா இருந்துக்கிட்டே இருக்கும்.’’
ஒரு நீண்ட பெருமூச்சு ஆச்சரியப்படும் விதத்தில் பெரிதான சத்தத்தைப் போல வெளியே கேட்டது. ‘‘அப்படியா?’’ என்று யாரோ கேட்டார்கள். ‘‘அப்படின்னா...’’ என்று ஒரு சிறு கேள்வி வேறு ஜயம்மா சொன்னாள்.
‘‘இதோ திரும்பவும் அந்தச் சத்தம்.’’
‘‘என்னை நிம்மதியா இருக்கவிடக் கூடாதா?’’ ஜானகி அம்மா உரத்த குரலில் கேட்டாள். தொடர்ந்து ஒரே அமைதி!
மீண்டும் சிறிது நேரம் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஆழமான நிசப்தம் அங்கு நிலவிக் கொண்டிருந்தது. ஒரு வண்டு அந்த புட்டியைச் சுற்றி வட்டமிட்டு பறந்து கொண்டிருந்தது.
‘‘அந்தக் குழந்தை பிறக்கமா இருக்கட்டும்.’’
அசரீரியைப் போல அந்த வார்த்தைகள் அந்த அறைக்குள் எதிரொலித்தது.
விஜயம்மா சொன்னாள்; ‘‘அந்த விஷயத்தை நான் தீர்மானிச்சுக்குறேன். இன்னொரு தடவை நான் சொல்றேன். இது புனிதமான ஒரு உறவால் வந்த சம்பாத்தியம். இதுல அவமானப்படுறதுக்கு எதுவுமே இல்ல. இந்தக் கரு ஒரு சுபமுகூர்த்துல உண்டானது.’’
‘‘பிரபாவை நீ நம்பாதே. அவனோட பிறப்பு அப்படி.’’
‘‘அந்தக் குற்றத்தை யாரு சுமக்குறது?’’
‘‘யார் வேணும்னாலும் சுமக்கட்டும். அது உண்மை. அதைத்தான் நான் சொல்ல முடியும்.’’
‘‘பரவாயில்ல... நான் அதை அனுபவிக்கிறேன்.’’
‘‘நீதான் அவனோட பெரிய எதிரியே.’’
ஜானகி அம்மா எழுந்தாள். விஜயம்மாவிற்கு பயங்கரமாகக் கோபம் வந்தது. அவள் பற்களைக் கடித்துக்கொண்டு சொன்னாள்.
‘‘நீங்க பெரிய பாவி. இங்கேயிருந்து உடனடியா போங்க. உங்களைப் பார்த்த பிறகு கட்டாயம் நான் குளிக்கணும். நீங்க எதைத்தான் செய்ய மாட்டீங்க!’’
மெதுவான குரலில் ஜானகி அம்மா சொன்னாள்:
‘‘நான் ஒண்ணும் செய்யமாட்டேன். சிந்திப்பேன். செய்றதுக்கான தைரியம் எனக்கு இல்ல.’’
‘‘நீங்க பெண் உலகத்தின் சாபம்!’’
‘‘ஆமா, மகளே! பிரபா அதோட நகல்!’’
‘‘அந்த பாவத்தில் விஷம் ஏற்றுறது நீங்கதான்.’’
ஜானகி அம்மா எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள். விஜயம்மா எதையும் கேட்கத் தயாராக இல்லை.
‘‘நீங்க போறீங்களா! நான் தூங்கப் போறேன்.’’
சிறிது நேரம் கழித்து ஜானகி அம்மா சொன்னாள்: ‘‘நான் சொன்னதெல்லாம் உண்மைன்றதை அனுபவத்துல நீ தெரிஞ்சுக்குவே!’’
‘‘அப்போ நான் பார்த்துக்குறேன்.’’
ஒரு புட்டியை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு ஜானகி அம்மா வாசலை நோக்கி நடந்தாள். முற்றத்தில் கால் வைத்த அவள் திரும்பி விஜயம்மாவைப் பார்த்தாள். அவள் கண்கள் மிகவும் பிரகாசமாக இருந்தன.
ஜானகி அம்மா இருட்டில் மறைந்தாள். சிறிது நேரம் விஜயம்மா என்னவோ சிந்தித்தவாறு நின்றிருந்தாள். சுவரில் வைத்திருந்த கண்ணாடியில் தன் உருவம் தெரிவதை அவள் பார்த்தாள். அவள் நகைகள் அணிந்திருக்கிறாள்! அதை இரத்தக்காளி அணிவித்திருக்கிறாள்!
அடக்க முடியாத வெறுப்புடன் அவள் எல்லா நகைகளையும் கழற்றினாள். வாசலில் சென்று பார்த்தபோது வெளியே எல்லையற்ற இருள் மட்டுமே தெரிந்தது. இந்த நகைகளை அவளிடமே கொடுத்துவிட்டிருக்க வேண்டும்! கஷ்டம்! என்ன மறதி இது!
9
பிரபா தன்னுடைய வாழ்க்கையில் உறவுகளைப் பற்றி தீவிரமாகச் சிந்தித்துப் பார்த்தான். அந்த அளவிற்குத் தீவிரமாக அவன் அதற்கு முன்பு எப்போதும் சிந்தித்ததில்லை. அந்த உறவுகளைத் தெளிவாகக் காப்பாற்றக்கூடிய நேரம் இப்போதுதான் வந்திருக்கிறது. பிரபா தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றையெல்லாம் அவன் தெரிந்து கொள்ளும்பொழுது, ஒருவேளை அவனுக்கு வாழ்க்கையில் தன்னுடைய இடம் என்ன என்பதைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியும்.
அந்த நாடோடிக்கு பத்மநாபப் பிள்ளை நிறைய தொந்தரவுகள் உண்டாக்கினார். அவருடைய ஆணைப்படி சிலர் அந்த மனிதனுக்கு உடல் ரீதியாகத் தொந்தரவுகள் தந்தனர். வீட்டிலிருந்த சில தங்க நகைகள் திருடுபோய் விட்டதாக பத்மநாபப் பிள்ளை புகார் செய்தார். அந்த நாடோடியை போலீஸ்காரர்கள் விசாரிக்கத் தொடங்கினார்கள். அதன் விளைவாக அந்த மனிதன் ஊரைவிட்டே போய்விட்டான்.
பத்மநாபப் பிள்ளையைப் பார்த்து சில கேள்விகள் கேட்க வேண்டுமென்று பிரபா நினைத்தான். ஒருநாள் மாலை மயங்கிய நேரத்தில் அவன் வீட்டிற்குச் சென்று பத்மநாபப் பிள்ளையின் முன்னால் நின்றான். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் அப்போதுதான் முதல் தடவையாக நடக்கிறது.
ஹாலில் அவர் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். அவன் அங்கு வந்து நின்றதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்து வேகமாக எழுந்து நின்றுவிட்டார். தன் கண்களையே நம்ப முடியாததைப் போல அவர் பிரபாவை வெறித்துப் பார்த்தார்.