சிவப்பு தீபங்கள் - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6740
4
மீரா கல்லூரி மாணவனுடன் ஓடிப்போன விஷயம் பொழுது விடிந்த பிறகுதான் ஆயிக்குத் தெரிய வந்தது. மீராவின் அறை அடைத்துக் கிடந்தது. அந்த அறைக்கு வெளியே நடந்து போன மற்ற பெண்கள் அடைக்கப்பட்டிருந்த கதவை மெதுவாகத் தட்டியவாறு கேட்டார்கள். “மீராத்தாயி, படுக்கையைவிட்டு எழுந்திருக்க முடியாத அளவுக்கு அந்த ஆளு ஒரு வழி பண்ணிட்டுப் போயிட்டானா என்ன?” அதைக் கேட்டு எப்போதும் கேட்கக்கூடிய கோபம் கலந்த பதிலோ அல்லது மெதுவாகக் கேட்கும் சிரிப்புச் சத்தமோ உள்ளேயிருந்து கேட்கவில்லை.
“வந்து சாப்பிடு...”-கதவை பலமாகத் தட்டியவாறு ராதா அழைத்தாள்.
எல்லா நாட்களிலும் காலை ஆறு மணிக்கு அந்த வீட்டில் காலை உணவு தயாராக இருக்கும். நெய் ஒழுகிக் கொண்டிருக்கும் புரோட்டாவும் முட்டைக் குழம்பும் உள்ள கனமான உணவு. அதைத் தவிர ஒரு கப் பால்... காலை உணவு சாப்பிட்டு முடித்த பிறகு எல்லா பெண்களும் பாயில் சுருண்டு படுத்து சுகமாக உறங்குவார்கள். மதியம் இரண்டு மணிக்குச் சாப்பாடு சாப்பிடும்வரை அந்த உறக்கம் தொடரும். சாப்பிட்ட பிறகும் தூக்கம்தான். மாலை ஐந்து மணி ஆனவுடன் அவர்கள் தங்களின் அன்றாட வேலைகள் படுக்கையை விட்டு எழுவார்கள். எல்லாரும் எழுந்து போய்க் குளிப்பார்கள். குளித்து ஈரமான முடியை வாரி முடித்து அதில் பூமாலை சூடுவார்கள். முகம் பிரகாசத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக கன்னங்களில் ரூஜ் தேய்ப்பார்கள். இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும் அந்த பவுடருக்குக் கீழே அவர்களின் தோல் சொரசொரப்பாகவும் சாம்பல் நிறத்திலும் இருக்கும். நிரந்தரமாகப் பயன்படுத்தப்படுவதால் அவர்களின் உடல் உயிரற்ற தன்மையுடன் வற்றிப்போன குளத்தைப் போல இருக்கும்.
சிறுமிகளான ருக்மிணியும் சீதாவும் மட்டும் எப்போதும் சிரித்த வண்ணம் இருப்பார்கள். உடலுறவு பற்றிய எல்லா விஷயங்களையும் தெரிந்துகொள்ளும் அளவிற்கு அவர்களுக்கு இன்னும் அதற்குரிய வயது வரவில்லை. தங்களுக்கே தெரியாத ஏதோ காரணங்களால் தங்கள் மீது சுமத்தப்படும் தண்டனைதான் தங்களுக்கு விருப்பமே இல்லாமல் ஈடுபட நேர்கிற உடலுறவு சம்பவங்கள் என்பதுதான் அவர்கள் கருத்து. பெண்ணை ஒரு சுமையாக, ஒரு தொந்தரவாக நினைக்கும் ஒரு சமூகத்தில் பெண்ணாகப் பிறந்த தவறு காணமாகத்தான் தாங்கள் இப்படி தண்டிக்கப்படுவதாக அந்த சிறுமிகள் நினைத்தார்கள். சதுரக்கட்டத்தில் விளையாடும் விளையாட்டுக்கு மத்தியில் அவ்வப்போது கிடைக்கக்கூடிய இந்தத் ‘தண்டனை’யை மனப்பூர்வமாக அந்தச் சிறுமிகள் ஏற்றுக் கொள்ளவே செய்தார்கள். அந்த அளவிற்கு ஒன்றுமே தெரியாத அப்பாவிகளாக இருந்தார்கள் அவர்கள் இருவரும். தாத்தா வயதைக் கொண்ட பருமனான ஆட்கள் அவர்களின் பிஞ்சு உடல்மீது படுத்து சந்தோஷம் கண்டு கொண்டிருக்கும்பொழுது, அவர்களின் மனது வேறு எங்கோ இருக்கும். வாசலில் சதுரக் கட்டத்தில் நொண்டி நொண்டி ஓடிக் கொண்டிருப்பதில் அவர்களின் மனம் ஈடுபட்டிருக்கும்.
அடைக்கப்பட்டிருந்த கதவை ராதா தள்ளித் திறந்தபோது, தூக்கத்தின் சாயல் விழாத படுக்கை உள்ளே இருந்ததே தவிர, அங்கு மீராவைக் காணவில்லை. மீராவிற்கு மிகவும் பிடித்த புடவைகள் இருந்த ட்ரங்க் பெட்டியும் அங்கிருந்து காணாமல் போயிருந்தது. மீராவின் உள்ளங்கை அளவுள்ள ஒரு முகம் பார்க்கும் கண்ணாடித் துண்டு தரையில் கிடந்தது. சுற்றிலும் குங்குமம் பரவிக்கிடந்தது.
நெற்றியில் கையை வைத்துக் கொண்டு உரத்த குரலில் ராதா சொன்னாள். “நம்ம மீராத்தாயி எங்கேயோ போயிட்டா. அவளுடைய கல்லூரி மாணவனான காதலனுடன் அவள் ஓடிப் போயிப்பாளோ?”
விஷயத்தைத் அறிந்த ஆயி மீராவின் படுக்கையில் உட்கார்ந்து வாய் விட்டு அழ ஆரம்பித்தாள். “என் தங்கப்பறவை கூட்டைவிட்டு பறந்து போயிடுச்சே.” அவள் ஒப்பாரி வைத்தாள். அதிர்ச்சி தரக்கூடிய அந்தச் செய்தியைக் கேட்டு வருத்தமடைந்ததைப் போல ஜன்னலுக்கு வெளியே வந்து நின்ற ஒரு காகம் சத்தம் போட ஆரம்பித்தது. ஆயியின் தலை முடியைக் கையால் தடவியவாறு ஆறுதல் சொன்னாள் ராதா. “மீராத்தாயி நிச்சயம் திரும்பி வருவா. அந்தப் பையன் கையில பணம் எதுவும் இல்ல. மீராத்தாயோட தங்க மாலையை விற்று அந்தப் பணம் தீர்ந்து போனவுடனே சாப்பிட வேற வழியே இல்லாம மீரா இங்கே வரப்போறது உறுதி.”
எனினும் ஆயி அழுது கொண்டுதானிருந்தாள். அவளின் அழுகைச் சத்தம் மேலும் உரத்த குரலில் ஒலித்தது. கடைசியில் அவளின் கவலையைத் தெரிந்துகொண்டு பக்கத்திலுள்ளவர்கள் வந்து சேர்ந்தார்கள்.
முதலில் அங்கு வந்தது கவுசல்யாதான். “அக்கா என்ன நடந்துச்சு?”- ஆயியைப் பார்த்து கவுசல்யா கேட்டாள்.
“என் விரோதிங்க என் மீராவைக் கொண்டு போயிட்டாங்க.”- ஆயி சொன்னாள். “எல்லாருக்கும் அவளோட அழகைப் பார்த்து பொறாமை. எல்லா அரசாங்க அதிகாரிகளும் அவளைச் சொந்தமாக்கிக்கணும்னு ஆசைப்பட்டாங்க. அதே மாதிரிதான் பணக்கார பிஸினஸ்காரர்களும் ஆசைப்பட்டாங்க. என்னோட மொத்த சொத்தும் போயிடுச்சு. என் மீராவைப் போல ஆம்பளைகளை கவர்ந்து இழுக்குறதுக்கு வேற யார் இருக்கா? என்ன உடல் அவளுக்கு? நான் இனிமேல் காசிக்குப் போய் சாகப்போறேன்”- ஆயி அப்போதும் அழுது புலம்பிக் கொண்டிருந்தாள்.
“மீரா தன் விருப்பப்படிதான் போயிருப்பா”- கவுசல்யா சொன்னாள். “இப்படிப்பட்ட சம்பவங்கள் இதுக்கு முன்னாடியும் நடந்திருக்கு இல்ல? நல்ல பெயர் வாங்கின வீடுகள்ல கூடத்தான் இந்த மாதிரி நடந்திருக்கு. மரைன்ட்ரைவ்ல போன வருஷம் அந்த நேபாளிப் பொண்ணு ஓடிப்போகலியா? போனவ போயி சாகட்டும். நன்றி கெட்ட ஒரு பொண்ணை நினைச்சு நீங்க எதுக்குக்கா தேவையில்லாம கவலைப்படணும்?”
“கவுசல்யா இங்கே இருக்குற இந்த பொண்ணுகளை நான் எவ்வளவு நல்லா பார்த்துக்குறேன்னு உனக்குத் தெரியாதா? நெய்ல தயாரிச்ச புரோட்டாவும் முட்டையும் பாலும் காட்லிவர் எண்ணெயும் மாத்திரையும்னு நான் இவங்களுக்கு என்னவெல்லாம் தர்றேன். நகரத்துல நடக்குற எல்லா விழாக்களுக்கும் பொருட்காட்சிகளுக்கும் நான் இவங்களை அழைச்சிட்டுப் போறேன். நான் இவங்க மேல எவ்வளவு அன்பு வச்சிருக்கேன் தெரியுமா?”
“அக்கா நீங்க ரொம்பவும் இரக்க குணம் உள்ளவங்களா ஆயிட்டீங்க”- கவுசல்யா அறிவுரை சொன்னாள். “இந்தப் பொண்ணுக மேல அளவுக்கதிகமா அன்பு செலுத்துறதைப் பற்றி நானே உங்கக்கிட்ட பேசணும்னு நினைச்சிருந்தேன். அன்பா இருக்குறது எந்தக் காலத்துலயும் நமக்கு உதவாது. அப்படி இருக்குறதை கண்டு பிடிச்சிட்டேன்னா நான் என் பொண்ணுகளை சாட்டையை வச்சு விலாசிட்டுத்தான் வேற வேலை பார்ப்பேன். அதுனால அவங்களுக்கு என்னைப் பார்த்தா பயம். என் பொண்ணுக எனக்கு அன்னியர்கள் மாதிரிதான். அக்கா உங்க பொண்ணுங்க செய்யிறது மாதிரி என் பொண்ணுங்க பகல் முழுவதும் வாசல்ல கட்டம் போட்டு விளையாடுறது இல்ல.