சிவப்பு தீபங்கள் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6740
ஊரைவிட்டுப் போன என்னோட மகன் திரும்பி வந்தான்னா, அவளை அவனுக்குத்தான் நான் கட்டாயம் கல்யாணம் பண்ணி வைப்பேன். அவங்க எந்த அளவுக்கு பொருத்தமான தம்பதிகளா இருப்பாங்க தெரியுமா? ரெண்டு பேரும் நல்ல சிவப்பு நிறம். கண்கள்ல நல்ல பிரகாசம்”- ஆயி தன்னை அடக்க முடியாமல் கூறிக் கொண்டிருந்தாள்.
“உன் மகனோட அப்பா ஒரு பிராமணன்தானே?” - இன்ஸ்பெக்டர் கேட்டார். அதற்கு ஆயி பதில் சொல்ல, ஆயியும் இன்ஸ்பெக்டரும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டார்கள்.
“சரி... நேரமாயிடுச்சு. நான் புறப்படுறேன்” - இன்ஸ்பெக்டர் சொன்னார்.
“கவுசல்யாவோட இடத்துக்கு நீங்க போயிருந்ததா நான் கேள்விப்பட்டேன். அது உண்மையா? உண்மையைச் சொல்லிட்டுத்தான் நீங்க இங்கேயிருந்து கிளம்பணும்”- ஆயி கெஞ்சுகிற குரலில் சொன்னாள்.
“அந்தப் பிசாசு சிந்துத்தாயியை நான் ஜெயிலுக்கு அனுப்பப் போறேன். அந்த வீட்டு வழியா நான் பஸ் ஸ்டாப்புக்குப் போய்க்கிட்டு இருந்ததை சிந்துத்தாயி பார்த்திருப்பா. அதை அப்படியே இங்கே வந்து சொல்லியிருக்கா”- இன்ஸ்பெக்டர் சொன்னார் : “நான் எதுக்கு அங்கே போகணும்? லட்சுமிபாயி?”
அதிகமான அன்பாலும் பதைபதைப்பாலும் ஆயி தன் மூக்கில் வழிந்த நீரைத் துடைத்தாள். அவள் அழுது விடுவாள் போல இருந்தாள். “அவ... அந்த கவுசல்யா ஒண்ணுமே தெரியாத என் பொண்ணுகளைப் பற்றி என்ன மாதிரியெல்லாம் வாய்க்கு வந்தபடி சொல்லிக்கிட்டு இருக்கா தெரியுமா? சிந்துத்தாயி சொல்லித்தான் எனக்கே அந்த விஷயம் தெரியும். என் பொண்ணுக எல்லாருக்கும் நோய் பிடிச்சிருக்குன்னு கவுசல்யா சொல்லியிருக்கா. இப்படியெல்லாம் பொய்களைச் சொல்லிக்கிட்டு இருந்தா நம்ம பிஸினெஸ் பாதிக்குமா இல்லியா? ஒண்ணுமே தெரியாத என்னோட அப்பாவிப் பொண்ணுக பட்டினி கிடந்து சாகறதைத் தவிர வேற வழி...?”
“அழக்கூடாது...”- அந்தப் பெண்ணின் தடிமனான கைகளைத் தடவியவாறு இன்ஸ்பெக்டர் தன் குரலைத் தாழ்த்திக் கொண்டு சொன்னார் : “உனக்கு இருக்கிற நல்ல பேரை நான் காப்பாத்தறேன். உனக்கும் இந்த வீட்டுல இருக்கிறவங்களுக்கும் நான் நண்பன். எந்தச் சமயத்திலேயும் உங்களை நான் கைவிடமாட்டேன்.”
அதைக் கேட்டு ஆயியின் முகம் சிறிது பிரகாசமானது. லேசாச் சிரிக்க அவள் முயற்சித்தாள்.
“கொஞ்சம் வெற்றிலை போடுங்க, இன்ஸ்பெக்டர் ஐயா” - அவள் கெஞ்சினாள்.
இன்ஸ்பெக்டர் அங்கிருந்து கிளம்பியதும், ஆயி பரபரப்பானவளாக மாறிவிட்டாள். கம்பிகள் வழியாகப் பார்த்தவாறு நின்றிருந்த இளம்பெண்களைப் பார்த்து அவள் கோபமான குரலில் திட்டினாள் : “என்னடி ஆச்சு உங்களுக்கு? ஆம்பளைகளை எப்படி இழுக்குறதுன்றதை மறந்துட்டீங்களா? உங்களுக்காக மீனும் முட்டையும் நெய்யும் வாங்கி நான் பணம் செலவழிக்கிறது எல்லாமே வீண். மீராவைத் தவிர, உங்க ஒருத்திக்குக் கூட ஒரு ஆம்பளையை வசீகரிச்சு இங்கே கொண்டு வருவதற்கான திறமை இல்ல... அவளை எடுத்துக்கிட்டா... அவளுக்கு அரசியல் பாடம் சொல்லித்தர்ற பைசாவுக்குப் பிரயோஜனமில்லாத ஒருத்தன் கூட அறையைப் பூட்டிக்கிட்டு இருக்கா. எவ்வளவு பெரிய பெரிய ஆளுங்க இந்த வழியா கார்ல போய்க்கிட்டு இருக்காங்க! இந்தப் பக்கம் பார்க்கிறதுக்காக காரை மெதுவா எத்தனை பேர் ஓட்டுறாங்க! அவங்கள்ல யாரையாவது இந்தப் பக்கமா இழுக்குறதுக்கு உங்கள்ல யாராவது ஏதாவது பண்ணியிருக்கீங்களா ஒரு பன்றிக் கூட்டத்தையே நான் தீனி போட்டு இங்கே வளர்த்துக்கிட்டு இருக்கேன். என்னைவிட அந்த கவுசல்யா எவ்வளவோ கொடுத்து வச்சவ. அவ தன்னோட பொண்ணுகளை சாட்டையை வச்சு அடிப்பா. அவளோட வீட்டுக்கு முன்னாடி கார்கள் நிக்கிறதைப் பாருங்க. எட்டுமணி கூட ஆகல. இப்பவே ரெண்டு கார்கள் நின்னுக்கிட்டு இருக்கு. உங்களையெல்லாம் வீட்டைவிட்டு விரட்டிட்டு நான் காசிப் பக்கம் போறதுதான் சரி. எதுவுமே இல்லேன்னாக் கூட மன அமைதியோட சாகவாவது செய்யலாமே!”
சரஸ்வதி என்னும் பெயரைக் கொண்ட கறுப்பு நிறத்திலிருக்கும் இளம்பெண் வாசலைவிட்டு வெளியே வந்து பஸ்ஸில் இருந்தவாறு பார்த்த ஒரு இளைஞனுக்கு தன் பார்வையை அனுப்பி அவனை அழைத்தாள். அடுத்த பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அந்த இளைஞன் சிறிது நேரம் சென்றபிறகு அவளுக்கருகில் வந்து நின்றான். தன் பின்பாகங்கள் குலுங்க, அவள் அந்த இளைஞனை உள்ளே அழைத்துக் கொண்டு போனாள்.
புடவைத் தலைப்பால் தன் கண்களில் வழிந்த மகிழ்ச்சிக் கண்ணீரை ஆயி துடைத்துக் கொண்டாள்.
“என்னால இப்படியெல்லாம் நடக்க முடியாது. இதெல்லாம் கேவலமான நடத்தை”- ராதா தன்னுடைய எதிர்ப்பை இந்த வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தினாள். “ரோட்ல நின் தெருவுல அலையிற சாதாரண ஒரு தேவடியா மாதிரி என்னால ஆள் பிடிக்க முடியாது” என்றாள். அப்போது யாரோ ஒரு ஆள் சீதாவைத் தேடி வந்தான். “என்னால இன்னைக்கு முடியாது ஆயி” - அன்று தனக்குக் கட்டாயம் விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆயியைப் பார்த்துக் கெஞ்சினாள் சீதா.
“அந்த ஆளுகூட போடி, பெண்ணே”- கதவுக்கு அப்பால் சீதாவைப் பிடித்துத் தள்ளி விட்டவாறு ஆயி சொன்னாள்.
“அந்தச் சதுரத்துல இருந்து என்னோட கட்டைகளை எடுத்துக் கூடாது, ருக்மிணி...”- கதவை அடைப்பதற்கு முன்பு சீதா உரத்த குரலில் சொன்னாள் : “விளையாட்டை முடிக்கிறதுக்கு நான் சீக்கிரம் வருவேன்.”
“தமிழனா இருந்தாலும் அந்த ஆளு ஒரு அமைதியான ஆளு”- ஆயி சொன்னாள் : “அங்கே ஒரு பள்ளிக் கூடத்துல அந்த ஆளு வேலை பார்க்கிறாரு. ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் அவர் இங்கே வருவாரு. வர்ற சமயத்துல அவருக்குச் சீதா மட்டும்தான் வேணும். கல்லூரியில படிக்கிற வயசுல அவருக்கு மூணு பொண்ணுக இருக்காங்க. அவரோட பொண்டாட்டி வாதம் வந்து படுத்த படுக்கையா கிடக்குறாங்க. தன்னோட சொந்த வாழ்க்கையைப் பற்றி அவர் என்கிட்ட மனம் திறந்து சொல்லுவாரு. எதையும் மறைச்சு வைக்கிறது இல்ல. மற்றவங்களை மாதிரி எதையும் ஒளிச்சு வைக்கிற ஆளில்ல அவரு...”
வீட்டிற்குள்ளிருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் அப்போது ஆயியின் காதுகளில் வந்து மோதியது. ஒரு நிமிடம் அவள் காதுகளைத் தீட்டியவாறு உட்கார்ந்திருந்தாள். பிறகு உரத்த குரலில் அவள் கேட்டாள் : “யாரு? நம்ம மீராவா அழறது? அவ அறையில போயி என்ன விஷயம்னு பாரு. ஆம்பளைங்க விசித்திரமான பிறவிங்க. அவங்களோட நடவடிக்கைகளை யாராலும் முன்கூட்டி சொல்லவே முடியாது. நான் சின்னப் பொண்ணா இருந்தப்போ ஒரு பணக்கார ஆள் வந்தான்.