சிவப்பு தீபங்கள் - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6740
“உன் அப்பா இப்போ எங்கே இருக்கிறாரு சீதா?”- ருக்மிணி கேட்டாள்.
அவள் தன் தோளைக் குலுக்கினாள். “அப்பா இறந்துட்டாரு. எல்லாரும் இறந்துட்டாங்க. நான்கு வருஷங்களுக்கு முன்னாடி காலரா நோய் வந்து எல்லாரையும் கொண்டு போயிடுச்சு. என் வீட்டுல அஞ்சு வீட்டுல அஞ்சு பேரு செத்துப் போயிட்டாங்க. என் அப்பா, என் அம்மா, என் மூணு அண்ணன்மாருங்க...”
“வெள்ளை நிற சுவருள்ள அந்த வீட்டுக்கு என்ன ஆச்சு?”- ருக்மிணி கேட்டாள்.
“அதுவும் செத்துப்போயிருக்கும்”-சீதாவும் ருக்மிணியும் சிரித்தார்கள். “எல்லாமே சாகப் போறதுதான் ருக்மிணி. இந்த வானம் கூடத்தான்...” - சீதா சொன்னாள். வானத்தின் வெளிச்சத்தையே அவள் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அது அவளின் கண்களை மஞ்சள் நிறமாக்கியது.
மதிய வெயிலின் கடுமை சற்று குறைந்தபோது அந்தச் சிறு பெண்களை ஆயி தன்னருகில் வரும்படி அழைத்தாள். “வாங்கடா கண்ணுகளா. உங்களுக்கு நான் தலைவாரி விடுறேன்” முதலில் ருக்மிணிக்கு ஆயி தலைவார ஆரம்பித்தாள். அவளின் சுருண்டு போயிருந்த முடியில் இருந்த சிக்கல்களை நீக்கி ஒழுங்குபடுத்தி வாரிக் கட்டினாள். சீப்பை வைத்து அழுத்தி வாரும்போது, வலியால் ருக்மிணி தன் முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டிருந்தாள். “முடியில தேய்க்கிறதுக்கு நான் உனக்கு ப்ரம்மி எண்ணெய் வாங்கித் தர்றேன்”- ஆயி சொன்னாள். “ரெண்டு மாசத்துல உன் முடிக்கு பலம் வந்திடும். இப்போ உன் முடி ரொம்பவும் மெல்லிசா இருக்கு. சீதாவோட முடியைப் பாரு. ரொம்பவும் அடர்த்தியா இருக்கும். முடியோட கனத்தால அவளால நடக்கக்கூட முடியல.”
அந்தச் சிறு பெண்களின் தலைமுடியை ஆயி வாரிவிட்டுக் கொண்டிருக்கும்போது, சிந்துத்தாயி வந்தாள். லேசாக இறுமியவாறு அவள் கேட்டாள் : “எப்படியிருக்கே தங்கச்சி? இன்னைக்கு உன் முகத்துல ஒரு சந்தோஷம் தெரியுதே!”
அந்த அவலட்சணம் பிடித்த கிழவியின் கண் பார்வையைப் பற்றி நினைத்த ஆயி ஒரு மாதிரி ஆகிவிட்டாள். “விநாயகர் புண்ணியத்தால எப்படியோ வாழ்க்கை ஓடிக்கிட்டு இருக்கு”- ஆயி பதில் சொன்னாள். “சீதாவுக்கு உடம்புக்குச் சரியில்லே. சாப்பாட்டுல அவளுக்கு ருசியே தோணலியாம்.”
“அவ வயசுக்கு வந்துட்டாளா?”
“இல்ல...”- ஆயி சொன்னாள் : “சொல்லப்போனா நான் ரொம்பவும் கவலையில இருக்கேன். இன்னைக்கு அவளை டாக்டர்கிட்ட அழைச்சிட்டுப் போயி காட்டலாம்னு இருக்கேன்.”
“ஒவ்வொரு வாரமும் நீ உன் பொண்ணுகளை டாக்டர்கிட்ட அழைச்சிட்டுப் போயி பரிசோதிச்சுப் பார்க்குறியா என்ன?”-விஷமம் நிறைந்த கேள்வியைக் கேட்டாள் சிந்துத்தாயி.
தன் மனதில் இருந்த கவலையை மறைக்க படாதபாடுபட்டாள் ஆயி. “நீங்க இப்படிக் கேட்டா எப்படி?”- கிழவியைப் பார்த்து ஆயி கேட்டாள் : “ஒவ்வொரு வாரமும் நான் என் பொண்ணுகளை பரிசோதிச்சுப் பார்க்குறது இல்லைன்னு அந்த கவுசல்யா உங்கக்கிட்ட சொன்னாளா?”
“ஆமா... நேற்று அவ என்கிட்ட அதைத்தான் சொன்னா.” பிறகு சிந்துத்தாயி அதை விளக்க ஆரம்பித்தாள் : “அவ வீட்டுக்கு முன்னாடி இருக்குற ரோடு வழியா நான் ரேஷன் கடைக்குப் போய்க்கிட்டு இருக்குறப்போ, என்னை அவ தடுத்து நிறுத்தினா. ஒரு கப் தேநீர் குடிச்சிட்டுப் போகும்படி சொல்லி என்னைக் கட்டாயப்படுத்தினா. தேநீர் குடிக்கப் போகாம இருந்த எதுக்குத் தேவையில்லாம அவளோட வெறுப்புக்கு ஆளாகணும்னு நினைச்சேன். வெறுப்பு வந்துடுச்சுன்னா அவளால் பிரச்சினைகள் உண்டாக்க முடியும்னு உனக்கு நல்லாத் தெரியுமே! அவளுக்குத் துன்பம் உண்டாக்குறவங்களுக்கு, பயங்கர விரோதியா மாறிடுவா கவுசல்யா. சொல்லப்போனா சமீப காலமா அவ பெரிய செல்வாக்கு உள்ளவளா மாறிக்கிட்டு வர்றா. அவளோட வீட்டுக்குப் பக்கத்துல ஒரு பெரிய அரசாங்க அதிகாரியோட கார் நிக்கிறதை நான் கண்ணால பார்த்தேன்.”
“இது அவளால எப்படி முடியுது... அதுவும் அவளோட சுத்தமில்லாத பொண்ணுகளை வச்சுக்கிட்டு?”
“அவளோட பொண்ணுகளுக்கு நல்ல அனுபவம் இருக்கு”- கிழவி சொன்னாள்.
“இப்பவே என் பொண்ணுகளை டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போறேன்”- ஆயி சொன்னாள் : “இங்கே தேவையில்லாம பேசி நேரத்தைப் பாழாக்க விரும்பல? சிந்துத்தாயி.”
“சரி, தங்கச்சி...”- வெற்றிலைப் பெட்டியிலிருந்து புகையிலையைக் கிள்ளியெடுத்தவாறு கிழவி சொன்னாள் : “இன்னைக்கு என்னாலும் எதுவும் செய்ய முடியல. தலை சுத்துற மாதிரி இருக்கு. ஒரு சோடாவுக்கான பணம் தரமுடியுமா தங்கச்சி? உடம்புக்கு ஒரு மாதிரி இருக்கிறப்போ சோடா குடிச்சாத்தான் வயிறு சரியாகுது...”
“சிந்துத்தாயி? நீங்க சோடான்னு சொன்னா உண்மையான சோடாவையா சொல்றீங்க?” - ஆயி கேட்டாள் : “கிடைக்கிறப்போ நீங்க நாட்டு சாராயம்தானே குடிக்கிறீங்க! நீங்க ஒரு புட்டி முஸாம்பி வாங்குறதைப் பார்த்த இன்ஸ்பெக்டர் ஐயா சொன்னாரே!”
“எல்லா இடத்துலயும் பொய் சொல்றவங்க இருக்கத்தான் செய்றாங்க”- கிழவி முணுமுணுத்தாள் : “சமீப காலமாகவே என் மீது எல்லாருக்கும் வெறுப்புதான். நல்ல காலத்துல எல்லா வகையிலும் நான் எல்லாருக்கும் உதவினேன். யாருக்கும் என்மேல இப்போ விருப்பம் இல்ல. எல்லாரும் என்கிட்ட விளையாட்டு காண்பிக்கிறாங்க. சொல்லப்போனா இளமைன்ற ஒண்ணு போயிடுச்சுன்னா எல்லா பெண்களோட நிலைமையும் இதுதான். லட்சுமி, இன்னைக்கு உனக்கு ஒரு வீடு இருக்கு. ஆனா, நான் இப்போ சொல்றதை மனசுல வச்சுக்கோ. பத்து வருடங்கள் போகட்டும். உன்னை இந்த வீட்டைவிட்டு விரட்டியடிக்கிறாங்களா இல்லையான்னு பாரு. உனக்குப் பதிலாக வேற யாராவது இங்கே ஆயியா ஆவா. பெரும்பாலும் அப்படி வர்றவ மீராவாகத்தான் இருக்கும். இல்லாட்டி அந்தக் கறுப்பா இருக்கிறவ இருக்காள்ல! சரஸ்வதி...”
“கருநாக்கை வச்சு அப்படியெல்லாம் சொல்லாதீங்க சிந்துத்தாயி...”-ஆயி கோபத்துடன் சொன்னாள்: “என்னை என்னோட பொண்ணுக அன்பா வச்சிருப்பாங்க. நான் அவங்களுக்கு ஒருநாளும் துரோகம் செஞ்சது இல்ல. அதோ அங்கே இருக்கிற ருக்மிணிக்கிட்ட கேட்டுப் பாருங்க. நான் இவங்க ஒவ்வொருத்தருக்கும் எப்படியெல்லாம் சாப்பாடு போடுறேன்னும் உடம்புக்குச் சரியில்லாம ஆச்சுன்னா இவங்களை நான் எப்படி கவனமா பார்த்துக்குறேன்னும் கேட்டுப் பாருங்க. உங்க பொண்ணுக செய்தது மாதிரி என்னை இவங்க எந்தக் காலத்துலயும் வெளியே விரட்டி விடமாட்டாங்க. சாகுற வரை நான் இவங்களோட ஆயியா இருப்பேன்.”
ஒருவகை கேலியுடன் சிந்துத்தாயி ஓசை உண்டாக்கினாள். “முன்னாடி நான்கூட அப்படித்தான் நினைச்சிட்டிருந்தேன், லட்சுமி” -அவள் சொன்னாள் : “ஆனா, என்ன நடந்துச்சுன்னு உனக்குத்தான் தெரியுமே! என்னைப் பற்றி என்னென்னவோ சொல்லிட்டுல்ல என்னை விட்டு என் அருமை மகள் வெளியேற்றினா. என்னால என்ன செய்ய முடிஞ்சது? ஏதாவது ஒரு ஆம்பளைய கவர்ந்து இழுக்குறதுக்கான வயசையெல்லாம் நான் தாண்டி வந்துட்டேன்.