சிவப்பு தீபங்கள் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6740
தரையில் சுருண்டு படுத்திருந்த ஒரு கறுத்த இளம்பெண் துள்ளி எழுந்து ருக்மிணியை வெறித்துப் பார்த்தாள். “கறுப்பா இருந்தா என்ன தப்பு?” ஆயியைப் பார்த்து அவள் கேட்டாள்: “நான் கறுப்பு தானே! இங்கே வர்றவங்களெல்லாம் என்னைத்தானே வேணும்ன்றாங்க?”
ஆவி மணம் வந்துகொண்டிருந்த ஒரு இருண்ட இடைவெளி வழியாக ருக்மிணியை சீதா கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போனாள். அங்கிருந்து அவளை ஒரு பெரிய ஹாலுக்கு அழைத்துச் சொன்றாள். அந்த ஹாலில் விரிக்கப்பட்டிருந்த பாய்களில் சில இளம் பெண்கள் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்படிப் படுத்திருந்த ஒரு இளம் பெண்ணின் இறக்கம் குறைவான பாவாடை ஒழுங்கில்லாமல் இருந்தது. அவளின் பின்பகுதி நிர்வாணமாக வெளியே தெரிந்தது. அதைப் பார்த்த ருக்மிணி ஒருவகை வெறுப்புடன் வேறுபக்கம் பார்த்தாள். “கொஞ்சம்கூட வெட்கம் இல்லாதவ” என்று கூறியவாறு சீதா ஒரு டவலை எடுத்து அந்தப் பெண்ணின் தொடை மீது போட்டாள். “இவ பேரு ராதா. ரொம்ப முன்கோபம் உள்ளவ. இவகூட ரொம்பவும் கவனமா பழகணும்.”
ஹாலில் ஒரு மூலையில் இருந்த பாயைச் சுருட்டிக் காட்டியவாறு சீதா சொன்னாள் : “அங்கேதான் நான் பகல் நேரத்துல படுத்து உறங்குவேன். நீ கூட என் கூட அந்தப் பாயில் படுக்கலாம்.”
“நான் பகல் நேரத்துல உறங்க மாட்டேன்.” என்றாள் ருக்மிணி.
அதைக் கேட்டு உரத்த குரலில் சிரித்த சீதா திடீரென்று தன்னுடைய அடிவயிற்றைக் கையால் இறுகப் பிடித்துக் கொண்டாள். அப்படி பிடிக்கவில்லையென்றால் எங்கே வயிறு வெடித்துவிடுமோ என்று அவள் பயப்படுவதைப் போல் இருந்தது. “நீ ஒரு சரியான குழந்தைதான்...” - சீதா சொன்னாள் : உனக்கு எதுவுமே தெரியல. நீ ஒரு அப்பிராணி. இங்கே ராத்திரி நேரத்துல நாம தூங்க முடியும்னு நீ நினைக்கிறியா? இங்கே வர்றவங்களை சந்தோஷப்படுத்துறதுல இல்ல நாம எல்லாரும் தீவிரமா மூழ்கியிருப்போம்.”
“ராத்திரி நேரத்துல ஆளுங்க வருவாங்களா என்ன?” ருக்மிணி ஆச்சரியத்துடன் கேட்டாள் : “அப்படி வர்றவங்க யாரு?”
அதைக் கேட்டு சீதாவால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அவள் சத்தம் கேட்கும் வண்ணம் உரத்த குரலில் சிரித்தபடி, “ராத்திரி நேரத்துல வர்ற ஆம்பளைங்க வேலை செய்யிறது இங்கேதான்” என்று சொன்னாள்.
“என்ன வேலை?”- ருக்மிணி ஆர்வத்துடன் கேட்டாள். அவள் தன்னுடைய வளர்ப்புத் தந்தையைப் பற்றி அப்போது நினைக்கத் தொடங்கிவிட்டாள். தரையில் படுத்திருக்கும்பொழுது அந்த மனிதன் தன் மீது வந்து படர்ந்தபோது எனக்கு உண்டான வேதனையை அப்போது நினைத்துப் பார்த்தாள். “ரொம்ப சீக்கிரமாவே உனக்கு எல்லா விஷயங்களும் புரியும்”- சீதா சொன்னாள் : “அவங்க எல்லாரையும் நீ அனுசரிச்சு நடக்கணும். இல்லாட்டி ஆயி உன்னைப் பட்டினி போட்டுக் கொன்னுட்டுத்தான் மறுவேலை பார்ப்பாங்க. அவங்க எப்படியெல்லாம் ஆசைப்படுறாங்களோ, அதுக்கேத்த மாதிரியெல்லாம் நீ நடக்கணும். சொல்லப் போனா ஆம்பளைங்க நாய்ங்கன்றதுதான் சரி...”
அவர்கள் அந்த இடைவெளியை எந்தவித ஓசையும் உண்டாக்காமல் மெதுவாகக் கடந்தபோது ஒரு அறைக்குள்ளிருந்து கிளம்பி வந்த மெல்லிய குரலொன்று “யார் வெளியே?” என்று விசாரித்தது. “நான்தான்... சீதா”- அந்த ஒல்லியான பெண் சொன்னாள்.
“சத்தம் எதுவும் உண்டாக்காதே...” உள்ளேயிருந்து அந்த மெல்லிய குரல் திட்டியது.
“இந்த வீட்டுல எல்லாருக்கும் பிரியமான மீராத்தாயிதான் அது” - சீதா ருக்மிணியிடம் மெதுவான குரலில் சொன்னாள்: “அவளுக்கு மட்டும்தான் தனியா இந்த அறையை ஆயி ஒதுக்கித் தந்திருக்காங்க. அவ பார்க்க ரொம்பவும் அழகா இருப்பா. மெட்ரிகுலேஷன் வரை படிச்சிருக்கா. மத்தவங்க எல்லாருமே படிக்காதவங்க. நீ எதுவரை படிச்சிருக்கே ருக்மிணி”
“நான் ஆறாவது வகுப்பு படிச்சுக்கிட்டு இருக்கேன்”ருக்மிணி பதில் சொன்னாள்.
“ஒரு விதத்துல பார்க்கப்போனா அது நல்ல விஷயம்தான்.”-சீதா தொடர்ந்து சொன்னாள் : “கொஞ்சமாவது உனக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியும், இல்லையா?”
“ஆங்கிலமா? தெரியாது ஆங்கிலம் ரொம்பவும் கஷ்டமான மொழி. இந்த வருடம்தான் நாங்க ஆங்கிலம் படிக்க ஆரம்பிச்சிருக்கோம். எனக்கு மராத்தியும் இந்தியும் நல்லா வாசிக்கத் தெரியும்.”
“அப்படின்னா இங்கே வந்த ஒரு ஆள் எனக்கு ஒருமுறை படிக்குறதுக்காக கொண்டு வந்து தந்த ஒரு புத்தகத்தை நீ எனக்குப் படிச்சு புரிய வைக்கணும். அந்தப் புத்தகம் முழுவதும் ஆண்கள், பெண்களோட அசிங்கமான நிர்வாணப் படங்கள்தான். நிறைய படிச்ச ஆள்னு நான் அந்த மனிதனைப் பற்றி மனசுல நினைச்சுக்கிட்டு இருக்குறப்போ அந்த மனிதன் எனக்குப் பரிசா அந்தப் புத்தகத்தைத் தந்தான்”- அதைச் சொன்ன சீதா மீண்டும் சிரித்தாள்.
“சிரிக்கிறப்போ நீ வயிற்றை அழுத்திப் பிடிக்குறியே, எதுக்காக?” -ருக்மிணி கேட்டாள்.
“சிரிக்கிறப்போ வயிற்றுக்குள்ளே ஏதோ ஒண்ணு இழுத்துப்பிடிக்கிறதைப் போல எனக்குத் தோணும்”-சீதா சொன்னாள்: “மொத்தத்துல என்னால எதுவுமே செய்ய முடியல. பசிகூட எடுக்க மாட்டேங்குது.”
முன்னறையிலிருந்து அப்போது கோபமாக ஒரு குரல் திடீரென்று கேட்டது: “எந்தக் காலத்துலயும் அப்படியொரு விஷயம் நடக்காது லட்சுமி” அந்தக் குரல் தொடர்ந்தது. “உன் பொண்ணுகளுக்கு எதிரா எந்தக் காலத்துலயும் ஒரு வார்த்தைகூட சொல்லமாட்டேன். எனக்கு நீ என்னோட தங்கச்சி மாதிரி. அது ஒரு பக்கம் இருக்கட்டும். உன் பொண்ணுகளுக்கு எதிரா நான் சொல்றதுக்கு என்ன இருக்கு? உன் வீடு எப்பவும் எந்த அளவுக்கு அடக்கமா இருக்கும்ன்ற விஷயம்தான் எல்லாருக்கும் நல்லா தெரியும்ல? உன் பொண்ணுங்க எல்லாருமே நல்ல சுத்தத்தோட இருக்குறதாகவும் நல்ல உடலழகோட இருக்குறதாகவும் இப்போ சினிமாவுல பிரபலமா இருக்குற ஒரு கதாநாயகியைப் போல உன்னோட மீரா இருக்குறதாகவும் இன்ஸ்பெக்டர் ஐயா கூட என்கிட்ட சொன்னாரு. அந்தக் கதாநாயகியோட பேரை நான் மறக்துட்டேன். அவ பேரு கொஞ்சம் நீளமா நாகரீகமா இருக்கும்.”
அயி தடிமனான கால்களை விரித்து வைத்துக் கொண்டு சுவர்மீது சாய்ந்தவாறு உட்கார்ந்துகொண்டு புகையிலையை வாய்க்குள் மென்றவாறு சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். திடீரென்று அவள் கேட்டாள் : “சரி... சிந்துத்தாயி, இன்ஸ்பெக்டர் ஐயாவை நீ எங்கே பார்த்தே?”
ஆயியின் வெற்றிலைப் பெட்டியிலிருந்து சிறிது புகையிலையை வெளியே எடுத்தவாறு அந்தக் கேள்வியையே காதில் வாங்காத மாதிரி சிந்துத்தாயி இருந்தாள். ஆயி மீண்டும் தன் கேள்வியைக் கேட்டாள். அந்தக் கேள்விக்குப் பின்னால் மறைந்திருந்த ஆபத்து என்னவென்பதை சிந்துத்தாயி நன்று அறிவாள்.
“நேற்று கவுசல்யாவோட வீட்டுல.”