சிவப்பு தீபங்கள் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6740
எங்கேயாவது இருக்கிறதுக்கு தலைக்குமேல ஒரு கூரை வேணும்னு எப்படியெப்படியெல்லாம் நான் அலைஞ்சு திரிஞ்சிருப்பேன்! ஒரு வருஷம் ரோட்டுல உட்கார்ந்து நான் பிச்சை எடுத்தேன். அப்போ இந்தப் பகுதியில உள்ளவங்களுக்கு நான் ரொம்பவும் உபயோகமா இருந்தேன். வெறும் இருபது ரூபா செலவுல கர்ப்பத்தைக் கலைக்க என்னால முடிஞ்சது. அதுனால நீங்களெல்லாம் என்னை வீடுகளுக்குக் கூட்டிட்டு வந்தீங்க. எனக்கு அதிர்ஷ்டம்ன்றது இருக்கு. ஆனா, எனக்கு இருந்த அதிர்ஷ்டம் உனக்கும் இருக்கும்னு உன்னால உறுதியா சொல்ல முடியுமா?”
புடவைத் தலைப்பால முகத்தை மறைத்துக் கொண்ட ஆயி சிறிதும் வெட்கப்படாமல் உரத்த குரலில் அழ ஆரம்பித்தாள். தன்னுடைய கிராமத்தின் சேறு நிறைந்த குளத்தில் கிடக்கும் எருமைகள் உண்டாக்கும் ஓசைதான் அதைக் கேட்டபோது சீதாவிற்கு ஞாபகத்தில் வந்தது. ஆயியின் அழுகைச் சத்தம் மிகவும் வினோதமாக இருப்பதாக அவள் உணர்ந்தாள். தன்னுடைய தோளால் அவள் ருக்மிணியைக் குலுக்கினாள். குலுங்கிக் குலுங்கி சிரிக்க வேண்டும்போல் அவளுக்கு இருந்தது. ஆனால், அந்தத் தடிமனான பெண் அழுவதை பரிதாபம் மேலோங்கப் பார்த்துக் கொண்டிருந்தாள் ருக்மிணி.
உள்ளேயிருந்து மீரா உரத்த குரலில் அழைத்தாள் : “ருக்மிணி, இங்கே கொஞ்சம் வா. என் ப்ளவ்ஸ் பட்டனை பின்னாடி கொஞ்சம் போட்டுவிடு.”
பட்டன் போடாமல் திறந்து கிடந்த ப்ளவ்ஸ், கறுப்புநிறப் பாவாடை ஆகியவற்றுடன் நின்றிருந்த மீராவிற்கு உதவுவதற்காக ருக்மிணி அறைக்குள் ஓடினாள். மீராவின் முகம் மகிழ்ச்சி மிகுதியால் மிகவும் பிரகாசமாக இருந்தது. அவள் தன் நெற்றியில் குங்குமமும் கண்களில் மையும் இட்டிருந்தாள். “மீராத்தாயி, வெளியே எங்கேயாவது நீங்க போறீங்களா என்ன?” - அந்தச் சிறு பெண் கேட்டாள்.
“இல்ல... சாயங்காலம் வர்றதா சொல்லிட்டுப் போன என் நண்பனுக்காக நான் இப்படி ஆடை அணிஞ்சிருக்கேன்.”
“உங்களைப் பார்க்குறப்போ புதுப் பொண்ணு மாதிரி இருக்கு”-ருக்மிணி சொன்னதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த மீரா அவளை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
“எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு”- மீரா சொன்னாள் : “நீ இந்த விஷயத்தை யார்கிட்டேயும் சொல்லாதே.”
“உங்களைப் பார்க்க வர்ற அந்த கல்லூரி மாணவனையா நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?”- ருக்மிணி கேட்டாள் : “உங்களைப் பார்க்குறதுக்காக பவுண்டன் பேனாவை விற்றாரே, அவர்!”
“ம்... அவர்தான் என் கணவர். அவரோட பேரு கிருஷ்ணன். ஆச்சரியமா இருக்கா ருக்மிணி?” அந்தச் சிறு பெண்ணைப் பார்த்து மீரா கேட்டாள் : “என் பேரு மீரா. அவர் பேரு கிருஷ்ணன். பொருத்தமா இருக்குது இல்ல?”
ருக்மிணி எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள். அந்த மாலை நேரத்தில் மீராத்தாயி மிகவும் வினோதமாக நடந்து கொள்வதைப் போல அவள் மனதிற்குப் பட்டது. ஜுரத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் மனம் போனபடியெல்லாம் பேசுவதைப்போல மீரா பேசிக் கொண்டிருப்பதாக அவள் உணர்ந்தாள். மீராவின் கன்னங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டன. கண்களில் நல்ல பிரகாசம் தெரிந்தது. மஞ்சள் நிற மலர்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட ஒரு மாலையை மீரா தன் கூந்தலில் அணிந்தாள். உதட்டில் மேலும் சிவப்பு நிறம் இருக்கவேண்டும் என்பதற்காக தன் பற்களால் உதடுகளை அழுத்திக் கடித்தாள்.
“உதட்டுல லிப்ஸ்டிக் பூசிக்கலாமே?”-ருக்மிணி கேட்டாள்.
“அவருக்கு லிப்ஸ்டிக் பிடிக்காது”-மீரா சொன்னாள். பளவ்ஸ் பட்டனைப் போட்டவுடன், உணர்ச்சிவசப்பட்ட மீரா அவளை இறுக அணைத்துக் கொண்டு அவளுக்கு முத்தம் தந்தாள். “கடவுள் உன்னைக் காப்பாற்றட்டும்.”
முன்னறைக்கு ருக்மிணி திரும்பி வந்தபோது, ஆயி தன் அழுகையை நிறுத்திவிட்டிருந்தாள். சிந்துத்தாயி அந்த இடத்தை விட்டுப் போயிருந்தாள். சாலையில் வேகமாகப் போய்க் கொண்டிருந்த பஸ்களைப் பார்த்தவாறு படியில் உட்கார்ந்திருந்த சீதாவின் அருகில் போய் ருக்மிணி உட்கார்ந்தாள். “ஒருநாள் மாடி பஸ்ல ஏற்றி ஆயி எங்களை அழைச்சிட்டுப் போனாங்க”-சீதா சொன்னாள் : “அதுல உட்கார்ந்து வெளியே கையை நீட்டி நான் ஒரு மரத்துல இருந்த கொய்யாக் காயைப் பறிச்சேன்.”
“நீ பயங்கரமான ஆள்தான்.”- ருக்மிணி சொன்னாள்.
“ஆயிக்கிட்ட வேணும்னா நீயே கேட்டுப் பாரேன்”- சீதா மெதுவான குரலில் சொன்னாள்.
“மரத்துல பழுத்திருந்த கொய்யாவை நான் பறிச்சேன். அதில் நிறைய விதைகள் இருந்துச்சு. அந்த விதைகள் பார்க்க எவ்வளவு நல்லா இருந்துச்சு தெரியுமா, அந்த விதைகள் வயிற்றுக்குள்ள போனா, வயிறே நிறைஞ்ச மாதிரி இருக்கும்னு ஆயி அப்போ சொன்னாங்க. உள்ளே ஆழத்தில அடுத்தடுத்து இருந்த விதைகள்...”
“அதைப்போல விதை ஏதாவது உன் வயிற்றுல இருக்கும்” -ருக்மிணி சொன்னாள் : “அதனாலதான் நேத்து ராத்திரி வாந்தி எடுத்திருக்கே!”
“ஆம்பளைங்க என் உடம்பைத் தெட்டுத் தடவுறப்போ மனசு புரட்டிப் புரட்டி எடுக்கிறதுனாலதான் நான் நேற்று வாந்தி எடுத்தேன்”- சீதா சொன்னாள் : “எல்லா ஆம்பளைங்க மேலேயும் எனக்கு ஒரே வெறுப்பு...”
“அப்போ நீ கல்யாணமே பண்ணிக்கமாட்டியா?”-ருக்மிணி ஆச்சரியத்துடன் கேட்டாள் : “சொந்தத்துல ஒரு வீடும் குழந்தைகளும் உனக்குன்னு வேண்டாமா?”
“வேணும்தான்... சொந்தத்துல ஒரு வீடும் எனக்குன்னு குழந்தைகளும் வேணும்னு எனக்குக்கூட விருப்பம்தான். கால்களைப் பிடிச்சு விளையாடுற தடிச்சு கொழுகொழுன்னு இருக்குற ஒரு குழந்தையைத்தான் நான் கனவு காணுறேன். என்னைப் பார்த்து அவன் சிரிக்கணும். ‘அம்மான்னு என்னை அவன் கூப்பிடணும். ஆனா, ஒரு ஆம்பளைகூட என் வீட்டுல இருக்கக்கூடாது...”
சாலையில் போய்க் கொண்டிருந்தவர்களிடமிருந்து முகத்தை மறைத்துக் கொண்டு ஒரு ஆள் உள்ளே வந்தான்.
“இந்த நேரத்துலயா?”-ஆயி கேட்டாள் : “சாயங்காலம்கூட ஆகலியே!”
“சாயங்காலம் எனக்கு வேலைகள் நிறைய இருக்கு”- வந்த ஆள் சொன்னான். ஒரு வெள்ளை புஷ் சட்டையும் டெர்லின் பேண்ட்டும் அவன் அணிந்திருந்தான். நகத்தை கடித்துக் கொண்டு ஒருவித பதைபதைப்புடன் அவன் தன்னைச் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தான்.
“சரி.. சரி... யார் வேணும்னு பாருங்க”-கூடி நின்றிருந்த இளம் பெண்களுக்கு நேராக விரலைச் சுட்டிக் காட்டியவாறு ஆயி சொன்னாள். மீராவைத் தவிர மற்ற எல்லாருமே முன்னறையில்தான் உட்கார்ந்திருந்தனர். ராதா எப்போதும் போல தொடையைக் காட்டிக் கொண்டு இலட்சியமாக உட்கார்ந்திருந்தாள். வந்த ஆள் அவளை நோக்கி விரலைக் காட்டினான். அவள் அவனை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றாள்.
அப்போது மீராவின் அறைக்குள்ளிருந்து கீதாகோவிந்தத்தின் வரிகள் உயர்ந்து கேட்டுக் கொண்டிருந்தன.
“எவ்வளவு இனிமையா பாடுறா, என் மீரா”-ஆயி சொன்னாள்.
பெண்கள் அமைதியாக பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
‘ரதிசுகஸாரே கதமபிஸாரே மதனமனோஹர வேஷம்
நகுருநிதம்பினி கமனவிளம்பன மனுஸரதம் ஹ்ருதயயேசம்.’