சிவப்பு தீபங்கள் - Page 12
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6741
சிறிது நேரம் சென்றதும் அறைக்குள்ளிருந்து சிந்துத்தாய் வெளியே வந்து திண்ணையில் ஒன்றுமே பேசாமல் உட்கார்ந்தாள். வெற்றிலைப் பெட்டியிலிருந்து உலர்ந்துபோன ஒரு இலையை எடுத்து அதை வாயில் போட்டு அவள் சுவைக்க ஆரம்பித்தாள். “நம்ம சீதாவோட நிலைமை மோசமா இருக்கு”- அவள் மெதுவான குரலில் சொன்னாள் “அவ செத்துப் போனாலும் போகலாம்.”
அடுத்த நிமிடம் ருக்மிணி உள்ளே ஓடினாள். அந்தச் சிறு அறையின் கதவுகள் பாதி திறந்திருந்தன. சீதாவின் தொடைகளுக்கு மத்தியில் பழைய புடவைத் துணிகளை வைத்துக் கொண்டிருந்தார்கள் ஆயியும் ராதாவும். அந்தத் துணிகள் இரத்தத்தால் நனைந்திருந்தன. ஒரு பொம்மையைப் போல எந்தவித அசைவும் இல்லாமல் கிடந்தாள் சீதா. மதிய நேர சூரியனின் ஒளிபட்ட அவளின் சிறிய முகம் மிகவும் வெளிறிப் போயிருந்தது. அவளின் உருவம் ஒரு வெளிநாட்டு பொம்மையை அப்போது ஞாபகப்படுத்தியது. படுத்திருந்த அவளின் உடலில் சற்று உயரமாகத் தெரிந்த வயிறு மெதுவாக துடித்துக் கொண்டிருந்தது. விலை உயர்ந்த பொம்மைகளின் வயிற்றை அழுத்தும்போது மம்மி என்று அழுவதைப் போல அவளும் அழுவாளோ?
“ருக்மணி நம்ம சீதா நம்மைவிட்டுப் போகப் போறா”- மெதுவான குரலில் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு ஆயி சொன்னாள் “நல்ல ஆட்கள் இறந்தபிறகு போகுற சொர்க்கத்தை நோக்கி இவளும் போகப்போறா.”
“சீதா சாகப்போறாளா?”- ருக்மிணியின் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை.
இன்ஸ்பெக்டர் அப்போது அங்கு வந்து மிகப் பெரிய உதவியாக இருந்தது. மெடிக்கல் ரிப்போர்ட் எழுதுவதற்காக அவர் டாக்டரை அழைத்துக் கொண்டு வந்தார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சீதாவின் இறந்துபோன உடல் மின்சார சுடுகாட்டிற்குக் கொண்டு போகப்பட்டது. ஆயியும் மற்ற மூன்று இளம் பெண்களும் சீதாவின் உடல் உரிந்து சாம்பலாவதை முன்னால் நின்று பார்த்தார்கள். தெருவில் பொம்மைகள் விற்பனை செய்யும் ஒரு மனிதனிடம் வாங்கிய ஒரு ப்ளாஸ்டிக் பொம்மைக்கும் ருக்மிணி கிருஷ்ணன் என்ற பெயர் வைத்திருந்த ஒரு பச்சை நிறத்தால் ஆன பொம்மைக்கும் அவர்கள் இருவரும் ஏற்கெனவே திருமணம் செய்து வைத்திருந்தார்கள். அந்தத் திருமண நினைவுடன் சீதாவைப் பற்றிய நினைவுகளும் எஞ்சி நின்றன. அந்த பொம்மைகளுக்கு அருகில் படுத்தவாறு எந்தவித சத்தமும் உண்டாக்காமல் கண்ணீர்விட்டு அழுது கொண்டிருந்தாள் ருக்மிணி. ஒரு வாடிக்கையாளர் எப்போதும் போல வந்து கதவைத் தட்டியபோது ராதா சொன்னாள் “தயவு செய்து போங்க. இன்னைக்கு காலையில இங்கே ஒரு சோக நிகழ்ச்சி நடந்திடுச்சு.” அவன் எதிர்த்து எதுவும் சொல்லாமல் திரும்பிப் போனான்.
இரவு நேரத்தில் சரஸ்வதியின் அறைக்குள்ளிருந்து ஒரு ஆணின் குரலைக் கேட்டு ருக்மிணி திடுக்கிட்டு எழுந்தாள். சரஸ்வதியின் கவலை அதிக நேரம் நீண்டு நிற்கவில்லை. அந்த நேரத்தில் யாராவது தனக்கு வந்து ஆறுதல் சொல்லமாட்டார்களா என்று ருக்மிணியின் மனம் ஏங்கியது. ஆயி தன்னுடைய தோள்மீது கையை வைத்து கட்டிப் பிடித்திருந்தால் ருக்மிணிக்கு மீண்டும் உறங்க முடிந்திருக்கும். அறையில் சீதா இருப்பதைப் போலவே அவள் உணர்ந்தாள். இன்ஸ்பெக்டர் வந்து அந்தச் சிறு அறைக்கு தன்னை அழைத்துக் கொண்டு போய் ருக்மிணி உன்னை நான் எந்த அளவுக்கு விருப்பப்படுறேன் தெரியுமா? என்று மீண்டும் கூறியிருந்தால்... பயம் மனதில் நிறைந்திருந்தபோது அவள் அப்படியெல்லாம் விருப்பப்பட ஆரம்பித்துவிட்டாள்.
அடுத்த நாள் காலையில் ஆயி ஒரு ஜோதிடனை வீட்டிற்கு வர வைத்தாள். தரையில் ஒரு கட்டம் வரைந்து அவன் அதன்மீது சோழிகளை உருட்டினான்.
“வாழ்க்கையில் ரொம்பவும் மோசமான ஒரு காலகட்டத்தை நீங்க இப்போ அனுபவிச்சிக்கிட்டு இருக்கீங்க ஆயி”- அவன் சொன்னான். “ஒருத்தன்கூட உங்க ஒரு பொண்ணு ஓடிப் போயிருச்சுன்னு நீங்க சொன்னீங்கள்ல? மற்றொரு பொண்ணு செத்துப் போயிட்டா. இனிமேலும் உங்களுக்குப் பல கெட்ட விஷயங்கள் நடக்கப் போகுது. கிரக நிலையைச் சரி பண்ணுறதுக்கு பூஜை நடத்தணும். துர் தேவதைகளை விரட்டணும்...”
“கிரகங்கள்கூட எனக்கு விரோதிகளா இருக்கா என்ன?” ஆயி கேட்டாள். “கிரகங்களும் எனக்கு எதிரா நின்னுக்கிட்டு இருக்கு. இந்த ஊர்ல எனக்கு விரோதிங்க நிறைய இருக்காங்க. எல்லாருக்கும் என் மேல பொறாமை. அவங்க பேரை நான் சொல்ல விரும்பல. இன்னும் கொஞ்சம் நல்ல இடமா பார்த்து... மரைன் ட்ரைவ் பக்கமோ கொளாபா பக்கமோ பாஸ்டர்லைன் பக்கமோ போயிறலாமான்னு பாக்குறேன். அப்பவாவது எனக்கு மன அமைதி கிடைக்காதா?”
“புதுசா இடம் தேடி பிடிக்கணும்னா உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்? பகடி மட்டும் ஒரு லட்சம் ரூபாய் கேட்பாங்கள்ல?”- ஜோதிடர் சொன்னார் “இதுவே நல்ல இடம்தான். அதிகமாப் போனா ஆயிரம் ரூபாய் செலவு செஞ்சு ஒரு ஹோமம் நடத்தினா போதும். அதுலயே உங்களோட விரோதிங்க எல்லாரும் அடங்கிப் போயிடுவாங்க. பிஸினஸ் பிரமாதமா நடக்க ஆரம்பிச்சிடும்.”
“ஹோமம் நடத்தக் கூடிய யாரையாவது உங்களுக்குத் தெரியுமா?”- ஆயி கேட்டாள்.
வாசலில் அலட்சியமாக நின்றிருந்த இளம்பெண்களை அந்த மனிதர் வெறித்துப் பார்த்தார். “நானே ஹோமம் நடத்துறேன். ஆனால் அந்த ஹோமத்தை ரொம்பவும் ரகசியமா யாருக்கும் தெரியாம நடத்தணும். இந்த வீட்டுக்குப் பின்னாடி வராந்தா இருக்கா?”
ஜோதிடம் போனபிறகு ஆயிக்கு ஆறுதல் சொல்வதற்காக சிந்துத்தாயி வந்தாள்.
“எல்லாம் கடவுள் சித்தம், என் தங்கச்சி...”- அவள் சொன்னாள்: “இல்லாட்டி அவளைப்போல இருக்கிற ஒரு சின்ன பொண்ணு கர்ப்பம் தரிக்க முடியுமா? அவ வயசுக்குக்கூட வரல. நானே இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை இதுவரை கேள்விப்பட்டதே இல்ல. அதிக நாட்கள் வாழ்றதுக்கான கொடுப்பினை இல்லாத பொண்ணு அவ. வாழ்க்கையில சீக்கிரமே சாகுறதுக்கான எல்லா அறிகுறிகளும் அவகிட்டே இருந்துச்சு. வெளிறிப்போன அவளோட உதடுகளை உனக்கு ஞாபகத்துல இருக்குல்ல? அவளோட மெலிஞ்சுபோன கைகள்...”
ஆயி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள் “என் மேல எவ்வளவு பிரியம் வச்சிருந்த பொண்ணு அவ தெரியுமா?”- ஆயி சொன்னாள். “மத்தியானம் அவ எனக்கு வெற்றிலை மடிச்சுத்தருவா. வெறும் பத்து வயது நடக்குறப்போ முந்நூறு ரூபாவுக்கு கிராமத்துல இருக்கிற ஒரு புரோக்கர் அவளை எனக்கு வித்தான். காலரா வந்து அவளோட அப்பாவும் அம்மாவும் செத்துப் போயிருந்தாங்க. மழைக்காலம் இருக்கிறப்போ நான் அவளுக்கு காட்லிவர் ஆயில் கொடுத்தேன். இருந்தும் அவள் உடம்புல சதை பிடிக்கவே இல்ல. ஒருநாள் இன்ஸ்பெக்டர் ஐயா வந்து சொன்னாரு. அவளைச் சதைப்பிடிக்க வைக்க முயற்சி பண்ண வேண்டாம்னு.