சிவப்பு தீபங்கள் - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6741
ருக்மிணி அவளின் சினேகிதியின் மரணத்திற்குப் பிறகு முதல் தடவையாக இன்ஸ்பெக்டர் சொன்னதைக் கேட்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள். அவள் அவருக்குப் பக்கத்தில் ஓடிவந்து முடி வளர்ந்திருந்த அவரின் நெஞ்சின்மீது முகத்தை வைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள்... “வாப்பா... வாப்பா....”- என்று அவள் அழைத்தாள்.
அதைக் கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தாலும் அவளின் சுருண்டு காணப்பட்ட அவளின் தலைமுடியை அவர் தன் கையால் கோதிக்கொண்டிருந்தார். “ஓ... வாப்பா... என்னை இங்கேயிருந்து கொண்டு போங்க. இல்லாட்டி நானும் செத்துப் போயிடுவேன்...” மெதுவான குரலில் அவள் முனகினாள்.
அவளுடைய நெற்றியில் அவர் முத்தமிட்டார். காமம் அவரை விட்டு ஓடிப் போயிருந்தது. “நீ உன் அப்பாவை வாப்பான்னுதான் கூப்பிடுவியா?”- அவர் கேட்டார்.
“ஆமா...”- ருக்மிணி அழுகைக்கிடையில் சொன்னாள்:. “வாப்பாவுக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும். ஆனா என் அம்மாகூட சண்டை போட்டுட்டு எங்கே போறேன்னுகூட சொல்லாம அவர் எங்கேயோ போயிட்டாரு. அதுக்குப்பிறகு வாப்பா திரும்பி வரவேயில்ல... தீபாவளிக்கு புது ஃப்ராக் வாங்கிட்டு வருவாருன்னு வீட்டு முன்னாடி எவ்வளவு நேரம் வாப்பாவை எதிர் பார்த்து நான் உட்கார்ந்திருந்தேன் தெரியுமா? இனி என்னைக்காவது என்னைப் பார்க்கிறதுக்கு என் வாப்பா வருவாரா? என்னை என் வாப்பா மறந்தாலும் மறந்திருக்கலாம்...”
“அழாதே...” - இன்ஸ்பெக்டர் சொன்னார்: “உனக்கு நானிருக்கேன்ல... நான்தான் இனிமேல் உனக்கு வாப்பா... இனிமேல் நான் உன்னை என் சொந்த மகளைப் போல பார்த்துக்குறேன். அது போதாதா மகளே?”
அவருடைய கைகளுக்குள் அடங்கியவாறு அவள் உறங்கினாள். ஒரு இரட்டை அடுக்கு பேருந்தில் அவளும் சீதாவும் பயணம் செய்வதைப் போலவும், உயரமான கொய்யா மரத்திலிருந்து கொய்யாப் பழத்தைப் பறித்து பழத்தையும் அதற்குள் இருந்த விதைகளையும் தாங்கள் சாப்பிடுவதைப் போலவும் அவள் கனவு கண்டாள்.
6
மதிய நேரத்தில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள் ஆயி. அழுது அழுது கலங்கிப் போயிருந்த கண்களுடனும் கசங்கிய ஆடைகளுடனும் மீராத்தாயி அப்போது அங்கு வந்தாள். உறங்கிக் கொண்டிருந்த ஆயியின் உருவம் பயங்கரமாகவும் பயமுறுத்தும் விதத்திலும் இருந்தது. ஆயியின் அந்த உருவத்தைப் பார்த்தவாறு தரையில் உட்கார்ந்திருந்தாள் ருக்மிணி. அந்த நடுத்தர வயதைத் தாண்டிய பெண்ணின் பெரிய மார்பகங்கள் மீது தன்னுடைய முகத்தை வைத்துக் கொண்டு மீராத்தாயி அழுதாள். “எனக்கு உதவுங்க ஆயி...”
“அவரை அடிச்சுக் கொன்னுடச் சொல்லி இன்ஸ்பெக்டர் போலீஸ்காரங்களுக்கு உத்தரவு போட்டிருக்கார். ஸ்டேஷன்ல பிடிச்சு வச்சுக்கிட்டு போலீஸ்காரங்க அவரை அடிச்சுக் கொல்றாங்க. இன்னும் கொஞ்ச நேரம் ஆனா அவர் செத்தே போயிடுவாரு ஆயி. நான் விதவை ஆயிடுவேன். ஆயி எந்திருச்சு இன்ஸ்பெக்டர்கிட்ட அவரை அடிக்கக் கூடாதுன்னு போய்ச் சொல்லுங்க.”
ஆயி எழுந்து அவளின் முகத்தையே உற்றுப் பார்த்தாள். கறுத்துப் போயிருந்த அவளுடைய முகம் வெளிறிப் போயிருந்தது.
“என்ன ஆச்சு மீரா?”- அவள் மெதுவான குரலில் கேட்டாள். “அப்போ நீ திரும்ப வர்றதுன்னு முடிவு பண்ணிட்டியா?”
“அவரை அடிச்சுக் கொல்றாங்க”- மீரா அழுது கொண்டேயிருந்தாள். “எந்திரிங்க ஆயி. அவர் எந்தத் தப்பும் செய்யாதவர்னு இன்ஸ்பெக்டர்கிட்ட சொல்லுங்க. என்னை அவர் இங்கேயிருந்து இழுத்துக்கிட்டுப் போகல. நான்தான் அவரை இங்கேயிருந்து வம்படியா அழைச்சிட்டுப் போகச் சொன்னேன். உண்மை இப்படி இருக்கிறப்போ என்னை வெறுமனே விட்டுட்டு அவரை மட்டும் அவங்க அடிக்குறதுக்குக் காரணம் என்ன?”
“அவன் இப்போ எங்கே இருக்கான்?”- ஆயி கேட்டாள்.
“போலீஸ் ஸ்டேஷன்ல அவரைப் பிடிச்சு வச்சிருக்காங்க. தயவு செய்து அவரை ஒண்ணும் செய்யாம விடச் சொல்லுங்க. என் வாழ்க்கை முழுவதும் நான் இங்கேயே இருந்துடுறேன்.”
படுத்திருந்த இடத்தைவிட்டு மெதுவாக எழுந்த ஆயி வெற்றிலை போட ஆரம்பித்தாள்.
“சரி மீரா... நான் போயி இன்ஸ்பெக்டர் ஐயாவைப் பார்க்கிறேன். நீ உள்ளே போயி குளி. ராதாகிட்ட சாப்பாடு தரச்சொல்லு. உன்னைப் பார்க்கிறப்பவே தெரியுது. சரியா சாப்பிட்டு ஒரு வாரத்துக்குமேல ஆயிருக்கும்னு...”
நன்றி நிறைந்த கண்களுடன் ஆயியின் கைகளை முத்தமிட்ட மீரா வீட்டிற்குள் நுழைந்தாள்.
“என் மீரா கடைசியில எப்படியோ திரும்ப வந்துட்டா”- மன மகிழ்ச்சியுடன் ஆயி சொன்னாள். பிறகு ருக்மிணியையும் அழைத்துக் கொண்டு ஆயி போலீஸ் ஸ்டேஷனை நோக்கி நடந்தாள்.
“ஆம்பளைகளைக் காதலிக்கிறதுன்றது ஆபத்தான விஷயம்”- தன்னுடன் வந்த ருக்மிணியைப் பார்த்து ஆயி சொன்னாள்: “கயிறைக் கட்டி நம்மை நாமே தூக்குல போட்டுக்கிறதுக்கு சமம் அது. யாரையும் காதலிக்கலைன்னா நீ எப்பவும் சுதந்திரமா இருக்கலாம். என்னைக்கும் நீ இந்த விஷயத்தை ஞாபகத்துல வச்சிருக்கணும்...”
இன்ஸ்பெக்டரின் உதவியை வேண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு ஆயி சென்றபோது அந்த இளைஞனை போலீஸ்காரர்கள் அடித்து உதைத்து நாசம் பண்ணியிருந்தார்கள். ஸ்டேஷனிலிருந்து அவனை அழைத்துக் கொண்டு வர ஆயிக்கு அதிக நேரம் ஆகவில்லை. ஒரு டோங்காவில் ஆயிக்குப் பக்கத்தில் அவன் தலையைக் குனிந்தவாறு அழுது கொண்டிருந்தான். “தன் தப்பில்ல”- அவன் முணுமுணுத்தான். ஆனால் அவனுடன் பேச ஆயி விரும்பவில்லை. வீட்டிற்குப் பக்கத்தில் டோங்கா நின்றது. அவனிடம் வண்டியைவிட்டு இறங்கும் படி ஆயி சொன்னாள். வண்டியைவிட்டு அவன் இறங்க ருக்மிணி உதவினாள். “என்னோட எலும்புகளெல்லாம் ஒடிஞ்சு போயிடுச்சு” அந்த இளைஞன் முணுமுணுத்தான்.
அப்போது அந்த வழியே சைக்கிளில் வந்த தபால்காரன் ஆயியை அழைத்துச் சொன்னான் “அம்மா இன்னைக்கு உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கு...”
“மகளே ருக்மிணி... கடிதத்தைப் பிரிச்சுப் படி”- ஆயி சொன்னாள்:. “என் மகனோட கடிதமா? அவன் தன் தாயின் பாவங்களையெல்லாம் மன்னிச்சுட்டானா?”
வலியால் முனகிக் கொண்டிருந்த அந்த இளைஞன் நொண்டி நொண்டி நடந்தவாறு வீட்டிற்குள் நுழைந்து உட்கார்ந்தான். எவ்வளவோ நாட்களாக ஆயி எதிர்பார்த்துக் கொண்டிருந்த கடிதத்தில் இருக்கும் விஷயத்தை அறிந்து கொள்வதற்காக தபால்காரனும் அங்கேயே நின்றிருந்தான். ருக்மிணி கடிதத்தைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினாள். “என் அன்பான அம்மாவுக்கு பத்து வருடங்களாக நான் அமைதியாக எதுவும் பேசாமல் வாழ்ந்து கொண்டிருந்தேன். அப்படி இருக்கும்பொழுது இன்று பெரிய படிப்பு படித்த என்னுடைய முதலாளி உண்மையான அன்பு என்றால் என்னவென்பதை எனக்குப் புரிய வைத்தார். அம்மா உங்களை வேதனைப்படுத்தியதற்கும் இவ்வளவு காலம் உங்களைப் பற்றி நினைக்காமல் இருந்ததற்கும் என்னை அவர் பலமாகத் திட்டினார்.