சிவப்பு தீபங்கள் - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6741
“மகளே இன்ஸ்பெக்டர் ஐயா உன்னைப் பார்க்கணும்னு சொன்னாரு”- ருக்மிணியைப் பார்த்து ஆயி மெதுவான குரலில் சொன்னாள். “பொம்மைகளை இங்கேயே வை. என் அறைக்குப் பக்கத்துல இருக்குற அந்தச் சின்ன அறைக்கு நீ போ. அங்கே அவரை நான் வரச் சொல்றேன்.”
“இப்போ வேண்டாம் ஆயி”- ருக்மிணி பிடிவாதமான குரலில் சொன்னாள். “நாங்க இங்கே ஜாலியா விளையாடிக்கிட்டு இருக்கோம். நேற்று வாங்கித் தந்த இந்த பொம்மைக்கு நம்ம பொம்மையை நாங்க கல்யாணம் செஞ்சுத் தரப்போறோம். மீரான்னும் கிருஷ்ணன்னும் நாங்க இந்த பொம்மைகளுக்குப் பேர் வச்சிருக்கோம். பயமுறுத்துற முகத்தை வச்சிருக்குற அந்த இன்ஸ்பெக்டரைப் போகச் சொல்லுங்க ஆயி.”
ஆயி குனிந்து அவளின் காதைப் பிடித்துத் திருகினாள். “இங்கே இருந்து இப்போ எழுந்திருக்கிறியா இல்லியா?”- அவள் திட்டினாள். “இன்ஸ்பெக்டர் ஐயாவைப் போல இருக்குற ஒரு ஆளை எப்படி உன்னால அப்படிப் பேச முடிஞ்சது? உன்னை அவருக்கு வேணும்னு தோணினா உடனே நீ போயி அவரை சந்தோஷப்படுத்தணும். நீ சொன்னபடி நடக்க மாட்டேன்னா சொல்ற?”
“சரி ஆயி...”- தரையை விட்டு மெதுவாக எழுந்த அந்தச் சிறுமி ஆயி சொன்னபடி நடக்கத் தயாரானாள். “சீதா நீ இங்கேயே இரு. நான் இப்போ வந்திடுவேன். நான் வந்தபிறகு பொம்மைகளோட கல்யாணத்தை நடத்தலாம்.” அப்போதும் தரையில் படுத்திருந்த சீதா ஒரு வெகுளித்தனமான சிரிப்பைச் சிரித்தாள்.
அந்தச் சிறுமியிடம் இன்ஸ்பெக்டர் அப்போது மிகவும் பாசத்துடன் பழகினார். “கண்ணைத் திறந்து மூடுற ஒரு பொம்மை உனக்கு வேணுமா?”- அவளின் அழகான கைகளைத் தடவியவாறு அவர் கேட்டார்.
“வேணும்”- ருக்மிணி அந்த நிமிடமே பதில் சொன்னாள்.
“சர்ச் கேட்டில் இருக்குற கடையில அப்படிப்பட்ட ஒரு பொம்மை இருக்கு”- இன்ஸ்பெக்டர் சொன்னார்: “வயிற்றைப் பிடிச்சு அழுத்துறப்போ அம்மான்னு வாயைப் பிளந்து அது அழும். அது ஒரு வெளிநாட்டு பொம்மை. அதோட விலை நூறு ரூபா. நீ என்கிட்ட இன்னும் அன்பா நடந்துக்கிட்டா உனக்காக அந்தத் தொகையை செலவழிக்கிறதுக்கு நான் தயங்கவே மாட்டேன். இந்த உலகத்துல இருக்குற மற்ற எல்லாரையும்விட உன் மேலதான் எனக்குப் பிரியம் அதிகம்.”
“அப்படின்னா உங்க மனைவி குழந்தைங்க மேல உங்களுக்கு பிரியம் இல்லியா?”- அந்தச் சிறுமி கேட்டாள்.
“ருக்மிணி உன்மேல இருக்குற பிரியம் அளவுக்கு அவங்கமேல எனக்குப் பிரியம் இல்ல”- அவர் சொன்னார்: “உன் வயசுல எனக்கு ஒரு சின்ன பொண்ணு இருக்கா. என்கிட்ட பிரியமா இருக்குறதா நீ சத்தியம் பண்ணிச் சொன்னா ஒவ்வொரு மாதமும் உனக்கு நான் விளையாட்டு சாமான்கள் வாங்கித் தர்றேன். மீராவை இங்கேயிருந்து கொண்டுபோன அந்தப் பையனை மாதிரி நான் அழகன்னு சொல்ல முடியாது. என்னைப் பார்க்குறப்போ குரங்கைப் பார்க்குறது மாதிரி இருக்குல்ல? என் முகத்தைப் பார்க்குறப்போ உனக்குச் சிரிப்பு வருதுல்ல?”
இரக்கம் வரவழைக்கக் கூடிய அவரின் பேச்சைக் கேட்டவுடன் ருக்மிணிக்கு அவர்மீது கனிவு பிறந்தது. “நீங்க பார்க்குறதுக்கு அழகு இல்லாத ஆள் இல்ல...” அவள் சொன்னாள் “எங்களை விட்டுட்டு ஓடிப்போன என் அப்பாவைப் போல இருக்கீங்க நீங்க. உங்களைப் பார்க்குறப்பல்லாம் நான் என் அப்பாவைத்தான் நினைக்கிறேன்.”
“என் செல்லப் பொண்ணாச்சே நீ” இனிமேல் உனக்கு கவலைன்றதே இருக்கக் கூடாது”- இன்ஸ்பெக்டரின் கண்களில் நீர் நிறைந்தது. “உன்னை நான் சந்தோஷப்படுத்துறேன். என்கிட்ட தவிர வேற யார்கிட்டயும் உன்னை அனுப்பக் கூடாதுன்னு நான் லட்சுமி பாயிக்கிட்ட தெளிவா சொல்லிர்றேன். நீ எனக்காக இருக்குறவளா இருந்தா உனக்காக நான் லட்சுமிபாயிக்கிட்ட எல்லா மாதங்கள்லயும் ஒரு தொகை கொடுத்துடுறேன். அப்போ அவங்க முணுமுணுக்கவே மாட்டாங்க. அப்படி ஒரு ஏற்பாடு பண்ணினா உனக்குப் பிடிக்குமா?”
“யாராவது ஒரு பையன் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வந்தா?”- கள்ளங்கபடமில்லாத குரலில் ருக்மிணி கேட்டாள்.
“நான்தான் அந்த பையன். என் பூவே...”- அவளை இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டு அந்த மனிதர் தன்னுடைய கட்டையான குரலில் சொன்னார்:
இங்குமங்குமாய் நரைத்த முடி இருக்கும் அவரின் தரையிலிருந்து வந்த வாசனை ருக்மிணியிடம் குமட்டலை உண்டாக்கியது. திடீரென்று அவள் தன் கண்களை மூடிக் கொண்டாள். கட்டிலில் மல்லாக்கப் படுத்திருந்த அவள் நூறு ரூபாய் விலையுள்ள வெளிநாட்டு பொம்மையைப் பற்றி மட்டுமே அப்போது எண்ணினாள்.
5
முனை கூர்மையாக்கப்பட்ட ஒரு குச்சியையும் ஏதோ ஒரு பச்சிலையை அரைத்து உண்டாக்கப்பட்ட உருண்டையையும் கையில் எடுத்துக் கொண்டு ஆயியின் அறைக்கு அடுத்து இருக்கும் சிறிய அறைக்குள் சிந்துத்தாயி நுழைவதைப் பார்த்தபோது ருக்மிணியின் மனதில் ஒருவித பயம் உண்டானது.
“வேண்டாம் ஆயி வேண்டாம். அந்தக் கிழவி என்னைத் தொட நான் விடமாட்டேன்”- என்று பரிதாபமாக அழுதுகொண்டே சொன்ன சீதாவை அவளின் மெலிந்துபோன கைகளை மேல்நோக்கி தூக்கி இழுத்துக் கொண்டு ஆயி அந்தச் சிறிய அறைக்குள் கொண்டு போனாள். பிறகு உள்ளேயிருந்தவாறு அந்த அறையைத் தாழிட்டாள். அந்த அறைக்குள்ளிருந்து வெளிப்பட்ட சீதாவின் முனகல் குரலைக் கேட்டவாறு அறைக்குப் பக்கத்திலேயே நின்றிருந்தாள் ருக்மிணி. மனதைக் கசியவைக்கும் அளவிற்கு பரிதாபமான குரலில் அழுது கொண்டிருந்த சீதாவை சிந்துத்தாயி கோபத்துடன் திட்டுவதையும் தொடர்ந்து சீதாவின் அழுகை மெதுவாக முனகலாக மாறியதையும் அவள் கேட்டாள். திடீரென்று உரத்த குரலில் கேட்ட ஒரு அழுகைச் சத்தம் அந்த அறைக்குள் உயர்ந்து பின் அதுவே யாரோ ஒருவரின் பலமான கைகளால் அழுக்கப்பட்டதையும் கேட்ட ருக்மிணியின் கால்கள் துவண்டன. அவளுடைய சினேகிதி சீதாவை அவர்கள் என்ன செய்கிறார்கள்?
வாசலிலிந்த கம்பிகளை நோக்கி நடந்த ருக்மிணி வெளியே பார்த்தாள். ஆண்கள் நிறைந்திருந்த ஒரு இரட்டை அடுக்கு பஸ் சாலை வழியே கடந்து போனது. அதில் உட்கார்ந்தவர்கள் தன்னைக் கூர்ந்து பார்ப்பதைப் போல அவள் உணர்ந்தாள். அப்போது வானம் புதிதாக சுண்ணாம்பு அடிக்கப்பட்ட சுவரைப் போல இருந்தது. ஒரே மாதத்திற்குள் ஐந்து மரணங்கள் நடைபெற்ற கிராமத்தின் அந்தச் சிறிய வீட்டைப் பற்றி சீதா சொன்னதை மீண்டும் அவள் நினைத்துப் பார்த்தாள். அப்போது மனித குரல் போல் அல்லாத ஒரு உரத்த அழுகைச் சத்தம் அவள் செவிகளில் வந்து மோதியது. மிருகக் காட்சி சாலையிலிருந்து தப்பித்து வந்த ஒரு மிருகத்தின் சத்தமாக அது இருக்குமோ? அவள் ஆச்சரியத்துடன் நின்றாள்.