சிவப்பு தீபங்கள் - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6741
ஒரு நாட்டியமாடுகிற பெண்ணுக்கு வேண்டிய உடல்வாகு அவகிட்ட இருக்குன்னு அவர் சொன்னாரு. அவளுக்கு நடனம் சொல்லிக் கொடுங்க. நல்ல பணவசதி உள்ள ஆளுகளை அவ வசீகரிச்சு இழுப்பா”ன்னு அவர் சொன்னாரு. பரதநாட்டியம் கத்துக்க அவளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலாம்னு மனசுல நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா என் தங்க மகளை என்கிட்ட இருந்து தெய்வம் தட்டிப்பறிச்சிடுச்சு. சிந்துத்தாயி தயவு செஞ்சு இங்கே நடந்த எந்த விஷயத்தையும் யார்கிட்டேயும் சொல்ல வேண்டாம். அப்பன்டிக்ஸ் வெச்சு அவ செத்துப் போயிட்டான்னு டாக்டர் ஐயா சர்ட்டிபிகேட் எழுதித் தந்திருக்காரு.”
“அப்பன்டிக்ஸா? அப்படின்னா என்ன? கர்ப்பப் பையைத்தான் அப்படிச் சொல்வாங்களோ?”- கிழவி கேட்டாள்.
“இல்ல... இல்ல... அது வேறு ஏதோ ஒண்ணு....”- ஆயி பதில் சொன்னாள்.
“எது எப்படி வேணும்னாலும் இருக்கட்டும். இனிமேலாவது நீ ரொம்ப கவனமா இருக்கணும் லட்சுமி”- சிந்துத்தாயி சொன்னாள். “இப்படிப்பட்ட காரியங்கள் நடக்காம பார்த்துக்கணும். ருக்மிணிக்கு இப்படிப்பட்ட ஒரு ஆபத்து நடந்துடக்கூடாது. அவளுக்கு கர்ப்பம் உண்டாக வாய்ப்பிருக்கு. அவளுக்கு நல்ல வளர்ச்சி இருக்கு.”
“ருக்மிணிக்கு எந்த பிரச்சினையும் இருக்காது”- ஆயி சொன்னாள். “இன்ஸ்பெக்டர் ஐயா அவமேல ரொம்பவும் பிரியமா இருக்காரு. அவர் அவளை ஒரு கீப்பா வச்சிக்கப்போறாரு. அவருக்கு இனிமேல் குழந்தைகள் எதுவும் பிறக்கப் போறது இல்ல. அந்த அளவுக்கு அவருக்கு வயசாயிடுச்சு.”
“குழந்தைகள் பிறக்க வைக்கிறதுக்கு ஆம்பளைகளுக்கு வயசு ஒரு பிரச்சினையா என்ன லட்சுமி...”- சிந்துத்தாயி சொன்னாள் “எண்பது வயசு உள்ள ஒரு ஆள் இருபது வயசு உள்ள ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி ரெண்டு பிள்ளைகளைப் பெற்ற சம்பவம் எனக்குத் தெரியும். இன்ஸ்பெக்டர் ஐயாவை எடுத்துக்கிட்டா ஆம்பளைங்களுக்கு மத்தியில அந்த ஆளு சிங்கம் மாதிரி. இந்த பூமி முழுவதும் குழந்தைகள் உண்டாக்குற அளவுக்கு அந்த ஆளுகிட்ட சக்தி இருக்கு...”
அதைக் கேட்டு ஆயி சிரித்துவிட்டாள். அவளின் சிரிப்புடன் சேர்ந்து கிழவியின் அவலட்சணமான சிரிப்பும் சேர்ந்து ஒலித்தது.
அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது “வளையல் வேணுமா?” என்று கேட்டபடி வளையல் விற்பனை செய்யும் மனிதன் வீட்டிற்கு முன்னால் வந்து நின்றான். பல வண்ண வளையல்கள் நிறைந்திருந்த கண்ணாடி போட்ட ஒரு பெட்டியை அவன் தன் தோள்மீது தொங்க விட்டிருந்தான். வளையல்களைப் பார்ப்பதற்காக ருக்மிணி வேகமாக ஓடி வந்தாள். வளையல் விற்பனை செய்யும் மனிதன் தரையில் உட்கார்ந்தான். கார்ட்போர்ட்டால் உண்டாக்கப்பட்ட உருளைகளின் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வளையல்களை அவன் வெளியே எடுத்தான். ஒவ்வொரு உருளையிலும் மூன்று டஜன் வளையல்கள் இருந்தன. சரஸ்வதி தன்னுடைய கையை நீட்டிக் கொண்டு கேட்டாள். “அந்த ஆரஞ்சு நிறத்துல இருக்கிற வளையல்களை எடுங்க... பார்ப்போம். அது நைலான் வலையல்களா?” வளையல் விற்பவனைப் பார்த்து அவள் கேட்டாள். “ஆமாம்... ஆனா விலை கொஞ்சம் அதிகமா இருக்கும்”- அவன் சொன்னான். “நான் அந்த வளையல்களை வாங்க முடியாதுன்னு நீங்க நினைச்சீங்களா?”- குறும்புத்தனம் நிறைந்த கண்களுடன் கறுப்பான அந்த இளம் பெண் கேட்டாள். எல்லாம் தெரியும் என்ற எண்ணத்துடன் அந்த மனிதன் சிரித்தான். “நீங்க தங்க வலையல் வேணும்னா கூட வாங்கலாம்”- அவன் தாழ்வான குரலில் சொன்னான். அதைக் கேட்டு அவள் சிரித்தாள். வெள்ளி மணிகள் ஒலிப்பதைப்போல இருந்தது அவளின் சிரிப்பு.
“ருக்மிணி உனக்கு வலையல் வேணுமா?” ஆயி கேட்டாள். “நல்ல சிவப்பு நிறத்துல இருக்கிற வளையல்கள் உன் கைகளுக்கு பொருத்தமா இருக்கும்...” ருக்மிணி வளையல்கள் தனக்கு வேண்டாம் என்ற அர்த்தத்தில் தலையை ஆட்டினாள். வலையல்கள் சீதாவைப் பற்றிய நினைவுகளை அவளிடம் உண்டாக்கின. அதனால் வளையல்கள் அணிய வேண்டும் என்ற விருப்பமும் அவளுக்கு இல்லாமல் போனது. “வேண்டாம் ஆயி. எனக்கு எதுவுமே வேண்டாம்”- அவள் சொன்னாள். கைகளை நீட்டி ஆரஞ்சு வண்ணத்தில் இருந்த ஒரு டஜன் வளையல்களை போடும்படி அந்த மனிதனிடம் சொன்னாள் சரஸ்வதி “நான் இந்த வளையல்களுக்கு பணம் தரலைன்னா?”- அவள் மெதுவான குரலில் அவனைப் பார்த்துக் கேட்டாள். அதற்குப் பதிலாக வந்த அவனுடைய சிரிப்பு அர்த்தம் நிறைந்ததாக இருந்தது.
“நீங்க பணம் எதுவும் தரவேண்டாம்”- அவன் சொன்னான். “அப்படின்னா இது என்ன வியாபாரம்?”- கேள்வி கேட்ட சரஸ்வதியின் மெல்லிய ரவிக்கையின் மார்புப் பகுதிகளையே அவனுடைய கண்கள் வெறித்துப் பார்த்தன. அவளுடைய கவர்ச்சியான பின்பகுதியையும் அந்தக் கண்கள் பார்த்தன. “நானொரு நல்ல வியாபாரியா இல்லாமலிருக்கலாம்”- அவன் சொன்னான். “ஆனா நான் நல்லவன். உங்களுக்கு அதை நிரூபிச்சுக் காட்டணுமா?”- அவன் கேட்டான். அதைக் கேட்டு சரஸ்வதி விழுந்து விழுந்து சிரித்தாள். பணம் எடுத்துக் கொண்டு வருவதற்காக அவள் அறைக்குள் போனாள்.
“நீங்க எந்த ஊரு?”- ஆயி கேட்டாள்.
“நானா? வாரணாசியில இருந்து வர்றேன்”- அவன் சொன்னான். தாதருக்குப் பக்கத்தில என் அண்ணனுக்கு ஒரு வெற்றிலைப் பாக்கு கடை இருக்கு. கொலிவாடாவில் நாங்க ஒண்ணா சேர்ந்து இருக்கோம்.”
“வெற்றிலைப் பாக்கு கடையில நல்ல பணம் கிடைக்குமா?”- ஆயி கேட்டாள்.
“இல்ல... எங்கம்மா ரொம்பவும் கஷ்டப்பட்டுத்தான் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க.”
அப்போது அங்கு இன்ஸ்பெக்டர் வந்தார். அவர் மிகவும் வியர்த்துப் போயிருந்தார்.
“எல்லாத்தையும் சரி பண்ணியாச்சு”- இன்ஸ்பெக்டர் சொன்னார்: “எனக்கு கொஞ்சம் படுக்கணும் போல இருக்கு. ஒரு மணி நேரமாவது ஓய்வெடுத்தால்தான் சரியா இருக்கும். ருக்மிணி எங்கே? ஓ... இங்கேதான் அவ நின்னுக்கிட்டு இருக்காளா?”
இன்ஸ்பெக்டருடன் ருக்மிணியை அறையை நோக்கித் தள்ளிவிட்டாள் ஆயி. வாசல் கதவைப் பிடித்தவாறு நின்றுகொண்டு ருக்மிணி படுக்கையில் மல்லாக்க விழுந்து கிடந்த அந்தத் தடிமனான மனிதரைப் பார்த்தாள். ஆடைகள் முழுவதையும் மாற்றியிருந்தார் அவர். “என் கிளியே இங்கே பக்கத்துல வா”- காமம் நிறைந்த குரலில் அவர் அழைத்தார். ருக்மிணி அசையவில்லை.
“உனக்கு என்மேல கோபமா செல்லமே?”- அவர் கேட்டார். “சர்ச் கேட்ல இருந்து வெளிநாட்டு பொம்மை வாங்கித் தரலைன்னு நீ என் மேல கோபப்பட்டுக்கிட்டு இருக்கியா? அந்தப் பொண்ணோட மரணத்தைத் தொடர்ந்து அவளோட உடலடக்கம் அது இதுன்னு நூறாயிரம் விஷயங்களை நான் முடிக்க வேண்டியதிருந்துச்சு. நானே தளர்ந்து போயிட்டேன். எனக்கு கொஞ்சம் சமயம் கொடு. மூணு நாட்கள்ல அந்த பொம்மை உன் கையில இருக்கும். அந்த பொம்மைக்கு நீ சீதான்னு பேர் வை...”