சிவப்பு தீபங்கள் - Page 16
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6740
“லட்சுமிபாயி நான் இப்போ ஒரு வயசான ஆளு”- அவர் சொன்னார்: “நாக்பூர்ல அப்பா, அம்மாவோட இருக்கிற என் பேத்தியைத்தான் இந்த சின்னப் பொண்ணு ஞாபகப்படுத்துது. இவளை மாதிரித்தான் அந்தக் குழந்தையும் என் மேல ரொம்பவும் பிரியமா இருக்கும். எல்லா தீபாவளிக்கும் அவ எனக்கு ஒரு கடிதம் எழுதுவா.”
“அன்பைவிட மேலானது வேற எதுவும் இல்ல இன்ஸ்பெக்டர் ஐயா”- ஆயி சொன்னாள். புகையிலைத் துண்டையும் சுண்ணாம்பையும் இடது கை உள்ளங்கையில் வைத்துத் தேய்த்துக் கொண்டிருந்தாள் ஆயி. “எனக்கும் வயசாயிடுச்சு. இந்த வீட்டை சரஸ்வதிகிட்ட விட்டுட்டு காசிக்குப் போயி மரணமடைஞ்சா என்னன்னு நான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன். கடைசிநாள் வரை எந்தவித பிரச்சினையும் இல்லாம வாழ்றதுக்கான எல்லா வழி வகைகளையும் நான் செஞ்சிட்டேன். போறப்போ கூட ஒரு வயசான கிழவியையும் கூட்டிட்டுப் போகலாம்னு இருக்கேன். அந்த சிந்துத் தாயையும் என்கூட அழைச்சிட்டுப் போனா என்னன்னு நினைக்கிறேன். அந்தக் கிழவிக்கு சொந்தம்னு யாரும் இல்ல. எதுவா இருந்தாலும் சனிக்கிழமை என் மகன் வரட்டும். அதுக்குப் பிறகு முடிவு செய்வோம்.”
“லட்சுமிபாயி அப்போ நாங்க உங்களைப் பார்க்க முடியாதே”- இன்ஸ்பெக்டர் சொன்னார் “நீங்க இல்லாத இந்த வீடு இப்போ இருக்குற மாதிரி இருக்காது. ருக்மிணி எங்கே போவா? இந்த வீட்டுல இருக்கப்போற புதிய ஆயிக்கிட்ட அன்புக்காக அவ கெஞ்சி நிக்கிற சூழ்நிலை வரலாம்ல?”
“அவளை நான் என் மகனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிடுவேன்”- ஆயி சொன்னாள்: “கட்டாயம் ஒரு பொண்னை அவன் நல்லா காப்பாத்துவான்.”
“நேராமாயிருச்சா?”- சுற்றிலும் கண்களை ஓட்டியவாறு அங்குவந்த ஒரு ஆள் கேட்டான்.
“இந்த வீட்டுல எப்பவும் நேரமாகுறது இல்ல...”- உள்ளே அறைக்குள் அந்த மனிதனை அழைத்துப் போவதற்காக சரஸ்வதி வந்தாள். அவளை அவன் விருப்பத்துடன் பார்த்தான்.
“என் மீரா கூட கொஞ்ச நேரம் இருக்கலாம்ல?”- இன்ஸ்பெக்டரைப் பார்த்து ஆயி கேட்டாள் “உங்களுக்கு அவளை எப்பவும் பிடிக்குமே.”
“வேண்டாம் லட்சுமிபாயி. இன்னைக்கு ஒரு பொண்ணுகூட இருக்கணும்ன்ற எண்ணமே என்கிட்ட இல்ல...”- வெற்றிலையில் மிகவும் கவனமாக சுண்ணாம்பைத் தடவியவாறு அவர் சொன்னார் “இன்னைக்கு எனக்குள்ள இருந்த ஏதோ ஒண்ணு செத்துப்போச்சு.”
“ஒருவேளை வேற ஏதாவது உங்க மனசுல புதுசா தோணியிருக்கலாம்”- மெல்லிய புன்சிரிப்புடன் ஆயி சொன்னாள். அப்போது ருக்மிணியின் கையிலிருந்த பொம்மை அம்மா... அம்மா... என்ற சத்தம் உண்டாக்கிக் கொண்டிருந்தது.