சிவப்பு தீபங்கள் - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6740
ஒவ்வொரு தொழிலிலும் அந்தந்த தொழிலுக்கே உரிய மதிப்பும் பெருமையும் இருக்கத்தான் செய்கின்றன என்பதையும் உங்களுடைய தொழிலைக்குறித்து நான் அவமானமாக நினைப்பதற்கு எதுவும் இல்லை என்பதையும் எனக்கு அவர் விளக்கிப் புரிய வைத்தார். ஒரு பெரிய மோட்டார் காரேஜ் வைத்திருக்கும் அவர் ஒரு பெரிய பணக்காரர். பத்து வருடங்களுக்கு முன்னால் இறந்துவிட்ட தன்னுடைய தாய் திரும்ப கிடைப்பதாக இருந்தால் தன்னிடமிருக்கும் அனைத்தையும் இழப்பதற்கு நான் தயாராக இருப்பதாக அவர் சொன்னார்: “நீங்க பணம் சம்பாதிக்கலாம். மனைவியும் குழந்தைகளும் கூட உங்களுக்குக் கிடைப்பார்கள். ஆனால் ஒருமுறை தாய் நம்மை விட்டு போய்விட்டால் எந்தக் காலத்திலும் யாராலும் அந்த இழப்பை ஈடுசெய்ய முடியாது” என்று அவர்தான் சொன்னார்: அவர் சொன்னதால் உந்தப்பட்ட நான் வரும் சனிக்கிழமை மதியம் உங்களைப் பார்ப்பதற்காக அங்கு வருகிறேன். அம்மாவின் தங்கமகன் சதாசிவமனே.”
ஆயி மகிழ்ச்சியால் தேம்பித் தேம்பி அழுதாள். ருக்மிணியின் கண்களிலும் நீர் ஆறென வழிந்தது. தபால்காரன்கூட உணர்ச்சி வயப்பட்டு நின்றுவிட்டான்.
“சந்தோஷமான செய்தி ஆயிற்றே இது”- தபால்காரன் சொன்னான். ஆயி இடுப்பிலிருந்து ஒரு ரூபாயை எடுத்து அவன் கையில் தந்தாள்.
“என் மகன் எந்த அளவுக்கு அறிவாளியா ஆகியிருக்கான். என் தங்க மகன் சதாசிவ்...”- உதத்த சத்தத்தில் மூக்கைச் சிந்திக் கொண்டே ஆயி சொன்னாள். அப்போது மீரா அங்கே வந்தாள். தரையில் ஒரு சிலையைப் போல அமர்ந்திருந்த அந்த இளைஞனின் உருவம் அவள் கண்களில் பட்டது.
“என்ன மன்னிச்சுடுங்க”- அவனுடைய கால்களில் விழுந்து மீரா கெஞ்சினாள்.
“இங்கேயிருந்து என்னைக் கூட்டிட்டுப் போகச் சொல்லி உங்களை நான் வற்புறுத்தாம இருந்திருந்தா யாரும் உங்களை கொடுமைப் படுத்தியிருக்க மாட்டாங்க. ரொம்ப அடிச்சிட்டாங்க இல்லே? கொஞ்சம் சூடான பால் கொண்டு வரட்டுமா? உள்ளே வந்து கொஞ்சம் ஓய்வெடுங்க...”
“மீரா நீ அவனை வெறுமனே விடு...” ஆயி சொன்னாள்: “அவன் அமைதியா இருக்கட்டும். உன்னால அவன் இப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியதாயிடுச்சு. இனிமேலாவது அவனை சும்மா இருக்க விடு.”
“நான் இல்லாம அவருக்கு என்ன அமைதி வேண்டிக்கிடக்கு?”- மீரா கேட்டாள். “நீங்க என்னைக் காதலிக்கிறீங்கள்ல?”
அந்த இளைஞன் தரையில் மல்லாக்கப் படுத்தவாறு கண்களை மூடினான்.
“உங்களுக்கு இப்பவும் என்னைப் பிடிக்குதுல்ல?”- மீரா கேட்டாள்.
“எனக்குத் தெரியாது”- அவன் சொன்னான்.
“நீ உன் அம்மாவிட்ட போ. வீட்டைவிட்டுப் போன பிறகு அவங்க ரொம்பவும் கவலைப்பட்டிருப்பாங்க” ஆயி அவனிடம் சொன்னாள்.
“இல்ல... அவங்க கவலையில இருக்கமாட்டாங்க”- அந்த இளைஞன் பதில் சொன்னன். “அம்மாவும் அப்பாவும் பூனாவுல ஒரு சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிருக்காங்க. இன்னைக்கு சாயங்காலம் ஏழு மணிக்குத்தான் அவங்க திரும்பி வர்றாங்க. அம்மா திரும்பி வர்றதுக்குள்ள நான் வீட்டுக்குப் போயிடுவேன்.”
“அப்போ ஒருவார விடுமுறை மாதிரியா இது? ஒரு சின்ன தேனிலவு...”- தொண்டையில் எழுந்து மேலே வந்த அழுதையுடன் மீரா கேட்டாள் “நாம புருஷன் பொண்டாட்டியா வாழப் போறோம்னு நீங்க சொன்னது பொய்யா?”
அதற்கு அந்த இளைஞன் எந்த பதிலும் கூறவில்லை.
“உனக்கு இப்போ என்ன வயசு நடக்குது?” வெற்றிலையை மென்றவாறு ஆயி கேட்டாள்.
“பத்தொன்பது”- அவன் சொன்னான்.
“நீ உன் அம்மாகிட்ட போ. மீராவை மறந்திடு” ஆயி சொன்னாள்: “வேலை கிடைச்சு தேவடியாள்கள்கிட்ட வர்ற அளவுக்கு பணம் சம்பாதிக்கிறப்போ இங்கே வா...”
அந்த வார்த்தைகளைக் கேட்டு மீரா அதிர்ச்சியடைந்து நின்று விட்டாள். தரையில் இருந்து எழுந்து கைகூப்பி வணக்கம் சொல்லிவிட்டு அந்த இளைஞன் நடந்து போனான்.
“நன்றி கெட்ட பன்னி...”- மீரா கோபமான குரலில் சொன்னாள்: “அவன் தனக்கு இப்போ இருபத்தி நாலு வயசு நடக்குதுன்னும் ஒரு மில்லுல வேலை கிடைச்சிடுச்சின்னும் என்கிட்ட சொன்னான். திருடன்... நாற்றமெடுத்த திருடன்...”
மீரா தன்னுடைய பழைய அறையிலிருந்த சரஸ்வதியின் பொருட்களை எடுத்து வெளியே எறிந்தாள். போகத்தின் உச்சிக்குச் சென்ற சரஸ்வதி மீராவின் முகத்தைக் கீறினாள். “நீ என்ன நினைச்சிக்கிட்டு இருக்கே? இந்த வீடு என்ன உன் சொந்தமா? ஒரு வாரம் ஒரு பள்ளிக் கூட பையன்கூட ஓடிப்போயிட்டு இப்போ திரும்பி வந்திருக்கே. எதுவுமே நடக்காத மாதிரி நீ இருக்கலாம். இந்த அறையை நான் விட்டுத்தர்றதா இல்லே. இது இனிமேல் எனக்குத்தான்...”
அது ஒரு சீனியாரிட்டி விஷயம் என்பதாக மட்டுமே இருந்தது. இந்த முறை ஆயி மீராவின் பக்கம் நிற்கவில்லை. மீரா தவறாக நடந்து விட்டாள். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சொல்லப்போனால் இந்தத் தொழிலுக்கு ஏற்றவள் சரஸ்வதிதான். யாரிடமும் தனிப்பட்ட நெருக்கமோ உணர்ச்சியோ அவளுக்கு இல்லை. சரியாகக் கணக்குச் சொல்லி யாரிடமும் அவள் பணம் வாங்கிவிடுவாள். இருப்பதிலேயே நல்ல அறை சரஸ்வதிக்குத்தான் கொடுக்கப்பட வேண்டும்.
கடைசியில் தன்னுடைய இப்போதைய நிலையைப் புரிந்து கொண்ட மீரா சிறுமிகள் படுத்துறங்கும் பொது அறையின் மூலையில் தன்னுடைய பொருட்களைக் கொண்டுபோய் வைத்தான். மீண்டும் அவள் தொழிலில் தன்னுடைய இடத்தைப் பிடிக்க வேண்டும்.
அன்று மாலையில் இன்ஸ்பெக்டர் வந்தபோது ஒரு தட்டு நிறைய லட்டுடன் அவரை ஆயி வரவேற்றாள். அவர் அவளைப் பார்த்து சிரித்தார்.
“என்ன ஒரே மகிழ்ச்சியா இருக்கீங்க?”- அவர் கேட்டார். அப்போது அந்த கடிதம் மீண்டும் வாசிக்கப்பட்டது. எல்லாருடைய கண்களிலிருந்தும் தாரை தாரையாக நீர் வழிந்து கொண்டிருந்தது.
“லட்சுமிபாயி உங்களுக்கு நல்ல நேரம் வந்திருச்சு”- அவர் சொன்னார்: பிறகு ஒரு கையை நீட்டி சைகை செய்து அவர் ருக்மிணியை அழைத்தார். இன்னொரு கையிலிருந்த பெரிய பொட்டலத்தைக் காட்டியவாறு அவர் சொன்னார் “திறந்து பாரு என் மகளே. உனக்கு நான் என்ன கொண்டு வந்திருக்கேன்னு...”
அது ஒரு வெளிநாட்டு பொம்மை. ஓரளவு அதைப் பார்க்கும்போது அது சீதாவை ஞாபகப்படுத்தியது. அதன் மேல்தோல் மிகவும் வெளுத்திருந்தது. வயிறு வீங்கியிருந்தது. ருக்மிணி அதன் வயிற்றைப் பிடித்து அழுத்தினாள். அப்போது அது அம்மா... அம்மா என்று அழுதது. பொம்மையின் முகத்திலும் உடலிலும் அவள் முத்தமிட ஆரம்பித்தாள். “அப்போ உன் வாப்பாவுக்கு முத்தம் கிடையாதா?”- இன்ஸ்பெக்டர் கேட்டார்.
ஒரு கையால் அவள் அவரை கட்டிப் பிடித்துக் கொண்டு தன் மூக்கைக் கொண்டு அவரின் சட்டையை உரசினாள். “நீங்க ஒரு அன்பான மனிதரா ஆயிட்டீங்க”- இன்ஸ்பெக்டரைப் பார்த்து ஆயி சொன்னாள். தலையைக் குலுக்கியவாறு அவர் இதயபூர்வமாகச் சிரித்தார்.