சிவப்பு தீபங்கள் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6740
அரைமணி நேரம் என்னை அவன் ஒரு வழி பண்ணினான். போறப்போ முப்பது ரூபா தந்தான். அந்தக் காலத்துல முப்பது ரூபான்னு சொன்னா, அது ஒரு பெரிய தொகை. என்னால அழக்கூட முடியல. அப்படிப்பட்ட வினோதமான ஒரு அனுபவம் அது. அதுக்குப் பிறகு அந்த ஆளுக்காக நான் எத்தனையோ தடவை காத்திருந்தேன். ஆனா, அந்த ஆளு வரவே இல்ல...”
“உங்க மகனோட அப்பா எப்படிப்பட்ட ஆளு ஆயி” - ராதா கேட்டாள்.
ஆயி ராதாவின் கன்னத்தைப் பாசத்துடன் தடவினாள்.
“என் மகனோட அப்பாவைப் பற்றி மட்டும் நீ கேட்காதே”- ஆயி சொன்னாள் : “அவர் ஒரு பிராமணர். உன்கிட்ட வர்ற ஆளுங்க மாதிரி இல்ல அவரு. அவர் ஒரு பெரி அறிவாளி. உடம்புல ஆடைகள் அணியிறப்போ அவர் வேத மந்திரங்களைச் சொல்வாரு.”
“நம்ம மீராத்தாயோட ஆளு மாதிரி இருப்பாருபோல இருக்கே அவரு”- ராதா ஒருவித குறும்புத்தனத்துடன் சொன்னாள் : “சில இரவுகள்ல அந்த ஆளு கீதாகோவிந்தம் பாடுவார். அவர் சொல்லித்தர்ற சில பாட்டுகளை மீராத்தாயி பாட முயற்சி பண்றதை நான் கேட்டிருக்கேன்.”
“மீராவோட குரல் ரொம்பவும் இனிமையா இருக்கும்”-ஆயி சொன்னாள் : “அவ மாணிக்கமாச்சே ! பத்தொன்பது வருஷங்களுக்கு முன்னாடி அவளை யார் என் வீட்டு வாசல்ல கொண்டு வந்து போட்டுட்டுப் போனதுன்னு இப்பக்கூட நான் ஆச்சரியத்தோடு நினைச்சுப் பார்க்குறது உண்டு. புருஷன் ஊர்ல இல்லாத நேரத்துல கர்ப்பமாகிப் போன ஏதாவதொரு குடும்பப் பொண்ணுதான் அவளைக் கொண்டு வந்து போட்டிருக்கணும்... “
“ஒரு குழந்தையோட வாழ விருப்பப்படாத ஏதாவதொரு தேவடியாளாக்கூட அது இருக்கலாம்ல..” என்றாள் ராதா.
“உனக்கு மீரா மேல பொறாமை”- ஆயி சொன்னாள்.
சிறிதுகூட திரும்பிப் பார்க்காமல் மீராவின் வழக்கமான வாடிக்கையாளர் அறையைவிட்டு வெளியேறி நடந்துபோனான். எதுவுமே பேசாமல் மௌனமாக அவன் நடந்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆயி. அவனும் அழுதிருக்கிறான். அந்த இளைஞனுக்கு அப்படியென்ன பிரச்சினை? அவனுக்கு மனதில் ஏதாவது கஷ்டமா என்ன அவனைப் பற்றி மீராவிடம் கேட்டால் என்ன என்று அவள் நினைத்தாள். இப்படிப்பட்ட ஒரு மனிதன் இங்கு இனிமேலும் வருவது நல்லது அல்ல. மனைவியிடம் வெறுப்பு கொண்டிருக்கும் வியாபாரிகளையோ, பணக்காரர்களையோ, இடையில் எப்போதாவது உல்லாசமாக இருக்கலாம் என்று வரும் அரசியல்வாதிகளையோ, அல்லது அதே தரத்தில் இருக்கும் முக்கிய புள்ளிகளையோதான் மீரா தன் பக்கம் இழுக்க முயற்சிக்க வேண்டும். விலை மதிப்புள்ள பரிசுப்பொருட்கள் கிடைக்கும் என்பதற்காக அல்ல. அவர்கள் இங்கு வந்தால், வீட்டிற்கே அது ஒரு புகழைத் தரும் என்பதையும் நினைத்துப் பார்க்கவேண்டும்.
அறையில் அழுது கொண்டிருக்கும் மீராவை அழைத்தாள் ஆயி. மீரா அறையைவிட்டு வெளியே வந்து நிலவைப்போல ஒளிவீசிக் கொண்டிருந்த நியான் விளக்கிற்குக் கீழே நின்றாள். அழுதிருந்த அவள் கண்கள் சிவந்து போய்க் காணப்பட்டன.
“என் மகளே, உன்னை அவன் என்ன செய்தான்?”- ஆயி கேட்டாள்.
“அவர் என்னை ஒண்ணும் செய்யல ஆயி... அவருக்கு எப்பவும் என் மேல பிரியமும் பாசமும்தான்...”
“பிறகு எதுக்கு மகளே நீ அழணும்? உனக்கு வருத்தம் உண்டாகுற அளவுக்கு அவன் ஏதாவது சொல்லிட்டானா?”
மீரா தன் பாதங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பதில் எதுவும் சொல்லவில்லை.
“உன்னை அவன் திட்டினானா?” மீண்டும் ஆயி கேட்டாள்.
“இல்ல ஆயி...”- மீரா பதில் சொன்னாள் : “என்னைப் பார்க்க வர்றதுக்காக தன்னோட பேனாவை விற்பனை செய்ததா அவர் சொன்னாரு. அவருக்குன்னு சொந்தமா வருமானம் எதுவும் இல்லை. மத்தியானம் சாப்பிடுறதுக்காக வீட்டுல கொடுக்கிற பணத்தையும், பஸ் கட்டணத்துக்குக் கொடுக்கிற பணத்தையும் மிச்சம் பிடிச்சுத்தான் அவர் இங்கே வர்றதே. அவர் என்னைக் காதலிக்கிறாரு...” அதைச் சொன்னபோது மீராவின் கண்களில் நீர் நிறைந்தது.
3
அறையின் தரை முழுவதும் சீதா வாந்தி எடுத்தாள். அதைப் பார்த்து அப்போது அங்கு வந்திருந்த வாடிக்கையாளர் பயந்து எழுந்து அந்த நிமிடமே அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டார். இந்த விஷயத்தில் அவள்மீது ஆயிக்கு பயங்கர கோபம் உண்டானது. அவர் தான் கொடுத்த பணத்தைத் திரும்ப வாங்கினார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். போகிற போக்கில் இந்த வீடு முழுக்க நோய் பீடிக்கப்பட்ட விபச்சாரிகள்தான் இருக்கிறார்கள் என்றொரு கருத்தையும் சொல்லிவிட்டுப் போனதுதான் முக்கியமான விஷயம். தரை முழுக்கப் பரவிக் கிடந்த வாந்திக்கு மத்தியில் என்ன செய்வதென்று தெரியாமல் வாந்தி எடுத்துக் கொண்டிருந்த சீதாவை அறைக்குள் நுழைந்த ஆயி பார்த்தாள். வயிறைக் கையால் பிடித்தவாறு நிற்காமல் வந்து கொண்டிருந்த வாந்தியைப் பார்த்துப் பயந்து போய் திகிலடைந்த நிலையில் இருந்தாள் சீதா. பயத்தால் அவள் கண்கள் விரிந்திருந்தன.
ஆயி அவளின் நீளமான தலைமுடியைப் பிடித்து இழுத்து அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். “இந்த வீட்டோட நல்ல பெயர் முழுவதையும் நீ பாழாக்கிட்டே”- ஆயி அவளைப் பார்த்துத் திட்டினாள். “ரோட்ல கூவிக்கூவி பலகாரம் விற்பனை செய்யிற ஆளுகிட்ட அதையும் இதையும் வாங்கித் தின்னுட்டு, இங்கே வர்றவங்க மூஞ்சியில அதை வாந்தி எடுக்குறியா? வண்டிக்காரங்ககிட்ட இருந்து பலகாரங்கள் வாங்கிச் சாப்பிடாதேன்னு எவ்வளவு தடவை நான் சொல்லியிருக்கேன்! நன்றி கெட்ட சவமே! இரு... இரு... மூணு நாட்களுக்கு உன்னைப் பட்டினி போடுறேன்.”
சீதா தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.
“என் தப்பு இல்ல ஆயி”- அவள் தேம்பினாள். “கொஞ்ச நாட்களாகவே எனக்கு முடியல. எதுவும் சாப்பிடக் கூட தோணமாட்டேங்குது. தினமும் சாயங்காலம் ஆயிடுச்சுன்னா வயிறு எரியிற மாதிரி இருக்கு....”
“நீ கொஞ்சம் சோர்ந்து போன மாதிரி இருக்கியே!”- என்று கூறியவாறு ஆயி அவளின் வெள்ளைநிற ப்ளவ்ஸைத் தூக்கிப் பார்த்தாள். அவளின் குருத்து போன்ற மார்பகங்களை ஆராய்ந்தாள். ‘அப்படி இருக்க வாய்ப்பில்லை’ . ஆயி தனக்குள் முணுமுணுத்தாள். “நீ இன்னும் வயசுக்கே வரலியே!”
ஆயி அவளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை தந்தாள். சீதா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள். “மூணு நாட்கள் நான் யார்கிட்டேயும் போக வேண்டிய அவசியமில்லே”- சந்தோஷத்துடன் அவள் உரத்த குரலில் சொன்னாள் : “ருக்மிணி, வா... நாம விளையாடலாம்.”
உச்சிப் பொழுது முடிந்திருந்தது. கம்பிகள் மீது சாய்ந்து நின்றவாறு சீதா தன் சிநேகிதியிடம் சொன்னாள் : “வானத்தைப்பாரு. சுண்ணாம்பு தேய்த்த சுவரைப்போல இருக்குல்ல? வெள்ளை நிற சுவர் இருக்கிற ஒரு வீட்டுலதான் முன்னாடி நான் இருந்தேன். ஒவ்வொரு வருஷமும் தீபாவளி வர்றப்போ சுண்ணாம்பையும் மண்ணையும் சேர்த்து என் அப்பா சுவருக்கு வெள்ளையடிப்பார்.”